12 Jan 2019

ஊர்தலின் நிமித்தங்கள்,,,,

வேகம் காட்டி ஊர்ந்து வருகிற பாம்பிற்குத் தெரியுமா,பிஸியாய் இயங்குகிற சாலையின் ஊடுபாவாய் நடமிடக்கூடாது என//

வாஸ்தவம்தான் பிஸியானது அந்தச்சாலை என்கிற சொல் சற்றும் மிகை காட்டி நிற்கிற சொல்லோ அல்லது அரிதாரம் பூசிக்கொண்ட ஒப்பனை மாதிரி யோ அல்ல.

மாறாக கனரக மற்றும் இலகு ரக வாகனங்களும் இரு சக்கர வாகனமும் போனால் போகிறது என பாதசாரிகளும் மிதி வண்டிகளும் செல்ல அனுமதி கேட்டுப்பெற்ற சாலை அது,

தலை கிராமம் என்றால் தலையாய கிராமமாய் இல்லாமல் அல்லது தன்னை அப்படியாய் எந்த அடையாளத்திற்குள்ளுமாய் அடைத்துக்கொள்ளாமல் காட் சிப் படுகிற ஒரு இலகு ரக கிராமம் அது,

பெயருக்கும் காட்சிக்கும் இலகுவாய் தென்பட்ட அந்த கிராமத்தில் என்ன இல்லை என்கிறீர்கள் என யாரும் உரக்கக்கேட்டு விட முடியாதபடி எல்லாம் இருந்தது,

அரசுமருத்துவமனை, அரசுநூலகம்,காவல் நிலையம்,சந்தை, மற்றும் மற்று மாய் மூன்று வங்கிகள்,அதன் ஏடிம் மையங்கள்,பரந்து விரிந்த அளவிற்காய் எனச் சொல்லாவிட்டாலும் சற்றே ஒடுக்கமாய் இருந்தாலும் பெயர் காட்டி சொன்ன கடைவீதி, டீக்கடைகள், சிறியதும், சிறியதுமான ஹோட்டல்கள்,(பெரியது அந்த ஊருக்கு அநாவசியம் என்கிற எண்ணத்தில் சிறியதாய் வைத் திருந்திருக்கலாம்.)பலசரக்குக்கடைகள்அதிமுக்கியமாய்மெடிக்கல் ஷாப்புகள் சித்தமருத்தவத்திற்கும் ஆங்கில மருத்துவத்திற்கெனவுமாய் ஊரின் மூலை கொன்றாய் அமர்ந்திருந்த டாக்டர்கள் என இன்னும் இன்னுமாய் இருந்த ஊர் நான் கைந்து ஊர்களுக்குதாய் கிராமம் என்றால் மிகைபட்டுத்தெரியவில்லை தான்.

ஊர் நுழைவு வாயிலில் நெற்றிக்கிட்ட பொட்டாய் பெரிதாய் இருந்த மில் அந்த பக்கத்தின் தொழிலாளர்களை அடை கொண்டிருந்தது.

அது என்ன மில் என இது நாள்வரை இவன் அறிந்திருக்கவில்லை.

நாள் போகப்போகத்தான் அறிந்தான் அது ஒரு தறி மில் என/

மில்லின் முன்புறமாய் குடை விரித்து நின்றிருந்த மரங்கள்,நான்கைந்தும் பூக்கள் வைத்து அழகு காட்டி நின்ற பூ மரங்கள் நான்கும் அந்த மில்லின் முகப்பிற்கு அழகு செய்தது எனலாம்.

அந்த மில்லை கடந்து போகிற தினங்கள் தோறுமாய் இவன் நினைப்பதுண்டு, சமயங்களில் அவசரமில்லாமல் வருகிற மாலை வேலைகளில் இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டி விட்டு பூக்களைக்கொஞ்சம் பெறக்கிக்கொண்டு வருவான்,

அப்பொழுதுதான் இவனுக்காய் செறிந்தது போல் உதிர்ந்து கிடக்கிற கொன் றை மரப்பூக்களை அள்ளி எடுத்து உள்ளங்கையில் வைத்து முகர்ந்து பார்க் கையில் கிடைக்கிற ஆனந்தம்,அடேயப்பா இவனுக்காய் அந்தப்பூவினுள்ளாய் அந்த வாசனையையும்,புது மலர்வையும் பொதித்து வைத்திருப்பது போல் தோணும்.

கை நிறைந்து அள்ளிய பூக்களை அப்படியே வைத்துக்கொண்டு ”ஊலாலா,,” பாடிக் கொண்டு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அங்கே கொஞ்சி விளையாடுகிற பறவைகளுடன் கைகுலுக்கி விட்டு முடிந்தால் ஒரு இரவு பறவையின் கூட்டில் கால் மடக்கி படுத்துகொண்டிருந்து விட்டு எழுந்து வரவேண்டும்,

மனமிருந்தால் வெற்றிலையில் கூட இரண்டு பேர் படுக்கலாம் என்கிற சொல்லுருவாக்கம் இருக்கிற போது பறவையின் கூட்டில் படுத்துறங்க யார் அனுமதி மறுக்கப்போகிறார்கள்.

வேண்டுமானால் அந்த பக்கம் நிலை கொண்டுள்ள அரசு அதிகாரிகளைடம் அப்ரூவல் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்,விடுங்கள் என்கிற மனதை சமாதானமிட்டவனாய் பொறுக்கிய பூக்களை மொத்தமாய் அள்ளி எடுத்து பொறுக்கிய பூக்களுக்கும்,உள்ளிடுகிற பைக்கும் நோகாமல் பையின் உள்ளில் இட்டு கொண்டு வரும் நேரமாய் இதென்ன பூவெடுத்துப்போகிறீர்கள் எனக் கேட்பவர்களிடம் சிரிக்காமல் சொல்வதுண்டு,இந்தப்பூக்களுக்குத்தான் எனது வீட்டு பூஜையறையை அலங்கரிக்க அனுமதி கொடுத்திருக்கிறேன்,ஆகவே,,,,, என முடிப்பான்/

நிறைவு கொண்ட சொல்லும் மனதிருப்தியும் இருக்கும் அந்த பேச்சில் கறைந்து விடுபவன் மில் பற்றி இது நாள்வரை அறிந்து வைத்திருக்கவில்லை.

அது அனாவசியம் என்கிற நினைப்பு தாண்டி கேட்கலாம் நேரம் வாய்க் கையில் என விட்டு விடுகிறவனாய் ஆகிப் போகிறான்.

வெளியூர் போய் விட்டுத்திரும்பிய ஒரு இரவு நேர கார் பயணத்தின் போது அந்த மில்லுக்கு எதிர்த்தாற்போல் இருக்கிற டீக்கடையில்தான் டீக்குடித்தான்,

இரவென்றால் முழு நீள இரவெல்லாம் இல்லை.மாலை மயங்கி இரவை எட்டித் தொட்டிருந்தது. அல்லது தொடப்போனதாய் காட்டியது.

உண்மையைச்சொல்ல வேண்டுமானால் இவன் காரை அங்கு நிறுத்த வேண் டும் என விரும்பவில்லை,அது இவனது நோக்கமாயும் இருக்கவில்லை.

காரில் இருக்கிற பெட்ரோல் ஊர் போய் சேரும் வரை தாங்காது என்பது இப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தவனாய் வண்டியை டீக்கடை முன்னாய் நிறுத்தினான்.

டீக்கடைக்காரர்தான் பெட்ரோல் பங்க் இருக்கிற தூரம் ஒரு கிலோ மீட்டருக்கு பக்கத்தில் இருக்கும் எனவும் டீக்குடித்துக்கொண்டிருங்கள்,இதோ என் கடைப் பையன் போய் வாங்கி வந்து விடுவான்,அவனுக்கு ஒரு அஞ்சோ பத்தோ கைச்செலவுக்குக்கொடுங்கள் மனதிருந்தால்,,,,என்றார்.

மனதிற்கு ஒன்றும் குறைச்சலில்லை என்றவன் பெட்ரோலுக்கான பணத்தை யும்,கடைப்பையனுக்குரிய டிப்சையும் கொடுத்த மறு விநாடி கடைப்பையன் கேனுடன் பறந்து போனான் சைக்கிளில்/

இது வழக்கமா நடக்குறதுதான் சார்,வாரத்துல ரெண்டு இல்ல மூணு நாளு இது போல யாராவது பெட்ரோல் இல்லை,டீசல் போட மறந்துட்டேன்னு ஒங் களப் போல நின்னுருவாங்க,போனவாரமுன்னா வாரம்முழுக்க இப்பிடித்தான் ஆகிப் போச்சி சொல்லி வச்சாப்புல,அதுலயும் சமயத்துல ஒரு நாளைக்கு ரெண்டு மூணுகாருங்கன்னு வரிசை கட்டி நின்னுக்கிரும்,

அந்த மாதிரிநேரத்துல பையன் கூட சேந்து நானும் போயிட்டு வந்துருவேனா, ஆனா அவனுக்குரிய டிப்சை அவனுக்கு குடுத்துருவேன்,

ஒங்களப்போல உள்ளவுங்களுக்கு நீங்க அவனுக்கு குடுக்குற காசு டிப்சு,ஆனா அவனுக்கு அது அவன் குடும்பத்து ஒதவுற அரிசி பருப்பு,

அதுனாலத்தான் நானும் அவன் கொஞ்சம் கூடக்கொறைய காசு வாங்குனாக் கூட கண்டுக்குறதில்ல,,,,என்றார்,டீயைக்கொடுத்துக்கொண்டே/

டீக்கடை முகப்பின் இரவு நேர லைட் வெளிச்சம் கண்ணைக்கொஞ்சம் கூசச் செய்தாலும் அந்த இடத்தில் படர்ந்து பாவித்தெரிந்ததாக.

இந்தப்பக்கம் போகும் போது வீட்டுக்கு அவசியம் வர வேண்டும் எனக் கூறிக் நண்பரின் வீடு பக்கத்தில்தான் இருக்கிறது,

மூணாவது தெருவின் வலது பக்கத்தில் இரண்டாவது வீடு என அடையாளம் பூசிக்காண்பித்திருந்தார் இவனை வீட்டிற்கு அழைத்த அன்று./

அந்தப்பூச்சும் பிடிப்பும் இப்பொழுது அருகாமையுடனும் மனம் தொட்டும் இருந்தாலும் இந்நேரம் போனால் போய் விட்டு அப்பிடியே ஒப்புக்கு திரும் பியது போல் ஆகி விடும்.

போய் சிறிது நேரமாவது அமர்ந்து பேச வேண்டும்,கொஞ்சமாவது அளாவ ளாவி விட்டு வரவேண்டும்.குடும்பம், அவன், சந்தோஷம், பிள்ளைகள்,சம்பாத் தியம்,வேலை என இதர இதரவாய் கேட்டு விட்டு வர வேண்டும் அப்படியெ ல்லாம் கேட்க கொஞ்சம் நிதானமாய் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்கொள்கிற நேரமும் பேசிச்செல்கிற விஷயமும் முக்கியம் இல்லை யா அதனால்தான் கொஞ்சம் நிதானம் காட்டி போய்க்கொள்ளலாம்,வேணாம் இப்போதைக்கு என்கிறவனாய் விட்டு விட்ட பலசமயங்களில் இன்றும் ஒன் றாய் ஆகிப்போனது.

சென்றவுடன் திரும்ப இவன் என்ன போஸ்ட மேனா ,நண்பன் இல்லையா,,,?

ஆனாலும் போகலாம் என்கிற நினைப்பை டீக்கடைக்காரரின் மனம் தொட்ட பேச்சும் உளம் தொட்ட வாஞ்சையும் இவனை அங்கேயே நிலை கொள்ளச் செய்து விடுகிறதாய்,,,/

”சார்இங்க டீக்குடிக்க வர்றவுங்க டீக்குடிக்கிறாங்க,வேணுமின்னா சேத்து வச்சி ஒரு வடையும் சாப்புடுக்கிறாங்க,

“ஆனாஅவுங்க டீ சாப்புடும்போதோ வடை திங்கும் போதோ குடிக்கிற டீயப் பத்தியும்,கடிக்கிறவடையப்பத்தியும்எதுவுமேபேசுறதில்ல,அதுகூட பரவாயில் லைன்னு சொல்லலாம்.

”ஆனா சம்பந்தமில்லாம ஏதாவது ஒன்னப்பத்தி பேசிக்கிட்டு இருப்பாங்க,வீடு ஆபீஸீ, வேலை பாக்குற யெடம்,சம்பாத்தியம், பணமுன்னு ஏதாவது ஒண்ண அசை போட்டுக்கிட்டே இருப்பாங்க,

”இவுங்கஇப்பிடிபேசுறதநான் எதும்கண்டுக்கிறதில்ல.ஏன்னா ஒன்னா ரெண்டா, கடைக்கி வர்றவுங்கள்ல பாதிப்பேருக்கும் மேல அப்பிடிப்பேசும் போது நான் அவுங்ககிட்ட அப்பிடியெல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்ல முடியுமா சொல் லுங்க,

எனக்கு கூட ஆசைதான்,இப்பிடியெல்லாம் பேசுறத விட்டுட்டு நடப்ப பேசுங் கன்னு சொல்லாமுன்னு,ஆனா அப்பிடியெல்லாம் நான் சொன்னேன்னு வையி ங்க,ஏங் யேவாரம் போயிரும் ,ஏதோ பத்துப்பேருவர்றதாலத்தான் யேவாரத் துல கொஞ்சம் தலை நிமிந்து நிக்கிறேன் .

நான் அத வெறும் யேவாரமுன்னு மட்டும் பாக்குறதில்ல,நான் குடுக்குற டீக்கு வாங்குற பணம் ஏங்க கடையில வேலை பாக்குறாரே இந்தா இவனுக்கு சம்பளமா போகுது, ஏங்கிட்ட இருந்து பல சரக்குக் கடைக்கும் வேற சில யேவாரம் வாங்குறதுக்கும் போகுது.அது தவிர ஏங் குடும்பத்துக்கு செலவழிக் கிறேன்.ஏன் வீட்டு சின்னப்புள்ளைங்க பள்ளிக் கூடத்துக்குப் போகும் போது அங்க வாங்கித்திங்குது என்னையப்போல கடை வச்சிருக்கவுங்ககிட்ட, அந்தக் காசு போகுது,அத வாங்கி கடைக்காரன் புள்ள செலவழிக்கிறான்,அது போலத் தான எல்லாருக்கும் இருக்கும்,

”ஒங்ககிட்டஇருக்குறபணம்ஏங்கிட்டவருது,ஏங்கிட்டசேர்றபணம்பலசரக்குக்கடை க்கும் வேற சிலகடைகளுக்கும் போகுது,அங்க சேர்ற பணம் அவன் கடை சிப்பந்திக்கும் இன்னும் பிறருக்குமா போயிச்சேருது,அது வேறொரு யெடத்து க்கு வேறொரு தேவைக்குப் போகுது,இப்பிடி டீக்கடையிலியிருந்து ஆஸ்பத் திரி வரைக்குமா போற பணம் ஒரு யெடத்துல நிக்காம சுத்திச்சுத்தி பொழக் குத்துல இருக்குற பணம் ஒவ்வொருத்தரு தேவையையும் நிறைவேத்திக் கிட்டும்சுழண்டுக்கிட்டுமா இருக்கும்இல்லையா,அதுபோலதான் நம்ம கடையு முன்னு நெனைச்சிக்கிட்டு யேவாரத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்,,,/

”நானும் இருபந்தைஞ்சி வருஷமா இங்க கடை வச்சிருக்கேன், முன்னாடியெ ல்லாம்சாப்பாட்டுக்கடையும் சேத்து வச்சிருந்தேன் ,இங்கன மில்லுக்குள்ள மிஷின் தறி போட்டிருந்தாங்க,தறி நெசவு ஓகோன்னு ஓடுன காலம் அது.

”குடும்பத்துக்கு ஒரு ஆளுன்னு வச்சாக்கூட இந்த சுத்துப்பட்டியில இருக்குற வுங்க எல்லாம் வேலைக்கு வந்து போயிக்கிட்டு இருந்த நேரம் அது,

”இந்தப் பக்கத்துக்கே சோறு போட்ட ஸ்தாபனம் அது.

”மூணு சிப்ட்டும் தறி ஓடும்,எனக்குத்தெரிஞ்சி ஒரு நாக்கூட தறி ஓட்டம் நின்னதா சரித்திரம் இல்ல சார்,

”தறின்னா நெசவோட மட்டுமா போச்சி,அந்நேரம் எங்களப்போல இருக்குற கடைகளுக்கு அவுங்கதான ஆதாரம்,

மூணு சிப்ட்டு,சிப்ட்டுக்கு அம்பது பேருன்னு வச்சிக்கிட்டாக்கூட,நூத்திஅம்பது பேரு,நூத்தி அம்பது பேருல பாதிப்பேரு கடைகளுக்கு வந்து டீ வடை சாப்புட் டாக் கூட ஆளுக்கு பத்து ரூபா ஆகிப்போச்சி,அதுல கொஞ்சம் பேரு காலையி லைக்கும், மதியத்துக்கும்,சாயங்காலத்துக்குன்னு ஏதாவது சாப்புடுவாங்க, அதுல கொஞ்சம் வரும்படி வரும்,இது போக தறிமில்லுக்கு வர்ற லாரிக டிரைவர் கிளீனர்,அவுங்க கூட வந்து போறவுங்க,இன்னும் இன்னுமா லயனு க்குப் போற வர்ற யேவாரிங்க,சமயத்துல வடக்கத்திப்பக்கமெல்லாம் இருந்து யேவாரிங்க வருவாங்க,அவுங்களுக்கெல்லாம் ராத்திரி நேரத்துல சாப்பாடும் டிபனும் குடுத்து பசியாத்துற யெடம் நம்ம கடையாத்தான் ஆகிப்போகும்,

இப்பிடித்தான் ஒரு தடவை கடைக்கி சாப்புட வந்த வடக்கத்தி யேவாரி ஒரு ஆளுகாசக்குடுத்துகடைப்பையனதண்ணிவாங்கீட்டுவரச்சொல்லியிருக்கான், அவன் நல்லபடியா யேவாரிகிட்ட காச திருப்பிக்குடுத்துட்டு இந்த மாதிரி வே லைக்கெல்லாம்எங்கயெடம் குடுக்காதுன்னு சொல்லீட்டு வந்துட்டான், ஒடனே யேவாரி கோவதோட வந்து ஏங்கிட்ட சொன்னான்,

அதுக்கு,போடாடேய்கிறுக்குப்பையலேன்னுமனசுக்குள்ளயேநெனைச்சிக்கிட்டு ,,சொன்னேன். அவனாவது காச திருப்பிக்குடுத்தான்,நானா இருந்திருந்தா மூஞ்சியிலயே திருப்பி எறிஞ்சிருப்பேன்,ஏங் கடைக்கின்னு இருக்குற நல்ல பேரும் நம்பிக்கையும்தான் என்னைய இது நா வரை காப்பாத்திக்கிட்டு இருக் கு, அத இது போல அஞ்சி பத்துக்கு ஆசைப்பட்டு கெடுத்துக்குற விரும்பல, யேவாரி, கோச்சிக்கிறாதீங்கன்னு ராத்திரி டிபன எடுத்து வச்சி சாப்புடுட்டு கடையிலயே படுத்து எந்திச்சிப்போகச்சொன்னேன்,

வேணாமுன்னுட்டு மில்லுக்குள்ள இருக்குற ரெஸ்ட் ரூமுல படுத்து எந்திரிச் சிட்டு காலையில நம்ம கடைக்கி டீக்குடிக்க வந்த ஆளு மொத நாளு ராத்திரி தண்ணிவாங்கீட்டுவரச்சொன்னதுக்காக வருத்தம் தெரிவிச்சிட்டுப் போனாரு/  காலையில நம்ம கடையிலதான் டிபனும் சாப்புட்டாரு.

”இந்த ஏரியாவுல நான் மட்டும் இல்லை,என்னையப்போல நாலைஞ்சி பேரு கடை போட்டுருந்தாங்க,ஆனா பாருங்க,ஏங் கடை கைப்பக்குவம் யாருகிட்ட யும் இல்லைன்னு ஏங்கிட்டதான் வருவாங்க பாதிப்பேருக்கு மேல,வராதவ ங்கள கணக்குல வச்சிப்பாத்தாக்க ஒண்ணு அவுங்க ஆதியிலயிருந்து ஏங் கடைக்கி டீக்குடிக்க வராதவுங்களா இருக்கணும்,இல்லைன்னா ஏங்கிட்ட பாக்கி நெறைய நிக்குதுன்னு போயிருக்குறவங்களா இருக்கணும்.

நானும்அதஒண்ணும் பெரிசா எடுத்துக்கிறதில்ல,நம்மளப்போலத்தான மத்தவு ங்களும், இல்லையா சார்,அதுனால பெரிசா ஒண்ணும் கண்டுக்கிறதில்ல, நம் மள விட்டுப்போனவங்க, நம்ம கிட்டதான் வருவாங்க ஒரு நாளைக்கின்னு ஏங் உள் மனசு சொல்லும்,நானும் அது சொல்ற படி கேட்டுகிட்டு சமாதானம் ஆயிருவேன்,

அப்பிடி நடந்த யேவாராம், அப்பிடி ஓடுன தறி மில்லு.என்னைக்கி தொழில் நசிஞ்சி தறி மில்லு கொடௌனா மாறிச்சிச்சோ அன்னைக்கே இந்த சுத்துப் பட்டிங்க எல்லாம் களை யெழந்து போச்சி/

”நெசவநம்பிஇருந்தவுங்கபொழப்புநடுத்தெருவுக்குவந்தப்பஏங்கடையேவாரமும் அம்போன்னு போச்சி,

”மனசு ஆத்த மாட்டாம டீக்கடைய மட்டும் வச்சிக்கிட்டுபொழப்ப ஓட்டுறேன், சாப்பாடு டிபனெல்லாம் விட்டாச்சி. எனக்கு வேற எந்த வேலையும் தெரி யாது,அப்பிடியே தெரிஞ்சாலும்இத்தன வயசுக்கு மேல போயி என்ன வேலை செய்வேன் நானு சொல்லுங்க, அதான் கடையே கதின்னு கெடக்குறேன்.

”இந்தா பாருங்க கடைக்கிப் பின்னாடி இருக்குற இந்த வெளியிலதான் கொட்ட கை போட்டு சாப்பாட்டுக்கடை வச்சிருந்தேன்,இந்தா இங்கன இருக்கே வெட்ட வெளி இங்கதான் லாரிக வந்து நிக்கும்,

”இப்ப அந்த யெடத்துல கொஞ்சம் கட்டங்க மொளைச்சிருச்சி.எனக்குக்கூட அங்கஒரு யெடம் கெடக்குது.கடை நல்லா ஓடுனகாலங்கள்லதொழிலாளிங்க புண்ணியத்துலவாங்கிப்போட்டநெலம்,இன்னைக்கிஒண்ணுக்குநாலா வெளை யாகி நிக்குது,எனக்குதான் நெலத்த தரிசா போடவும்,விக்கவும் மனசில்லாம ரெண்டுகாய்கறிதக்காளின்னுபோட்டுவச்சிக்கிட்டிருக்கேன்,ஓகோன்னுவெளை யளைன்னாக்கூட ஏதோ வீட்டுப்பாடுக்கு கொஞ்சம்ஆயிக்கிரும், அது மிஞ்சிச் சின்னாஉள்ளூர்கடைகளுக்குபோட்டுக்கிருவேன்.ஆனாஅப்பிடிபோடும்போதெல் லாம் எனக்கு மனசு வாதிக்காம இருக்காது,

“நான் நெலம் வாங்கி காயி வெளைவிக்க காரணமா இருந்த நெசவாளிங்க பொழப்பு தரிசா போச்சேன்னு”

”இந்த தறி மில்லு ஓடிக்கிட்டு இருக்கும் போது எப்பிடி இருந்துச்சி தெரியுமா சார்,இந்த ஏரியாவே சும்மா கலகலன்னு இருக்கும் ,குலுக்கிப் போட்ட சோவி முத்துக கூட்டா கெடக்குறது போல பாக்கவே அவ்வளவு அழகா இருக்கும்.

அப்ப தறி வேலைக்கி வர்ற வயசுப்புள்ளைங்க,,,அடேயப்பா அதுங்க பண்ற அலிச்சாட்டியத்தச்சொல்லணுமுன்னா இன்னைக்கி நாள் போதாது ஆமாம்.

”அவுங்க வேலைக்கி வர்றதும் போறதும் சிரிக்கிறதும், வெளையாடுறதும், வம் பிழுத்துக்கிறதும்,கொஞ்சிப்பேசிக்கிறதுமா,இருக்குறத கல்மிஷமில்லாம பாக்க ஒரு தனி மனசு வேணும் சார்.

”அவுங்கதினசரிஎவ்வளவு சம்பாதிக்கிறாங்ககுறத, ஏங் கடைக்கி எதுத்தாப்புல அந்தா தள்ளி இருக்கு பாருங்க அந்த கடைக்காரரக்கேட்டா தெரிஞ்சி போகும், போட்டுருக்குறபாவாடை தாவணிக்கி ஏத்த மாதிரி மேட்சா வளையல் என்ன,,, ,பொட்டு என்ன,,,லிப்ஸ்டிக் என்ன,,கையில மாட்டீருக்குற ரப்பர் பேண்ட் என்ன,,,,அடேயப்பா ஒரே குதூகலம்தான்,,/

அந்தகவரிங் கடைக்காரருக்கு சாமான் எடுத்துக்குடுக்க ரெண்டு கைபோதாது இது போலான நேரங்கள்ல,,/

”அப்பிடி இருந்த அவுங்க குதூகுலமும் ,அவுங்க வாழக்கையும் நெசவு தொ ழிலு என்னைக்கி படுத்துச்சோ அன்னைக்கே காணாம போயிருச்சி.

”வெளியில சொன்னா வெக்கக்கேடு சார்,எனக்குத்தெரிஞ்சி இங்க தறியில வேலை பாத்த அந்தப்புள்ளைங்கள்ல ரெண்டு மூணு பேரு தறி மூடுனதுக்குப் பின்னாடி சித்தாளு வேலைக்கு போன கொடுமையெல்லாம் நடந்துச்சி,

”பாக்கவே சகிக்காமவும் பாவமாவும் இருக்குற அது போலான நடப்புகள நித்த மும்தான் பாத்துக்கிட்டுஇருக்கேன்,அப்படி பாக்கநேர்றசமயங்கள்ல பார்வைய வேற பக்கம் தெசை திருப்பிக்கிருவேன்.

”ஏன்னா எனக்கு ஒரு பொண்ணு இருந்து அது இந்த நெலைமையில இருந்து ச்சின்னா எப்பிடி தாங்கிக்கிற முடியாதோ அது போலத்தான இதுவும் இல்லை யா,

”ஏங் மகவயசுல இருக்குற இது போலான பொண்ணுங்கள பாக்கும் போது படக்குன்னு கொஞ்சம் கண்ணீர் கூட வந்துருது சார்,

”சரி அது எதுக்கு சார் ஒங்களுக்கு ,பாத்தா பெரிய யெடத்துப்புள்ள போல இருக்குறீங்க,சரி போயிட்டு வாங்க என அனுப்பி வைத்தார்,

ஓடுற வரைக்கும் ஓடட்டும் நிக்காம,என்னைக்கு நிக்கமுன்னு தோணுதோ இல்ல படுக்கணுமுன்னு தோணுதோ அன்னைக்கி படுத்துற வேண்டியதுதான் என்கிற நினைப்பில் காரை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.

வேகம் காட்டி ஊர்ந்து வருகிற பாம்பிற்குத் தெரியுமா,பிஸியாய் இயங்குகிற சாலையின் ஊடுபாவாய் நடமிடக்கூடாது என//

4 comments:

வலிப்போக்கன் said...

வேகம் காட்டி ஊர்ந்து வருகிற பாம்பிற்குத் தெரியுமா----நிச்சயமாக தெரியாதுதான்.......

vimalanperali said...

அன்பும்.பிரியமும்!

Kasthuri Rengan said...

உங்கள் நினைவோடையில் நாங்களும் ஒரு சருகாக

vimalanperali said...

அன்பும் பிரியமும்!