15 Nov 2015

கப்பி மண்,,,,,

தொட்டுப்பார்த்தலட்டும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகும்கிலோ 150என்றார்கள்.
லட்டுக்கொஞ்சம் பதம் கூடித்தெரிந்தது.தொட்டுப்பார்த்தாலே கொஞ்சமாய் அமுங்கியது.மைசூர்பாகு அப்படியில்லை.பதமும் இனிப்பும் சரியான விகித த்தில் இருந்தது.கேட்டதற்கு தீபாவளி நேரம் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.இவனுக்கு ஸ்வீட் எடுத்து சாம்பிள் காண்பித்த பெண். 

தவிர மொதமொத இந்த தீபாவளிக்குத்தான் ஸ்வீட் போடுறோம்,அதுதான் லட்டும் மைசூர்பாகும் போதும்ன்னு நிறுத்திக்கிடோம். அளவாத்தான் போட்டோம் பாத்துங்கிடுங்க.இங்க வழக்கமா சேவு மிக்சர் வாங்க வர்றவுங்க கிட்ட மட்டும் சொல்லி வச்சம்,ஆனா அடுத்தடுத்து ஆள்கள் வந்து கேக்க ஆரம்பிச்சிட்டாங்க/என்ன செய்ய அப்புறம்,அவதி அவதியா போட்டுத் தர்றோம்.அப்பிடித்தரும்போதுஇப்பிடித்தான்கொஞ்சம் பெசகலாகிப் போகுது.
அப்படியானதுதான்இந்த லட்டோட பதம். 

இதுக்கு ஸ்வீட் மாஸ்டர கொறசொல்ல முடியாது.அவரும் என்னதான் செய் வாரு பாவம்.நாலு நாளா ராத்திரி பகல்ன்னு பாக்காம பலகாரம் போட்டுக் குடுத்துக்கிடே இருக்காரு.எங்க கடையோட சேத்து அவரு பலகாரம் போட்டுக் குடுக்கிறதுநாலாவது கடைஎன்றாள். 

இந்த நேரத்துலஅவுங்க நாலுகாசு பாத்துக் கிட்டாத்தான் உண்டு எனச் சொன்ன வளிடம் முதலில் சேவுப் பாக்கெட்டும் மிக்சர் பாக்கெட்டும் வாங்குவதற்காகத் தான்வந்தான். 

சாத்தூர் பஸ்டாப்பாலத் தின்அருகிலாய்இருந்தகடையில் டீ சாப்பிடப்போன ஒரு பொழுதொன்றில்தான் சேவுக்கடையைப்பார்த்தான். 

செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ்செண்டரும் ,டீக்க்கடையும், ஒயின் ஸாப் பும், பெட்டிக்கடையும்அதன் அருகாமையாய் இருந்த காம்ளக்ஸில் பிரிண்டிங் பிரஸ்ஸிமாய்சூழ்கொண்ட இடத்தில்தான்அந்த சேவுக்கடையுமாய் இருந்தது. 

இவனது யூனியனில் மிக அவசரமாக ஒரு நோட்டீஸ்அடைக்கவேண்டும் எனச் சொன்ன ஒரு குளிர்கால மாலை நேரமொன்றில் பழனியப்பா ப்ரஸ் 
வாசலில் போய் நின்றான்.மணி ஐந்து முடிந்து ஆறைக்கூடசரியாகஎட்டித் தொட்டிறாத இரவுகனிந்துவருகிறநேரம். 

இவனுக்கானால் குளிர் ஒத்துக்கொள்வதில்லை சுத்தமாக/வெயில் என்றால் சொல்லுங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஏறி விளையாடுவான்.வைக்காத ஏணியில்ஏறிஇல்லாதசூரியனைஎட்டிப்பிடிப்பதாய்கற்பனைப்பண்ணிக்கொண்டு அருகில் போய் நிற்பான். 

இப்படித்தான் கிராமத்துகஅலுவலகக்கிளை ஒன்றில் பணிபுரிந்த ஒரு அக்னி நட்சத்திர வேனற்காலப் பொழுதுகளில் அலுவலகத்திற்குள் உட்கார்ந்து வேலை பார்க்க முடியாமல் வேர்த்து ஊற்றும்.உடலெல்லாம் வரி வரியாக இறங்குகிற வேர்வைக்கோடுகளை துடைத்தெடுத்த கர்சீப்க்கூட நனைந்து போகும். அப்படி யானசூழலிலும்கூட பெரிய அளவிலாய் ஒன்றும்தொந்தரவாக உணர்ந்ததில் லை. ஆனால் ஆர்வம் காரணமாகவோ அல்லது தேவை காரணமாகவோ இது போலான குளிர் நேரத்தில் கூடுதலாக கொஞ்சம் அலைந்து விட்டால் உச்சந்தலை எரிய ஆரம்பித்துவிடும்.இரண்டு காதுகளின் துவாரங் களின் வழியாக உள் செல்கிற காற்று முகத்தை சில்லிடப்பண்ணி தலையில் ஏறி அமர்ந்து விடும்.அப்படியாய் தலையில் ஏறிய அன்று உச்சந்தலை எரிந்து கொண்டு இரவெல்லாம் தூங்க விடாது.அட சண்டாளத்தனமே என இப்படி ஒன்றா என டாக்டரிடம் போய் கேட்டால் அவர் சொல்கிறார்.ஈர நேரத்திலும் குளிர் காலத்திலும் இரண்டு காதிலும் பஞ்சு வைத்துக்கொள்ளுங்கள் என/ 

ப்ரஸ்க்காரர் கூடசொன்னார்,ஏன் சார் இப்பிடி, குளிர் ஒத்துக்காதுன்னு தெரியு மில்ல அப்புறம் ஏன் என/ 

அதற்கு இவன் சிரித்தபோது பதிலுக்கு அவரும் சிரித்தார்.நோட்டீஸ் மேட்டரை வாங்கிப்பார்த்துவிட்டு அப்படியே மேஜை மீது வைத்து விட்டு வாருங்கள் டீ சாப்பிடப்போவோம் என்றார். 

பக்கத்திலிருந்தகடையில்டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான்தற்செயலாக அந்தசேவுக்கடையைப்பார்த்தான்.அதுகடையாய்ப்படவில்லை.வீடாகவேபட்டுத் தெரிந்தது.இக்கட்டான வாசல்படியிலிருந்து காட்சிப்பட்டு விரிந்த தரையை க் கொண் டிருந்த வீட்டின் உள்ளேயே ஆபீஸ் ரூம் போல செக்‌ஷன் போட்டுப் பிரித்திருந்தார்கள். 

இம்மாதிரி மரச்சட்டம் போட்டு கண்ணாடி அடைப்பு போட்டிருக்கிற ரூமைப் பார்க்கிறபோதெல்லாம்சொல்லூசன்ராமநாதனைத்தான் ஞாபகத்திற்கு வருகிறது. அண்ணே சொல்லூசன் வேணுமில்ல,ஏதாவது ஒரு விஷயம்ன்னா சும்மாவா இருக்கு.தீர்வு தெரியணுமில்ல என்பார்.சும்மா அள்ளிதெளிச்ச கதையா சொன்னா எப்பிடி,,?நீயி சும்மாஇரின்னேன்,அவுங்க பேசுன மாதிரி நீயும் பேசிட்டு அலையாதண்ணே என்பார். 

பரம்பரைபரம்பரையாதச்சுத் தொழில் செய்கிற குடும்பம்.எங்கதாதாவுக்குன்னு எங்க ஊர்ல அப்பிடி ஒரு மரியாதை உண்டு தெரிஞ்சிக்க என்பார். காலங் காத்தால ஆத்துல குளிச்சிட்டு நடந்து வந்தார்ன்னா ஊருக்குள்ள அழுகுற புள்ள கூட வாயமூடும்.தெரிஞ்சிக்க,காலையில நாலரை மணிக்கெல்லாம் எந்திரிச்சுருவாருண்ணே.அப்படி எந்திரிக் கிறவரு நேரா ஆத்தங்கரையில போயிதான் நிப்பாரு,அங்க ஆத்துல குளிச்சிட்டு கரையில இருக்குற பிள்ளை யார் கோயில நாலு சுத்திச்சுத்திட்டு ஒடம்புல திருநீரு பூச்சோடயும், விரிச்சி விட்ட தலைமுடியோடயும்தான் வருவாரு பாத் துக்க, எதுத்தாப்லபாக்குற அத்தன பேரும்துண்டெடுத்து இடுப்புலகட்டிக்கிருவாங்க,எனக்கு நெனைவு தெரிஞ்சிஅவருதலைமுடிய என்னைக்கும் வெட்டுனது கெடையாதுண்ணே, எப்பவும் பாதி முதுகுவரைக்கும்முடி தொங்கும்ண்ணே, அள்ளி முடிஞ்சி ஒரு
கொண்ட ஊசியசொருகிக்கிருவாருண்ணே, அந்தகொண்ட ஊசிஅம்பா சமுத்து ரத்துல மட்டும்தான்கெடைக்கும், அது மரத்தால செஞ்சதுண்ணே, ரொம்ப மெலிசா இருக்கும்,ஆனாஒடைச்சா ஒடையாதுண்ணே, கல்ல தூக்கிப்போட்டு வம்படியா நச்சாத்தான் உண்டு.அது இவரு சின்னப்புள்ளையா இருக்கும் போது தொழில் கத்துக்கிட்ட தச்சுப் பட்டறையிலஇருந்து கெடைக்குதுன்றாங்க.
ஆத்து ர அவசரத்துக்கு ஊசிகெடைக்காத நேரத்துல இவரு என்ன செய்வாரு ன்னா இவரே மரத்துல செதுக்கிருவாருன்னா பாத்துக்கவேன். 

இவரு தச்சு வேலை பாத்த நாட்களவிட குறி சொல்லவும் ஜாதகம் எழுதவும் ஜோசியம்பாக்கவும்கல்யாணப்பத்திரிக்கைஎழுதவுமாஇருந்தநாட்கள்தான்அதிகம்.
இத்தனைக்கும் அவரு அம்பாசமுத்துரத்துல ஒரு பெரியஆள்கிட்ட ரொம்ப கஷ்டபட்டு தொழில் கத்துக்கிட்டாரு.சம்பளமெல்லாம் கெடையாது.
சாப்பாடும்,டீயும்மட்டும்தான்,இது போக பொங்கல் தீபாவளியன்னைக்கும், உள்ளூர் கொடையன்னைக்கும் கண்டிப்பா போனஸ் புதுத் துணி உண்டு.ஆனா வேலைபெண்டெடுத்துருமாம்,சாப்பாட்டுக்கும்டீக்குமாவயித்ததொங்கப்போட்டு காத்துட்டிக் கெடக்கணுமாம்.வேலையில ஏதாவது தப்பு நடந்தா பொசுக்குன்னு கைநீட்டிருவாங்களாம்.இதுக்கெல்லாம் இஷ்டப்பட்டு இருந்தாதொழில் கத்துக் கிடலாம்,இல்லையின்னா போகவேண்டியதுதான்வெரலச்சூப்பீட்டு/ 

இத்தனிக்கும் இவரு ஒண்ணும் வசதியில்லாத குடும்பத்துல பொறந்தவரு இல்ல,பின்ஏன்இப்பிடிப்போயி இத்தனை செரமப்பட்டு தொழில்க் கத்துக்கணும் ன்னு அவங்க அப்பாகிட்ட கேட்டப்ப அவுங்க அப்பா சொன்னாராம் உக்காந்து தின்னா மலையும் கரையும்பாங்க,கத்துக்கிடட்டும் ஏதாவது உருப்படியா, கை வசம் ஒரு தொழில் இருந்தா எங்க போனாலும் பொழச்சிக்கலாம். அதுனால தான் அவன் அவ்வளவு அவமானப் படுறான்னு தெரிஞ்சும் தொழில் கத்துக்க விட்டி ருக்கேன்,அங்க கத்துக்கிறத இங்க கத்துக்கிலாம்தான்,ஆனா என்ன இருந்தாலும் சொந்த யெடம்,சொந்த மொகம், செல்லம் வந்துரும்,கறார கத்துக்கிட மாட்டான் அதான் அங்க கொண்டோயி விட்டேன் என்றாராம். 

அப்படியாய்விடப்பட்டஅவர்அடிபட்டுஅவமானப்பட்டு புடுங்குப்பெத்து டீக்கும், சோத்துக்குமா வயித்தக் காயப்போட்டுக்கெடந்து வேலை செஞ்சி பழகுனவரு, அந்ததொழிலகத்துக்கிட்டதுக்குஅப்புறமாஅந்தத்தொழிலஉயிராநேசிச்சிருக்காரு/ அவுங்கிட்டதொழில்கத்துகிட்டுவந்ததுக்கப்புறம்எந்நேரமும்உளியும்கையுமாத் தான் அலைஞ்சிக்கிட்டு இருந்துருக்காரு. அவரப் போல வேலை செய்ய அந்த ஊர்ல யாரும்இல்லைன்னு சொல்வாங்க/ 

பெரும்பாலும்உழவுக்கலப்பவேலைபாக்க,டேபிள்மேஜைசெய்யங்குறவேலை
களைத் தவிர்த்து வீடுகளுக்கு ஓடு வேயப்போவாரு,ஒரு முழு வீட்டுக்கும் ன்னாலும்சரிஇல்லைன்னாஒருபகுதி வீட்டுக்குன்னாலும் சரிஅவர் கைபட்ட அந்த ஓட்டுச்சாப்பு அப்பிடியே பாக்கப் பாக்க நம்மளோட அப்பிடியே பேசும். ஆமாம்அப்பிடி வேலசெய்வாரு,அப்பிடியெல்லாம் மர வேலைக்கும் அவருக் குமா இருந்த ஒறவு எப்பிடி கொறஞ்சிருச்சிஎந்த நேரத்துல அதுல சரிவாச்சு ன்னு தெரியல. 

குறி சொல்ல,ஜோசியம் சொல்ல ஜாதகம் எழுத தீவிரமாயெறங்கீட்டாரு,இது மட்டும்ன்னு இல்ல மந்திரிக்க தாயத்துக்கட்ட கல்யாணப்பத்திரிக்கை எழுதுற துன்னு,,,,,, எல்லாம் செய்வாரு, உள்ளூர்லமட்டும் இல்ல,சுத்துப்பட்டியிலயிரு ந்து கூடஆள்க வந்து போவாங்க, பாத்தா அந்நேரமெல்லாம் வீடே கோயில் மாதிரிதான் இருக்கும்,நெறஞ்ச ஊதி பத்தி வாசனையும்,சாம்புராணி பொகை யுமாத்தான் இருக்கும் .இது போக சந்தனம் குங்குமம்ன்னு வீடே ஜம்முன்னு இருக்கும். 

என்னதான் இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் கூடவாரத்துக்குஒரு தடவை உளியத்தொடலைன்னா தூக்கம் வராது அவருக்கு.

யாராவதுஒருத்தர்சுத்துப்பட்டியிலவேலைக்குச்சொல்லிவச்சிகூட்டிட்டுபோயி
ருவாங்க,இவருக்கும் மூக்குல வேர்த்த மாதிரி இந்த ஊர்ல இன்னார் வீட்ல வேலகாத்துக்கிட்டுக்கெடக்காம்லஎனப்போய் கேட்டுட்டுவந்துருவாரு/ சுத்துப் பட்டிக்கு எங்க போனாலும் நடைதான்.

இவருபோய்க்கிட்டுஇருக்கும் போதுஏதாவது மாடு வண்டிஎதுனாச்சும் போயிக் கிட்டுஇருந்துச்சின்னாநின்னுஏத்திக்கிட்டுப்போயிருவாங்க,அப்பிடியும்ஏதாவது வரலைன்னாவெத்தலையமென்னுக்கிட்டுஇவரு வாட்டம் காட்டுப் பாதையில நடந்து போயிருவாண்ணே,அது பத்து கிலோமீட்டருக்கு மேல இருந்தாகூட சரிதான். 

அந்தமாதிரிவேலைகளுக்குபோறநாட்கள்லயாராவதுவர்ரேன்னுசொல்லீருந்
தா வேணாம்ன்னு சொல்லீருவாருண்ணே,ஏன்னா வர்ரேன்னு சொன்னவுங்க
சமயத்துல கார்ல வர்ற அளவுக்கு பெரிய ஆளாஇருப்பாங்க, இல்லைன்னா கார் வச்சி கூட்டீட்டு போற அளவுக்கு வருவாங்க,இதுலபெரிய பெரிய பெரிய அதிகாரிகளும்அடக்கம்.அவுங்கநம்பிக்கைபொய்யாபோயிறக்கூடாதுங்குறது
க்காக ஒரு டைம் டேபிள்போட்டுவச்சிருப்பாரு. அப்பிடி யெல்லாம்இருந்தவரு ஒரு நா திடீர்ன்னு தலை கீழா மாறிப்போயிட்டாரு. 

வழக்கம்போல காலையில எந்திரிச்சு கொளத்துக்கு போனவரும்போது முடிய வெட்டீட்டுதிருநீருபூசாமத்தான்வந்தாரு.என்னனுன்னு கேட்டப்ப யாருகிட்ட யும் ஒண்ணும்சொல்லமாட்டேன்னுட்டாரு. அவருக்கு நெருக்கமான ஒருத்தர் கிட்ட மட்டும் சொல்லீருக்காரு, கல்யாணத்துக்காக நாள்க்குறிச்சிக் குடுத்த ஒரு பையன் கூடாத சகவாசத்தால போயி கல்யாணமே நின்னு போச்சாம். அதக் கேள்விப்பட்ட அன்னைக்கில இருந்து இவரு குறி சொல்றது, கல்யாண த்துக்கு நாள்க்குறிக்கிறது மாதிரியான வேலைகளையெல்லாம் விட்டுட்டாரு. பழைய படிக்குமா உளிய கையெலெடுத்துட்டாரு.உள்ளூர்லயும் சுத்திப் பட்டி யிலயும் வேலை கெடைக்கிற அன்னைக்கி பாப்பாரு, இல்லைன்னா வண்டி நேரா அம்பாசமுத்துரம் நோக்கி கொளம்பீரும் பாத்துக்க, கல்யா ணத்துக்கு நாள் குறிச்சி வாங்கீட்டுப்போன அந்த,,,,,,,,,,,,,,,,,,,,கல்யாண நாள் வரைக்குமா வது  ஒழுக்கமா இருந்து தொலைக்க வேண்டியது தான,அவனுக்கு அப்பபம் தண்ணி சாப்புடுறபழக்கம்உண்டுண்ணே, மொதல்லகல்யாணம்காச்சி, யெழவு வீடுன்னு இருந்த நாயி கொஞ்ச கொஞ்சமா ஒயின் ஷாப் வாசல் லயே குடி இருக்க ஆரம்பிச்சுட்டான்.விடுவாங்களா சும்மா, எப்பம்,எப்பம்ன்னு காத்துக் கிட்டு இருந்த நாதாறிங்க இவன் தோள் மேல கையப்போட ஆரம்பிச்சிட்டா ங்க. 

அப்புறம்என்ன,தண்ணிதான்,கடைச்சாப்பாடுதான்ஜாலியானசுத்தல்தான்,பெரிய வீட்டுப்பையன் இதுல கல்யாணம் வேற முடிவாயி இருக்கவும் வீட்ல அவ்வளவா கண்டுக்கல,அது இதுன்னு கேள்விப்பட்டதக்கூட கல்யாணத்தக் காரணம் காட்டி தட்டிவிட்டுட்டாங்க,அது பையபுள்ள அவனுக்கு சௌகரியமா போச்சு. குடி கொண்டாட்டம்ன்னு இருந்தவன் அப்பிடியே மெள்ள மெள்ள நகந்து பொம்பள சகவாசத்துல கூடிப்போன பெறகு நிக்குமா அது, ருசி கண்ட ஒடம்பு .அலையஆரம்பிச்சுட்டான், சும்மா சொல்லக் கூடாதுண்ணே அவனை யும்,அவன் யெடத்துல வேற ஒருத்தன் இருந்திருந்தா இந்நேரம் செத்து போயி ருப்பாம் செத்து/ 

அரை பாட்ல உள்ள தள்ளீட்டு அப்பிடியே அரைக்கிலோ ஆட்டுக்கறிய ஒத்த ஆளா திம்பாம்ண்ணே,குடிச்சாலும் குடி மொடாக்குடிதான்.தின்னாலும் தீனி மாடுமாதிரி தின்னுவான்.நம்மகூட்டாளியெல்லாம்அவன்பக்கத்துலஒக்காந்து சாப்புட்டா காய்ச்சல் கண்டு போகும்ன்னு நெனைக்கிற அளவுக்கு சாப்புடுவா ண்ணே,பன்னிப்பய/ ஓட்டலுக்கெல்லாம் போனாம்ன்னு வையி மொதல்ல ஒரு முழுச் சோறுசுக்கா,கோழிச்சுக்கா,ஆம்ளேட்டு, ஆப்பாயிலு,,,, அதோட முடிச்சிட்டு எந்திருப்பான்னு பாக்குறியா சாப்புட்டு முடிச்சிட்டு பழைய படிக்கும்அரை பிளேட்பிரியாணிவாங்குவான்.திரும்பவும் கவுச்சி அயிட்டங்
கள கொண்டு வரச் சொல்லுவான். சாப்புட்டு முடிச்சிட்டு வெளியில வந்த ஒடனே சிகரெட்டும் ஒரு பான் பீடாவோட போனான்னா ராத்திரி எங்கி ட்டாவது சல்லாபத்துல கெடப்பாம்ண்ணே.

விஷயத்தகேள்விப்பட்ட வீட்டுக்காரங்க கூப்புட்டு சத்தம் போடவும்மொதல்ல பயந்த மாதிரி பம்மி நடிச்சிட்டு இருந்தவன்நெருக்கிப்பிடிக்கவும்அப்பிடித்தான் செய்வேன்னுநிமுந்துக்கிட்டான்.என்ன செய்ய பின்ன,அடிச்சா திருத்தமுடியும் கழுத போகட்டும் விட்ரலாம்ண்ணு பாத்தா கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச் சி.என்னசெய்ய இப்பன்னு கையப்பெசஞ்சி நின்னுக்கிட்டுஇருந்த வேளையாப் பாத்து பொண்ணு வீட்டுக்காரங்கவந்துட்டாங்க,பொண்ணோட அப்பா பைய னோட அப்பாவப்பாத்து பெரிசா ஒண்ணும் பேசிடல, இப்பிடி ஒரு பையன் ஒங்க பொண்ணுக்குமுடிவானா ஒத்துக்கிருவீங்களான்னு அவரு கேட்ட மறு நிமிஷம் அடிச்சிவச்சிருந்த கல்யாணப்பத்திரிக்கையை எடுத்து வந்து சம்பந்த காரரு முன்னாடியே கிழிச்சிப் போட்டுட்டாராம் அழுதுக்கிட்டே/ 

அன்னைக்கிநைட்டுவீட்டு வாசல்லவச்சி ஊருக்கே கேக்குறமாதிரிகல்யாணம் நின்னுபோச்சின்னு சொல்லீட்டு பத்திரிக்கைய தீ வச்சி கொளுத்தீட்டாராம்.
அப்பிடி தீ வச்சி கொளுத்துன மறுநா அம்பாசமுத்துரம் பஸ்டாண்ல எங்க தாத்தாவப் பாத்தஅவருஅவருக்குள்ள கட்டி வச்சிருந்த வேகாளத்தையும் ஆத்திரத்தையும் கொட்டித் தீத்துக்கிட்டாராம். 

பையனோட அப்பா எங்க தாத்தாவப்பாக்க அம்பாசமுத்துரம் பஸ்டாண்டல வண்டி ஏறப் போக,எங்க தாத்தா ஊர்லயிருந்து தற்செயலா அம்பாசமுத்துரம் வந்து யெறங்க ரெண்டு பேரும் சந்திச்சி பேசுன விஷயம் நாரசமானதுன்னு போனதுக்குஅப்பறம் ரெண்டு பேரும் ஒண்ணும் பேசாம அவுங்கவுங்க வேலை யப் பாத்துக்கிட்டு திரும்பிப்போயிட்டாங்க. 

அப்பிடிதிரும்பி வீடு வந்த அன்னைக்கு குடும்பிய அறுத்து எறிஞ்சிட்டு குறி சொல்றத நிறுத்துனவருதாண்ணே,அவருசாகுற நாள்வரைக்கும்யாருக்கும் ஒரு கல்யாண நாள்கூட குறிச்சிக்குடுக்கல,ஏங் கல்யாணத்துக்குக்கூட அவருகிட்ட தொழில் கத்துக்கிட்ட ஒருத்தர் கிட்டப் போயித் தான் நாள் குறிச்சி பத்திரிக்கை எழுதி வாங்கீட்டு வந்தார்ண்ணே,  அப்பேர்ப்பட்ட மனுசங்கள்லாம் நம்மகிட்ட இருக்கத்தான் செஞ்சாங்கண்ணே ஆனா இன்னைக்கிப்பாத்தா எங்க தாத்தாகிட்ட தொழில் படிச்சவன் எப்பிடி இருக்காம்ங்குற. அவன் பேண்ட் என்ன, சட்டை என்ன, கையில அவன் போட்டுருக்குற காப்பும் மோதிரமும் கழுத்துல கெடக்குற மைனர்ச் செயினுமா,,,,,,,,பாக்க அப்பிடி இருக்காம்ண் ணே,,,,,என்னத்தையோஒருசொல்லூசன்இல்லாதவாழ்க்கையா வாழ்றோம் ண்ணே,அவ்வளவுதான் நான் சொல்ல முடியும் என தான் பேசுகிற எல்லாப் பேச்சின்முடிவிலும் சொல்லூசன்என்கிற வார்த்தையைக் கொண்டு வந்து விடுகிற சொல்லூசன் ராமநாதனை ஞாபகப் படுத்திய கதவருகே நின்றிருந்த பெண்தான் இவனிடம் வந்து என்ன வேணும் எனக் கேட்டாள். 

கண்ணாடிச்சட்டம் போட்டிருந்த ஆபீஸ் ரூமினுள் அமர்ந்து எழுதிக் கொண்டி ருந்தவர்தான் முதலாளியாக இருப்பார் போலிருக்கிறது.இவனிடம் என்ன வேணும்எனக்கேட்டுவந்தவள் வேலையாளாக இருக்கலாம் அல்லது ஓனரின் மனைவியாக இருக்கலாம். 

நான்கு பேர் சரக்கை நிறுத்து பாக்கெட் போட்டுக்கொண்டிருந்தார்கள்,ஒருவர் சரக்கைநிறுக்க,ஒருவர்பாக்கெட்போட,ஒருவர்போட்டபாக்கெட்டைபற்றவைத்து அடுக்கஎனஅவர்களுக்குள்ளாய்பகிர்ந்துகொண்டவேலைகளைசரிபார்த்தவாறும்,தானும்ஏதாவது ஒருவேலையைசெய்தவாறுமாய் இருந்தவள்தான் இவனிடம் என்ன வேணும் எனக்கேட்டாள்,ஒருவேளை முதலாளியின்மனைவியாக இருப்பாளோ,வயது மிகவும் வித்தியாசப் பட்டுத்தெரிந்தது. இவருக்கும் கிட்டத் தட்ட பதினைந்து வயதுக்கும் மேல் இருக்கலாம் வித்தியாசம்.

பளிச்சென வெள்ளை வேஷ்டி சட்டையில் தெரிந்த முதலாளிக்கு நேர்மாறாய் தெரிந்தாள் அவள்.குப்புக்கலர் சேலையும் அதற்கு ஏற்ற கலரில் ரவிக்கையும் அணிந்திருந்தஅவள்கிட்டத்தட்டகனகவல்லிஅக்காவைப்போலவேஇருந்தாள். 

அவளும் இப்படித்தான் அவள்பளிச்செனசேலைஉடுத்திஇவன் பார்த்ததில்லை. என்னசெய்யச் சொல்றீங்க தம்பி.போட்டுருக்குற ட்ரெஸ்ஸீல அழுக்குப்படாம இருக்கநாங்க என்ன கவர்மெண்டுஉத்தியோகமாபாக்குறோம்.ஏதோவெந்ததத் தின்னுட்டு விதி வந்தாசாவோம்ன்னு நாட்கள நகத்துனாலும் கூட தல போயி சேர்ற வரைக்கும் பொழப்ப நடத்தணுமில்ல என்பாள். 

அவளைப்பார்க்கிற நாட்களிலும் அவளுடன் பேச நேர்கிற நாட்களிலுமாய் என்னக்கா எப்பிடியிருக்கீங்க சௌக்கியமா என அவளுக்கு இவன் முகமன் கூறுவதும்இவனுக்குஅவள்முகமன்சொல்வதுமாய்இருக்கும்.திருத்தங்கல்லில் பட்டாசுத்தொழிற்சாலையில் வேலை பார்க்கிறாள். 

அவளது கணவன்இறந்து நான்கு வருடங்கள் ஆகிப்போனது. அலுமினிய பேக்ட்ரியில் வேலைபார்த்த பொழுது பாய்லர் வெடித்து இறந்து போனான். 

அவன் இறந்த நாளன்றும் அதற்கு முந்தைய நாட்களிலுமாய் இவன் போயி ருக்கிறான் அங்கு/இவன் வேலை பார்க்கிற தனியார் பைனான்ஸில் கடன் வாங்கியிருப்பவர்களைப்பார்க்கவும்,அவர்கள் தவிர்த்து அங்கு வேலை பார்க் கும் இன்னும் சில பேரைப்பார்க்கவும்,அவர்களிடம் சீட்டுப்பணம் வாங்கவு மாய்/ 

அப்பொழுது கனகவல்லி அக்காவின் கணவனைப்பார்த்திருக்கிறான். பார்க்க வே மிகவும் பரிதாபமாக இருக்கும்,அவரை மட்டுமல்ல அவரது பேட்ச் ஒர்க்கர் எல்லாம்அப்படித்தான்இருப்பார்கள்.அவர்கள்பார்க்கும்வேலையின்சாட்சியாக அவர்களது உடல் முழுவதுமாய் அலுமினிய பெயிண்ட அப்பிப் போயிருக்கும். தலையிலிருந்து கால்வரை முழுக்கவுமாய் பெண்ட அடித்தது போலவும் உடலைபெயிண்ட்டால் மூடியது போலவும் காணப்படுகிறஅவர்கள் அலுமி னிய சிலைபோல் நடந்துவருவார்கள். இதுபோலசினிமாக்களில் தான்பார்த் திருக்கிறான்.கதாநாயகன் அல்லது வில்லன் அலுமினியச்சிலைபோல் நடந்து வருவார்கள், அது போலான காட்சியை இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறான். அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் கேட்டால் வாழுறதுக்காக பீ திங்குற பொழப்பு சார் எங்களது/எங்க எழுத்து அப்பிடி,நீங்க வந்த வேலையப் பாருங்க, என அவர்கள் அந்தச்சூழலிலும் சிரிப்பும் பேச்சுமாய்இவனுடன் பேசுவார்கள். அப்படியான ஒரு நாளில்தான் கனகவல்லி அக்காவின் கணவர் பேக்ட்ரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது பாய்லர் வெடித்து இறந்து போனான்.

அவனது இறப்புக்கு நஷ்ட ஈடாகக்கொடுத்த பணத்தை உள்ளூர்பேங்கிலேயே டெபாசிட்செய்திருந்தார்கள்பேக்ட்ரிக்கார்கள்.டெபாசிட்செய்தகையோடுபேக்ட் ரிக்காரர்கள் பேங்கிற்கு எதிர்த்தாற்போலிருந்த கனகவல்லி அக்காவின் வீட்டி ற்கு வந்து தங்களது கணவன் இறந்த இடத்திற்கு மாற்றாய் உங்களது குடும்பத் திலிருந்துஒருஆளுக்குவேலைபோட்டுத்தருகிறோம்.தங்களின்வாரிசுஅல்லது தங்களதுகுடும்பவழியில்யாராவதுஇருந்தால்சொல்லுங்கள்செய்துதருகிறோம் என்றார்கள்.கனகவல்லி  அக்காதான் வேண்டாம்எனச்சொல்லிவிட்டாள். 

இப்பொழுது வளர்ந்து நிற்கிற பையனைப்பார்க்கிற போது அந்த வார்த்தைகள் ஞாபகம்வருகிறது.பையன்பத்தாம்வகுப்புப்படிக்கிறான்.அவனின்படிப்பு ஊரறி ந்த ரகசியம்.படிப்பதைவிடஅம்மாவுடன்வேலைக்குப்போவதையே விரும்பு கிறான். காரணம் ஒன்று அம்மாவின் பாரத்தை பகிர்ந்து கொள்ளவும் இரண் டாவது இப்பொழுதிலிருந்தே கொஞ்சம் காசுசேர்த்தால்தான் கல்யாணம் சேமிப்பு என்கிறவிஷயமும்காசின்அருமையும்தெரியும்எனச்சொல்கிறஅவன் மூன்றா வதாய் தலையைச்சொறிந்துகொண்டுசொல்கிற விஷயம்கொஞ்சம் வெளியே போய் சம்பாதிக்க ஆரம்பித்தால் வீட்டில் கொடுக்கிற காசு போகக் கொஞ்சம் மிச்சம் பிடித்து மனதுக்கு பிடித்ததை கடையில் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாம். என்கிறான். 

ஏண்டாபடிக்கிற பயலுகள்லாம் இப்பிடி நெனைச்சா ஊருக்குள்ளஒருதிண்பண் டமும் மிஞ்சாது போலிருக்கே, புரோட்டா சால்னா உட்பட என அவள் தனது மகனை சப்தம் போட்டாலும் தலையில் தட்டி பொய்யாய் அடிக்க கை ஓங்கி னாலும்கையோடுஅவனைஇழுத்து அணைத்துக் கொள்வாள் வாஞ்சையோடு/ 

சும்மாஇருடாகிறுக்குப்பயலே/ஒத்தப்புள்ளையவச்சிருக்கேன்,நீயிஎன்னடான்னா, படிப்பு வேண்டாம் வேலைக்கிப் போறேன்னுநிக்கிறவேண்டாண்டாஇந்த நாறப் பொழப்புமொதலாளிசூப்பர் வைசரு,கூட வேலை பாக்குறவுங்கன்னு
ஏகப்பட்ட கண்ணு எங்க மேல விழும்.அந்த அடியில இருந்து தப்பிச்சி கரணம் தப்பினா மரணம்ங்குறக தையில நாட்கள தள்ளிக்கிட்டு இருக்கம். இதுல நீ வேறவேலைக்குப் போறயாக்கும்வேலைக்கு,எனநீட்டிமுழக்கியவள் இப்பிடித் தான் போகுது எங்க பொழப்பு என்பாள், 

மழை நேரங்களில் போனால் சூடாக டீயும் ,வெயில் நேரங்களில் போனால் மோரும்தந்துஉபசரிக்கும்கனகவல்லி அக்கா ஒரு லீவு நாளின் மதிய வேளை யில்சலித்துக்கொண்டு சொன்னாள்.என்ன பொழப்பு தம்பி இது.நாறப்பொழப்பு, நாலுநல்லயெடங்களுக்குப்போக முடியல ,வரமுடியல விருதாப்பயலுகப் பாக் குற பார்வையும் சரியில்ல, நேத்து இப்பிடித்தான் ஒரு பைய தண்ணி கேட்டு வந்தான்,அவன் வந்த வேளை சாய்ங்காலம் ஒரு ஆறு ஆறரை மணி இருக்கும்ன்னு வையி/தண்ணி வாங்கிக்குடிச்சநாயிசெம்பக்குடுக்கும்போது கையப்புடிச்சிக்கிட்டு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டான். 

நான் அவன ஓங்கி தள்ளி விட்டுட்டு கதவச்சாத்திக்கிட்டேன்.என கனகவல்லி அக்கா சொன்னதும் ஏன் அப்பிடி செஞ்சீங்க,கீழ தள்ளிவிட்ட கையோட வெளக்க மாத்தக் கொண்டு நாளு சாத்து சாத்தீட்டு நாலு மிதி மிதிக்கிறத விட்டுப்புட்டு கதவப்பூட்டிக்கிட்டுவீட்டுக்குள்ளபோயி இருந்தா என்ன அர்த்தம். சொல்லுங்க,,,/ என இவன்சொல்லவும் அப்பிடி அடிக்கிறதா இருந்தா எத்தன பேர அடிக்குறது. எத்தன வெளக்குமாற வாங்குறது.சொல்லு, இப்ப அது இல்ல பிரச்சன,என்ன மாதிரி இருக்குறவ கையப்புடிச்சி கூப்புட்ட ஒடனே வந்துரு வாங்குற கப்பி நெனைப்புதம்பி அவனுக்கு,புருசனா இருந்தாலும் சம்மதப் பட்டாதான இல்லையா,,,,,? என்னமோ ஓடுது தம்பி எங்க பொழப்பு, குடியி ருக்குற ஊர்லயே இப்பிடின்னா வேலை பாக்குற யெடத்துல எப்பிடி இருக்கும் ன்னு நெனைச்சிப் பாத்துகங்க தம்பிஎன்றாள்.கனகவல்லிஅக்கா/ 

அவள் எப்பிடி இவனுக்குஅக்கா முறையானாள்.அல்லதுஅவள்பேசுவதை இவன் எப்படிகாது கொடுத்துக்கேட்கும்அளவிற்கு இவனை நிர்பந்ததிற்குள்ளா க்கியது  எது,, என்கிற வித்தை இன்னும் புரியாமலேயே,,,/ 

இவன் அவளிடம் தனதுகம்பெனிக்காய் சீட்டுப்பணம் வசூல்ப்பண்ணப்போகிற நாட்களில்ஏற்பட்ட பழக்கம்தான் இதை சாத்தியப்படுத்தியது எனலாம். 

இதை இவன் ஆலந்தூரைக் கடக்கிற ஒவ்வொரு முறையுமாய் இன்னும் நினைத்துக் கொள்கிறதுண்டுதான்.
                    
                                                                       பாகம்-2

இவ்வளவு தூரம் வந்து விட்டு முருகண்ணனின் வீட்டிற்கு போகாமல் போனால் எப்படி? அந்த ஏரியாவில்தான் அவரது வீடு இருந்தது.அப்புறம் தெய்வகுத்தமாகிப் போகும்/அதைக்கூட தாங்கிக்கொள்ளலாம்,முருகண்னன் குத்தம் வந்து விட்டால் என்ன செய்வது,,,?

மதுரை மட்டும் அல்லாது சிவகாசி,சாத்தூர் மற்றும் இது போன்ற பெரு நகரங்க ளுக்கும்,அதை ஒட்டிய கிராமங்களுக்குமாய் அந்தப்பாலத்தின் வழியாகத் தான் பஸ் போனது.

மெதுவாக நகர்ந்தும் வேகமாக ஊர்ந்துமாய் நகர்ந்து செல்கிற அந்தகுறுகிய பாலத்தின் மீதுதான் பஸ்ஸிலும் இரு சக்கரவாகனத்தில் பயணித்துமாய் இவனது பயணம் நடந்திருக்கிறது பெரும்பாலான் நாட்களில்/

பாலத்தை ஒட்டிய அண்டர் கிரவுண்ட் சைக்கிள் ஸ்டாண்டில்தான் இரு சக்கர வாகனத்தை வைத்துவிட்டுப் போவான்.இரு சக்கரவாகனம் ஓட்டுவ தின் மீதும் அதில் ஒய்யாரமாக செல்வதின்மீதும் இவனுக்கும் பெரிய காத லெல்லாம் இருந்ததில்லை.

ஆனால்அப்படிப்பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சைக்கிளில் செல்வதைவிட சீக்கிரம் சென்று விடலாம் ஒரு இடத்திற்கு என்கிற சௌக ரியமும் அவசரத்திற்கு ஆகவில்லை சைக்கிள் என்கிற அசௌகரியமுமாய் ஒன்று சேர்கையில்இருசக்கரவாகனத்தைகட்டிக்கொண்டு அழுக வேண்டிய திருக்கிறது.

இதிலிருந்தஒரே சௌகரிய குறைச்சலும்கூடுதல்அசதியும்என்னவென்றால் சைக்கிள் மிதிக்காததால் ஏறிப்போன உடல் கனமும் சோம்பேறித்தனமும் அதுசேர்த்துபெட்ரோலுக்காய்ஆகிப்போகிறகூடுதல்செலவும்தான்எனசொல்ல வைக்கிறது.

புளூ,பச்சை,கறுப்பு,சிவப்பு,ஆஸ்க்கலர்,,,,,எனஇதரஇதரகலர்களில்கிடைக்கிற எந்தக்கலர் இரு சக்கரவாகனமும் மேற்ச்சொன்ன சௌகரிய,அசௌகரியத் தை செய்து விட்டுச்செல்கிறதுதான்.ஆனாலும் விட்டு விட முடியவில்லை. சுமைகளை சுமப்பதில் இருக்கிற சுகம் இதுதான் போலும்/

இது போலான இரு சக்கரவாகனத்தைமுருகண்ணன்வைத்திருந்தார்.புத்தம் புதியஸ்கூட்டிவண்டி.ரோஸ்க்கலரில்பார்ப்பதற்குநன்றாகஇருக்கும், வேலை பார்க்கிற நிறுவனத்தில் லோன் போட்டு வாங்கியிருந்தார்.இவன் வேலை பார்க்கிறா அதே நிறுவனத்தில்தான் அவரது பணியும்/

வாங்குறசம்பளத்தில்வண்டிக்குமாதாந்திரபிடித்தம் போய்விடும். தோணாது, என்கிற யோசனையிலும்,சமூகத்தில் ஒரு கௌரவமாய் போய் விடும் என்கிற எண்ணத்திலுமாய் வாங்கியது.

அப்படி அவர் வண்டி வாங்கிய முதல் வாரத்தின் லீவு நாளன்றின் மதிய வேலையில் இந்தப்பாலத்தின் மீது சென்றிருக்கிறார் ஊர் வரை போய் வரலாம் என்கிறதான் நினைப்பில்/சரி போனதுதான் போனார் ஒழுக்கமாக போயிருக்கலாம்தானே, கொஞ்சம் தண்ணி சாப்பிட்டுவிட்டார் போலும். பாலத்தின்மீதுவிழுந்து விட்டார்,

போய்க்கொண்டிருக்கும்பொழுதுசாப்பிட்டதண்ணிவேகம் காட்டியிருக்கிறது, விடுந்துவிட்டார்.விழுந்தவேகத்தில்அவரைகொஞ்சதூரம்இழுத்துக் கொண்டு போய் விட்டது போலும் வண்டி/

,உடலெல்லாம்உரைக்காயம்.அதில்ஏற்பட்டசிராய்ப்புகளுக்குமருந்துபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். இவன் விஷயம் கேள்விப்பட்டுப் பார்க்கப் போயிருந்தபோது.

அவர்அப்படித்தான்அடிக்கடிஎனச்சொன்னசெண்பகாமாமியிடம்சொல்லிவிட்டுத் தான் வந்தான்.

செண்பகாமாமிக்கு இளையராஜாவின் பாடல்கள் என்றால்உயிர்.அவர்களது வீட்டிலிருக்கிறஎப்.எம்ரேடியோவில் பெண்டிட்ரைவ் சொருகிக்கேட்பாள். அந்தபெண்டிரைவில் 200 பாடல்களுக்கும் மேல் இருக்கிறது என்றாள் ஒரு முறை பார்க்கும் போது.

செண்பகாமாமிதான் சொன்னாள்.முருகண்ணன் வைத்திருந்த வண்டி ஓட்டு கிற நிலையில் இல்லை,

ஒருபுதுவண்டியை வாங்கி வச்சிட்டு அது டேமாஜாகி அவரது கண் முன்னால ஒருஎலும்புக்கூடா நிற்கிறதை அவரால பாக்கமுடியல பாவம், வண்டிய போற வெலைக்கு வித்துட்டுலோனகட்டீட்டு நிம்மதியா இருக்கச் சொல்லுங்க அவர, ஒங்களமாதிரிஆட்கள்சொன்னாத்தான் கேப்பாருஅவரு, நாங்களெல்லாம்சொல்லிப்பாத்துட்டோம்,கேக்குறவழியக்காணோம்.அவரோட சொந்தக்காரங்களோட போயி அவரு வீட்டம்மா நேத்துத்தான் ஜோஸியம் பாத்துட்டுவந்தாங்க,ஜோஸியர்சொன்னாராம்.இவருக்குகொஞ்சநாளு வாகன யோகம்கெடையாது, அத ஓட்ற பிராப்தமும் இப்பதைக்குள்ள அமையாதுன் னுராம்.

பாத்துட்டீங்களாமாமிஜோசியம்சும்மாவேஇருக்கமாட்டீங்களேபொம்பளைங்க, என்ற இவனது பேச்சுக்கு ஆமாம் ஆம்பளைக மட்டும் அந்தமானிக்கி,,,, என நீட்டி இழுத்தாள்.

மாமி சொன்ன படி செய்து விடலாம் சரி,ஆசைப்பட்டு வாங்கிய வண்டியை இப்படி ஆஸிடெண்ட் நடந்து விட்டதற்காக விற்கா விட்டால் என்னவாம் அது சரி ,அவருக்குத்தெரியுமா நீங்க பேசிக்கிறதும், முடிவெடுத்துக்கிறதும் எனக் கேட்டான் மாமியிடம் இவன்,

அதற்குமுருகண்னனின் மனைவி சொல்கிறாள்,சும்மா இருக்கண்ணே நீங்க இப்பிடியேஎதுக்கெடுத்தாலும்அவரக்கேளுங்கஅவரக்கேளுங்கன்னுசொல்லித் தான்இந்தஅளவுக்குவந்து நிக்குது.கூட வேலை பாகுரவரு இப்பிடி சீரழிஞ்சி நிக்கிறாராரேன்னுகொஞ்சமாச்சும்நெனப்புஇருந்தா இப்பிடி கேப்பிங்களா என்னத்தையோ பத்தாக்கொர வருமானம்ன்னாலும் குடும்பம் ஓடிக்கிருது பக்கத்துல மாமி மாதிரி நல்ல மனசுக்காரங்க சப்போட் இருக்கப்போயி/

அவரக்கேட்டாஎனசொல்வாரு,வண்டிய விக்கவேணாம்ன்னுசொல்லுவாரு. அதஇப்ப ரிப்பேர்ப் பாக்கணுன்னா ரெண்டு மூவாரத்துகுப் பக்கத்துல வரும் ண்ணு சொல்றாங்க/அதுக்கு இவரு வித்துத்தொலைச்சிட்டு லோன முடிச் சிட்டு நிம்மதியா இருக்கலாம்,அவரு வேலை பாக்குற ஊருக்குத் தான் கால்மணி நேரத்துக்கு ஒருபஸ்போகுதுல்ல,அதுல போக வேண்டியதுதான ,நம்மள மாதிரி பொறங்கைய வழிச்சி நக்குற ஜாதிக்கு கௌரவம் என்ன வேண்டிக் கெடக்கு கௌரவம்என்றாள் அழுகையினூடாக.

வாஸ்தவம்தான் அவள் சொல்வதும் என அவளது பேச்சைகடந்து முருக ண்ணனைப் பார்த்த போது அவர் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.

இவர்களுக்கு மத்தியில் அவரிடம் இதை பேசினால் சரியாக இருக்காது என டீக்கடைப்பக்கமாக கூட்டிக்கொண்டு போனான்,

டீக்கடைக்கு போக மாமியின் வீட்டைக்கடந்துதான் போகவேண்டும்,மாமி சொன்னாள் எங்க டீக்குடிக்கத்தான் போறீங்க,வாங்க எங்க வீட்டுக்கு நான் டீப்போட்டுத்தர்றேன்என்றாள்.நீங்கடீப்போடுவீங்க இல்லைன்னு சொல்லல மாமி,ஆனா ஒங்க வீட்ல ஒக்காந்து அவருகிட்ட சிலத பேச முடியாது. என்றான் இவன்.

அதெல்லாம்சரிதான்என்றுசொன்னமாமியின்வீட்டிற்குஎப்பொழுதுபோனாலும் வீட்டில் என்ன இருக்கிறதோ சாப்பிட எடுத்துக்கொடுத்து விடுவாள்,சேவு மிக்சர்,பக்கோடா ஏதாவது ஒன்று வீட்டில் வைத்திருப்பாள்,ஆமாம் தம்பி எங்கவீட்டுக்காரருக்குஏதாவதுவீட்ல திங்கிறதுக்கு நொறுக்குதீனி இருந்துக் கிட்டே இருக்கணும்,

இல்லைன்னா வீட்ட ரெண்டாக்கிப் புடுவாரு மனுசன்.புரோட்டாக்கடையில மாஸ்டர வேலை செஞ்சாலும் அவரு ஒரு நா கூட புரோட்டா கொண்டு வந்ததுஇல்லைவீட்டுக்கு,கேட்டாஅதுநாசெஞ்சது வேணாம் என்பார், வேணு முன்னா நான் சொல்லச்சொல்ல அது மாதிரி செய்யி,நல்ல புரோட்டா சப்புடலாம் என்பார்,அது மாதிரி செய்யவும் சொல்லிக் குடுப்பார், ஏதாவது ஒரு அவசரம் வெளியூரு ஒடம்புச்சர்யில்லங்குற மாதிரி ஏதாவது ன்னா மட்டும்கடையிலஇருந்துநாலுஇட்லி குடுத்து விடுவாரு. புள்ளைக இல்லாத வீடுங்குறதுனால சாப்பாட்டுச் செலவு கம்மி/

நான்மில்லுல வேலை பாத்துக்கொண்டு வார சம்பளம்,அவரு புரோட்டாக் கடை வருமானம் ரெண்டும் குடும்பத்த இழுத்து ஓட்டுது தம்பி.

அல்லா புண்ணியத்துலரெண்டுபேரும் ஒண்ணா மௌத் ஆகிரணும் தம்பி, இதுல எப்பிடி எழுதிருக்கோ.யாரை யாரு முந்துரோம்ன்னு தெரியல எனச் சொன்ன மாமி ரெண்டு பேருமா சேந்து டீக்கடைக்குப் பக்கத்துல இருக்கிற ஒங்க கடைக்கு போயிறாதீங்க என்பாள் பேச்சினூடாக/

சரி என அவளது பேச்சை கேட்டவாறே முருகண்ணனை கூட்டிக்கொண்டு டீக்கடைக்குப் போனான்.டீக்கடையில் முருகண்ணன் டீக்குடித்துக்கொண்டி ருக்கும்போது சொன்ன விஷயம்இவனைமேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனலாம்.

மாமியும்எங்கவீட்டுக்காரியும் தீபாவளிக்கு போனஸ் வாங்கி கை நெறைய வச்சிருக்காங்க,கேட்டா ஏங் வீட்டுக்காரிபைசாநகட்டமாட்டேங்குறா,நீதான் கொஞ்சம் சொல்லி எனக்கு ஒரு ஆயிரம் ரூபா வாங்கித்தரணும்என்றார், எதுக்குஆயிரம்எனக்கேட்டபொழுதுதீபாவளிச்செலவுக்கு என்றார்.

அடசண்டாளத்தனமேஎதுக்கு தீவாளி அன்னைக்கு தண்ணியப் போட்டுட்டு எங்கிட்டாவது போயி விழுந்து கெடக்கவா பேசாம இருங்கண்ணே மனச மூடிக்கிட்டுஎனஅன்றுமுருகண்ணனிடம்சப்தம்போட்டுவிட்டுமாமியிடமும், முருகண்ணனின் மனைவியிடமும் சொல்லி விட்டு வந்தான்.

வரும் போதுதான் இவன்நுழைந்த வீட்டில் சேவுப்பாக்கெட்டும் மிக்சர் பாக் கெட்டுமாய் வாங்கிக் கொண்டுவந்தான். 150 விலை சொன்ன பெண்ணிடம்/

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

கனகவல்லி அக்காவின் வார்த்தைகள் சத்தியமானது!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/