29 Jan 2012

ஹோமம்,,,,,,,,


                              

        22  ஜன்னல்களும் 15 மர அலமாரிகளும் கொண்ட வீடாய் அது.
      4பெரிய அறைகளையும்,இரண்டு சிறிய அறைகளையும் கொண்டு நின்ற வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலராய்.
     ஏன் அத்தனை அறைகள்,ஏன் அத்தனை கலர்கள் என்பது இன்று வரை மனம் புடிபடாத புதிராகவே/
    கூடவே அந்த  ஊரிலேயே பெரியதாக கட்டப்பட்ட அந்த வீட்டில் ஏன் இத்தனை ஜன்னல்களும்,மரஅலமாரிகளும்என்பதும்தெரியாமேலேயே/
    அடிக்கப்பட்ட கலர்களிலும்,கட்டி எழுப்பட்ட அறைகளிலும் பணக்காரத்தனம் கை மீறி மிளிர்ந்து தெரிந்ததாக/
    ரோட்டின் மீதாக அமைந்திருந்த அந்த வீட்டினுள்ளுருந்து ஜன்னல் வழியாக பார்த்தால் கண்மாய்க்கரையும் பக்கத்துதெருவும்,அதில் அடுக்கப்பட்டிருக்கிற வீடுகளுமாய்/
    உடன்மனிதர்களும்,அவர்கள்துவளர்ப்புப்பிராணிக்களும்,சடங்கு சம்பிரதாயங்களும்,
வாழ்வின் மீதிருந்த பிடிப்புமாக/
   அந்த வீடு அங்கு நிலை கொண்டு வேர் விட்டதற்கான வரலாறு சரியாக தெரியாவிட்டாலும் கூட 22ம் 15ம் கொண்ட வீடு 50 வருடங்களைக்கொண்ட வரலாறை எழுதிக்கொண்டு  அமர்ந்திருக்கிறதாய் சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்களும்,அதன் வரலாறு தெரிந்தவர்களும்.
   அந்த ஊருக்கு அவ்வளவு பெரிய வீடு தேவையா என்கிற கேள்வி அனைவரினது மனதிலும் நிலை கொண்டிருந்த போது எங்கோ தொலை தூரத்தில் அந்தமானில் வேலைபார்த்து சம்பாதித்த  பணத்தை கொண்டு ஆசை ஆசையாய் வீடு கட்டினாராம் வீட்டின் உரிமையாளர்.
   பூவும் ,பிஞ்சும் ,காயும்,கனியுமாக பூத்து குலுங்கி நின்ற பருத்திக்காட்டை வீட்டின் உரிமையாளர் வாங்கிய போது அங்கு அப்படி ஒரு பிரமாண்டம் வீடாக காட்சி தரும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
   பூவையும், பிஞ்சையும் வேர்விட்டிருந்த பயிரையும் மகசூலாய் எடுத்து முடித்த கையுடன்நிலத்தைசெம்மைபடுத்திவிட்டுவீட்டு வேலையை ஆரம்பித்திருக்கிறார்.
    கரிசல் மண்ணின் மணத்தையும்,பருத்திக்காட்டின் விளைச்சளையும் அதில் சிந்தியவியர்வையின் ஈரத்தையும்,அந்த மண்ணில் பட்டு உழன்ற மனிதக்கரங்களின் உழைப்பையும்,அவர்களதுகால்தடங்களையும்,ஆடுமாடுகள்நடமாடிஉறவு கொண்டாடிய
இடங்களையும்,அதுசிந்திய ஏக்கப்பெருமூச்சுகளையும்,அடையாளத்தையும் அழித்து
ஒழித்துவிட்டு அந்த மண் பரப்பின் மீது அவர் வேலையை கால்பாவி ஆரம்பித்தபோது விளைச்சல் பூமியின் மேனி காயப்படுத்தப்பட்டு அதன் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வீட்டு வேலையை நடவு செய்ததாய் இருந்தது .
  ஆசையாசையாய்பார்த்து,பார்த்துஇழைத்து,இழைத்துமிகவும் நேசித்து,மனைவியிடமும்,
உறவுகளிடமும் அவருக்கு நெருக்கமான நட்புகளிடமும்,தோழமைகளிடமும் கலந்து ஆலோசித்துக்கட்டியவீடுஅது என்றார்கள்.
வெறும் செங்கலும், சிமிண்டும், கருப்பட்டிப்பால் கலந்த சுண்ணாம்பும் மட்டும் வைத்து கட்டியதில்லைஅந்த வீடு.
    எடுத்து வைக்கிற ஒவ்வொரு செங்கலிலும், குழைத்துப்பூசுகிற ஒவ்வொரு  கரண்டி சிமிண்டிலும்,சுண்ணாம்பிலும் பிற இடு பொருட்களிலுமாய் அவரது உணர்வு கலந்தே இருந்திருக்கிறது.
    மரங்கள் அனைத்தும் பர்மா தேக்கு என்றார்கள்.ஜன்னல்,கதவு,நிலை,,,,,,,,என அதிகமான மரவேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அனைத்துப்பொருட்களையும் அந்த தேக்கு மரங்களே அலங்கரித்திருந்தது.பாத்ரூம் கதவு உட்பட/
   அந்த நேரத்தில் வீட்டிற்குள்ளாக பாத்ரூம்,அதற்குள்ளாக அடிகுழாய்,அதை ஒட்டி கழிப்பிடம் வசதி என்பது கிராமத்தில் மிகவும் ஆச்சரியம்.அதுவும் அந்த கிராமத்தில் ரொம்பவுமே ஆச்சரியம்/
   அதுமட்டுமில்லை.அப்போதே தரையில் பூக்கல்,சுவரில் டைல்ஸ்,அடுப்படியில் மேடை,என்கிற வசதிகளுடனும்,வேலைப்பாடுகளுடனும் இழைந்திருந்த வீடு அது ஒன்றுதான்எனபேசிக்கொண்டார்கள்.
    அப்படியானஊர்க்காரர்களின்ஆச்சரியத்தையும்,உரிமையாளாரின் பிரியத்தையும்,
நேசிப்பையும்,ப்ரேமையையும்வாங்கிஉள்ளடக்கிக்கொண்டுநாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்த வீட்டை வேரூன்றச்செய்ய அவர்களுக்கு ஆன காலம்3 வருடங்களிலிருந்து4 வருடங்கள்வரைஆகியிருக்கலாம் என்றார்கள்.
    அப்போதெல்லாம்ஏதுஇவ்வளவுதொழில்நுட்ப வசதிகளும்,முன்னேற்றங்களும்?
    இப்பொழுது பணமிருந்தால் போதும் பெரிய பங்களா கூட மூன்று மாதங்களில் உயிர் பெற்று எழுந்து நின்று விடுகிறது.
   அப்போதெல்லாம் அப்படியில்லை.கையில் காசிருந்த போதும் கூட பொருள் கொண்டு வந்து சேர்க்க,சேர்த்த பொருளை பாதுகாக்க,பாதுகாத்ததை பத்திரமாக எடுத்துப்புழங்க,,,,,என தனித்தனியாய் ஆகும் வேலைகள்,நாட்களின் கணக்கை தன்னில் கூட்டி வரவு வைப்பதாக ஆகிப்போகும்.
   மணலும்,செங்கலும் கொண்டு வந்து சேர்க்க லாரி கிடையாது.மரச்சாமான்களை தங்கள் இடத்திற்கு இட்டு வர மினி வேன்வசதி கிடையாது.
   மரம் அறுக்க அறுவை மில் கிடையாது.இயந்திரங்களற்ற தூய மனித உழைப்பு மட்டுமே கோலாச்சிய காலமாய் அது.கைகளிலும்,கால்களிலும்,உடலிலுமாய் இருந்து வந்த ஈரமான தூய மனிதஉழைப்பைக்கொண்டதாய் அது இருந்தது.
    அப்படியான பொழுதுகளில் மனித கரங்களுடனும்,மனங்களுடனும் சேர்ந்து இழைந்து அவர்களை உள்வாங்கி, வெளிகொணர்ந்து வேலை செய்யவைத்து நிமிர்கையில் எழுகிறகதைதனிக்கதையாக/
   முன்புற வராண்டா,ஹால் பெரியதும்,சிறியதுமான அத்தனை அறைகள் என  நேசித்து நேசித்துக்கட்டிய அனைத்தையும் ஒன்று சேர்த்து கலர் பூசி இணைத்து முழு வீடாய் பார்க்கையில் ,,,,,,,,வருகிற நெஞ்சு நிமிர்வு வீட்டின் உரிமையாளருக்கு கிடைத்தது எனவும் சொன்னார்கள்.
   அப்படியான் நெஞ்சு நிமிர்வுக்கு ஆளான அந்த வீட்டைத்தான் நானும் எனது மனைவியுமாக பார்க்கச்சென்றிருந்தோம்.
   வீடு பார்க்க அழகாக இருந்தது.சுவரில் ஒரு சின்ன வெடிப்பு கூட காணப்படவில்லை.தரையில் சின்ன பிளவோ, விரிசலோ கிடையாது.
   பூசியிருந்த கலரின் மெருகு இன்னும் வெளுத்துவிடாமல்.தரையில் பதித்திருந்த பூக்கல் இன்னும் தன்நிலை இழந்து விடாமல்/
   சுவரின் சில இடங்களில் பதித்திருந்த டைல்ஸ்கள் சுத்தமாகவும் பார்க்க அழகானதாகவும்/
    வேலைப்பாடுகளுடன் அமர்ந்திருந்த ஜன்னல்களும்,நிலைகளும்,மர அலமாரிகளும்      கதவுகளும் இன்னும் மெருகுமாறாமல்/
    வீட்டில் சுவர்களை அலங்கரித்த வண்ண மின் விளக்குகளை சுற்றிலும் பூத்துத்தெரிந்த அழகான கண்ணாடி குழல்கள்/
    தன்னின் ஒவ்வொரு அங்குலத்திலும் அழகு பூசிச்சிரித்த  வீட்டின் ஒவ்வொரு அறையாக பார்த்து வந்து கொண்டிருதோம்,
     குடியிருந்தால் இந்த மாதியான ஒரு வீட்டில்தான் குடியிருக்க வேண்டும் என்கிற முடிவுடன்/
    வராண்டா,ஹால்,ரூம்,இன்னுமொருரூம்,இன்னுமொரு ரூம்,,,,,படுக்கையறை
அடுப்படி,பாத்ரூம்,கழிவறை,மொட்டைமாடி  என இத்தியாதி இத்தியாதியாய் பார்த்து முடித்து வரும் போது பூட்டப்ப்படிருந்த பெரியதான ஒரு அறையை காண்பித்து அதை திறந்து காண்பிக்குமாறு பணிக்கிறேன்.
   வேண்டாம் என்கிறார் வீட்டை காண்பிக்க வந்தவர்.
   ஏன் எனக் கேட்கிறேன்.பெரியதாக ஒன்றுமில்லை.அந்த ரூமைத்திறக்காமலேயே நீங்கள் குடியிருக்கலாம்  என்கிறார்.
    இருந்தாலும் குடியிருக்கப்போகிற எங்களுக்கு அறையை திறந்து காண்பிப்பதுதான் முறை என்கிற எனது சொல்லை மனதில் வாங்கியவராக அறையை திறந்து காண்பிக்கிறார்.
   திறந்த அறை சுத்தமாக இருந்தது. அறையின் ஓரமாய் இருந்த அலமாரியில் பத்தி ஏற்றப்பட்டு சாமிகும்பிட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டது.அதன் முன்பாக தரையில் அகன்ற பெரிய சில்வர் தட்டில் சாப்பாடும் அதில் ஊற்றியிருந்த குழம்பும்,காய்கறிகளுமாக/
   தட்டின் அருகில் உருண்டையான பித்தளை செம்பை நிறைத்திருந்த தண்ணீர்.அதன்அருகில்சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த மரப்பலகை.உட்காருவதற்காய் இருக்கலாம்.
   வீட்டு உரிமையாளரின் மருமகள் பத்து வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாளாம்.குடும்பத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்திற்காக/
  அந்தமருமகளை வீட்டின் உரிமையாளருக்குமிகவும் பிடிக்குமாம், தான்தோன்றியாகத்
திரிந்த தனது மகனை சிறிது,சிறிதாக செதுக்கி வடிவமைத்து நான்கு பேர் மதிக்கிற மனிதனாக மாற்றியிருக்கிறாள்.
   அதில் அவருக்கு நெஞ்சு நிமிர்ந்த பெருமை.தலை நிமிர்ந்த கர்வம்.கிட்டத்தட்ட தூர்ந்து போவான் என ஊர்க்காரர்களாலும்,கூடசேர்ந்திருந்த சேக்காளிகளாலும் கணிக்கப்பட்டிருந்த அவன் இப்படி ஆளாகி நிற்பான் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லைதான்.
   அப்படியானஎதிர்பார்ப்பின்மையும்,மனம்பொருமிய,சேக்காளிகளின்திருவிளையாடல்கள்
திரும்பவுமாய் அவனை தப்பான திசைக்கு இழுக்க முயற்சிக்க,அதை மனைவி மனம் பொருக்காமல் தடுக்க,,,,,,இழுப்புக்கும்,தடுப்புக்குமாய் நடந்த இழுபறியில் வீட்டு உரிமையாளரது மருமகளின் உயிர் பறிபோயிருக்கிறது.
   அவர் திறந்து காட்டிய அறை மற்றஅறைகளை விடவும் மிகவும் சுத்தமாமாகவும்,ஆச்சாரமாயும்/
   லேசாக மனது யோசிக்க எனது மனைவியை ஏறிடுகிறேன்.அவள் என்னை ஏறிடுகிறாள்,நேருக்கு நேராக நடந்த மன ஏறிடலின் வெளிப்பாடாக வீட்டைக்காண்பிக்க வந்தவரை கேட்கிறேன். “இவ்வளவு அலங்கரிக்கப்பட்டிருக்கிற வீட்டில் ஏன் இந்த தனித்து?
   இறந்துபோன தனது மருமகள் இன்னும் இந்த அறையில் வசிப்பதாகவும்,திரும்பவும் ஊதாரியாகப்போய்விட்ட மகனை செதுக்கி மீட்டுவாள் என்கிற நம்பிக்கையுடனும் இந்த அறையை அவளது முழு அடையாளத்துடனும்,நினைவுடனும் வீட்டுக்காரர் இன்னும் பாதுகாத்துவைத்திருப்பதாகச்சொல்கிறார்.
    அப்படியானபாதுகாப்பையும்,அடையாளத்தையும்,நினைவுகளையும்அழித்தொழிலிக்க முற்படாதவனாக வீடு வேண்டாம் என வெளியே வருகிறோம் நானும் எனது மனைவியுமாக/
    22 ஜன்னல்களையும்,15 மரஅலமாரிகளையும் கொண்ட வீடாக அந்த ஊரிலேயே அது பெரும் உருவெடுத்து நிற்கிறது/  

2 comments:

  1. ஒரு அழகான வீட்டை வார்த்தைகளால் கட்டி முடித்துவிட்டிருக்கிறீர்கள்.வீடு என்பது வெறும் கற்களின் கோர்வை அல்ல.அது நினைவுக் கட்டடங்கள்.வீடுகளை இழந்த எங்களிடம் நிறையவே சேமித்த பேசமுடியாக் கற்கள் இருக்கின்றன !

    ReplyDelete
  2. வாஸ்தவம்தான்.வீடு என்பது வெறும் சிமிண்டும் செங்கலும் மட்டுமல்ல.நினைவுகளின் மனிதமந்துகளின் கோர்வை.நன்றி உங்களது வருக்கைக்கும் கருத்துரைக்குமாக/

    ReplyDelete