4 Mar 2014

விமர்சனச்செறிவாய்,,,,,,

               விமலனின் பூப்பதெல்லாம்!- ஒரு பார்வை

சிறுகதை மனித உள்ளத்தின் அடைய முடியாத ஆசைகளின் எதிரொலி என்றார் புதுமை பித்தன். சுற்றி நிகழும் கொடுமை, சூழலில் நிகழும் அவலம் இவற்றைக் கண்டும் காணாமல் பார்த்தும் பார்க்காமல் பாதையோரத்தில் செல்கின்ற நடைபாதை வாசியல்ல எழுத்தாளன். அவனுக்குச் சமூக அக்கறை இருக்க வேண்டும். சுற்றி நிகழும் அழுகையின் குரல் புரிய வேண்டும். அகிலத்தின் அவலத்தில் அவன் மூழ்கி எழவேண்டும். அப்பொழுது தான் அவனது கதை மாந்தர்களும் சமூகத்திடையே மின்னிச்சிறப்பார்கள். எனவே எந்த எழுத்தாளனுக்குச் சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கிறதோ அந்த எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகள் எதிர்காலத்தில் பேசப்படும் படைப்புகளாக மிளிரும்.

அந்த வகையில் நான் படித்த சிறுகதை நூலும் அதன் ஆசிரியரும் என்னோடு அமர்ந்து கதை சொல்லி விட்டுத்தான் நகர்ந்தார்கள் என்பதால் துணிவோடு பரந்து விரிந்து கிடந்த கரிசல் பூமியில் சட்டையில்லா வெற்று மேனியாய் விதைகளைத்தூவி பின்னர் நகர வாழ்க்கையிக் தன்னை நிலைநிறுத்தி பாண்டியன் கிராம வங்கியில் பணி புரிந்து வரும் விருதுநகர் திரு.விமலன் அவர்கள் எழுதிய பூப்பதெல்லாம் எனும் சிறுகதை நூலைப் பற்றி என்னுடைய கருத்துகளை உங்களின் காட்சிக்கு வசப்படும் வண்ணம் வரிசைப்படுத்துகிறேன்.

”நாணல்புல்” முதலாக ”ஆனாலும்” ஈராக 21 சிறுகதைகள் அடங்கிய பூப்பதெல்லாம் எனும் நூலினைப் பற்றிய அதிக எதிர்பார்ப்போடு வாசிக்க துவங்கிய எனக்கு ஒவ்வொரு கதையும் எதார்த்தத்தை அள்ளித்தெரித்து நகர்ந்தது எனக்குள் வாழ்க்கையின் உண்மைத்தன்மையை உணர்த்திச் சென்றது. இவரது கதைகளில் எதார்த்தங்கள் கரை புரண்டு ஓடுகின்றன. படைப்பாளியின் ரசிப்புத்தன்மைகள் ரம்யமாக விரிகின்றன. ஆங்காங்கே உவமைகள் உரு பெற்று காட்சியாய் நிற்கின்றன.

ஊதாக்கலர் மற்றும் தேநீர் பிரியருமாகிய விமலன் ஐயா கதை தோறும் தவறாமல் டீக்கடையை காண்பித்து விடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு கதைக்கே டீத்தண்ணி என்று பெயரிட்டும் உள்ளார் என்றால் தெரிந்து கொள்ளுங்கள். மரங்களை அதிகம் நேசிப்பவராகவும் கதையின் மூலம் அறிய முடிகிறது வேப்பமரமும் பன்னீர் மரமும் ஆங்காங்கே அசைந்து ஆடிப்போகின்றன. பெரும்பான்மை கதைகள் தொடங்கிய வாக்கியங்களுடனே முடிவது இவரது தனி பாணியாகத் தெரிகிறது.
நாணல்புல் முதல் கதையே அரை வயிற்றுக்கஞ்சிக்கு அல்லல் படும், வறுமையில் வாடும் மூதாட்டியின் முகம் காட்டி நம் கண்களில் ஈரம் கன்னங்களை நனைய வைக்கிறது 
விலாசம் கதையில் சின்னக்குழந்தை போல் சிரிப்பு கொண்ட அவரது மனம் காட்சியாய் விரிகிறது பாருங்கள்: என்னை விட குறைந்த வயதினர், குறைந்த வருவாய் பிரிவினர், குறைந்த வேலை பார்ப்பவர் அனைவரிடமும் எந்த பேதமில்லாமலும், மரியாதையுடனும் பேசவும் பழகவும் கற்றுக்கொண்டதன் விளைவு தான் இந்த மனம் என்று வாக்குமூலம் தருகிறார்.
கத்தரிப்பான் கதை முடி திருத்துவது கை மற்றும் கத்திரிக்கோல். சீப்பு இவைகளின் கூட்டு உழைப்பே என்று சொல்வதோடு வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாத முடி திருத்தும் தொழிலாளியின் மன உணர்வை உள்வாங்கிய இனிமே செத்தாலும் கடன் வாங்கக்கூடாது சார். நானும் ஒரு பொரட்டு பொரட்டிடலாம்னு தான் இவர்கிட்ட காசு வாங்கினேன். வார வட்டி சார்னு சொல்லும் வார்த்தைகள் நம்மையும் உணர வைக்கிறது.
இக்கால இளைஞர்களின் கலாச்சாரத்தைக் கண்டு ஒரு தந்தையின் ஆற்றாமையை தனது ஸ்கீரீன் சேவர் எனும் கதையில் நல்ல பழக்கம் இல்ல, நாலு பேர மதிக்கத் தெரியல, காலேஜ் படிக்கிற என்னோட பையன் காலையில் காலையில் எழுந்திருச்சு சரியா பல்லுகூட வெளக்கிறதில்ல, தலையில எண்ணைய் கூட தேய்க்கிறதில்ல கேட்டா ஸ்டைல்ங்குறான் எனவும்
கிளியாஞ்சட்டி கதையில் இப்ப வந்து போனான் பாருங்க. காலேஜில படிக்கிறான். தலைக்கு எண்ணெய் வைக்காம, தலை சீவாம, சமயத்துல குளிக்காம கூட காலேஜ் போயிருவான். இன்னும் நாலு பேரு கூட பேசத் தெரியல, பழகத் தெரியல. இங்கேயிருந்து சைக்கிள எடுத்துட்டு ஓடுறான் சார், ரெண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற ப்ரெண்டு வீட்டுக்கு. ஆனா பக்கத்து வீட்டுப் பையன்கூட ஒரு வார்த்தைப் பேசிப் பழக மாட்டேங்குறான் எனவும் வருத்தப்படுகிறார்.
தனது கதைகளில் எள்ளல்களையும் ஆங்காங்கே அள்ளித்தெளித்துள்ளார் உதாரணத்திற்கு வல்லினம் மெல்லினம் கதையில் புதுநிறமாக கசலையாய் இருந்த நீங்கள் வேப்பங்குச்சிக்கு கையும் காலும் முளைத்தது போல ஒல்லியாகவும் என் மனம் கவர்ந்தவராகவும் அப்படி இருந்த நீங்கள் எனும் வாசகமே சான்று
மனித உணர்ச்சிகளில் ஏதாவது ஒன்றைத் தொட்டு உலுக்குவதுதான் சிறுகதை என்பார் விந்தன் அவர்கள் அந்த வகையில் இவரது கதைகள்  கம்பெனி தொழிலாளர்கள்,தனலட்சுமி ஹோட்டல், அறிவொளி இயக்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், இவரது நண்பர்கள், டீக்கடை, கையில் ஏந்திய டீயுடன் எண்ணெய் பதார்த்தங்களை எண்ணி ஊறிய எச்சில். வீட்டின் முற்றத்தில் விளையாடும் மரங்கள் இப்படி இன்னும் பல... நம் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பது என்னவோ உண்மையிலும் உண்மை.

கதை மாந்தர்களை நம்முள் விளையாட விடுகிற வித்தை விமலன் ஐயாவிற்கு உண்டு என்பதை பூப்பதெல்லாம் சிறுகதை புத்தகம் பரைசாற்றுகிறது. இவரது புத்தகம் கையில் தாங்கிய கனமற்ற மலரின் மென்மையைப் போல் தவழுகிறது. தவழுவது கைகளில் மட்டுமல்ல மனங்களிலும் தான். பொறுமை காத்து படித்து மகிழ்ந்தமைக்கு நன்றி நண்பர்களே!!

விமலன் ஐயாவிற்கு:
அடுத்தடுத்த படைப்புகளில் தங்கள் எதார்த்த நடை கொண்ட கதைகள் எட்டி சிகரம் தொட வேண்டும். அவ்வாறு மலரவிருக்கும் படைப்புகளில் தங்கள் அனுபவங்களில் கற்பனையைக் கட்டவிழ்த்து விட்டு கதையின் முடிவில் மனதிலிருந்து பிரிக்க முடியாத இன்பத்தையும் சோகத்தையும் தந்து ஆட்கொள்ள செய்ய வேண்டுமென வாழ்த்தியும் வணங்கியும் மகிழ்கிறேன் நன்றி..

  
   என்னுடைய பூப்பதெல்லாம் சிறுகதை தொகுப்பிற்கு திரு பாண்டியன்   
  அவர்கள்(அரும்புகள் மலரட்டும்-  http://pandianpandi.blogspot.com/)எழுதிய  
  விமர்சனம்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்கும்/

கரந்தை ஜெயக்குமார் said...

பாண்டியன் அவர்களின் தளத்திலேயே இவ்விமர்சனத்தைக் கண்டு மகிழ்ந்தேன்,
அருமையான விமர்சனம்,
தங்களின் எழுத்துப் பணி தொடர
சாதனைகள் பல படைத்திட வாழ்த்துக்கள் நண்பரே