19 Aug 2018

ஈரம் தொட்ட மனசு,,,,

அன்று தொட்ட பசையின் ஈரம் இன்று வரை காயமலேயே/

இருபத்தைந்து ஆண்டுகாலத்திற்கும் மேலான ஈரம்,அவ்வளவு லேசாகக் காந்து விட வாய்ப்பில்லை.

ஈரத்தோடு சேர்ந்து அதன் நினைவுகளும் அசையாடுகிற நாட்களின் நகர்வுகள் கொஞ்சம் இனிப்பாயும் எட்டிக்காயை உள்ளே வைத்துமாய்/

1984 மத்திமம் இல்லை 1985 ஆரம்பம் என்கிறதாய் நினைவு,இவன் பணிக்குச் சேர்ந்து ஒன்னறை வருடங்களும்,,சிறிது நாட்களும் கழித்து மிருதூருக்கு மாற்றலாகி வருகிறான்.

அதற்கு முன்னாய் மானாமதுரையில் வேலைபார்த்தான் ,முதல் போஸ்ட்டி ங்கே அங்குதான்,

காற்றில் திசையில் காலம் தூக்கிப்போட்ட விதையாய் மண்கீறி துளிர்த்து வளர்ந்த செடியாய் அங்கு போய் வேர் விடுகிறது இவன் பெயர் தாங்கி/

விட்ட வேர் கொஞ்சம் ஆழமாயும் அழுத்தம் கொண்டுமாய்,,,/

கரிசல் காட்டின் பரப்பும் செம்மண்ணின் ஈரமுமாய் இவனில் உரம் கொண் டிருந்த நாட்களிலும் தோட்டத்து வேலை காட்டு வேலை என வேலையின் பிடிப்பும் வேர்வையின் இனிப்பும் ஒரு சேர இவனில் ஏறி குடிகொண்டிருந்த நாட்களில் அரசாங்கப்பணிக்கான உத்தரவு வர அதன் நுனி பிடித்து சென்ற நாட்களில் இவனுக்கு சரியாக என்ன முழுவதுமாகவே வெளி உஅலக்ம் தெரியாது.

அதுநாள்வரை எங்கும் பஸ்ஸேறிப் போனதில்லை,வெளியுர் உள்ளூர் என்கிற எதிலும் நல்லது கெட்டது யார் வீட்டு விசேசம் என எதற்கும் போனதில்லை,

எது எத்திசையில்,ஏன் அங்கிருக்க கடமைப்பட்டுள்ளோம் என்பது மிகக் குறை வாகக்கூடத் தெரியாது,

பரஸ்பரம் மனித முகம் பார்த்து பேசியதில்லை,பழகியதில்லை, இவனுக்குத் தெரிந்ததெல்லாம்,காடு வயல் ,தோட்டம்,மண்வெட்டி கடப்பாரை,என்கிற உழைப்பின் கருவிகளும் அது சார்ந்து நின்ற மனிதர்களும் மாட்டு வண்டியும் மாடுகளும் ஆடுகளுமே,,,/

மனிதர்களின் நல்லிதய தோற்றம் தவிர்த்து ஆடு மாடு உழைப்பின் உன்னதம் கொண்டு மட்டுமே வளர்ந்தவனாகித் தெரிகிறான்.

தெரிந்த விபரத்தில் எவ்வித சூட்சுமமும் எவ்வித உள் விபரமும் அற்று ரத்தமும் சதையுமான வெற்றுக்கூடாயும் ரத்தமும் சதையுமான உடலாயும் வளர்ந்து திரிந்த நாட்களில் நன்றாய் இருப்பதை நன்றாக இருக்கிறது எனவும் நன்றாக இல்லாததை நன்றாக இல்லை என மட்டுமே சொல்லத் தெரிந்து வைத்திருந்தான்,அதற்கு மேல் ஏன் நன்றாக இருக்கிறது அது ,ஏன் நன்றாக இல்லை அது எனச் சொல்லத் தெரியாது,எதன் சேர்மானம் எதனிடத்தில் எவ்வளவு என்கிற உள் விபரமும் வெளி ஓட்டமும் தெரியாது.

உடல் நிரம்பிய உழைப்பும் அது சார்ந்த நினைவுகளும் மட்டுமே மனம் முழு க்க குடிகொண்டிருந்த நாட்களில் கைக்குக்கிடைத்த அரசாங்கவேலையை கெட்டிப் படுத்திக் கொண்டு பணிக்குக்கிளம்பிய நாட்களில் வேலையை மட்டு மே கை பிடித்துக்கொண்டு சென்றவன் மற்ற நடை முறை பழக்க வழக்கங்க ளுக்கும், நாகரீகத்திற்கும் உட்படாதவனாய் அடைபட்டுக்கொள்ளத் தெரியாத வனாயும் இருந்தான்.

அதனால்தான் அணிந்திருந்தது தவிர்த்து இரண்டு ஜதை வேஷ்டி சட்டையுட னும் ஊதாக்கலரில் டிசைன் வரையப்பட்டிருந்ஹ்ட தகரப்பெட்டியுடனுமாய் வேலைக்குச் சென்றான் தன்னை தத்தெடுத்துக்கொண்ட புது மண் எங்கிரு க்கிறது என விசாரித்தறிந்து கொண்டு/

ஊருக்கென்ன நன்றாகவே இருந்தது,இவனது கிராமத்தைப்போல் அல்லாமல் கொஞ்சம் நாகரீகம் பூசிக்கொண்டிருந்த பெரும் கிராமம்.சுற்றுப்பட்டி ஊர்க ளுக் கெல்லாம் அதுதான் தாய்க்கிராமமாக இருந்ததால் ஊர் கொஞ்சம் நகரத்தின் வாசனை கொண்டும் பாதிப்பு கொண்டுமாய்,/

ஆனால் மனிதர்கள் அசல் கிராமத்து அடையாளம் பூசி,,,/

சின்னதாயும் பெரியதாயுமாய் இருந்த ஹோட்டல்கள்,ஊருக்குள் சின்னதாயும் ஊருக்கு வெளியே பெரியதாயும் இருந்த ஒயின் ஷாப்கள் இரண்டு,முக்குக்கு ஒன்றுஎனஇருந்தசலூன்கள்,அதுபோக பலசரக்குக்கடை ஸ்டேசனரி ஸ்டோர், நிறைந்து நின்ற டீக்கடைகள் என ஊரை ஒட்டி அதன் வடபுறமாய் நெளிந்து சென்ற சின்னதான நிறை பஜாரில் அடை கொண்டிருந்தன,

பாஜாரின்நீள அகலம் முழுமைக்கும் நடை போட்டு விட முடியாவிட்டாலும் கூட அங்கிருக்கிற கடையில்தான் டீக்குடித்தான்,அங்கிருக்கிற ஹோட்டலில் தான் சாப்பிட்டான், அங்கிருக்கிற ஸ்டேசனரி ஸ்டோரில்தான் குளியல் சோப் வாங்கினான்,அங்கிருக்கிற சலூனில்தான் முடிவெட்டிக் கொண்டான், அங்கிரு க்கிற டெய்லர் கடையில்தான் பேண்ட சர்ட் தைத்துக்கொண்டான்.

இதில் ஹோட்டல்,டீக்கடை,சோப்பு வாங்குகிற கடை,சலூன்,,,,, எல்லாம் விட்டு டெய்லர் கடையை முதன்மைப்படுத்தலாம்,

இவன் தங்கியிருந்த அறையில் இவனுடன் ரூம் மேட்டாக இருந்த எம்.ஆர்.பி சார் வெறும் ரத்தமும் சதையுமாய் இருந்த இவனது உடல் கூட்டில் கொஞ் சம் அர்த்தம் எழுதி வைத்தார்,

எழுதப்பட்ட அர்த்தம் இவனுக்குள்ளாய் அன்பையும் காதைலையும் நட்பை யும் தோழமையையும் மனிதத்தையும் விதைத்தது எனலாம்.

விதை கொண்ட நட்பும் அன்பும் காதலும் தோழமையும் கூடவேயான மனித மும் இவனுக்குள் புதிதான ஈர ஊற்றையும் மனித மதிப்பீடுகளையும் மனிதம் பற்றியுமாய் சொல்லித்தந்த நேரத்தில்தான் புதிதான ஒன்றில் கை பிடித்து நடை பழக்கும் குழந்தையின் நிலையில் உள்ளவனாய் ஆகிப் போனான்,

அந்நேரமாய்த்தான் டெய்லர் கடைக்கு எம் ஆர் பி சாருடன் பேண்ட் தைப்பத ற்காய் போனவன் தனக்கும் அது போல் வேண்டும் என ஆசை எழவே சரி பேண்ட் எடுத்து தைத்துப்போடுவோம் நம்மிடம்தான் பேண்ட் இல்லையே ஒன்று கெடக்கட்டும் என்கிற மனோநிலையில் தைக்கத்தயாரானான்,

ஆனால் டெய்லர் கடைக்கு எம் ஆர் பி சார் கூட்டிப்போன நேரம் இவனிடம் வேஷ்டி தவிர வேறொன்றும் இல்லை.அளவுக்குக் கொடுக்கக்கூடபேண்ட் இல்லை,டெய்லர் கேட்ட விபரங்களைக்கூட சொல்லத்தெரியவில்லை,அவர் கேட்டா ”லோ கிப், ஹை கிப்,”,,,என்பது கூட என்னவென்று தெரியவில்லை, இவன் முழித்து நிற்பதைப்பார்த்த டெய்லர்தான் விபரம் சொன்னார்,

இந்த அளவில் போட்டால் சரியாக இருக்கும்,இந்த அளவை வைத்து தைத்து விடுவோம் என முடிவெடுத்து பேண்ட் சர்ட் தைத்துக் கொடுத்த சிறிது நாட் களில் இவனுக்கு ட்ரான்ஸ்பர் வந்து விட மிருதூருக்கு வந்து விட்டான், விதை கொண்ட மண்ணையும் வேர் விட்ட நினைவுகளையும் தன்னை புத்த டையாளமாக்கிய எம் ஆர் பி சாரின் மீளா நினவுகளோடும் அவரது பேச்சோ டும் அன்பு மிகுந்த எண்ணங்களோடும்,,/

மிருதூருக்கு வந்த நாட்களிலிருந்து அந்த ஊருடனும் ஊரு மண்ணுடனும் அலுவலகத்துடனுமாய் ஒட்ட முடியவில்லை.சிறிது நாட்கள் ஆனது கொஞ் சம் ஒட்டியும் நார்மல் ஆகியும் வருவதற்கு.

ஆகிவிட்டான் நார்மலாய்,அப்படி ஆகிப்போனதற்கு முக்கிய காரணமாய் எதைச்சொல்ல எத விட என்பதை இப்பொழுது நினைத்தாலும் கொஞ்சம் திகட்டல் ஏற்பட்டுப்போகிறதுதான்,

பணி மாறுதல் ஆகிப்போய் வந்த சிறிது நாட்கள் வேண்டுமானால் அவதி அவதியாய் ஊரிலிருந்து பணிக்கு வர பணி முடிந்து அவசர அவசரமாய் ஊருக்குத்திரும்ப என்கிற வழக்கமான வழக்கம் ஒன்று விடப்பிடியாய் ஒட்டிக்கொண்டு இருந்தது,

பின் வந்த நாட்களில் இரண்டிலக்கத்தில் எண் கொண்ட அந்த அறை இவன் முகத்தையும் எண்ணத்தையும் மாற்றி இவனது அன்றாடங்களை அர்த்தப் படுத்தியதாகிச் சென்றது,

முதலில் அது வெளியூரில் இருந்து பணி புரிபவர்கள் தங்குற அறை மட்டுமே என நினைத்தான்,

மேல் மாடியில் வரிசையாக ஐந்து அறைகளை தன்னில் அடை வைத்துக் கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தை முதன் முதலாய்ப்பார்த்தபொழுது அப்படித் தான் அர்த்தப்பட்டது.

வேலைப்பளுவின் கனம் நீண்டு போன ஒரு நாளில் அங்கு தங்க நேர்ந்த போதும் பிலால் கடையில் டீக்குடித்த போதும் ரோட்டோர இட்லிக்கடையில் சீசா தேங்காய் எண்ணையுடனும் இட்லிப்பொடியுடனுமாய் இட்லியும் தோசை யும் கையில் இருக்கிற காசுக்குத்தகுந்தாற்ப்போல் வாங்கிச்சாப்பிட்டு விட்டு கடைசி ஐந்தவதாய் இருக்கும் ரூமில் தங்கிய நாள் பின் அடிக்கடி தங்க வைத்து விடுகிறது தன்னை புடம் போடும் எண்ணத்துடன்.

போட்ட புடங்களில் இலக்கியம் இயக்கம் யூனியன் கோஷம் சுற்றறிக்கை போஸ்டர் கொடி இத்தியாதி இத்தியாதி ,,,என தன்னை அடையாளப் படுத்திக் காட்டியவானாய் ஆகிப்போகிறது,

ஆகிப்போன அடையாளங்களின் மிச்சமாய் இவன் சார்ந்து நின்ற தொழிற்ச் சங்க இயக்கத்திற்காய் கொடி பிடித்தான்,கோஷம் போட்டான்,ஜிந்தாபாத் சொன்னான்,இலக்கியம் படித்தான்,கொஞ்சம் கை வரும் போது கவிதை எழுதினான்,இரவு விழித்தான்.செகண்ட் ஷோ சினிமா பார்த்தான்,விமர்சனம் செய்தான்,இவை எல்லாவற்றையும் மீறி பணி செய்கிற இடத்திலும் தங்கியி ருக்கிற ரூமிற்கு அருகிலுமாய் அளப்பரியதாய் மனித மனங்களை சம்பாதித்து வைத்திருந்தான்.

சம்பாத்தியங்களின் சந்தோஷத்தில் வயிற்றுக்கு அலுவலக வேலை,மனசுக்கு தொழிற்சங்கவேலை என்றிருந்த நாட்களில் எங்காவது போஸ்டர் ஒட்டப் போக வேண்டும் என்றாலோ கொடி ஒட்டப்போக வேண்டும் என்றாலோ தொ ழிற்சங்க தலைவர்களைடமிருந்து முதலாவதாய் தகவல் வருவது இவனுக் குத்தான், அல்லது முதலாவதாய் தேடுவது இவனைத்தான்.

போன் வசதி இல்லாத அந்த நாட்களில் இவனை வந்தடைந்த தகவலை கைபிடித்துக்கொண்டு அன்று தூக்கிய பசை வாளியும் அன்று தொட்ட பசையின் ஈரமும் யாராவது தெருவில் போஸ்டர் ஒட்டுகிற போதோ இன்னும் சில வேலைகளுக்காய் பசையை கையில் ஏந்தித்திரிகிற போதோ இந்த இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்னும் ஈரம் காயாமல் மனம் காத்து நிற்பதாய்,,/


                                                             
                                                         பாகம் _ 2


நான்கு நாட்களுக்கு முன்பாக சண்முகமாணிக்கம் அண்ணன் போன் பண்ணி யிருந்தார்,

அவர்இப்படித்தான் திடுதிப்பென போன் பண்ணுவார்,ஏன் பண்ணுவார் எதற்குப் பண்ணுவார் என்பது அவருக்கே வெளிச்சம்,

ஆனால் ஆக வேண்டிய காரியத்தை போன் பேச்சில் சொல்க்கட்டாய் கட்டி அனுப்பி வைத்து ஜெயித்து விடுவார்,

அவர் போன் பண்ணிய வேளை நேரம்,மதியம் இரண்டுமணிக்கு நெருக்கி இருக்கும்,

கேஷ் கவுண்டரின் முன்னால் கவுந்து கிடந்து நின்றிருந்தது கூட்டம், உட் காரச் சொன்னாலும் உட்காராமல் நின்று கொண்டு பிடிவாதம் காட்டியவர்க ளை ஒவ்வொருவராய் அனுப்பி விட்டு நிமிர்ந்த போது மணி இரண்டரை ஆகியிருந்தது,

நல்ல பசி ,வயிற்றில் சூழ்கொண்டிருந்த பசி மெல்ல மெல்ல நகன்று முதுகு க்கு பயணமானதாய் உணர்ந்தான்,

பொதுவாக வயிற்றில் பசி இல்லை உனக்கு,மொட்டியில்தான் பசி என்பார்கள் கௌரவத்திற்காய் சம்பாதிக்கிறவனைப் பார்த்து,ஆனால் முதுகுக்கு பயணப் படும் பசி என யார் சொல்லி வைத்ததோ தெரியவில்லை எனயோசித்துக் கொண்டிருந்த வேளையில்”மகராசனா இருக்கணும் நீங்க,” என கையெடுத்துக் கும்பிட்டு போன பாட்டி கண் முன்னால் நின்றாள்,

அவள் உண்மையிலுமே வயிற்றில் பசி கொண்டவள்,மூன்று வேளை பசிக் கும் பசியை கொஞ்சம் கொஞ்சமாய் நகற்றி நகற்றி இரண்டு அல்லது ஒண் ணரை வேளைக்கு மட்டும்உணவிட்டு பசியை மட்டுப்படுத்தி பழக்கப் படுத்திக் கொண்டவள்,

அவளுக்குத்தான் கடைசிக்கு இரண்டு பேருக்கு முன்பாய் பணம் கொடுத்தான்,

முதியவர் பென்ஷன் பணம் வாங்குவதற்காய் மாதா மாதம் வருபவள்,

”ஐயா சாமி நல்லாஇருப்பீங்க,நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் ,சீக்கிரம் கணக்குப்பாத்து பணம் குடுத்தீங்கன்னா ரெண்டு மூணு மணி பஸ்ஸப் புடிச்சிப் போயிருவேன்,அந்த பஸ்ஸ விட்டா அப்பறம் ஆறு மணிக்குத்தான் பஸ்ஸீ, அதுலபோகனுமுன்னாகூட்டமுன்னாகூட்டம், அவ்வளவு கூட்டமா இருக்கும், பாத்தம்முன்னா கொத்த வேலைக்குப் போனவுங்க சித்தாளு வேலை க்கு,கூலி வேலைக்குன்னு போனவுங்க எல்லாம் அதுலதான் வருவாங்க/ இது போக பள்ளிக்கூடத்துப்புள்ளைங்க கூட்டம் ஒரு பக்கம்,இதுகளையெல்லாம் அடைச்சிகிட்டு அரை மணி நேரத்துல போற பஸ்ஸீ முக்காமணி ஒரு மணி நேரம் வரைக்கும் ஆகிப்போகும் போயிச் சேர்றதுக்கு,”

”வயசான ஒடம்பில்லயா பசி தாங்காது,ஒண்ணுக்கு கிண்ணுக்குன்னு வந்தா அடக்க முடியாது,வயிறு முட்டிக்குரும்.ஒரே வாதையா போகும்,எப்படா பஸ்ஸீ ஊர் போயிச் சேரும்ன்னு மனசு கெடந்து தவிக்க ஆரம்பிச்சிரும்,

”போன மாசம் இப்பிடித்தான் ஒங்க ஆபீஸீக்கு வந்துட்டுப் போகும் போது நாலு மணிக்கு மேல ஆகிப்போச்சி/ என்ன செய்யிறதுன்னு யோசனை ,இப்பி டியே ஒங்க ஆபீஸீ முடியிற வரைக்கும் இங்கயே ஒக்காந்துட்டு போயிறல மா,இல்ல அப்பிடியே பஸ்டாண்டுல போயி கொஞ்ச நேரம் ஒக்காந்துட்டுப் போகலாமான்னு ஒரே யோசனை,இங்க ஒங்க ஆபீஸீல ஒக்காந்தா அவசர ஆத்திரத்துக்கு ஒண்ணுக்கு தண்ணிக்குன்னா முடியாது, பஸ்டாண்டுலயின் னா அதுக்கு வசதி இருக்குன்னு நெனைச்சிக்கிட்டு அங்க போயி ஒக்காந்துட் டேன்,

“காலையில வீட்ட விட்டுக் கெளம்பும் போது ரெண்டு டம்பளர் கூழு மட்டும் குடிச்சிட்டு வந்தேன்,பொதுவா நான் கூழுக்குடிக்கிறதுன்னா கரைச்சி வச்சிக் குடிக்க மாட்டேன்.கொஞ்சம் கட்டியா வச்சிக்கிட்டுதான் குடிக்கிறது வழக்கம், அதுனால கொஞ்சம்பசி தாங்கிச்சி,என்னதான் இருந்தாலும் அது கூழுதான, அதுக்குண்டான கொணத்த காண்பிச்சிருச்சி,

“காலையில குடிச்சது ஒரு ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மேல பசி தாங் கல,வயிறு வேற கப கபன்னு பசி எடுக்க ஆரம்பிச்சிருச்சி.கையில நீங்க குடுத்த முதியோர் பணம் இருக்கு, பஸ்ஸீக்குன்னு வீட்ல இருந்து வரும் போது தனியா எடுத்து வச்சிட்டு வந்ததுதான், மத்தபடி வேற காசு இல்ல, பஸ்டாண்ட்ல போயி ஒரு தோசை சாப்புட்டு நீங்க குடுத்த முதியோர் பணத்துல இருந்துதான் ரூபாய் எடுத்துக்குடுத்தேன் சாப்புடத்துக்கு,

அதுக்குப்பாத்தா ஓட்டல்க்காரன் எவ்வளவு கேலி பண்ணுறான்னு கேக்குறீங்க, என்ன பாட்டி இப்பிடி பணம் வாங்கி ஓட்டல் ஓட்டலா சாப்புட்டுக்கிட்டு திரி யிற யாக்கும்ன்னு ஒரே சிரிபும் எக்காளமுமா போச்சி அவங்களுக்கு,

“வேற ஒருத்தியா இருந்தாஅவன் பேசுன பேச்சுக்கு சண்டைக்கு போயிருப்பா சண்டைக்கு, நானு ங்குறதுன்னால சரி போறாங்கன்னு விட்டுட்டு வந்துட் டேன், அவிங்க சுட்டுப் போட்ட காய்ஞ்சி போன தோசைக்கி காசும் குடுத்துட் டு இவ்வளவுபேச்சும் கேக்க வேண்டியதிருக்குடான்னு அவிங்ககிட்ட சொன்னப்ப திரும்பவும் ஒரு தடவை கோ கொல்லேன்னு சிரிச்சிட்டு போ பாட்டி போன்னு அனுப்பிச்சி வச்சாங்க, ஒரு டீய க்குடுத்து,/இதுல டீக்கு காசு கெடையாது.

எங்கூர்க்காரபையலுகதான்,நான்னாகொஞ்சம் பிரியம் அவிங்களுக்கு,ஏங் பேரன் வயசுதான் இருக்கும்,அந்தப்பையக ரெண்டு பேருக்கும்,

“அண்ணன்தம்பி ரெண்டு பேரு கூட்டா கடை நடத்துறாங்கெ, கொஞ்சம் நல்ல யேவாரந்தான்,அதுனால என்னைய மாதிரி வர்ற ஆளுகளுக்கு என்னத்தை யோ கையில் இருக்குறத வாங்கீட்டு வயிறு நெறைய கேக்குறத போட்டு அனுப்பிச்சிருவாங்க,

“கஷ்டபட்டு முன்னேறி வந்த பையலுக,கண்ணு முழியா கோழிக்குஞ்சுகளா அந்தப்பையலுக இருக்கும் போது அவுக ஆத்தாக்காரி நட்டாத்துல விட்டுட்டுப் போனது போல பேரு தெரியாத ஒரு சீக்கு வந்து செத்துப்போனா பாவம், அப்பங்காரன் கூலி வேலை பாக்குறவன்,என்ன செய்யிவான்,கையக் கைய பெசைஞ்சிக்கிட்டுநின்னவன்முன்னாடி புள்ளைகளுக்குஒருவழிபண்ணனுமே அதுகள வளத்து ஆளாக்கணு மேங்குற எண்ணம் தவிர்த்து வேற ஒண்ணும் பெரிசா ஓடீறல/

“அவன் பொண்டாட்டிக்காரி இருந்தாலாவது அவ கூலிக்கு போயி கொண்டு வர்ற காசு கொஞ்சம் குடும்பத்துக்கு ஆகும்,ரெண்டு புள்ளைங்களும் நல்லா திங்கிற வயசு,வேற,

“அவ ஆத்தாகாரி யெறந்தப்ப ஒரு மூணு நாளைக்கு நாந்தான் அந்தப் புள்ளை ங்கள வச்சி சோறு போட்டேன்.அவன் பொண்டாட்டி செத்துப்போன துக்கத்துல சித்தப்பிரமைபிடிச்சமாதிரிஆகிட்டான்.அழுகமாட்டேங்குறான்,வாய்தொறந்து பேசமாட்டேங்குறான்,ஊங்கமாட்டேங்குறான்,ஆங்கமாட்டேங்குறான். எங்களுன்னா ஒரே பயமாப்போச்சி ,பொண்டாட்டி யெறந்த துக்கத்துல அவனு க்கு ஏதும் ஆகிப்போகுமோன்னு நெனைப்பாகிப் போச்சி,அதுக்காக அவன அப்பிடியே விட்டுறவும் முடியாதுல்ல, கண்ணு முழியாம நிக்குறஇந்த பச்சை மண்ணுகளுகாகவாவது அவன தெளிவிக்கணுமில்ல,

“அட கிறுக்கா இதுக்குப் போயா இப்பிடி ஆவான் ஒரு ஆம்பளங்குற நெனைப் போட பொண்டாட்டிக்கு காரியமெல்லாம் முடிஞ்ச மறுநா அவன ஆஸ்பத்தி ரிக்கு கூட்டிக்கிட்டுப் போனா டாக்டரு சொல்லீட்டாரு ,ஒண்ணுமில்ல அவரு க்கு, அவர் கொஞ்சம் தனியா விடுங்க,எல்லாம் சரியாப்போகும்,மாத்தி மாத்தி அவரப்போயி சூழ்ந்துக்கிட்டு ”இந்த மாதிரி ஆகிப்போச்சே,இந்த மாதிரி ஆகிப் பேச்சேன்னு” மாறி மாறி துக்கப்படுத்திக்கிட்டே இருந்தீங்கன்னா இப்பிடித் தான் ஆகிப் போ கும் பேதலிச்சிப்போகும் மனசு,ஒங்கள்ல ரெண்டு பேராவது அவருக்கு கொஞ்சம் தைரியம் குடுக்குற மாதிரி பேசிறீந்தீங்கன்னா இந்தள வுக்கு ஆகீருக்க மாட்டாரு,இப்ப நீங்க ஒண்ணும் செய்ய வேணாம், இன்னை க்கி ஒரு நாளு ஏங் ஆஸ்பத்திரியில விட்டுப் போங்க,நாளைக்கி வந்து பாருங்க,ஆளே சிக்கெடுத்த மாதிரி கிளீனா ஆகிப் போவாருன்னு அவன் கூடப் போனவுங்கள அனுப்பி வச்சிட்டு அவன ஒரு நாப்பொழுது ஆஸ்பத்திரியில வச்சிருந்தாரு, அப்புறமா மறு நா விட்டுக்குகூப்புடப்போனப்ப அவன் சொன்ன கேட்ட மொதக்கேள்வி ஏங் புள்ளைங்க எப்பிடி இருக்காங்கங்குறதத்தான்,

”வீட்டுக்குப்போனதும் புள்ளைங்கள அள்ளி அணைச்சிக்கிட்டவன் நெடுஞ்சான் கிடையா ஏங் கால்ல விழுந்தான், அம்மா நீங்க ஏங் பெத்த தாயப்போல ,இந்த ஒரு வாரம் மட்டும் நீங்க இல்லைன்னா ஏங் புள்ளைங்க ரோட்டுக்கு வந்துரு க்கும் தாயின்னு சொன்னவன் அவங்களக்கொண்டு போயி கடையில வேலை க்கி சேத்து விடபோறேன், இங்க கெடந்து கண்டும் காணாம நான் பொங்கி போடுறதயும் வெந்தும் வேகாததயும் தின்னுக்கிட்டு கெடக்குறத விட்டு கண்ணுக்கு மறைவாப்போயி கஷ்டபட்டாலும் வயித்துக்குச்சாப்புட்டு நல்லா இருக்கட்டும்ன்னு போயி ஒரே பிடி சாதனையா பஸ்டாண்டுக்குள்ள இருக்குற இந்தக்கடையில கொண்டு வந்து விட்டு வந்தான்,

”ஏண்டா படிக்கிற புள்ளைங்கள இப்பிடிப்பண்ணுனைன்னு கேட்டதுக்கு,,,,, படிப்பா வயிறான்னு நிக்கும் போது வயிறுதாம்மா ஜெயிக்குது எங்களப்போல கூலி ஜனங்களுக்குன்னான்,

“அவன் சொன்னது போலவே வயிறுதான் ஜெயிச்சிச்சி,

“நான் போயி தோசை சாப்புட்டேன்னுசொன்னேனே,அந்தக் கடையிலதான் ரெண்டு புள்ளைங்களையும் சேத்து விட்டான்,அதுல பெரிய பையன் இருக்கா னே கொஞ்சம் கெட்டி,என்னன்னாலும் இருந்துக்குருவான், சின்னப்பையன் இருக்கானே கொஞ்சம் தொட்டாச்சிணுங்கி, முனுக்குன்றக்குள்ள ஓடி வந்து ருவான் வீட்டுக்கு,

”வழக்கமா வர்ற பஸ்ஸீதான ,பஸ்ஸீ ட்ரைவர் கண்டக்டர் அவ அப்பனுக்கு தெரிஞ்சவன்,அதுனால கையில காசு இருக்கோ இல்லையோ பஸ்ஸேறி ஓடி வந்துருவான் ஓடி/

”ஒரு நா இப்பிடித்தான் கடை ஓனரு என்னைய அடிச்சிட்டாருன்னு வந்துட் டான் வீட்டுக்கு.சரி வழக்கமா வர்றதுபோலத்தான வந்துருக்கான்,நாளைக்கி காலையில எந்திரிச்சி வேலைக்குப்போயிறுவன்னு நெனைச்சா நான் வேலை க்கிப் போக மாட்டேன்னு ரெண்டு நாளா வீட்டுலயே இருந்துட்டான்,அவன் அப்பங்காரனும் அவனுக்கு புத்தி சொல்லி அனுப்பி வைக்காம அப்பிடி ஒண் ணும் ஏங் புள்ள அடி ஒத பெத்து வேலை பாக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்லிறவும் அவனுக்கு ஒரே தெம்பாப்போச்சி.

“இந்த நெலையிலதான் கடைக்காரரு ஏங் வீடு தேடு வந்தாரு,வந்தவருகிட்ட என்னன்னு கேக்கும்போதுதான்சொல்றாரு”ஏம்மா நான் போயி அவன மனசார அடிப்பேனா,அப்பிடி ஆளா நானு,

”அன்னைக்கி கடையில நல்ல கூட்ட நேரம் ,இவன் வேலையக்கவனிக்காம டீ மாஸ்டர் கிட்டப்போயி பேசிக்கிட்டு இருந்தான்,சரிசின்னப்பயன் ஏதோ ரெண்டு பேசிட்டு வந்துருவான்னு பாத்தா ஆணியடிச்சாப்புல அதே யெடத்துல நின்னு பேசிக்கிட்டேஇருக்கான்,கடைக்குள்ளஅவன்அண்ணங்காரன்பம்பரமாசுத்திக்கிட்டு இருக்கான்,நான் கல்லாவ விட்டுட்டுப் போயி சப்ளைய கவனிச்சிக்கிட்டு இருக்கேன், அப்பவும் அவன் கடைக்குள்ள வர்ற வழியக் காணோம். எனக்கு ன்னா ஒரே எரிச்சலா போச்சி, போன வேகத்துல கையப்புடிச்சி இழுத்து கடைக்குள்ள போயி வேலைய கவனிடான்னு சொல்லீட்டேன், கையப் புடிக்கும் போது கொஞ்சம் வேகமா புடிச்சேனா,அது அவன் அடி விழுந்தது போல நெனைச்சிக்கிட்டான்.கடையில வேற கொஞ்சம் ஆளும் பேருமா கூட்டமா இருந் தாங்களா அவனுக்கு அது கொஞ்சம் அசிங்கமா போச்சி போலருக்கு, முனுக் குன்னு கோபப்பட்டு வந்துட்டான்,

”நான் எப்பிடிப் போயி அவன அடிப்பேம்மா,அவனும் அவன் அண்ணனும் ஏம் பேரெங்க மாதிரி, நானே அவுங்களப்போல இருந்து வந்த ஆளுதானம்மா, அப்பிடி இருக்கலையில நான் எப்பிடிப்போயி அவனுகள கை ஓங்குவேன் சொல்லுங்கன்னு வந்து நின்னவன அவன் அப்பங்கிட்ட கூட்டிக்கிட்டுப்போயி நிப்பாட்டி இனிம இந்த மாதிரியெல்லாம் ஆகாதுன்னு சொல்லி கூட்டிக்கிட்டு போக வச்சேன்,

“அப்பிடி கூட்டுக்கிட்டு போன புள்ளைகதான் இன்னைக்கி கடைக்கி ஓனராகி நிக்குதுக,சும்மா சொல்லக்கூடாது நல்ல உழைப்பு அண்ணனும் தம்பியும், உழைப்பு மட்டுமில்ல,செய்யிற தொழிலுக்கு விசுவாசமாவும்,செய்யிற வேலைக்கு தன்னையே ஒப்புக்குடுத்துற்ரவுங்களாவும் இருக்காங்க/ நாணய மும் நம்பிக் கையும்நல்லபேரும் வந்துச்சி,தனக்கப்புறம் அவரோட புள்ளைக ளுக்கு கடைய எழுதி வைக்க நெனைச்ச கடைக்காரரு புள்ளைங்க படிச்சி மேப்படிப்பு வேலைன்னு போகவும் இவங்களுக்கே வித்திட்டாரு,

“கடைய வாங்கும் போது அண்ணன் தம்பி ரெண்டு பேருகிட்டயும் ரொக்கம் இல்ல,ஆனா நம்பி வித்தாரு, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அந்த நம்பிக் கைக்கு பங்கம் வராம நடந்துட்டாங்க,,,,

“அவரு தயவுல இப்ப ரெண்டு பேருக்கும் அந்தக்கடைய வச்சிதான் பொழைப் பே /

அவுங்க கடையிலதான் நான் அன்னைக்கி தோசை சாப்புட்டு டீயக்குடிச்சி ஒக்காந்துருந்தேன் பஸ்ஸீக்கு,

பஸ்ஸீ வர்றதுக்குள்ள பஸ் டாண்டுல இருக்குற பாத்ரூமுக்குள்ள நாலு தடவை ஒண்ணுக்குப் போயிட்டு வந்துட்டேன்,ரெண்டு தடை தண்ணி குடிச்சி ட்டேன்,தண்ணி குடிச்சா ஒண்ணுக்கு வருதுன்னு தெரிஞ்சும் கூட வேற வழியில்லாமதண்ணியகுடிக்கத்தான் வேண்டியதிருக்கு,ஒண்ணுக்குப் போகத் தான் வேண்டியதிருக்கு என்ன செய்ய சொல்லுங்க,வயசான ஒடம்பு ரெண்டை யும் தள்ளிப்போட முடியலங்குற நெனைப்போட இருக்கும் போது தான் ஆறு மணீ பஸ்ஸீ வந்துரிச்சி,

”பஸ்ஸீ இந்நேரம்தான் வரும்ன்னு தெரிஞ்சிருந்தா திரும்ப ஒரு தடவை பாத் ரூமுக்குள்ள போயி ஒண்ணுக்கு இருந்துட்டு வந்துப்பேன்,ஆனா தெரியாம போச்சி,

“பஸ்ஸீ வந்து நின்னதும் போயி வரலாம்ன்னா அதுக்குள்ள பஸ்ஸ எடுத்துரு வாங்க,இல்லைன்னா பஸ்ஸீல ஒக்காற யெடம் கெடைக்காது,ஏறிட்டேன் எப்பிடியோமுண்டி மொழைஞ்சி/

”கெளம்பி போயிக்கிட்டே இருந்த பஸ்ஸீ ஒரு ஸ்பீடு பிரேக்ர்ல ஏறி யெறங் கிச்சி பாருங்க,முட்டிக்கிட்டிருந்த ஒன்னுக்கு பொடவைய நனைச்சிரிச்சி, மொறச்சிப்பாத்த கண்டக்டர் தம்பி ஒண்ணும் சொல்ல நல்ல வேளையாங் குறதோட அன்னைக்கி வீடு போயி சேந்தேன். என்றவளிடம் பணம் கொடுத்து கை கூப்பி அனுப்பி வைத்தான்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக தொட்ட பசையின் ஈரம் இன்று வரை காயாமலேயே/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கப் படிக்கக் காட்சிகள் கண் வந்து நிற்கின்றன நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வளவு சிரமங்கள்... இருந்தாலும் மன தைரியம்...

vimalanperali said...

விரிகிற காட்சிகளே கதைகளாகின்றன,
அதில் நெஞ்சை தொடுவன சில,அது அற்றது சில,,,/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,/

வலிப்போக்கன் said...

போராட்டமே வாழ்க்கை....

vimalanperali said...

அதைத்தான் நம் சம காலத்தில் காண்கிறோமே,,,/