May 7, 2011

எச்சம்

                                     

          ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருப்பவரின் மேல் விழுந்த வெளிச்சப்புள்ளிகள் அவசரமாய் கடந்த கணங்களில் மரநிழலும் அதன் மேல் அமர்ந்திருக்கிற பறவையும் என் கவனத்தை ஈர்க்கிறது.
    அகண்டு பரந்த வெளியெங்கும் தனது சிறகசைப்பாலும், மிதப்பாலும் நிரப்பித்திரியும் காக்கைகளுக்கு சோறு போடுவதற்கும், சோறு வைப்பதற்கும்
பெரிய வித்தியாசம் இருப்பதாய் உணர்கிறேன்.
    பேருந்தின் வேகத்தில் காட்சிகள் மாறிவிட காக்கை மட்டும் என் மனதை கொத்தியவாறு.
    தனது இருப்பிடத்தில் துயிலெழும் காக்கைகள் சோம்பல் முறித்து காடு மலை கட்டாந்தரை மணல் வெளி எங்கும் பறந்து தனது எண்ணங்களையும் தேவைகளையும் பதிவு செய்தவாறேயும், உரைத்தவாறேயும் திரிகிறது.
    தோட்டம் காடுகள் விளைச்சளற்று தின்ன ஏதுமற்ற காக்கைகள் நாம் காறி உமிழ்கிற எச்சிலை கொத்தித்தின்னவும் அவற்றை தனது இருப்பிடங்களில் பாதுகாத்து வைக்கவுமாய் பழகிக் கொள்கின்றன.அவையும் காணாத போது ஒட்டிய வயிரும் கிறங்கிய கண்களுமாய் இறகு விரித்து ஊர் நோக்கி வருகிறன தனதுசிறியஅலகுதிறந்தஅழைப்பொலியுடன்.
   கரியநிறஉடலும்,தூக்கிப்பறக்கும்இரண்டுஇறக்கைகளும் விரித்து வானத்திலோ வீட்டுகூரைகளின்மீது மிதக்கும் போதோ ஆஜானுபாகுவாய் தெரியாவிட்டாலும் கூட என்னைப்போன்றவர்களை கவரும் விதமாகவே.
    வேலைநாட்களின் மதியம் என்னை போன்றவகள் வைக்கும் ஒரு கவளம் சோறே அதற்கு தேவாமிர்தமாய்.
    அவ்வளவுசின்னூண்டானஉடலைப்பெற்றகாக்கைகளின் வயிறு,இரைப்பை,
இருதயம்,சுவாசக்குழாய்,நரம்புகள்,எலும்புகள் இதர,இதர என சுருங்கிய அதன் சின்ன உறுப்புகளுக்கு சமமாகத்தானோ அதன் சிந்தனையும் செயல்பாடுகளும்,மனவிரிபுகளும்.
   எங்கு சென்றாலும் தத்தித்தத்தியும், தாவிதிரிந்தும் அமர்கிற அவைகள் உங்களையும்,என்னையும்,அவர்களையும்உற்று,உற்றுபார்க்கிறது.கழுத்தை,
கழுத்தை சாய்க்கிறது.விழிகளை மூடி,மூடி திறந்து “பொசுக்,பொசுக்கென விழிக்கிறது.டொக்கரியும் கொக்குகளுக்கும்.நோக்கரியும் தங்களுக்குமுள்ள வித்தியாசத்தை உணர்ந்தும்,தக்கவைத்தும் அது அமர்ந்த இடத்திலிருந்து நாம் நிற்கும் இடம் வரைக்குமான இடைவெளியை கண்களால் அளவெடுத்து கணக்கிட்டு விடுகிறது. இடம் பொருள் காலம்நேரம் என்கிற எந்தபரிணாமத்திற்குள்ளுமாய் அடங்காத ஆறடிக்கும் அதற்கும் சற்றே குறைவான உயரத்தில் இருக்கும் நம்மைப்பார்த்து பம்மி,பம்மி படமெடுத்து வரும் அது நம் எல்லோரையும் இல்லாவிட்டாலும் கூட வெகுசிலரையாவது அசரடித்து விடுகிறதுதானே?
   இறக்கை முளைத்த மனிதனாய் மெல்லிய தன் உடலை தூக்கிக்கொண்டு  பறந்து போய் அவைகளின் உலகத்தில் இரைதேடியும் கூட்டில் அடைந்தும் பறந்து திரிந்துமான நிகழ்வு இல்லாத போதும் கூட அவற்றினதும்,குட்டி குஞ்சுகளினதுமான அகலத்திறந்த வாயில் சிறிதேனுமாவது இரை ஊட்டி விட ஆசை.
   மதியமற்றும்,மற்ற வேளைகளிலும் விடுமுறை நாட்களிலுமாய் அவை எங்கு செல்கின்றன.அவைகளின் உணவை நோக்கிய பயணம் எங்கு மையப்படுகிறது?சோறு, குழம்பு,வெஞ்சனம் என்கிற அன்றாட சாப்பாட்டின் ஐயிட்டங்கள் அவைகளுக்கு இல்லைதான்.
   வெள்ளி, செவ்வாய் சாம்பார்,பருப்பு சனி ஞாயிறு அசைவம் பிற தினங்களில் இன்ன ,இன்ன என வார நாட்களை வசதியாய் பிரித்து உணவு வகைக்குள் அடக்கிவிடுகிற வித்தையெல்லாம் தெரியாது அவைகளுக்கு.கிடைத்த நேரத்தில் கிடைத்தது,அல்லாத நேரத்தில் ஏதுமில்லாமலேயே,,,, என்கிற நியதியே அவைகளின் வயிற்றை நிரப்பும் கோட்பாடாய்.
  அப்படியான கோட்பாடுடன் வரிசையாகவும்,ஒழுங்காகவும் மின் கம்பங்களில்  நிற்கும் காக்கைகள் அதன் உயர் அழுத்ததில் அடிபட்டு கீழே விழுகையில் அதன் எதிர் சாரியில் ஹோட்டல் வைத்துள்ள எனது நண்பன் விரைவான் கையில் தண்ணீர் ஜக்குடன்.
  அடிபட்டு விழுந்த சிறிது நேரம் வரை அதன் உயிர் துடிப்பு இருக்குமாம்.அந்நேரம் தண்ணீரை வாயில் விட்டால் பிழைத்துக் கொள்ளும் காக்கைகளுக்கு நீர்விட்டு காப்பாற்றுவதற்கென்றே அந்த அலுமினிய ஜக்கை வைத்திருப்பான்போலும்.
   ஹோட்டல்கள்தோறும் எது இருக்கிறதோ,இல்லையோ அலுமினிய ஜக்கும்,அதில் நீர் கொண்டு பரிமாறும் சர்வர்களும் இல்லாமல் இல்லை.அது மாதிரி வரிசை மனிதர்களில் இடம் பெற்று விட்ட எனது நண்பன் ரோட்டை கடந்து போகும் முன் இறந்து போன காக்கைகளின் எண்ணிக்கையும்,அவன் காப்பாற்றிய காக்கைகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும்.
   இம்மாதிரியானநேரங்களில்அதுசம்மந்மானவருத்தமும் பறவையோபிமானமும்
மிகவும் கூடுதலாகவே காணப்படும் அவனிடம்.
   “நான் அல்லது என்னை போன்ற அலுவலக உத்தியோகிதர்கள் ,அவர்கள் உணவு வைக்கும் வேளை, அதை ஒட்டிய காக்கைகளின் கூப்பிடு சத்தம் எல்லாம் என்போன்று எச்சில் கையால் காக்கை ஓட்டுபவர்கள் உள்ளவரை அவைகளுக்கு அரசு அலுவலகங்களில் மதிய உணவு சாத்தியம் என்றே தோன்றுகிறது”
என்கிற நினைப்போடும்,அசைபோடுதலோடும் அவைகளின் நினைப்பிலிருந்த பொழுதுதான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தவரின் மேல் விழுந்த வெளிச்சப்புள்ளிகள் மறைந்து காக்கைகள் பறந்து செல்கின்றன மரத்திலிருந்து.

5 comments:

 1. அருமை விமலன் ஐயா
  நிசமா எதானை உன்னிப்பான கவனிப்பு பறவைகளிடம்
  அவைகளுக்கு நாளை பற்றிய கவலை சிறிதும் இல்லை
  அருமையான பதிவு

  ReplyDelete
 2. அப்படியே http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாங்க... ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

  ReplyDelete
 3. //வெள்ளி, செவ்வாய் சாம்பார்,பருப்பு சனி ஞாயிறு அசைவம் பிற தினங்களில் இன்ன ,இன்ன என வார நாட்களை வசதியாய் பிரித்து உணவு வகைக்குள் அடக்கிவிடுகிற வித்தையெல்லாம் தெரியாது அவைகளுக்கு// சென்ற வாரம் அவர் படித்த ஒரு பதிவை ஒட்டி தினமணி ஆசிரியர் எழுதியிருந்தார். அவரது மாடியில் தண்ணீர் பறவைகளுக்காக வைக்கப்பட்டிருப்பதாக. நான் ஏற்கனவே அது போல வைத்துப்பழகிப்போனதால் அது எந்த அசைவயும் என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் ஏற்படுத்தவில்லை. சோறும் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் எனது துணைவியார். பறவைகள், பூச்சிகள், அனைத்து உயிரினங்களையும் நேசித்தால் போதும். ஒரு பாம்பு வீட்டு வாசல் தாண்டி அது போக்கில் போய்க்கொண்டிருந்தது. மனிதருக்கு எந்த வித்ததொந்தரவும் இல்லாமல். நானும் வீட்டுக்கார அம்மாவும் ரசித்தபடி படிக்கட்டில் உட்கார்ந்திருந்தோம். இனிய நினைவுகள்

  ReplyDelete
 4. வணக்கம் திலீப் நாரயணன் சார்.உங்களிடம் சொல்லாமல்,கொள்ளாமல் தஞ்சாவூர் வந்து விட்டேன்.அதற்கப்புறமாய் உங்களது கருத்துரையை பார்க்க நேர்ந்தது.நன்றி.

  ReplyDelete
 5. வணக்கம் சிவா சார்.நன்றி உங்களது கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

  ReplyDelete