12 Jul 2017

பற்றாக்குறை,,,,,



பையிலிருக்கிற ரூபாய் பத்து
தேநீர் அருந்தவே போதுமானதாகிப்போகும்,
இதில் வடையை துணைக்குச்சேர்த்துக்கொண்டால்
இன்னுமொரு ஐந்து சேர்த்துத்தர வேண்டும்.
வடை சாப்பிட்டு ரொம்பவும்தான் நாட்களாகிப்போனது.
வடை என்பது வீட்டில் அன்றாடம் சுடுகிற பண்டமல்ல.
பண்டிகை நாட்களிலும் விஷேச தினங்களிலுமாய்
பிரியம் காட்டி செய்யப்படுகிற வஸ்து,
அதை தினந்தோறுமாயோ ,அல்லது
வாரத்தின் ,மாத நாட்களில் என்றாவது
ஒரு நாள் சாப்பிட வேண்டுமென்றால்
இது போல் டீக்கடைக்குத்தான் வந்தாக வேண்டியிருக்கிறது.
அப்படியாய் வருகிற சமயங்களில்
கையிருப்பைப் பொறுத்து டீயோ வடையோ சாப்பிடுவதுண்டு.
அப்படித்தான் இன்றும் ஆகிப்போகிறேன்.
வீட்டிலிருக்கிற கொஞ்சப்பணத்தில்
சிறிது சேர்த்து எடுத்து வந்திருக்கலாம்.
ஆனால் அது இந்த மாதம் முழுமைக்குமாய் வேண்டுமே,,,?
உடல் நலமில்லாத மனைவியை
மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல
வீட்டிலிருக்கிற பேரக் குழந்தைகளுக்கு
ஆசை மிகுதிப்பட்ட நேரத்திலும்
இதரப்பொழுதுகளிலுமாய் ஏதாவது கையில் தரவேண்டுமே.,,,,,,,,
என்கிற ஆற்றாமை தாங்கிய மனதினனாய்
வீடு நோக்கி நடக்கிறேன்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பலரது வாழ்வும்இப்படித்தான் இருக்கிறது நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

முக்கியமானது "முதல்" தேவை..

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.எங்களது வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அவர்களது சங்கத்திலிருந்து பென்ஷன் கேட்டு போராடிய அன்று.எழுதியது.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாபலன் சார்.நன்றியும் அன்பும்!