24 Dec 2011

பார்வை ஒன்றே போதும்,,,,,,,,


                           


   மருத்துவமனைவாசல்களிலும்அதன் உள்,வெளி அறைகளிலும் எப்போதுமே ஒரு பத்துப்பேருக்கு குறையாமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
     மாறும் பருவநிலைகளுக்கு ஏற்பவும்,நகர்கிற நாட்களின் தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்பவுமாய் இதன் விகிதாச்சாரத்தில் வித்தியாசமிருக்கலாம்.
    அதிலும் சிறப்பு மருத்துவர் என்றால் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
மருத்துவமனை வளாகம்,வசதி மருந்து வாசனையற்ற அதன் சுகந்தம் குறுக்கும்,
நெடுக்குமாய் நடமாடும் பணியாளர்கள் மற்றும் இதர ,இதர என அடேயப்பா,,,,,,நேற்று மாலை அலுவலகம் முடிந்து வரும் போது -------------மருத்துவரை பார்க்கலாம் என்கிற யோசனை.
    சமீபகாலமாக தொந்தரவு பண்ணிக்கொண்டிருக்கும் “அல்சருக்கு” பார்க்க வேண்டும் என்கிற முடிவு எடுத்த போது எனது இருசக்கர வாகனத்திற்கு கீழே நழுவி பின் சென்ற சாலை என்னைக்கொண்டு போய் நிறுத்திய இடம் அந்த குறிப்பிட்ட மருத்துவரின் மருத்துவமனையாக இருந்தது.
    இல்லாதவர்களின்கடவுளாகஇந்தபகுதிமக்களுக்குஆரம்பகாலத்தில்காட்சியளித்தவர்
இன்று வரை அப்படியே தெரியவும் வெளிப்படவும் செய்கிறார்.   
    நிறைந்து வீடுகள் அடுக்கப்பட்டிருந்த தெரு அது.எதிரெதிர் சாரியில் குடியிருந்த மத்தியதர வர்க்கர்களை சுமந்து கொண்டிருந்த வீதி மருத்துவமனையையும் சுமந்து
கொண்டிருந்தது.
    ஆமாம்.எப்பொழுதும்,எல்லா நகரங்களிலும் வீதிகள் சுமந்து கொண்டும்,
சூழ்க் கொண்டவாறும் காட்சிப்படுகிறதுதான்.அந்த காட்சிப்படுதலில் நட்பு,பகை,
பொறாமை,இன்பம்,துன்பம்,கோபம்,ஆற்றாமை சண்டை,சச்சரவுகள் எல்லாம் கலந்து  இருப்பவையாகவும்,கண்ணுக்குத் தெரிபவையாகவும்/
    வாகனத்தின் ஸ்டாண்டை இழுத்துப்பிடித்து நிறுத்திய போது எனது கண்களில் புலப்பட்டதுமருத்துவமனைவாசலில்கிடந்த செருப்புக்கள்தான்.
   ஒன்று,இரண்டு,மூன்று,,,,எனஎண்ணிப்பார்த்துமுடியாமல்விட்டு விடுகிறேன்.
எப்படியும்15,அல்லது20ஜோடிகளுக்குகுறையாமல்இருக்கலாம்.பரவாயில்லை காத்திருந்துபார்த்துவிட்டுப்போகலாம்.என்கிறநினைப்புடனேஉள்ளே செல்கிறேன்.
     எல்லோரும் மரப்பெஞ்ச்சிலும்,ப்ளாஸ்டிக் சேரிலுமாய் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவபிரதிநிதி உட்பட/
    நான் அமர்வதற்கு இடம் பார்க்கிறேன்.இல்லை.கையைக்கட்டிக்கொண்டு ஒரு ஓரமாக நின்று விடுகிறேன்.
    சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின்  நிழல்  ட்யூப் லைட் வெளிச்சத்தில் தரையில் சிந்தி சிரித்துக்கொண்டிருந்தது.தொலைக்காட்சியில் ஏதோ பெயர் தெரியாத மெகாத்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.
    தினசரிகளின் மாலை நேரங்களை ஆக்கிரமிக்கும் இந்த மெகாத்தொடர்கள் எங்களது கம்பெனி மேலாளர் ஒருவருக்குமிகவும் பிடித்தமானதாக/
    எரிந்து கொண்டிருந்த ட்யூப்லைட்களும்,சுழன்று கொண்டிருந்த மின் விசிறிகளும்,ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சியும் அங்கிருந்தவர்களின் தற்காலிக ஆசுவாசமாக/
    மருத்துவம் பார்க்க வந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மருத்துவரை போய் பார்த்து வந்து கொண்டிருந்தார்கள்.
    காலம் கரைந்து கொண்டிருந்தது.வீட்டிலிருந்து மனைவி போன் பண்ணி விட்டாள்.
    நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது.வந்து ஒருமணி நேரமாகிப்போகிறது.போகும்போது காய்கறிவாங்கிப்போக வேண்டும்.இரண்டு நாட்களாய் பல்வேறு வேலை காரணமாக முடியாமல் போன விஷயத்தை இன்று சாத்தியப்படுத்த வேண்டும்.இல்லையெனில் மனைவி வையக்கூடும்.
    ஜோடியாக தனியாளாக,குடும்பமாக காட்சி தந்தவர்களிலிருந்து கழன்று கைக்குழந்தை ஒன்று நின்று கொண்டிருந்த என்னை நோக்கி தனது பிஞ்சுக்கரங்களையும்,பாதங்களையும் கீழூன்றி தவழ்ந்து வருகிறது கையை,கையை அசைத்தவாறும்,சிரித்தவாறும்,வாயிலிருந்து எச்சில் ஒழிக்கியவாறும்/
     நானும் சிரித்துக் கொண்டே அந்த பூம்பிஞ்சை நோக்கி கையை அசைத்தவாறே செல்கிறேன்.
     எங்களுக்குள் இருந்த தூரமும்,சுற்றி இருந்த வெளியும்,மனிதர்களும் காணாமல் போக தனி உலகத்தில்  நுழைந்தவர்களாய் ஆகிப்போகிறோம் .
    சிறிதுநேரம்கழித்துசட்டெனமீண்டு நினைவு வந்தவனாக வீட்டுக்குக்கிளம்புகிறேன்.
    இனிமருத்துவம்எதற்கு?
   போகிற வழியில் இதுமாதிரி இரண்டு மூன்று குழந்தைகளின் சிரிப்பை பார்த்தாலே   போதுமே/ 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கடைசி ஒரு வரியில் மிகப் பெரியவிஷயத்தை
மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டீர்களே
நமக்குள் நாம் போகத்தெரிந்தாலே
பாதி ஆரோக்கியம் வந்துவிடும்
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நலம்தானே?
பரந்து கிடக்கிற மன வெளியில் எல்லாம்சமமாயும், சமமற்றதாயும்,
சமாதானம் அற்றதாயும் தெரிகிற பொழுது இது மாதிரியான காட்சிப்படல்கள் அதை நிவர்த்திசெய்து விடுகிறதுதான்.