28 Sep 2011

பஞ்சாரம்,,,,,,,,,


                               
          எத்தனை சொல்லியும் எந்த மாற்றமுமில்லை.உடும்பை ஞாபகப்படுத்திய அவளது பிடிவாதம்.”
       தனியாக போக வேண்டுமாம்.”நான்,தம்பி,அம்மா,நாட்டாமை மாமா எல்லோரது பேச்சையும் கடலில் கரைத்த பெருங்காயமாக்கி விட்டாள்.காது வளர்த்த கிழவி,பிடிவாதத்தையும் சேர்த்து வளர்த்து வைத்திருந்தாள்.
     நாற்பதை தாண்டி முப்பது வருடங்கள் ஆகிறது.அம்மாவை பெற்றவள்,நல்ல திடசாலி.மனதளவில்உள்ளதிடம் இப்பொழுது எங்களை போட்டுப்பார்க்கிறது.
   ”பரஸ்பரம் மனிதர்களை மனிதர்கள் பரிட்சிப்பது மனித நாகரீகம் வளர்ந்த காலம் தொட்டே உண்டு போலும்.”அதற்காக இப்படியா?இரண்டாவது நாளாய் இன்றும் சொல்லிப்பார்க்கிறோம்.............. ம்ஹூம்,,,,நார்உறிக்கமுடியவில்லை.
சொற்களாலும் பேச்சுக்களாலும் உடைக்க முடியவில்லை.இறுகி கெட்டிதட்டி வைரம் பாய்ந்த கல் மரம் போல நிற்கிறாள்.
    இப்பொழுது மட்டும் என இல்லை ,தாத்தாவை கைபிடித்த சிறிது நாட்களிலிருந்தே அப்படி ஆகிப்போனாள்.கல்யாணமான நான்கைந்து வருடங்களிலேயே ஏதோ பெயர் தெரியாத நோயில் படுத்தவர்தானாம்தாத்தா.எழுந்திருக்கையில் பார்வை இல்லை.
    நன்றாக இருந்தவரையில் அவரும் பாட்டியை ராசாத்தியாய்த்தான் வைத்துபார்த்துள்ளார்.கைக்கும்,வாய்க்கும் காணாத பற்றாக்குறை வாழ்க்கையிலும் பாட்டியை மனம் நோக விட்டதில்லையாம்.
    கூலிக்காரன்பொண்டாட்டியாகஇருந்தபோதும்கூடசோறு,தண்ணி,சேலை,
துணிமணி,நல்லது,பொல்லதுஎனபாட்டிக்குஎதிலும்குறை வைத்ததில்லையாம்.அவரிடம் பிடித்துப்போன அந்த குணம்தான் பார்வைபோன போதுகூட அவரை மணம் நோகாமல் பார்த்துக்கொள்ளச் செய்திருக்கிறது.
    பார்வை போன கணவனோடும்,இரண்டு பிள்ளைகளோடும்,வாழ்க்கை அவளை நிராதரவாய் விட்ட போதும் கூட தோற்று ஒதுங்கிவிடவில்லை. எதிர்த்து நின்று சமாளித்து போராடி ஜெயித்தாள்.உழைப்பின் நுனியைப்பற்றிக்கொண்டு வாழ்க்கையின் மேலேறி வந்த வைராக்கியக்காரி உடம்பிலும்,மனசிலுமாய் ஏற்பட்ட சிராய்ப்புகளுடன் இப்போது கரையோர ஆலமரமாய் நிற்கிறாள்.
     மண்பிளந்து,துளிர்த்து,வளர்ந்து,கிளைபரப்பி பரந்து நிற்கும் மரத்தைப்பற்றி  விழுதுளிடம் சொன்னால்?,,,,,,,,,,யாருக்காவது வேறு யோசனை தெரிந்தால் சொல்லுங்கள்எனக்கூடகேட்டுப்பார்த்தேன்.யாரும்சொல்கிற வழியைக்காணோம்.
     “வேலியிலபோறதஎடுத்து..........எனஒதுங்கிக்கொண்டார்கள்.இது கிராமம்.
இல்லையானால் இந்நேரம் பேப்பரில் விளம்பரம் தந்து கூட கேட்டிருக்கலாம் யோசனைகளை.
     ஆனால் பாட்டி தனது இரண்டு பெண் பிள்லைகளை கல்யாணம் செய்து கொடுத்தபோது யாரிடமும் யோசனை கேட்கவில்லை.
     வெளியில் சொந்த பந்தங்களைக்கூட கலந்து கொள்ளவில்லையாம்.தாத்தாவின் பார்வைபோனபோது ஒற்றையாய் நின்று தேம்பியவளை தோள் தட்டி தேற்றக்கூட ஆள் இல்லை என்கிற கோபமும் வைரக்கியமும்/
    இரண்டு பெண்களையும் உள்ளூரில்தான் திருமணம் செய்து கொடுத்தாள்.அண்ணன் தம்பிக்கு அக்காள் தங்கை.ஒரே நாளில் கல்யாணம்.கோவிலில் கல்யாணம்,சாவடியில் சாப்பாடு.
    கல்யாணத்தில் சாப்பிட்டவர்களை விட மொய் எழுதியவர்கள்தான் அதிகமாம்.ஊரே ஆச்சரியப்பட்டுப்போனதாம்.”ஒடம்பொறப்புகளுக்கு,ஒடம்பொறப்பாப்பாத்துமுடிச்சி வச்சுட்ட.ஓன்நல்லகொணத்துக்குதான்இந்தமாதிரிமருமக்க மாருக அமைஞ்சிருக்காங்க நல்ல இருக்கட்டும் தாயி”.
    எல்லோருடைய வாழ்த்துக்கள்படி இரு மகள்களும் நன்றாக வாழ்ந்தார்கள்.பாட்டியை தன்னுடன் வந்து இருக்கும் படி இருமகள்களிடமிருந்து வற்புறுத்துதல்கள் அவ்வப்போது/
   “இல்ல தாயி இப்பயே ஒக்காந்து தின்னா ஒடம்புல ஒட்டாது.”  நாசுக்காக மறுத்து விடுவாள்.
   அப்போதெல்லாம் பெற்றோருக்கு பிள்ளையாக வளர்ந்ததை விட பாட்டிக்கு பேரனாய்த்தான் வளர்ந்திருக்கிறேன்.அந்த அபிமானமும்,மரியாதையும் இப்போது நினைத்தவைகளைக் கூட பேச விடாமல் செய்கிறது. அப்போதெல்லாம் பாட்டியின்
தினங்கள்எனக்கு அத்துபடி.”அப்ப்யெல்லாம் கூலிக்கு காயி புடுங்கப்போவம்,காலையில வெள்ளன எந்திருச்சி கஞ்சி வாளியோட போறவதான்,மசங்கவுதான் வீடு வருவேன்.ஒங்க தாத்தாவுக்கு பார்வதான் இல்லையே ஒழிய புத்திக்கூர்ம கூடுதலு.வீட்டுல புள்ளைகள குளுப்பாட்டுரதுலயிருந்து,கஞ்சிகாச்சுற வரைக்கும் அவுங்கதான்”.
    “மசமசன்னுஇருட்டுலபோறவுங்க,பொல்லுன்னுவிடியறதுக்குள்ள காயப்பெறக்கி
ஏறுவெயிலுக்குமுன்னாலடவுன்லகொண்ணாந்துசேக்கணும்.இப்பத்தான பஸ்சு,
ட்ராக்டருங்க,அப்பயெல்லாம்தலைச்சொமதான்.கருவக்காட்டுகுறுக்குப்பாதையில
வுழுந்து போவம்.ஓடை,ஒடப்பு,பள்ளம்,மேடுன்னு ஆறு கல்லு தொலவும் ஒரே ஓட்டமும் நடையும்தான்.என்னோடநாலஞ்ச்சுபேரு,அவுகளுக்குள்ள போட்டி”.
   “தொங்கு,தொங்குன்னு ஓடுவம்.வண்டியில பூட்டுன மாடுமாதிரி.ஒண்ணுக்கு ரெண்டுக்கெல்லாம்கூடரெண்டாம்பட்சமாத்தான்ஆகிப்போகும்.நடந்த நடைக்கும்,
செமந்த செமைக்கும் கூலி கட்டுபடியாகதுன்னு சொல்லி மொதலாளி மாருககிட்ட துட்டவாங்குறதுக்குள்ள தொண்டத்தண்ணி வத்திப்போகும்.”
     “கூலிக்காரன் பொழப்பு என்னைக்கும் தொன்னாந்த பொழப்புதான”.இப்பத்தான ஊங்குறதுக்குள்ளடவுன்லபோயிநிக்குறீங்க.எங்ககாலத்துலயெல்லாம் டவுனுக்குப்போறது பெரிய சங்கதி”.
    அதுலயும் நாங்க நித்தம் டவுனுக்குப்போயி வருவமா?காயி பெறக்குற யெடத்துல,ஊருக்குள்ள,க்கடகண்ணியில்பாதிநாடவுனப்பத்திதா பேச்சு.”அவுங்களுக்கு என்ன தெரியும் கண்ணுல சேனை கட்டுன எங்க பாடு,”இதுக்காவே எதையாவது சாக்கு வச்சி வீட்டு வாசல்ல வந்து காத்துக்கெடப்பாங்கன்னா பாரேன்.
      இன்னும் நிறைய சொல்வாள்.”ஒழப்புல நெறைய சந்தோசம் இருக்குடா,” “என்னைய கேட்ட காடு கரைகள்ல வேலை செய்யும் போதே உசிரு போயிரனும்டா.”        
    அப்படியெல்லாம் ஓடியாடி உழைத்தவள் தாத்தா இறந்த போது நாள் கணக்கில்
வீட்டுக்குள்ளேயேமுடங்கிப்போனாளாம்.யார்என்னசொல்லியும் கேட்கவில்லையாம்.
தாத்தாவின்நினைப்பிலேயேஊன்உருகிக்கிடந்தவளின்முன்வாடிக்களைத்துஉருக்குலைந்துபோனபிள்ளைகளின்முகம்தெரிந்தபோதுதான் சமாதானமானாளாம்.
    உழைப்பையே மூலதனமாய்க்கொண்டு வாழ்க்கை விளக்கெரிய தன்னையே திரியாயும்,எண்ணையாயும் எரியவிட்டவள்.கன்னத்து தசைகெல்லாம் ஒட்டிப்போய் லேசான நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
     முன்னே அவள் வயசு பெண்களெல்லாம் சொல்வார்களாம்.”என்ன மாயம்டியம்மா இது,செஞ்சு வச்ச செல கணக்க அப்பிடியே இருக்கயே,தங்கபஸ்பம் எதுவும் சாப்புடுறயா”?
     அவள்தான் இன்று உருக்குலைந்து கிடக்கிறாள்.ஊர் தூங்கி விட்ட இரவின் அமைதி.லேசாய் திறந்திருந்த கதவின் வழியாக பனிப்புகையாய் உள்ளே நுழைந்த குளிர் காற்று உடம்பைக்குத்த பேசிக்கொண்டிருந்தோம்.
    நான் சொல்ல,தம்பி பேச,அம்மா மெளனமாய் இருக்க நாட்டாமை மாமா எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்க.........எதற்கும் அசைந்து கொடுக்கிற மாதிரி இல்லை.   எல்லோருடைய பார்வையும் பாட்டியை நோக்கியே/
    அவள்சொல்லப்போகும்காரணப்பேச்சைஎதிர்பார்த்தேன்.மெளனமாய்நீண்ட
கணங்களில் ஏதேதோ............./
    பாட்டியின் பிடிவாதம்,அம்மாவின் நிலை,தம்பியின் அவசரம்,நாட்டாமை மாமாவினது பேச்சுக்கள்,ஊரில் உள்ள மனைவி மக்களது நினைப்பு,ஆபீஸ் எல்லாம் கண்முன்னே விரிந்து சுருங்கியது.கூடவே பக்கத்து வீட்டு பாட்டி சொன்னதும்........../
    “தம்பி அவ ஒக்காந்துக்கிட்டுஇருக்கா,நீங்க ஓடிக்கிட்டு இருக்கீங்க,ஏணி கூட இல்ல,பாலம் கட்னாலும் கதை ஆகாது.அந்த அளவு அவ பழுத்து நிக்குறா,நீங்க பிஞ்சுக/,அது கழுத அது கழுத எங்க கூடயே வருசம் பூராம் காட்டுல கெடந்து ஒழலும்,சமயத்துல எங்களாலயே அதும் புத்திய புரிஞ்சிக்க முடியாது.”
     “ஆதியிலயிருந்தே அதுக்குன்னு சில பழக்க வழக்கங்க,எங்க கூட காடு கரைகள்ல திரியிற அந்த நாள்கள்லயும் கூட வாரா வாரம் சுத்தமா தல முழுகி,வீடு வாசல் கழுவி விட்டு சுத்தபத்தமா இருப்பா/”
     “செவ்வா,வெள்ளிதவறாமஊதுவத்தியும்,சாம்புராணிபொகையுமாவீடு மணக்கும்.
நாங்க கூட கேலி பேசி சிரிப்போம்,ஐயமாரு வீட்டுல பொறக்க வேண்டியவ தப்பி இங்க வந்து பொறந்துட்டயேன்னு.சிரிச்சுக்குவா,அவ தலைமுழுகுற அன்னைக்கு சாத்துன கதவ தெறக்க மாட்டா,மறுநா பூராம் காடுகள்ல வேலைத்தளங்கல இதுதான் பேச்சு.”என்னடி ஓன்புருசன் சிக்கெடுக்கும் போது தலையில காக்காப்பொண்ண வச்சு தேச்சு விட்டுட்டாரா?தலையில மின் வெட்டுது என்போம்.சொன்னதுதான் தாம்சம் தலைய அள்ளி முடிஞ்சு வண்டு கட்டிக்கிருவா(துணியை சுற்றிக் கட்டிகொள்ளுதல்)”
    “இப்ப என்னய்யா நீங்க பாட்டிய பாக்குறீங்க.அவ ஒரு முனி மாதிரி வாழ்ந்தாயா,அவ/ஒங்கதாத்தாவுக்குபார்வபோனப்பயெல்லாம்அவ செத்துப்
போவான்னுதான் நெனைச்சோம் நாங்கெல்லாம்.நோக்காட்டுக்கு தப்புன பயிர் மாதிரி ரோசத்தோட உசும்பி பொழச்சுக்காட்டுனா.ஊருசனம் அவள பேசாத பேச்சு இல்ல,அப்பிடி பேசுச்சி,பேச்சு மட்டுமா..........?/”
     “எல்லாத்துக்கும் வளைஞ்சு,நெளிஞ்சு கரட்டுக்காடு வேலாமரம் மாதிரி தாங்கி எந்திரிச்சு நின்னா,இப்ப ஒங்களப்பாத்து கொஞ்சம் அலுப்பு ஆத்திக்கிட்டு கெடக்கா/”
     “அவ இன்னைக்கும் அடுப்பாங்காரையில வேலை செஞ்சான்னா பாத்துக்கிட்டே இருக்கலாம்.அடுப்பு வேலை செய்யும் போது ஒரு துண்டாவது வேணும் அவளுக்கு ஒடம்பச்சுத்திகட்டிக்கிறதுக்கு.அவ்வளவு நறுவிசு,சாப்பாட்ட பொங்குன கையோட வீட்டுக்கு வெளியில காக்காயிக்கு கொஞ்சம் சோறு வைக்காம ஒங்க தாத்தாவுக்குக்கூட சோறு எடுத்து வச்சதில்லை அவ/”
     “ஒங்க தாத்தாகூட கேலியா சொல்லுவாரு. “ஏம்மா நம்ம பொழப்பே தொன்னாந்த பொழப்பு.இதுல அதுகளுக்கு வேறயாக்கும்?/”
     “தொன்னாந்த சீவங்களுக்கு தொன்னாந்தவுகதான ஆதரவு”அப்பிடீன்னுவா ஒங்க பாட்டி.
   “ஒங்க தாத்தா யெறப்புக்குப்பின்னாடி அந்த மனுசர நெனைச்சு அந்த மனுசர நெனைச்சு அப்பிடி உருகிபோனா,மாத்தைக்கி ஒரு நா ஒங்க தாத்தாவ  நெனைச்சு வெரதம் இருக்குறதோட மட்டுமில்லாம,அக்கம்,பக்கத்து வீட்டு புள்ளைங்க ரெண்டு பேருக்காவது அவ வீட்டுல வச்சி நெல்லுச்சோறு  போடுவா.அப்பேர்பட்ட சீவன் அது.இன்னமும் அது மனசு பூராம் தாத்தாதாம்பா/
    பக்கத்துவீட்டு பாட்டி பேசிய பேச்சில் சின்னதாய் ஒரு பொறிதட்டல்.
   “அம்மா அந்த மந்த  வீட்ட சுத்தம் பண்ணிக்குடுத்துரு,பாட்டி கொஞ்சநாளு அங்க போயி யெளப்பாறிட்டு வரட்டும்”
    நீண்ட மெளனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நானும் எல்லோருமாய் எழுந்தோம்.
   பாட்டியின் முகத்தில் சந்தோச ரேகை/ 

2 comments:

 1. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete
 2. வணக்கம் செழியன் சார்,நன்றி தங்களது வருகைகும்,கருத்துரைக்கும்/கண்டிப்பாக தங்களது வலைப்பூவைப்பார்க்கிறேன்,
  நன்றி, வணக்கம்,

  ReplyDelete