15 Mar 2012

ஈரச்சேறு,,,,,,,,,,,,,,,


                        

      எப்போது   நினைத்தாலும்  மனம்   இளகி   கண்கள்   ஈரமாகிப்போகிறது.
      என்ன சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்க மறுக்கிறது.செய்த காரியத்தின் ஞாயம் நிலையூன்ற மறுக்கிறது.
     புரண்டெழுந்து அழுகிற சிறு குழந்தையின் வீறிடலாகவும்,அடம் பிடித்தலாயும் மனம்.
    பத்தோடு பதினொன்றாக,நான்கோடு ஐந்தாக,இரண்டோடு மூன்றாக நானுமிருந்து விட்டுப்போயிருக்கலாம் அல்லது அவர்களுக்கெல்லாம் வாய்க்கப்பெற்ற கல் மனதை அவர்களுக்குத் தெரியாமல் களவாடி என்னில் நான் கொணர்ந்து ஆழப்புதைத்து வைத்திருந்திருக்கலாம்,இது எதுவுமே செய்யாமல் மென் மனதுடன் வலம் வருகிற பொழுதுகளில் நிகழ்கிற மென் நிகழ்வுகள்,பேச்சுக்கள்,செயல்கள்,எல்லாம் மனதை இழுத்துவெளியே போட்டு விடுகிறது.
    அதனதன் இயக்கம்  அதனதன் போக்கில் நடந்து கொண்டிருந்த ஒரு இனிய மதிய  வேளையில்தான் என்னை பார்க்க வருகிறான் சுந்தர்.அலுவக வேலை மும்முரமாக/
    வந்த மனிதர்கள் அவரவர் வேலையில் கொண்டிருந்த கவனம் புள்ளி பிசகாமல் இருக்கிற பொழுது அலைபாய்ந்த கண்களுடன்வந்த சுந்தர் 22 வயதுக்கு சொந்தக்காரனாக தன்னை காட்டிக்கொண்டான்.
    உடல் உறுப்புகள்  மட்டுமல்ல,  அவன்  அணிந்திருந்த   உடையிலும்,  வயதையும்,
வயதிற்கேற்ற பாவனைகளையும் தாங்கி வந்த அவன் இரண்டு பேரிடம் விசாரித்து விட்டு எனது இருக்கை நோக்கி மலர்ந்து வருகிறான்.
   தனக்கு பெங்களூரில் கணணித்துறையில் வேலை கிடைத்திருப்பதாகவும்நாளை மறுநாள் கிளம்பவேண்டும் எனவுமாய் சொல்லி கை குலுக்க கை  நீட்டுகிறான்.   
   வேலைப்பளு,அலுவலக ஞாபகம்,அதில் அமிழ்ந்திருந்த மனம் அவைகளிலிருந்து விடுபடாமலே பதிலுக்கு நானும் இயந்திரதனமாயயும்,சுரத்தற்றும் கைகொடுத்தவாறும் அனுப்பி விடுகிறேன்.
    தேடிவந்தவனிடம் ஒரு நல்ல பேச்சு பேசவில்லை.ஒரு சிரிப்பு சிரிக்கவில்லை.ஒரு தலையசைப்பு கிடையாது.இது எதுவுமே இல்லை என்றாலும் கூட ஒரு மென் மலர்வாவதுஎன்னில்இருந்திருக்கவேண்டுமே?
    இதுஏதுமற்றவனாய்அலுவகமும்,அலுவலகம்சார்ந்தவேலைகளும் அது சார்ந்த நினைவுகள் மட்டுமே பிரதானம் என என்னை இருத்திக்கொண்டவனாய் அவனுக்கு ஒரு  டீகூட வாங்கிதராமல் அனுப்பி விடுகிறேன்.(நல்ல மனம் வாழ்க/)
     முகம் விரிந்து மலர கோடிக்கண்களின் சந்தோசத்தை ஜோடிக்கண்களில் தாங்கி வந்தவன்முகம் வாடி திரும்பிச்செல்கிறான்.
     அவன் திரும்பிச்சென்றதும் அலுவலகத்தின் மின் விளக்குகள் அணைந்து போனது.மின் விசிறியின் சுழற்சியும் அப்படியே/
     நடந்தது தற்செயல் நிகழ்வுதான் என்றாலும் கூட அது அவனுக்காகவே நடந்தது போலவேஇருந்தது.
     இருக்கட்டுமேஅதுஅவனுக்காவே நடந்ததாகவே இருக்கட்டுமே?என்ன குறைந்து விடப்போகிறது  இப்போது?  யார்  யாருக்காவோ,  எது  எதற்காகவோ  என்னென்ன
காரணங்களை முன் வைத்தோ ஏதேதோ நடக்கிறது என சொல்கிற பொழுது இது நடக்கக்கூடாதா என்ன?
    சுந்தரின் எட்டாவது வயதில் அவனது தந்தை இறந்து போகிறார்.முதல் நாள் இரவு காட்டுக்கு காவலுக்குச்சென்றவர் மறுநாள் காலை பிணமாக வருகிறார்.பாம்பு கடித்து இறந்து போனார் என்றார்கள்.
     அந்த  எட்டிலிருந்து  இந்த  22வரை  தந்தையற்றவனின்  ஏங்கிய  மனோ
நிலையினனாய் வளர்ந்து ஓடி,ஓடி உழைத்தும்,தடுக்கி விழுந்தும்,பின் எழுந்து நின்றும் ,தன்னை  நிலை நிறுத்தியும் முன்னேறி ஒரு இடம் பிடித்து தன் இருப்பை சொல்ல வந்தவனை கவனிக்காமல் விட்ட அந்தசெயலை இப்போது நினைத்தாலும் மனம் இளகி கண்கள் ஈரமாகிப்போகிறதுதான்.   

4 comments:

சசிகலா said...

முகம் விரிந்து மலர கோடிக்கண்களின் சந்தோசத்தை ஜோடிக்கண்களில் தாங்கி வந்தவன்முகம் வாடி திரும்பிச்செல்கிறான்.//
நம் துயரங்கள் மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் .

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

சில துர் அதிஷ்டங்கள் கூடப்பிறந்ததுபோலவே கூட வரும் சிலருக்கு.என்ன் என்று பலதடவைகள் யோசித்திருக்கிறேன்.பதிலில்லை !

vimalanperali said...

பதிலில்லா கேள்விகளை தாங்கிய நிகழ்வுகள் நிறைந்து சிதறிக்கிடக்கிற வெளியில் நம் பயணமும்,எழுத்தாய்,கருத்தாய்/
நன்றி ஹேமா மேடம் தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/