25 Dec 2017

மென் பனி சுமந்து,,,,,,,

மென்பனி வீசிய முன் காலைப்பொழுது,கொஞ்சம் ரம்யம் சுமந்ததாயும் அழகு பட்டுமாய்/

ரம்மியமும் அழகும் இவ்வளவு சில்லாகவா இருக்கும்,இவனுக்குத்தெரிந்து இப்படியெல்லாம் இருந்ததில்லை என்பதாய்த்தான் நினைவு,

அது மீறி இப்படி சில் தன்மை சுமந்து காட்சிப்படுகிற நன்றாகவே இருக்கிற தாய்.

வாசலில் நட்டு வைக்கப்பட்டு பூத்துத்தெரிகிற செவ்வரளிச்செடி தன் நிறம் காட்டியும் குணம் காட்டியுமாய் /

பட்டுப் படர்ந்து தெரிகிற செடிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி உரசி மேனி மீது மேனி படர்ந்து அழகு காட்டி நிற்கையில் இந்த சில் என்ன செய்து விடப்போகிறது அந்தச் செடியை/

அப்படியே செய்வதானாலும் செய்து விட்டுப் போகட்டும்.அதற்கும் நாங்கள் தாங்கி நிற்க தயார் என்கிற முன்னறிவிப்பை ஏற்று காட்சி கொண்டு நின்ற தாயும் உறுதி கொண்டதாயுமாய் ஆகித் தெரிகிறது.

வந்து விட்ட விழிப்பின் வழி தாங்கி நின்று போன தூக்கத்தை இடை நிறுத்தி மனம் தாங்கிச் செல்கிறான்.கதவு திறந்து வாசல் நோக்கி/

கேட்டை திறக்கவில்லை.முன் பின்னில் கறுப்பும் வெள்ளை நிறமுமாய் காட்டி நின்ற இரும்பு கேட், அதன் ஊடாய் தெரிவு பட்டு பூத்திருந்த பூக்கள் தன் நிலை மாறாமலும், அவசரம் கொண்டு உதிர்ந்து போய் விடாமலுமாய்/

ஆகாஇதற்குத்தானே இத்தனை காலம் தவம் கொண்டு ஆசை கொண்டு கிடந் தாய் என உள் மனம் ரீங்கரிக்க திரும்பவும் ஒருமுறையாய் வெட்கிச்சிரித்த இரும்புப் பூக்களை சுமந்த கேட்டைப் பார்க்கிறான்.

கொஞ்சம் பெயிண்ட அடித்தால் நன்றாக இருக்கும்,அழகுக்கு அழகு பட்டு காட்சியளிக்கும் என மனதுள் நினைத்தவனாய் வீட்டுமுன் பரந்திருந்த வெற்று வெளியில் பார்வையை வீசுகிறான்,

அமைதியாய் உரு காட்டி நின்ற வெளியின் வெற்றுத்தோற்றமும் அதன் மேனி மீது முளைத்துத் தெரிந்த செடிகளும் சீமைக்கருவேலைமுட்செடிகளு மாய்/

செடிகள் பூத்திருக்கிற இந்த காலையின் மலர்வை இவன் எப்பொழுதாவது பார்க்க நேர்ந்து போவதுண்டுதான்,

அந்த எப்பொழுதாவது இன்றைக்காய் இருப்பது மிகவும் நன்றாகவும் கொஞ்ச ம் ரிலாக்ஸாகவுமாய்/

இந்நேரத்திற்குடீக்கடைதிறந்திருக்குமாஎனத்தெரியவில்லை.இருக்காதுஎன்று தான் நினைக்கிறான்,

இந்தக்குளிரில் இந்த அதிகாலைப்பொழுதில் சாத்தியம் இல்லைதான் அது.

பாம்பும் பல்ல்லியும் இன்ன பிற ஜந்துக்களுமாய் நடமாடித்திரிகிற வெட்டவெ ளியின் ஊடாக இவ்வளவு அதிகாலைபொழுதில் நடமாடித்திரிவதும் நல்லதும் சமயோஜிதமானதும் இல்லைதான்.

சரி வேணாம்,டீயை கேன்சல் பண்ணி விடலாம்.அப்படியே டீக்கடை திறந்தி ருந்தாலும் இப்போதைக்கு போவது இயலாது போலாகித்தெரிகிறது,

வெளியில் மிகவும் சில்லிட்டதாய்,

இப்போதைக்குள் இவ்வளவு சில்லிட்டு உணர்ந்ததாய் இவனுக்கு ஞாபகம் இல்லை,

இந்த வருஷம் குளிர் ரொம்ப ஜாஸ்திதான் என பலர் சொல்கிற மாதிரியே மணியண்ணனும்சொல்கிறார்.

”சார் எனக்கு நினைவு தெரிஞ்சி நான் காலையில எட்டு மணிக்கு எந்திரிச்சது இல்ல சார்,காலையில ஆறு மணிக்கு முன்னாடி எந்திரிச்சி டீக்கடையில போயி உக்காந்துருப்பேன்,

“டீக்கடைக்கி வர்றதுல பாதி பேருக்கு மேல மாமன் மச்சானும் அண்ணன் பங்காளிகளாவுந்தான்வருவாங்க,என்னசெய்யஅவுங்களகடைக்கிவரக்கூடாதுன்னு சொல்ல முடியுமா,இல்ல அப்பிடிச் சொல்ற ரைட் நமக்கு இருக்கா சொல் லுங்க,அந்நேரமே அந்தக் குளி ர்ல ரெடியா இருக்குற வடையப்பிச்சித் தின்னு ட்டே நம்மகிட்ட ரெண்டு வம்பு கட்டிக்கிட்டு டீக்குடிப்பாங்கெ சார்,

“அவிங்க அப்பிடித்தான்,ஏண்டாஇப்பிடிகாலங்காத்தால பல்லு கூட வெளக் 
காம இப்பிடி இங்க திங்கிற பலகாரத்த வீட்டுக்கு வாங்கீட்டுப் போயி குளிச்சி ட்டு கிளிச்சிட்டு தின்னா என்னடா கொறஞ்சா போகுது இப்பிடித் தின்னீங்கின் னா என்னாத்துக்கு ஆகுறதுடா ஒடம்பு” ன்னு சொன்னமுன்னாபோதும்சார், புடிச்சி ருவாங்கெ சார் புடி புடின்னு.

“நம்ம ஒண் ணும் பதிலுக்கு பேச முடியாத அளவுக்கு பேசுவாங்கெ சார், எங்கயோ பேசுறதுக்கு படிச்சி பட்டம் வாங்குனா மாதிரி பேசுவாங்க பாருங்க, நமக்கே ஆச்சிரி யாம போகும்ன்னா பாத்துக்கங்களேன்.பேசுவங்கெ பேசுவாங் கே நாங்க இருக்குற யெடத்துல இருந்து மதுரை வரைக்கும் பேசுவாங்கெ,,,/ எங்க ஊர்ல இருந்து மதுரை ரொமப தூரம் சார்,அம்பதுகிலோ மீட்டர் இருக்கும்,

“சத்தம்அங்க வரைக்குமா கேக்கப் போகுது,இருந்தாலும் ஒரு இதுக்காக சொல் றதுதான் ,எல்லாம், பேசுவாங்க ,சிரிப்பாங்க ,அரட்டையடிப்பாங்க, சந்தோஷா மா இருப்பாங்க, எல்லாம் முடிஞ்சி போகும் போது கடைக்காரர் கிட்ட என்னைய கையக் காண்பிச்சிட்டு போயிருவாங்கெ சார்,

“.நான் என்ன அதெல்லாம் முடியாது அவுங்ககிட்ட கேட்டுக்கங்கன்னு கடைக் காரங்ககிட்ட மல்லுக்கு நிக்கவா முடியும்சொல்லுங்க, என்னடா இப்பிடி பண்ணீட்டிங்கன்னு அந்தப் பையலுகள பாக்கும் போது கேட்டாக்கா ஒனக்கு என்னப்பா கவர்மெண்டு சம்பளக்காரனுக்குன்னுட்டு போயிருவாங்க,

“ஆளாளுக்கு ரெண்டு வடையும் டீயுமுன்னா என்னா ஆகுறது,துட்டு எங்க போயி நிக்கும்,நித்தம் இப்பிடி குடுத்துக்கிட்டு இருந்தமுன்னா என்னாகுற துன்னு கடைக்கி ஒரு ரெண்டு நாளு போகாம இருந்தமுன்னா தேடி வந்துரு வாங்கெ, டேய் என்னடா நீயின்னு,

“அதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு அவிங்கெ தான் எனக்கு காசு குடுப்பாங்க, நா ன் குடிக்கிற டீக்கும் திங்கிற வடைக்குமா சேத்து,

அப்பிடியான பொழுதுகள்லயும் நாட்கள்லயும் நல்ல பட்டியக்கல்லு இருக்கு பாருங்க,பட்டியக்கல்லு,அது நீளமா வீட்டு முன்னால அடிச்சு தொவைச்சி காய வச்ச போர்வ மாதிரி விரிஞ்சி கெடக்கும்.அதுலதான் எதுவும் விரிக்காம படுத்துக் கெடப்பேன்,

“வீட்ல படுத்தாலும் சரி,திண்ணையில படுத்தாலும் சரி,போர்த்திப் படுக்குற பழக்கம் கெடையாது,எவ்வளவுதான் குளிர்ன்னாலும் தாங்கிக்கிருவேன். இன் னும் சொல்லப்போனா எனக்கு அது பெரிசா ஒண்ணும்தெரியாது, நல்லா விடி யிறதுங்குள்ளநெறைகம்மாத்தண்ணியிலயும்,கெணத்துத்தண்ணியிலயும்போயி குளிப்பேன்.

“அப்பயெல்லாம் ஒண்ணும் தெரியல,இப்பம் கொஞ்ச நேரம் பைக்கில போற துங்குள்ள குளிர்ல கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருது,காதுல வந்து குத்துது குளிரு” என்பார்,

அவர் சொல்வதும் வாஸ்தவமே,ஆனால் அந்த வாஸ்தவத்தை உறக்கச் சொ ன்னால் வயசாயிருச்சி இனிமே அப்பிடித்தான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார். இல்ல சார் அது வந்து என ஏதாவது ஒன்றில் ஆரம்பித்து ஏதாவது ஒன்றில் முடிப்பார்,

காலையிலேயே விழிப்பு வந்து விட்டிருந்தது இவனுக்கு.இந்தக் குளிரில் இவ் வளவுசீக்கிரமான விழிப்பா,ஆச்சரியமாய் இருந்தது இவனுக்கு, குளிர் உடலை நடுக்கியது.

கொஞ்சமாய் பசித்தது போல் இருந்தது.இரவு சீக்கிரமாய் சாப்பிட்டு விட்டான், கொஞ்சம் தயிர் சாதமும் வெங்காயமும் சாப்பிட நன்றாக இருந்தது,

ரொம்ப நாள் கழிச்சி சாப்பிடுறதுனால ஒங்களுக்கு அப்பிடி தெரியுது,நித்தம் இட்டிலியும் தோசையுமா திங்கிற ஒங்களுக்கு வேற ஒரு சாப்பாடு கெடைச்ச ஒடனே அது கொஞ்சம் நல்லாவும் வித்தியாசமாவும் தெரியுது, அவ்வளவு தான்,

“இதத்தானநாமதின்னோம்சின்னப்புள்ளையில இருந்து, இப்ப கொஞ்சம் வசதி வாய்ப்பு வேலை,மாசச் சம்பளம்ன்னு ஆன ஒடனே தினசரி உணவு மொறை யே மாறிப் போச்சி,அத ஒரு நாகரீகமா நெனைக்கிறோமே தவிர அத நமக்கான உணவா என்னன்னு தெரிஞ்சிக்கிற மாட்டேங்கிறோம்.

ஒடம்புக்கு சாப்புட்டதுன்னு போயி நாக்கு ருசிக்காக என்னென்னெமோ பேரு தெரியாததெல்லாம் வாங்கி சாப்புட்டு வயிறு கெட்டுப்போயி திரியிறோம்” எனச்சொன்ன வார்த்தைகளின் ஞாபகம் உள்ளுக்குள் வந்து செல்வதாய் அந்நேரம்.

எழுந்து லைட்டைப்போட்டு விட்டு மணியைப் பார்க்கிறான்,மணி மூணறை யைக்காட்டுகிறது.

மூணறைதான் ஆகிறது,இந்நேரத்திற்கா எழுந்து விட்டோம்,

இல்லை அது நேரத்தை தப்பாக காட்டுகிறதா, அதுதான் சரி நேரத்தை இது தப்பாக காட்டுகிறது என்றுதான் நினைக்கிறான்,

காலத்தை தன் வட்ட வடிவத்திற்குள் அடைத்து வைத்துக்கொண்டு சின்ன முள்ளையும் பெரிய முள்ளையும் அதனுடனாய் விநாடி முள்ளையும் கூட்டு சேர்த்துக் கொண்டு ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் தன் நேரம் காட்டிய கடிகா ரம் இப்பொழுது கொஞ்சமாய் அதன் பணியில் பின் தங்கியும் தாமதம் காட்டி யுமாய் இருப்பது போல் தோணவே எழுந்து போய் செல்போனில் மணியைப் பார்க்கிறான்.

மணி நாலைரை ஆகியிருந்தது,முதல் வேளையாய் நாளைக்கு கடிகாரத்திற்கு பேட்டரி மாற்ற வேண்டும்,

ஒரு மணி நேரம் தாமதம்காட்டினால் என்னாவது, இதை நம்பி ஏதாவது போக வேண்டியதற்கு எப்படிப் போவது சொல்லுங்கள் என யாரையோ கேட் பது போல் கேட்டு விட்டு முகத்தை கழுவிக்கொண்டு வந்தான்,

திரும்பவுமாய் படுக்கிறது போல எண்ணம் இல்லை,இப்பொழுது படுத்தாலும் விடியும் பொழுது ஆறு மணியை நெருக்கி தூக்கம் வரும்,அது எதற்கு அந்தத் தூக்கம் என நினைத்தவனாய் உட்கார்ந்திருந்தான்.

இப்படி சும்மா உட்காருவதற்கு ஏதாவது புத்தகம் எடுத்து படிக்கலாம் இல்லை டீ வியை போட்டு விட்டு ஏதாவது பாட்டு கேட்கலாம் ,

ஆனால் இந்நேரம் டீ வி போட்டால் தூங்குகிற மனைவி மக்களுக்கு இடை ஞ்சலாய் இருக்கும் என நினைத்தவனாய் புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட் கார்ந்தான்,

குளிரை கொஞ்சம் கூடுதலாக உணர்ந்த அவன் வாயின் இடது பக்கமாய் உமிழ் நீர்அதிகமாய்உறுவது போலவுமாய் உணர்ந்தான்,பொதுவாக அதிகமான குளிர் நேரங்களில் இவனுக்கு இப்படியாய் ஆகும்,

டாக்டரிடம் கேட்ட பொழுது ”அது ஒண்ணும் இல்ல பெரிசா,பயப்படாதிங்க சும்மா,நீங்களாவும் மூளையப் போட்டு கொழப்பிகிறாதிங்க,குளிர் நேரத்துல ஒங்களப்போலநரம்புப்பிரச்சனை உள்ளவுங்க அத்தனை பேருக்கும் இது போல இருக்கும்தான், அதையெல்லாம் மைண்டுல போட்டு ஏத்திக்கிறாம போயி நீங்க வாட்டுக்கு ஒங்க அன்றாடத்தப் பாருங்க என்றனுப்பினார்.

அவர்சொன்னதுவாஸ்தவம்தான் போலிருக்கிறது, உட்கார்ந்து புஸ்தகத்தைப் படிக்கலாம் என ஆரம்பித்தவனின் கண் முன்னே கரு வண்டுகள் நான்கு இறந்து கிடந்தன, பாயில்/

இது என்ன இந்நேரம் இப்படி, இவைகள் எப்படி வந்தன எனது பாயில் எப்பொ ழுது வந்து எப்படி இறந்து கிடக்கிறது இவைகள்,,?

ஒரு வேளை இரவில் வந்த வண்டுகளாய் இருக்கும்,குளிர் தாங்காமல் இறந் திருக்கக்கூடும்.

போன மாதத்திற்கு இம்மாதம் வண்டுகளின் வருகை குறைந்திருக்கிறதுதான். திறந்திருக்கிற வீட்டின் வழியாய் வருகிற மென் காற்றின் நுழைவு போல மெல்லென வந்து விடுகிற வண்டுகள் வீட்டிற்குள்ளாக,உறை கொண்டு விடுகி ன்றன/

போன மாதம் பார்த்தால் மாலை ஆறு மணியாகி விட்டால் போதும் வண்டு கள் வந்து விடும், இவன் தன் வாழ் நாளில் இதுவரை பார்த்திராத வண்டுக ளாய் இருக்கும் அது.

கறுப்பாய் பச்சையாய். விட்டில் பூச்சி என்கிற பெயரில் தன் அடையாளம் காட்டி பறந்து வந்துதமர்கிற இவைகளை வீட்டை விட்டு விரட்ட ஏதாவது மருந்து இருக்கிறதா என மருந்து கடையில்தான் போய் கேட்க வேண்டும்.

எங்கு போய் என்ன கேட்பது என முதலில் தெரியாமல் இருந்த கவலையை இம்மாதம் வண்டுகள் இறந்து விழுந்து காட்சிப் படுத்தி விட்டன.

பஜாரில் இருக்கிற நாட்டு மருந்துக் கடையில் இதெல்லாம் கிடைக்கும் என கேள்விப்பட்டிருக்கிறான்.நாளைக்காலை அங்கு வாங்கலாம் என நினைத்தி ருந்த நேரத்தில் இப்படியாய் இறந்து கிடக்கிற வண்டுகள் மருந்து வாங்கி வந்து எங்களை கொல்லவேண்டாம் என கோரிக்கை வைத்ததாகப் படுகிறது.

வைத்த கோரிக்கைகளின் ஞாயம் எவ்வளவு தூரத்திற்கு உண்மை சுமந்தது எனத்தெரியாமல் நேற்றைக்குமுன்தினம் இரவு தூக்கமற்ற குளிர்ப் பொழுதில் ரீங்காரமிடாமல் வந்த பச்சை நிற வண்டுஇவனிடம் சொல்லிச் சென்றதாய் ஞாபகம்.

எங்களைக் கொல்ல இப்படி மருந்து மாயம் வாங்கலாம்ன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க,வேணாம்.இப்படியெல்லாமும்இதெல்லாமும்செய்யிறதுக்கு ஒங்க ளுக்கு எப்படித்தான் மனது வருது.ஒங்களை விட்டா நாங்க எங்க போய் அண்டு றது, எனக்கேட்ட பொழுது இவன் சொல்கிறான்,

பரந்து படர்ந்திருக்கிற இந்த பூமிப் பரப்புல ஒங்களுக்கு தங்கிப்ப்போறதுக்கும் இளைப்பாறவுமா யெடமில்லை. சொல்லுங்க,

அனாவசியாமா ஏன் என்னையப்போல வீட்டுக்காரங்க கிட்ட வந்து தொந் தரவு செய்யிறீங்க, ஒங்களால் எங்க தூக்கம் கெட்டுப் போயிருது. பின்ன நீங்க சமை  யலறையில போயி சமைச்சி வைச்சிருக்கிற சோறு குழம்பு கூட்டு காய்கறி கள்ல விழுந்து ஒழப்பிவச்சிர்றீங்க,

அது எங்களுக்கு தீரா தொந்தரவாவும் தொல்லையாயும் ஆகிப்போகுது.எங்க தூக்கத்தை கெடுத்து சாப்பட்டக் கெடுத்து,,,,இப்பிடியெல்லாம் ஆனப்பெறகு வேற ஒங்கள இங்க வர விடாமப்பண்றதுக்கு என்னென்ன வழியிருக்கோ அதெல்லாம் செய்யத்தான் செய்வோமே ஒழிய நீங்க வர நாங்க பாத்துக் கிட்டா இருப்போம் கைகட்டி நின்னு,,,,,,?

ஒங்களுக்கெனஅடையிறதுக்கும் தங்கிப்போறதுக்குமா இடமா இல்லை எத்த னை எத்தனை யெடம் இருக்கு அங்க போய் இருங்க பறந்து விரிஞ்சி ஒங்க தெறமைய காட்டுங்க.அது தவிர்த்து குடியிருக்கிற வீட்ல வந்து தொந்தரவு செஞ்சா எப்படி”? என பேசிக்கொண்டிருந்த மறு நாளைக்கு மறு நாள் அதே பச்சைக்கலர் வண்டு வந்து சொல்கிறது,

“நீங்க சொல்றது வாஸ்தவம்தான்னு வச்சாலும் கூட என்க்க முன்ன மாதிரி உழுது போட்டுக்கெடக்குற காடு கரைகளும் வெளிஅஞ்சி நிக்கிற பயிர் பச்சை களும் எங்களுக்கு உணவாவும் அடைக்களம் கொள்ற யெடமாவும் ஆகிப் போகும்,ஆனாஇப்ப அதெல்லாம் இல்லைன்னு ஆகிப்போச்சி,அப்பிடியே இருந் தாலும் வெளைஞ்சி கெடக்குர பயிர்கள்ல மருந்து மாயம்ன்னு அடிச்சி வச்சிர் றீங்க,நாங்க போயி வாய வைக்க முடியல.மீறி தின்ன எங்க கதி அதோ கதி யாகிப் போகுது.இதுக்கு பயந்து பட்டினியாவும் கெடக்க முடியல,,,,

“பரந்து விரிஞ்ச வெளியில ஏதாவது செடி செத்தைய தின்னுட்டு இருக்கலா ம்ன்னு பாத்தா அங்கன வந்து பறவைக எங்கள கொத்தி பெறக்கி தின்னுட்டு ப் போயிருது.அதுககிட்டயிருந்து தப்பிக்க நெலத்துல குழி தோண்டி உள்ள போயி இருக்கலாம்ன்னு பாத்தாலும் எங்களால முடியல ஒரு அளவுக்கு மேல போறதுக்கு.எங்களுக்கு சத்து இல்ல,

குழி தோண்டுறது பறிக்கிறது எல்லாம் ஒங்க வேலை,அது எங்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது.அந்த மாதிரி பாவத்த நாங்க செய்யவும் மாட்டோம்.ஆனா அத நீங்க சர்வ சாதாரணம செய்யிறீங்க,ஒங்களுக்கு அப்பிடியெல்லாம் செய் ய எப்பிடித்தான் மனசு வருதோ, தெரியல…..

நாங்க குழி பறிச்சாலும் சரி,கூடு கட்டுனாலும் சரி அது எங்க வாழ்க்கைத் தேவைகாகவும் எங்கள காத்துக்கிறதுக்காவும் பண்றோமே தவிர அடுத்தவுங்க வாழ்க்கைய சீரழக்க பண்ண மாட்டோம்.

இப்படியெல்லாம் அன்று பேசிச்சென்ற வண்டும் இறந்து கிடந்த நான்கில் ஒரு வண்டாக இருக்கலாம்.

மென்பனி வீசிய முன் காலைப்பொழுது,கொஞ்சம் ரம்யம் சுமந்ததாயும் அழகு பட்டுமாய்/

ரம்மியமும் அழகும் இவ்வளவு சில்லாகவா இருக்கும்,வீட்டில் அடைக்கலம் கேட்டு வருகிர சின்னச்சின்ன வண்டுகளை கொன்று போடுகிற அளவிற்கு,,,/

இவனுக்குத்தெரிந்து இப்படியெல்லாம் இருந்ததில்லைதான்,,/

4 comments:

Anonymous said...

மணியண்ணனை உடனே பார்க்க வேண்டும் போல் உள்ளதே!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம+1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
அன்பும் பிரியமுமான நன்றி வருகைக்கு/

vimalanperali said...

மணியண்ணன் என் அருகாமையில்இருப்பவர்.
பஞ்சாரதில் அடைகொண்ட கோழியைப் போல!
வெள்ளை உள்ளத்தையும் கள்ளம் கபடமில்லாத
நட்பையும் தன்னில் அடை கொண்டு காட்சிப்படுபவர்/