14 Aug 2011

வெளியெங்கும்,,,,,,,,,,


           

தீட்டுத்துணிகள் கிடந்த வெளியெங்கும்
வீடுகள் முளைத்து காட்சியளித்தன.
பூஜையறைகளும், வரவேற்பறைகளும்,
சமையலறைகளும்,படுக்கையறைகளும்,
வெகு முக்கியமாய் கழிவறைகளும்
இருந்த வீடுகள் ஒவ்வொன்றும்
ஆயிரத்துச் சொச்சங்களிலும்,
நூற்றிச் சொச்சங்களிலுமாய்
சதுரடி கணக்கெடுத்து காட்சி தந்தது.
பல்வேறு வர்ணங்களிலும்,
பல வடிவங்களிலுமாய்
நின்ற வீடுகள்
வயதான பெற்றோர்களையும்,
நடுத்தர வயதுக்காரர்களையும்,
குழந்தைகளையும் சுமந்தவாறு/
இரு வரிசையிலுமாய் நிரம்பியிருந்த
வீடுகள் இருந்த தெருவின்
இருமருங்கிலும் சாக்கடை
கட்டப்பட்டிருந்தது.
தெருமுனையில் தண்ணீர் குழாயும்
அடி பம்பும் இருந்தது.
கலர்,கலரான சிமெண்ட் கற்களால்
தெருவை அழகாக்கியிருந்தார்கள்.
குப்பைகொட்ட புது தொட்டிகளை
இறக்குமதி செய்திருந்தார்கள்.
தெருவிளக்கு தினசரி
இரவு வஞ்சகமில்லாமல்
வெளிச்சம் காட்டி நின்றது.
அனைவரது வீட்டிலும்
தவணை முறையில் வாங்கிய
இருசக்கரவாகனங்களும்,
வாஷிங் மிஷினும்,குளிர்சாதன பெட்டியும்,
இன்னபிறவுமாய்,,,,,,/
பிள்ளைகள் பள்ளி சென்றார்கள்.
மாதாந்திர சம்பளம் வாங்கியவர்கள்
அரசு அலுவலகங்களிலும்,
பிற நிறுவனங்களிலுமாய் பணிபுரிந்தார்கள்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும்,
இன்ன பிற வருமான பிரிவினரும்
வரவு செலவுகளை பார்த்துக்கொண்டு/
சிறுவர்கள் விளையாடினார்கள்,
பெரியவர்கள் அவர்களை கண்டித்தார்கள்.
பூக்காரி பூ விற்றாள்,
கீரைகாரம்மா கீரை விற்றார்கள்,
பால்க்காரரின் மணிசத்தம்
தினமும் இருவேளை
பிடிவாதமாய் ஒலித்தவாறு.
இப்படி தினம்,தினம்
காலையில்  மலர்ந்து
இரவில் அடங்கிப்போகும்
தெருவில் தீட்டுத்துணிபோட
இன்னமும் ஒரு இடமும் அற்று.

2 comments:

vimalanperali said...

வணக்கம்ரத்தினவேல்சார்.நலம்தானே?ந்ன்றி த்ங்க்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம்ரத்தினவேல்சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/