24 Aug 2013

மாயலோகத்தில்,,,,,,,


ரண்டை தொட்ட கணத்தில் முழு உருவமும் மறைந்து போக கைமாத்திரம் அந்தரத்தில் மிதந்துபோய் நினைத்த காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பும் இரும்புக்கைமாயாவியின் மாயலோக மாய்த்தான் விரிகிறது பெண்களின் உலகம்.
     
அதிகாலை எழுந்துவாசல் தெளித்து கோலம் போட்டுக்  கொண்டிருக்கும் போதேசைக்கிள் மணிச் சத்தம் அதிர வரும் பால்க்காரரிடம் வாங்கிய பாலை அடுப்பில் ஏற்றிஸ்டவ்வை சிம்மில் எறியவிட்டு ,விட்டு போட்ட பாதிக் கோலத்தை பிசகாமல் தொடர்ந்துமுடித்து விட்டு கோலத்தை திரும்பிக் கூடப் பார்க்காமல் உள்ளே வந்தால் ஸ்டவ்வில்வைத்திருந்த பால் பொங்கி பாத்திரத்தின் விளிம்பில் நிற்கும் .பாலை ஊதி சட்டியை இறக்கிகீழே வைத்துவிட்டு டீ அல்லது காப்பி போடும் முன் எழுந்துவிடும் இரண்டாம் வகுப்புபடிக்கும் சின்னப் பையனை படுக்கையிலிருந்து எழுப்பி இடுப்பில் வைத்து கொஞ்சியவாறேஅவனுக்கு முகம் கழுவி விட்டு பாத்ரூம் ஜோலியெல்லாம் முடித்து கூட்டி வரும் முன்எழுந்துவிட்ட பெரியவளும் "பானாரூனா"(பாத்ரூம்வேலையெல்லாம் முடித்துவிட்டு முகம் கழுவி டீசாப்பிட உட்கார்ந்து விடுவாள்.இதையெல்லாம் புள்ளி பிசகாமல் செய்யும் மனைவி தலைப்புச்செய்திகளை அறியும்ஆவலோடும் ,அறிவுத்தூண்டுதலோடும்எழும்கணவனின்கண் முன் அன்றையதினசரியைக் காட்டும் மிக உயர்ந்த பணியையும் செய்ய வேண்டும்(பின்னே பேப்பர்கொடுப்பது கணவணுக்கு ஆயிற்றே?/) (காலை எழுந்தவுடன் மனைவியின் முகம் பார்த்து பேசுவதை விடுத்து தினசரியின் முகத்தில்தான் முழிப்பேன் என்கிற நல்ல எண்ணம் இவர்களுக் கெல்லாம் எப்படித்தான் உருவாகிறதோ தெரியவில்லை.)மேற்கண்டவேலைகளில் எது தவறினாலும்பிசகினாலும் கரணம் தப்பினால் மரணம்தான்என்கிற எண்ணத்தை விதைக்கிற மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் வெளிப்படும்நடைமுறயும் பார்வயும்./ நீயெல்லாம்............. என்கிறடாப் ஆங்கிளில்"ஆரம்பிக்கிறகணவனின் பார்வையும்பேச்சும்மனைவியின் பிறப்பு வளர்ப்பு பற்றிய P.H.D  யில் போய் முடியும்அதற்கு பயந்தேனும்இப்படி இருந்துவிடுகிறார்கள்.அல்லது இருக்க வைக்கப் படுகிறார்கள்.இதுகாலைஎழுந்தவுடனான பெண்களின் முதல் ஷிப்ட்.  கணவனோடும், பிள்ளைக ளோடும் அமர்ந்து அவசர அவசரமாகடீக்குடிக்க கிடக்கிற நேரம் அவளது ஓய்வு நேரமாக எடுத்துக் கொள்ளப் பட்டு அத்தோடு அந்த ஷிப்ட் முடிந்ததாய் கணக்கில் கொள்ளப் படுகிறது.

இரண்டாவது ஷிப்ட்டின் ஆரம்பத்தில் குக்கரில் அரிசியைப் போட்டு ஸ்டவ்வில் ஏற்றிய கையோடு காய்கறிகளை நறுக்கி குழம்புக்கு கரைத்த சட்டியில் போட்டுக் கொண்டிருக்கும் முக்கிய தருணத்தில்தான் அவளது ஒற்றைக்கை தனியே கழன்று போய் வீட்டின் பின்பக்கம் உள்ள அடிகுழாயில் தண்ணீர் அடித்து வருகிறது. சின்னப் பையனுக்கு பல் துலக்க பிரஷ் எடுதுக் கொடுத்துவிட்டு,அவர்களது முந்தைய நாள் துணிகளை வாஷிங் பவுடர் போட்டிருந்த தண்ணீர் வாளியில் ஊறவைக்கிறது.

வெளியேபோய் தன் பாட்டுக்கு வேலைசெய்து கொண்டிருக்கும் கையைப் பார்த்த, சமையல றையில் இருக்கும் கை,அதற்கு எந்த வகையிலும் சளைக்காமல் சமையல் வேலையின் இண்டு இடுக்குகளையும் ஒன்று விடாமல் செய்து முடிக்கும் சகலகலாவிதகராய் பரிணாம் காட்டுகிறது.

மசால் பொடி,உப்பு.சீனி,காய்கறி,அரிசி,பருப்பு,எண்ணெய்,குக்கர்,மிக்சிஎன அனைத்துடனும் போராடும் ஒரு போராளியாயும்,ஆயிரம் சதுரடிவீட்டில் கிராபிக்ஸின் உதவி இல்லாமலேயே எங்கும் தோன்றி,மறையும் வல்லமை பெற்றவளாயும்.

 பெரியவள் குளித்து முடிக்கவும் வெளியே அனுப்பியிருந்த கையை இழுத்து ஒட்ட வைத்துக் கொண்டு சின்னவனை குளிப்பாட்டி ட்ரெஸ் பண்ணி விடுகிறாள். 

 எல்லோரது வீட்டிலும் பள்ளி செல்லும் நேரத்தில் வழக்கம் போல பிள்ளைகள் மறந்து போகும் ஹோம் ஒர்க் நோட்,பென்சில்,பேனா ,பள்ளியின் அடையாள அட்டை என எல்லாம் தேடிப் பிடித்து எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு உடைமாட்டி சாப்பாடு போட்டு ,டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுத்தனுப்பி விட்டுத் திரும்பினால் கொக்கு முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் கணவன்.

 அவனை தாஜாப் பண்ணியும்,தயார்பண்ணியுமாய் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டை திரும்பிப் பார்த்தவாறு கொஞ்சம் ஆயாசமாக அமரும் நேரம் அவளது இரண்டாவது ஷிப்ட் முடிந்ததாய் கணக்கிடப்படுகிறது.

 பிறகுதான் அவளுக்குள் அவளாக பேசிக் கொண்டும் நினைவலைகளில் நீந்திக் கொண்டு மாய் துணிதுவைக்க அமர்கிறாள்.கையை அரித்து எரியச் செய்யும் விலைகுறைந்த ஊதா சோப் பை வாங்கி வந்த கணவணை நொந்தவாறே இளையமகனின் ஜட்டி, பனியன், ட்ரவுசர், சட்டை,என ஆரம்பித்து மூத்தமகளின் துணிகள்,கணவனது துணிகள்,அவளுடைய துணிகள் என வரிசைக்கிரமமாக துவைக்கிறாள்.அதிலும் அவளது துணிகள் கடைசியாக வருவது ஒன்றும் தற்செயல் அல்ல.

 அடுத்ததாக பாத்ரூம் கிளீனிங்,ப்ளீச்சிங்க் பவுடர்,பினாயில் எல்லாம் போட்டு கழுவிட்டு நிமிர்கையில்தான் அவளுக்கு மதியச் சாப்பாட்டின் நினைவுவருகிறது.

இவர்கள் பசி நேரம் சாப்பிடுவதெல்லாம் இரண்டாம் பட்சஏற்பாடே./ இது அவளது முடிந்து போன மூன்றாவது ஷிப்ட்.

மனித மூளையைகாயடித்து தன் வசம் வைத்திருப்பதில் வல்லமை பெற்ற தொலைக் காட்சி யில் ,மெகாத்தொடரையோ,சினிமாவையோ பார்த்துவிட்டு குளித்து முடித்துவிட்டு வருகையில் பள்ளிக்குப் போன இளையமகனை கூப்பிடும் நேரம் வந்து விடுகிறது.

  பள்ளிக்குச் சென்று மகனுடன் திரும்பி மொட்டைமாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்து பீரோவில்  அடுக்கும் போது அதிகாலயைப் போலவே மாலையிலும் தொடர் கிறது.

 உடல் பீரோமுன்னிருக்க இருகைகளும் தனித்தனியாக கழண்டு திசைக்கொன்றாய்ப் போய் காபி,டீதயாரிப்பு பையனின் மாலை நேர ஸ்கூல் யூனிபார்ம் அற்ற அலங்காரம் என்கிற வேலை களில் இறங்க,,,,,,,...... முகம் மட்டும் கணடி முன் நின்று தலைவாரி,பொட்டிட்டு, பூச்சூடி அழகாக் தயார்பண்ணிக் கொள்கிறது.அலுவலகம் விட்டுத் திரும்பும் கணவன் முன் நிற்க. இப்பொழுது அவளது நான்காவது ஷிப்ட் முடிவதாய் கணக்கிடப்படுகிறது.

அப்புறமென்ன இருக்கவே இருக்கிறது பிள்ளைகளின் படிப்பு,வீட்டுப்பாடம் இவற்றை கவனித்து விட்டு டீ.வி,சாப்பாடு, தூக்கம்(இரவில் கணவனின் மிகச் சிறந்த "ஸ்லீப்பிங் டோஸாகவும்") என இருக்கிற இவர்கள் ஒரு நாள் நகர்வு இப்படி இருப்பதாய் கணக்கிடப் படுகிறது.அனுதினமும் தனது கணவனுக்காகவும்,பிள்ளைகளுக்காகவும் மட்டுமே ஷிப்ட் முறையில் இயங்கி தன்னை கரைத்துக் கொள்கிற பெண்களின் உலகம் .........,,,,,,,,,,,,,,,

"வேறென்ன ஆரம்பவரிகள்தான்"./

4 comments:

 1. /// வேறென்ன ஆரம்பவரிகள்தான்...///

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அவ்வப்போது இவ்வளவின் இடையிலும் தன் ஜீவனைக் கண்டுபிடித்து விடுகிற பெண்களுக்கு ஒரு நமஸ்காரம்

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் ரிஷபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete