29 Sept 2021

புத்தகம்,,,

 

எனது நவம்பர் கவிதைகள் அமேசான் வெளியீடாக,,,

https://www.amazon.in/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-ebook/



லிங்க்,,,

15 Sept 2021

விழிவழி


 


🍂🍂🍂🍂______||         ||||


நடமாட்டம் மிகுந்த சாலையோரமாய்

அமர்ந்திருக்கிறாள் அவள்.

அவளின் தோற்றமும் செய்கையும் 

மன நலம் குன்றியவள்

என முன்னறிவித்துச்செல்கிறதாய்!

சாலையில் விரைகிற பேருந்திற்கு 

கையசைக்கிறாள்.

இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்வது போல் பாவனை காட்டுகிறாள்.

மிதி வண்டிக்காரர்களை விரைந்து போகச்சொல்லி போக்குவரத்து காவலர் போல் சைகை செய்கிறாள்.

அமர்ந்த இடம் விட்டு நகராமல் 

இச்செய்கைகள் அனைத்தையும்

செய்தவள் 

தன்னைச்சுற்றிலுமாய் 

சுத்தம் செய்து விட்டு 

தன் கைகளை நீட்டி அதைச்சுற்றிலுமாய்

கோடிழுத்து வரைகிறாள்.

கால்களையும் அப்படியே செய்கிறாள்.

மீதமிருப்பது உடல் மட்டுமே,,,

வாகு பார்த்து  வரைந்த

கைக்கும் காலுக்குமாய் உடலைப்பொருத்தி 

நீட்டி படுத்தவள்

தன்னை சுற்றிலுமாய்

கோடு வரைகிறாள்.

கோடிழுத்து வரைந்ததை உற்றுப்பார்த்து திருப்தியுற்றவளாய்

எழுந்து தன் கையிலிருந்த சாக்பீஸால்

கலர் கொடுக்கிறாள்,

அது வரையிலும் போக்குவரத்து மட்டும் நடந்து கொண்டிருந்த

சாலையின் ஓரம் 

நிமிட நேரங்களின் சடுதியில்

மரங்களும்,செடிகளும் பறவைகளுமாய்

பூத்துக்காட்சிப்படுகிறதாய்!


                          ||||||       ||________🍂🍂🍂

29 Aug 2021

அரூபத்தில்,,,,

கையில் குழந்தையுடன்

வாசல் காத்து நின்றவள்
குழந்தைக்கு முத்தமிடுகிறாள்.
கன்னம் பட்ட தன் எச்சில்
துடைத்து உதடு கிள்ளுகிறாள்.
அள்ளியணைத்து தோள் சாய்க்கிறாள்.
கன்னம் பிடித்துக்கிள்ளுகிறாள்.
தூக்கிப்போட்டுப்பிடிக்கிறாள்.
முந்தானை விலக்கி பால் புகட்டுகிறாள்.
அழுகையமர்த்தி போக்குக்காட்டுகிறாள்.
நிலவைச்சொல்கிறாள்.
நட்சத்திரம் எண்ணுகிறாள்.
சூரியனைக்காட்டுகிறாள்.
காற்றின் போக்குக்கு பறந்த கூந்தலை
குழந்தைக்குக்காட்டி அள்ளி முடிகிறாள்.
சிரிக்கச்சொல்லி சுழியிடுகிறாள்.
அழுகையை அப்பால் விலக்கச்சொல்கிறாள்.
தலையில் பொய் கொம்பு வைத்து
"ஃபே" சொல்லுகிறாள்.
நாக்கு தொங்கவிட்டு
" ஆ" காட்டி சிரிக்கிறாள்.
காற்றடைத்த வாயை
கன்னம் குத்தி வெடிக்கச்செய்கிறாள்.
பசிபொறுக்கவும்
பொறுமை காக்கவுமாய்
பாடம் சொல்கிறாள்.
கைவீசி நடக்கிறாள்.
குழந்தை அதிரது ஓடுகிறாள்.
இப்படியாயும்
இன்னும் இன்னுமான
அவளது செய்கைகளை
அன்றாடம் கடக்கிற
தெரு முனை வீட்டு வாயிலின்
இரும்பு கேட்டை கடக்கிற கணங்கள் தோறுமாய்
பார்த்து விட முடிகிறது.

||||| ||__________🏡🏡🏡🏡

28 Mar 2021

ஒற்றை,,,,,

 ___________::::::::::⛲⛲⛲⛲



கோவிலின் முன் வாசலோரமாய்

காற்றாடிகளும்,பலூன்களும் விற்றவன் நிலை கொண்டிருக்கிறான்.

பலூன்களுக்கு காற்றடிக்கிறான்.

பீப்பிகளை ஊதிக்காண்பிக்கிறான்.

வண்ண வண்ணமான அகன்ற காற்றாடிகளை சுழல விடுகிறான்.

கார்களை தரைபாவி ஓடவிட்டும்,

விமானங்களை ஆகாயம் நோக்கி பறக்கவிட்டும்,,,

அவைகளின் மீது சோப்புக்குமிழிகளின் முட்டைகளை நிற்க வைத்தும்

கொண்டிருந்தவனை கடக்கையில் எதிர்பட்ட சிறுமி

பலூன் வாங்கித்தருமாறு 

தாயிடம் பணிக்க,,, 

பலூனோடு நின்று போகாது 

மகளது கேட்பின் குரல்

என்றுணர்ந்த தாய் 

முதலில் சாமி வழிபாடு,

பின்தான் எல்லாம் எனவும்,

கோவிலுக்குள் சென்று திரும்பி வருகையில் பலூன்காரன் அங்கிருக்கமாட்டான் என்கிற நம்பிக்கையுடனும்,,,!


                                  __________|||❄❄❄❄

பகிர்பொழுதாய்,,,

 ___________||||🍂🍂🍂🍂



இலையுதிர்ந்த மர நிழலில் நிற்கிறான்.

சிறிது கழித்து தேநீர் கடையோரமாய்!

பின் பிராய்லர் கடையருகிலும்,

பூக்கடையோரமாயும் நிலைகொள்கிறான்.

வழக்கம் போல் தனது இயக்கத்தை அணிந்து கொண்ட 

சாலையோர கடைவாசிகளும்,

கூடவே சாலைவாசிகளில் சிலரும் அவனை அறிந்தவர்களாகவே,,,!

அவனின் தோற்றம் கண்டும்,

அவனை நனைத்த கூச்சம் கண்டுமாய்

யாரும் அவனை தள்ளிப்போ என்றோ ஒதுக்கி வைத்தோ பார்த்து விடவில்லை.

அவனுக்கு வணக்கம் சொல்கிறார்கள்.

அவனைப்பார்த்து சிரிக்கிறார்கள்.

நலம் விசாரிக்கிறார்கள்.

இன்னும் சிலரானால் கைப்பிடித்துக்குலுக்குகிறார்கள்.

நோயுற்றவனின் இரவைப்போலவும்,

வேலையற்றவனின் பகலைப்போலவுமான நேரத்தின்

நீளத்தை ஒப்புக்கொண்டவனாய்

தெரு முனையிலிருந்த பெட்டிக்கடை முன் நின்று தேவையானது கேட்கிறான்.

இவனை ஏறிட்ட கடைக்காரர் 

முகமன் கூறி சிரித்தவறாய்

அவன் கேட்டதைத்தருகிறார்.

கவனமாய் பொருளுக்கான 

விலை சொல்லிவிட்டு 

இப்பொழுது இல்லையானால் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்கிறார்.

கடைக்காரரின் சொல்லை ஏற்க மறுத்தவனாய் பையின் அடியாளத்தில் துழாவி பணத்தைக்கொடுக்கிறான்.

ஆயினும் கடைக்கு வருவதற்கு முன்னாயும் கடை விட்டகழும் பொழுதும்

அவன் அணிந்தது கொண்ட கூச்சம் அவனை விட்டகலாமலேயே,,,,!


                              ___________|||👥👥👥👥

காட்சிப்புலம்,,,,

 ::                 ::::::::::::::::::::🌴🌴🌴🌴



பேருந்து விட்டிறங்கியதும் எப்பொழுதும் தேநீர் கடை நோக்கி விரைகின்ற கால்கள் 

இன்று மாலை அது மறுத்து 

வீடு நோக்கி நடை கொள்வதாக!

மாலை கிறங்கி இரவு தொடப்போகிற நேரத்தில்

சரியாக  எரியாத தெருவிளக்குகள்

சாலையை தெளிவிடாத நிலையில் சாலையோரமிருந்த உணவகத்தின் முன் நின்று 

கைபேசியை அழுத்துகிறேன்.

வேகம் கொண்ட எண்கள் எதிர்முனையை சடுதியில் எட்ட

அவள் பிரியயித்துச்சொன்ன 

உணவை வாங்கும் பொழுதுதான் கவனிக்கிறேன்.

சின்னதாய் இருந்த அடுப்பின்

மீதிருந்த தோசைக்கல்லில் 

படர்ந்திருந்த தோசையை

சற்றே எண்ணெய் பதனிட்டு

எடுத்த லாவகமும் நேர்த்தியும் 

தொழிற்சாலையின்

இயங்கு நேர்த்தியாய் சட்டென பட்டுப்படர்கிறதாய் அக்கணம்

காணக்கிடைக்கிறதாய்,,,!


                                  __________||||🌿🌿🌿🌿

நுண்மி,,,

 ______________||||🍂🍂🍂🍂



தீ நுண்மி காலத்தின் இரண்டாவது அலை தீவிரப்பட்டிருக்கிறது என

அறிவுறுத்த வந்தவர்கள் அலுவலகங்களில் நுழைந்தார்கள்.

அங்கிருந்த ஊழியர்களையும்,

அதிகாரிக்ளையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியும்,கவனத்தின்இருப்பு  

பன் மடங்காவது அவசியம் எனவுமாய் வலியுறுத்தியும்,சற்றே 

கூர்மை காட்டியுமாய் சென்றார்கள். சாலையோரக்கடைகளிலும்,

பேருந்து நிலையத்திலுமாய்

இன்னும்,இன்னுமான இடங்களிலும்

தென்பட்ட முதியவர்கள்,பெண்கள் குழந்தைகள் மற்றும் இவர்களுடன் கைகோர்க்கும்,ஊனமுற்றோர் ஆதரவற்றோர்

சாலையோர வாசிகள் என அனைவரிடமும் அபதாரமும்

கண்டிப்புமாய் சென்றவர்கள்

பேருந்தேறுகையில்

யாசித்து எதிர் பட்ட திருநங்கைக்கு 

ரூபாய் பத்து கொடுத்து விட்டு அவளிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.


                              __________||||🍂🍂🍂🍂