6 Aug 2012

பஞ்சுமூட்டை,,,,,,,


மேல்புறம் எட்டும் கீழ்ப்புறம் பத்துமாய் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்த வண்டி வரிசையாய் பலகைகளால் அடுக்கித் தைக்கப்படிருந்தது.
கை தேர்ந்த தச்சரின் கைவண்ணத்திலும்,உழைப்பிலும் செய்நேர்த்தியிலுமாய் உருவாகியிருந்ததாய் இருக்க வேண்டும்.

அவரது உழைப்பும்,ரசனையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருந்ததாய் இருந்த வண்டி பார்க்க அழகாகவும் கொஞ்சம் பழசாகவும் தெரிந்தது.
பழசும் ஒரு வித அழகுதான்(இதைச்சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் இடுப்பில் கை வைத்து கொண்டு கண்களை உருட்டி முறைக்கக்கூடும்) அசைந்து ஆடி பாரம் இழுத்து வந்த வண்டி ரயில்வே கேட்டின் அடைப்பில் காத்து நின்றிருந்தது.

நான் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த எனது இருசக்கர வாகனம் மற்றும் எனது திசை திரும்பிய விழிபார்வை வழியாக ஊடுருவித்தெரிந்தவர்களாய் வண்டியும்,வண்டியிலிருந்த பத்தும் ,எட்டுமான பருத்தி மூட்டைகளும் அவைகளின் மீது இழுத்துக் கட்டப்பட்டிருந்த கயிறும், கயிற்றிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த சிலும்புகளும்,அதன் முனை மழுங்கா கூர் முனைகளும் கட்டுக்குள் இருந்த பெரிய,பெரிய சாக்குகளின் ஓட்டை வழியாகவும் பிதுங்களாகவும் தெரிந்த பருத்தி மாலை நேர வெயில் பட்டு மின்னியது.

வெயில் உரசிச்சென்ற மூட்டைகளையும்,மூட்டைகள் கட்டிய கயிற்றையும் தன் மேல் சுமந்து நின்ற வண்டியை இழுப்பதற்காய் கட்டப்பட்டிருந்த ஒற்றை மாடு வாயை அசை போட்டவாறும் வாயிலிருந்து ஒழுகிய மென் ஒழுகலான நுறையுடனுமாய்,கூர்முனையற்று பெயிண்ட் உதிர்ந்த கொம்புகளுடனும், நீர் வழிந்த கண்களுடனுமாய்மெலிந்ததோற்றம் காட்டி நிற்கிறது பார்வையில் பரிதாபத்தை விதைத்துச்சென்றவாறு/

வண்டியின் முன் நின்ற பஸ்,அதன் பின் நின்ற கார் பக்கவாட்டாக நின்ற இரு சக்கரவாகனங்கள் பெயர்ந்து கிடந்த சாலை,அதன் சிறு கல் பெயர்ந்து தெரிந்த பள்ளங்கள்,வண்டியின் டயரில் ஒட்டிக்கிடந்த மென் தூசிகள்,சுழன்றடித்த காற்றில் சாலையிலிருந்து மேலெழும்பி பறந்த தூசிகள் மற்றும் மனித முகங்களைப் பார்த்தவாறு மாட்டை தடவிக்கொடுத்து அதன் உடல் தட்டிக்கொடுத்த வண்டிக்காரின் கையில் மின்னிய செல் போன் ஒரு மினி சூட்கேஸ் சைசுக்கு இருந்தது.

“பரவாயில்லப்பா,இப்ப ரெண்டு தோசை ஊத்திக்குடுங்க,நீங்களும் பசிச்சா ரெண்டு ஊத்திச்சாப்புட்டுக்கங்க,நான் வீடு வந்ததுக்கப்புறம் நெறைய தோசை ஊத்திதர்ரேன் சாப்புடலாம் என பேசிக்கொண்டிருந்தவரையே உற்றுப்பார்க்கிறேன்.

பதிலுக்கு என்னையே உற்றுப்பார்த்த அவரது உடம்பில் சட்டையில்லை.ரோமம் மண்டியிருந்த வெற்றுடம்பில் துண்டு போட்டிருந்தார்.அது தோள் பட்டை தழுவி தொந்தி தாண்ட முடியாமல் நின்றது. இடுப்பில் கொஞ்சம் அழுக்கும்,பழுப்பும் ஏறிய கட்டம் போட்ட கைலி,தடித்துக் கனத்த கைகளும்,கால்களும் வீடுகளில் நிற்கும் தூணை நினைவு படுத்தியது.

“என்ன தம்பி அப்பிடிப்பாக்குறீங்க?ஏங் வீட்டம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல ஒரு வாரமா,பெட்டல கெடக்கா கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில,பக்கத்துல இருந்து பாத்துக்க குடுத்து வக்கல தம்பி எனக்கு,தெனமும் சாய்ங்காலமும், காலையிலையும் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு முன்னாலயும்,பள்ளிகூடம் போயிட்டு வந்ததுக்கு பின்னாடியும் புள்ளைங்கதான் போய் பாத்துக்குதுங்க/
அதுக பள்ளிக்கூடம் போயிட்ட பகல் பொழுதுல ஒத்தையில கெடப்பா,எதுன்னா ஒண்ணுக்கு,தண்ணிக்கின்னாக்கூட ரொம்ப செரமப்பட்டுதான் போறா பாவம்,என்ன செய்ய தம்பி நான் போயி சவரட்டன செய்யனும்னா இங்க வண்டி ஓட்டம் நின்னு போகுது.வண்டி ஓடலைன்னா ஏங் பொழப்பு தரிங்கினத்தோம்தான் தம்பி.ஓடுற தண்ணியில விழுந்த சுழி மாதிரி இப்பிடி சொழட்டி வாங்குது நம்ம பொழப்பு” என அவர் பேசிக்கொண்டிருந்த போதே அடைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட் திறந்து விட்டது.

திறக்கப்பட்டிருந்த கேட்டின் வழியாக கடந்த பஸ்களுடனும் ,கார்களுடனும்.இரு சக்கரவாகனங்களுடனுமாய் அந்த மாட்டு வண்டியும் செல்கிறது பாரம் சுமந்தும் வண்டியோட்டின் மனம் சுமந்துமாய்/

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தினமும் நடக்கும் யதார்த்தமான காட்சி கண்ணுக்குளே தெரிகிறது....

தலைப்பும் பதிவும் சிந்திக்க வைக்கின்றன... நன்றி...

vasan said...

நுணுக்க‌மான அவ‌த‌னிப்பு காட்சியாகிற‌து துள்ளிய‌மான‌ எழுத்தில்.

vimalanperali said...

வணக்கம் வாசன் சார்.நண்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வலையுகம் said...

இவ்வளவு நுட்பமாகவா கவனிக்கிறது

ஒரு செய்தியை சொல்லும் போதே அதை மனக்கண்னில் ஒட வைக்கிறீர்கள்

Subramanian said...

"பஞ்சுமூட்டை" வாசித்து முடிக்கையில் நெஞ்சு கனத்தது. தங்களது உணர்வை அப்படியே எங்களையும் உணரசெய்த அழகான எழுத்துநடை. ஆழமான அனுபவம். பகிர்வுக்கு நன்றி அய்யா!

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் ஹைதர் அலி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வே சுப்பரமணியன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

பார்க்கும்,கவனிக்கும் நிகழ்வையெல்லாம் கதையாக்கிப் பதியவைக்கும் திறமை...!

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/தவிர நடக்கிற நிகழ்வுகளதானே நம்மை இப்படியெல்லாம் பதிய வைத்துவிட்டுச்செல்கிறது.