19 Feb 2012

கேள்விக்குறியும்,அசரீரீகளும்,,,,,,,,


                       


     “வணக்கம்பாய்.நல்லாயிருக்கீங்களா?”
     “வணக்கம் ரமேஷ் சார்,நீங்க எப்பிடி இருக்கீங்க?இன்னைக்கு என்ன ஹாப் டேவா சார்?”
     “ஆமா பாய்.ஆபீஸ் முடிஞ்சி நேரா இங்கதான் வர்ரேன் பாய்.”
     “ஹாப்டேய்ன்னாக்கூட இவ்வளவு நேரம் ஆயிருமா சார்?மணி சாய்ங்காலம் அஞ்சாகப்போகுது இப்பிடி சொல்றீங்க?”
     “என்னசெய்யிறதுபாய்.இப்பிடித்தான்வேலைககூடிப்போச்சு.ஆள் பத்தாக்கொற,
ரெண்டு ஆளு வேலைய ஒரேஆளு பாக்குற நெலம,அப்டீங்கையில இப்பிடித்தான் ஆகிப்போகுது பாய்,அதுலயும் கொஞ்சம் நல்லா, கூடுதலா வேல செய்யிறவுங்க நெலம எல்லா யெடத்துலயும் செரமமாத்தான் இருக்கு பாய்.”
    “வாஸ்தவம்தான் சார்.அப்பிடி ஆளுகளால நடப்ப பாத்துட்டு சும்மாவும் இருக்க முடியாது பாத்துக்கங்க.போனவாரம் சாய்ங்காலம் எங்க வீட்ல ஒரு விசேசம் சார்.ஏந்தம்பி காலையில  பத்து  மணிவரைக்கும்  படுக்கையிலிருந்து  எந்திரிக்கல,   என்ன செய்ய
நாந்தான்காலையிலஅஞ்சுமணியிலயிருந்துசாய்ங்காலம்விசேஷம் முடியிறவரைக்கும்
பம்பரமா சுத்தவேண்டியதாப்போச்சு. விசேஷம் ஆரம்பிக்கிற நேரத்துல ஏந்தம்பி புது மாப்புள மாதிரி வந்துநிக்குறான் பாத்துக்கங்க.என்ன செய்யச்சொல்றீங்க?எனக்கு வந்த கோவத்த மென்னு முழுங்கீட்டு சிரிச்ச மொகத்தோட திரிஞ்சேன்.அது மாதிரிதான் எல்லாயெடத்துலயும் போலயிருக்கு.சரி சார்,என்ன சாப்புடுறீங்க,வாழைப்பழமா,கடலை மிட்டாயா”?என்பார் சிரித்துக்கொண்டும் தனது வியாபாரத்தில் கவனமாயும்/
     சற்றே உடல் பருத்து அகலமாய் விரிந்து காணப்படுகிற அவரது கடையின் முன் நான் நிற்கிற தினசரிகளின் ஏதாவது ஒரு வேளை(பெரும்பாலும் மாலைவேளை)யில் இப்படி ஏதாவது ஒரு உரையாடலுடன்தான் எங்கள் இருவரிடையேயான வெளி விரியும்.
    அப்படியாய் ஆரம்பிக்கிற புள்ளியின் நெசவு கடலைமிட்டாய்,வாழைப்பழம்  அருகில்
இருக்கிற டீக்கடை எனபதுடன் மட்டும் முடிந்து போவதில்லை.
   
   அந்த வழியில் செல்கிற போதெல்லாம் உடைந்து நொறுங்கி சில்லாகிப்போன பொடிப்பொடியான சிமிண்ட் கற்களின் துகள்களையும்,அதன்மேல் அடமாக படிந்திருக்கும் அடர்த்தியான தூசியையும் கண்ணுற நேர்ந்து விடுகிறதுதான்.
    8 ஆவது ரயில்வே கேட் அமைந்துள்ளசாலை அது. நகரிலிருந்து வெளியேறிய அத்தனை சாலைகளும் நீண்டு சென்ற ரயில்வே லைனை  கடந்ததால் அத்தனை கேட் அமைத்திருக்கிறார்கள்.
    அந்த சாலையில்தான் 30 ஆண்டுகளாக எனது  பயணம்.அப்போதெல்லாம் மினி பஸ்ஸும் இருசக்கர வாகனமும் அவ்வளவாக புழக்கத்திற்கு வந்திராத நேரம்.
    எங்கு செல்வதானாலும் சைக்கிள்மிதிதான் எனது பயணத்தின் துவக்கமாக இருக்கும்.சைக்கிள் என்றால் இப்போது எனது இருசக்கர வாகனத்தை வைத்திருப்பது போல சக்கடாவாக வைத்திருப்பதெல்லாம் இல்லை.பளீரிடுகிற சுத்ததில் வெண்மை(?) டாலடிக்கும்.
    தினந்தோறும் இல்லாவிட்டாலும் கூட இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது துடைத்து,வாரம் ஒருமுறை தண்ணீர் வைத்து துடைத்து தேங்காய் எண்ணை போட்டு மினுமினுப்பாக  மின்னுகிற  சைக்கிள்  என்னை  சுமந்து  வலம் வரும்.
    பஜார்,சினிமா,நண்பர்கள்,தோழர்கள்,கட்சி அலுவலகம் என எங்கு போனாலும் அதில்தான்.
    ஒருமிதிக்கு இரண்டு மிதி தூரம் போகும் நல்ல சைக்கிளாய் அது. அது இல்லாத நாட்களில் எனக்கு கை ஒடிந்தது போல் இல்லையில்லை கால் ஒடிந்தது போல இருக்கும்.
   (அப்போதெல்லாம் மனதில்லாத மனதுடன் டவுன் பஸ்ஸில் ஏறிச்செல்வேன்.அப்போது இது போல ஏறிய  பஸ்கட்டணமெல்லாம் இல்லை.50 பைசா,ஒரு ரூபாய்க்குள்ளாக எல்லாம் முடிந்து போகும்.)
   அந்த சைக்கிளில் கட்சிக்கொடியை கட்டிக்கொண்டு கிராமம்,கிராமமாக பிரச்சாரத்திற்க்கென்று தோழர்களுடன் அலைந்த தினங்கலெல்லாம் உண்டு.எப்போது அலைந்தேன்,எதற்காகஅலைந்தேன்,எப்படிஅலைந்தேன்என்கிறகாலாவதியாகிப்போன
கேள்விகளை மீறி அப்படி ஒரு அலைச்சலும்,அதனையொட்டிய உழைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மேலும் அலைவதிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்கிற மன விருப்பத்தின் மன உந்துதலின் காரணமாகவும் அப்படி ஆகிப்போனேன் அந்த நேரத்தில்.அதன்விளைவுதான் சைக்கிள் ,சுற்று,ரயில்வே கேட் ரோடு,இதர,இதர இடங்களிலான எனது காலூன்றல் என எல்லாமும்/
    அது போலவே இன்றும்,இப்போதும் இருபைதைந்து வருடங்கள் கடந்துமாய் அலைகிறேன். ஆனால் அலைச்சல் கொஞ்சம் குறைவாக/
    உடல் நோயும்,தள்ளாமையும் கைகோர்த்துக்கொண்டதும் இதற்கு முக்கிய காரணியாய்/அதற்கு தகுந்தாற்ப்போல எனது மேல் போர்த்தப்பட்டு இருக்கிற மத்திய தர வர்க்கப்போர்வை இறுக என்னை பற்றிக்கொள்ள அதை கழட்ட மனமின்றி பயணித்துக்கொண்டிருக்கிற நேரத்தில்தான் 8 ஆவது ரயிவே கேட் ரோட்டில் எனது பிரவேசம்/
    அரசு மருத்துவமனை,லாட்ஜ்,மதுபானக்கடை,டீக்கடைகள் மற்றும் இதர,இதரவாய் முளைத்து குடிகொண்டிருந்த சாலையில் சென்று கொண்டிருக்கிற போதுதான் அந்தக்காட்சியை காண நேர்கிறது.
    இதில் மதுபானக்கடை,லாட்ஜ்,ஆஸ்பத்திரி, ஏதோ ஒரு வங்கியின் ஏ.டீ.எம் ,,,,,,என அமைந்திருதது தற்செயல் ஒற்றுமையாக/
    எனக்குத்தெரிந்து25வருடங்களாகஅந்தக்கடையைஅங்குநான் பார்க்கிறேன்.
வாழைப்பழங்களில்அத்தனை ரகங்கள் இருக்கும் என்பது அந்தக்கடையை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.
     பீடி,  சிகெரெட்,  கடைலைமிட்டாய்,  வாழைப்பழம்   சர்பத்,  சோடா, கலர், வாராந்திர-
-பத்திரிக்கைகள்,தினசரிகள்,,,,,,,,,என இன்னும் இன்னுமாய் கலந்து கட்டி நிறைந்திருந்த கடை பார்ப்பதற்கு எந்நேரமும் பிஸியாகவே இருக்கும்.
   அப்படியான பிஸியான நாட்களில் பழகிபோன பாய்தான் இப்பொழுதுவரை வியாபார நண்பராயும்,மனக்கூட்டின்ஒருஓரத்தில்இருப்பவராயும்,எளிமையான காட்சிக்குட்பட்டுத்
தெரிகிறார்/
   போரின் போது பர்மாவிலிருந்து பிழைப்பு தேடி தஞ்சம் புகுந்து இன்றுவரை இந்த மண்ணின் பிரஜையாக அவரும் அவரது குடும்பத்தாரும் உருக்கொண்டு கடையுடன்நின்ற காட்சி இன்று இல்லை.
   நகர் முழுவதுமாய் அகற்றப்பட்ட சாலையோர ஆக்ரமிப்புகளில் பாய் கடையும் ஒன்றாய் இடித்து அகற்றப்பட்டிருந்தது.
   அவரது கடை ஆக்ரமிப்பு விதிகளுக்கு உட்பட்டு அகற்றப்பட்டதா அல்லது அதற்கு அப்பாற்ப்பட்டு அகற்றப்பட்டதா தெரியவில்லை.ஆனால் பொக்லைன் யந்திரத்தின் கோரக்கரங்கள் பிய்த்துப்போட்ட அவரது கடையும்,வாழ்வும் இன்றுவரை அடையாளமற்றுப்போய்/
    சற்றே உடல் பருத்து அகன்று தொந்தி விழுந்த பாய் இன்று இல்லை.வாழைப்பழம் இல்லை.கடலைமிட்டாய் இல்லை.வாரந்திரிகளும்,தினசரிகளும் இல்லை.பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்ளுதலும்,பேசி பகிர்ந்துகொள்ளுதலும் காணாமல் போன கணவாக/
    ஒரு சிறு புள்ளியில் ஆரம்பித்து நெசவிட்ட உறவின் விரிவும்,விரிந்து தெரிந்த பரப்பும் இனிஇல்லை.பார்க்க  ஆசைகொண்டாலும்  காணக் கிடைக்காததாக/    
    அப்படியான  பரப்ப்புகளில்  படர்ந்து பரவியிருக்கிற இனிப்பும்,கசப்பும்,மேடுகளும்,
பள்ளங்களும்,சுகங்களும்,துக்கங்களும்துடைதெரிப்பட்டதாயும்,அடையாளமற்று செய்யப்பட்டுவிட்டதாயும்/
   நின்று பேச இடமில்லை.கனிவாய் விசாரிக்க பாய் இல்லை.உரையாட உரையாடல் இல்லை.எங்களுள் நீண்டு இழையோடி காணப்பட்ட நட்பின் நீட்சியும் இல்லை.இப்படி அறுந்து  தொங்கும் இழைகளாக காட்சியளித்த எங்களது உறவும்,பாய் கடையும் ,அதன் அருகாமைலிருந்த டீக்கடையும் கேள்விக்குறிகளுக்குட்பட்டு/
    பாய் ஒரு தடவை சொன்னது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. “இந்த கடை வருமானத்த வச்சுதான் சார் எங்க பொழப்பு நகருது”என/
   அந்த வழியில் செல்கிற போதெல்லாம் உடைந்து நொறுங்கி சில்லாகிப்போன பொடிப்பொடியான சிமிண்ட் கற்களின் துகள்களையும்,அதன் மீது விடாது அடமாக படிந்திருக்கும் அடர்த்தியான தூசியையும் கண்ணுற நேர்ந்துவிடுகிறதுதான்/
  அப்படி நேர்ந்து விடுகிற சமயங்களில் வணக்கம் ரமேஷ் சார் நல்லாயிருக்கீங்களா? என்கிற பாயின் நலம் விசாரிக்கிற சப்தம் என்னுள் அசரீரீயாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

arasan said...

ஒரு உன்னத உணர்வு பிழம்பை இந்த பதிவில் கண்டேன் சார் ..
சில நேரங்களில் இப்படி சில நிகழ்வுகள் நெஞ்சுக்கூட்டை நொறுக்கிவிடும் ..
பகிர்வுக்கு நன்றி

vimalanperali said...

வணக்கம் அரசன் சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,நலம்தானே?தங்களது வருகைக்கு நன்றி/