27 Nov 2011

கோலப்புள்ளிகள்,,,,,,,


                    

       கீழே கழுவினால் கோலம் அழிந்து விடக்கூடும் என நினைத்து மேலே வராண்டாவை ஒட்டிய வெளியில் கழுவுகிறேன் கால்களை/
    அதிகாலை எழுந்து ஈரக்கூந்தலின் நுனியில் தண்ணீர் கசிய அவள் போட்ட கோலம்.
    இடது கை கிண்ணம் பிடித்திருக்க வலது  கையின் இரு விரல்களின் நுனி வழியாக  கசிந்த மாவு கோலமாகி அழகு காட்டி நிற்கிற காட்சி எப்போதுமே வாசலை நிறைத்து ரம்யம் காட்டுவதாகவே/
    நான்கு புள்ளிகளும் அல்ல,எட்டுபுள்ளிகளும் அல்ல,மேலும்,கீழும் பக்கவாட்டிலுமாக கோடுகளை இழுத்து உள்ளே உள்ள வெற்றிடத்தில் சின்னச்சின்னதான கோடுகளையும் புள்ளிகளையும் நிரப்பி கோலமாக்கிவிட்டிருந்தாள்.பார்க்க அழகாக இருந்தது.
   பளிச்சென்று கூட்டி தெளிக்கப்பட்ட வாசலில் இப்படி ஒரு கோலத்தை பார்க்கிற எல்லோருக்கும் சந்தோசமாகிப்போகும்.
இந்த விஷயத்தில் அவள் மீது அந்த தெரு பெண்களுக்கு சற்று பொறாமையும்கூட/   
   மற்றதெல்லாம்பேசுவார்கள்நன்றாக.வீடு,சமையல்,பிள்ளைகள்,படிப்பு,வேலை,காசு,
பணம்,,,,, சில சமயங்களில் அந்தரங்கங்கள் என எல்லாம் கலந்து பேசுகிற,எள்ளி நகையாடுகிற,ஏதாவது ஒரு தகவலாய் புது சேதி சொல்லி விட்டு செல்கிற பேச்சு கோலம் பற்றி திரும்பும் போது ஒரு இடித்தல் வரும் அவர்களிடமிருந்து.   
   “அதென்னமோக்கா, ஒங்ககையிலஇருக்குறவித்தையா,இல்லன்னா வித்தைகிட்ட ஒங்க கை இருக்கா” என்பார்கள்.சிரித்து சமாளிப்பாள் இந்த மாதிரியான சமயங்களில்/
   அந்த “வித்தையில்”பலது பளிச்சென தெரியும்  அவளுக்கு.ஆனாலும் குற்றம் பார்ர்கிற போது சுற்றம் இல்லை என்கிற சகிப்பில் வளைந்து போய்விடுவாள்.
    பக்கத்து வீட்டு சுவர் மீது படர்ந்து தொங்கும் முல்லைக்கொடியின் வாசமும்,அதன் விரிந்து மலர்ந்த பளிச்சிடலும் எப்பொழுதும் அவளை கவர்ந்திருக்கிறது.இது போலவே எதிர்த்த வீடு தெருவின் வரிசை வீடுகள் பூராவுமாய் இருக்கும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று அவள் மனதை சுண்டி இழுத்திருக்கிறது.அதில் லயித்து கலந்து இருந்திருக்கிறாள்.அதனால்தான் அவளது அன்றாடங்கள் என்றுமே சங்கடங்களில்லாமல்  புது மலர்வாக நகர்ந்திருக்கிறது. .
   அவளது முகத்தில் பெரும்பாலும் எப்போதுமே காணக்கிடைக்கிற புன்னகைகீற்று அவளது வீட்டை சுற்றிலுமாய் வட்டமிடுகிற,வீட்டு மரத்தில் வந்து அமர்கிற காக்கை குருவிகளைக்கூட ஸ்னேகம் கொள்ள வைத்துவிடுகிறதுண்டு.
     “சின்னவஎந்திரிச்சாச்சா,பெரியவஇன்னைக்குசீக்கிரமே ஸ்கூலுக்குபோகனும்னா”
என்றுதான் வீட்டுக்குள் வருவாள்.
   அதிகாலை குளிரிலேயே விழித்துவிட்டாலும் கூட தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும்அவளது  கணவன் “ஆமா அப்பிடியே எந்திரிச்சிட்டாலும்”என நீட்டி நிறைய  பதில் சொல்லுவான்.
   “சரி ஆரம்பிக்காதிங்க,அதெல்லாம் ஒங்க ப்ரண்ட்ஸ்க கிட்ட வச்சிக்கங்க,ஏங்கிட்ட வேணாம்,எந்திரிச்சி  மொகத்த கழுவுங்க நீங்க பேசிமுடிக்கிறதுங்குள்ள நான் டீ போட்டுட்டேன்” “ஏங்கிட்ட பேசுற இந்த பேச்ச எங்க அண்ணன் தம்பிகிட்ட பேசுனாலாவதுஎன்னத்தையாவதுவழிபொறக்கும்.அத விட்டுட்டு,,,,,,,,,பேசுறது,
பகுந்துக்கிறது,முட்டுறது,மோதுறது எல்லாம் இங்கதா வெளியில எதுவும் இல்ல.”
   அவள் பேசி முடிக்கவும்  அவன் முகம் கழுவிக்கொண்டு டீக்குடிக்க வரவுமாய் சரியாக இருக்கும்.
    “நானும் பாத்திருக்கேன்,ஒரே குடும்பத்துல பொறந்த ஒங்களுக்குள்ள இவ்வளவு வித்தியாசமா?காலையில பத்து மணிவரைக்கும் தலைய விரிச்சுப்போட்டுட்டுத்திரியிற ஒங்க அக்கா பொறந்து வளந்த வீட்டுலதான் நீயும் பொறந்து வளந்த,அப்புறம் ஏன் அவுங்க அப்படி,நீ இப்பிடின்னு தெரியல,இந்த லட்சணத்துல ஒங்க அண்ணன்,தம்பிங்க கிட்டஎன்னத்தபேசச்சொல்லுற”?”
    “ஆமாஎன்னத்த பெரிசா பேசச்சொல்றாங்க,ஊரெல்லாம் யார் யார்கூடவோ பேசுற நீங்க அவுங்ககூட பேசக்கூடாதா?ஒங்க பேச்சையும் நாலு பேரு மதிச்சு கேக்கும்போது,,,,,,,,,/”
    “சரி வுடு பேசீருவோம்.என்றவாறு டீயை வாங்குவான்.டீ டம்ளருடன் விரல்கள் படும் ஸ்பரிசத்தில் ம்,,,,,,,,,,,,,,,,,,புள்ளைங்கள எழுப்புங்க என அவளது வேடந்தாங்லான சமையலறைக்குள் சென்று விடுவாள்.பிள்ளைகளும் அடுத்தடுத்தாற்போல் எழுந்து விடுவார்கள்.
    சின்னவள் முதலில்,பெரியவள் இரண்டாவதாய்.இரண்டாவது மகள் முகம் கூட கழுவாமல் தாய் போட்ட கோலத்தை பார்க்க போய் விடுவாள் வாசஸ்லுக்கு/
    வானும்,மண்ணும் உறவாடி பேசிக்கொள்கிற நேரத்தில் நடக்கும் பூச்செரிதல் போலவும்,கலர்கலரான கனவுகள் நிரம்பியவெளி போலவுமாக இனிமையாய் படும் அந்தநேரம்.
   ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு என அவர்களது பூப்பாதங்களையும்,முரட்டு உடலையும்,மனதையும் தாங்கி வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாய் இறங்கும் சிவப்பு சாயம் பூசிய படிக்கட்டின் கடைசியில் சமதளமாய் விரிந்த வாசல் படியின் முன்புதான் இப்படியா அல்லது எல்லா வீடுகளின் வாசல் படிமுன்பும் இப்படியா என்கிற ஆராய்ச்சியில் இறங்கிக்கொண்டிருக்கிற மகளை தொடர்ந்து தகப்பனும்/
    காலையில் ஐந்து மணிக்கு போட்டது என சொன்னாள்.இந்த குளிர் நேரத்தில் இவ்வளவு அதிகாலையில் எழுந்து   சுழியிடுகிற அவளது அன்றாடங்கள் கொஞ்சம் சங்கடம் நிறைந்ததாகவே என நினைத்தவாறு வீட்டினுள் வந்த பொழுது எரியும் அடுப்பின் முன் அடுப்பாகத்தெரிந்தாள்.
    எரிந்து கொண்டிருந்த தீயின் நாவுகள்அவளதுமுகம்பட்டு பிரதிபலித்துக்
கொண்டிருந்தது.
    ஒரு முகமும் பல கைகளுமாய் நீட்டித்தெரியும் பெண்தெய்வம் போல தெரிந்த அவளது கைகள் ஒவ்வொன்றிலும் சமையல் சாதனங்கள் ஒவ்வொன்றும் போனவாரம் புதிதாய் வாங்கிய குக்கர் முதற்கொண்டும்,வேர்வை வழிந்து எண்ணெய் பிசுக்குடன் காணப்பட்ட முகத்தில் குடும்பம் சுமந்த ரேகைகள் படர்ந்தும்/

6 comments:

SURYAJEEVA said...

சொல் சித்திரம் அருமை தோழரே

vimalanperali said...

வணக்கம் தோழர்.உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் மிக்க நன்றி.

Thooral said...

அருமையான பதிவு ...
வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ஜெயராம் தினகரப்பாண்டியன் சார்.நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

Anonymous said...

நல்லாயிருக்கு தோழரே...தொடருங்கள்...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/