11 Oct 2016

தூரங்களின் விளிம்புகளில்,,,,,/


தூரம் என்ன இருந்து விட முடியும் பெரிதான தூரம் , நன்றாக இருந்தால் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டருக்குள்ளான இடைவெளியே,,,,/

பாலம், அது கடந்து பெட்ரோல் பங்க்,புது பஸ்டாண்ட், வொர்க் ஷாப்,அது கடந்து யார் தடுத்தும் நில்லாமல் வந்து விடுகிற கொரியர் ஆபீஸ்,என்கிற கை கோர்ப்பி லும் சங்கிலிப்பிணைப்பிலும்தான் அவனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன்.

அவன் எங்கிருந்து வந்தான் என்பது தெரியவில்லை.. பின்னாலிருந்து பார்த்த பொழுது அவன் போல் தெரியவே அமர்ந்திருந்த இரு சக்கர வாகனத்திலிரு ந்து சற்று சாய்ந்து இடது பக்கமாக கை ஆட்டுகிறேன். அவன் கவனித்த தாகத்தெரியவில்லை.

புது பஸ்டாண்டிற்கு எதிர்த்தாற் போலிருக்கிற டீக் கடையில்தான் டீ சாப்பி ட்டுக்கொண்டிருந்தான் வடையுடன் சேர்த்து/

நண்பர் பாண்டியன் அறிமுகம் செய்து வைத்த கடை. எப்பொழுதோ ஒரு மெல்லிய தூறலுடன் கூடிய மழை நாள் ஒன்றின் இளமாலை வேளையாக பாலத்தில் வந்து கொண்டிருந்த பொழுது காலியாகிப்போன பெட்ரோலை இட்டு நிரப்ப பாலத்தின் அருகிலிருந்த பெட்ரோல் பங்க் சென்ற பொழுது எனது இருசக்கர வாகனத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்தது நண்பர் பாண்டி யனின் வண்டியாக இருந்தது.

பார்க்க பளிச்சென்றும், மெலிதான இசையுடன் கூடிய இரு சக்கர வாகனத்தை நகரில் வேறெங்கும் பார்த்து விட முடியாது.அவர் வைத்திருந்த இரு சக்கர வாகனம் இப்பொழுது தயாரிப்பே கிடையாது.ஆனாலும் பளிச்சென துடைத்து வைத்த குத்து விளக்கைப் போல வைத்திரு ப் பார், அதற்காக திரி சொருகி தீ பொருதி வைத்து தொட்டுக் கும்பிட்டு விட முடியாது.

அவர் அதெற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.இசையென்றால் அவ்வளவு பிரியமா ,,,இரு சக்கர வாகனத்தில் இசையை அடை கொண்டு செல்கிற அளவிற்கு என்றால் சிரிப்பார் பெரிதாக,,,,,,/

அந்த பெரிதான சிரிப்பிற்கு அடுத்த அவரது வார்த்தை ”வாருங்கள் டீ சாப்பிடலாம்” என்பதாகவே இருக்கும்.

மெல்லிய பூனை மயிர்களடர்ந்த அவரது கை கோடிடும் கடை பெட்ரோல் பங்கிற்கு எதிர்தாற் போலவே இருக்கும் பெரும்பாலான நேரங்களில்.

அது அல்லாது வேறு ஏதாவது கடைக்கு அவர் அடிக் கோடிடுகிறார் என்றால் அது புது பஸ்டாண்ட் கடந்து ரயில்வே லைனின் அருகிலிருக்கிற கடையாகத் தான் இருக்கும். ஓடுகிற ஓட்டத்தில் சாலையின் ஓரம் இடது புறமாய் கொஞ் சம் உள்வாங்கி புது வாசனையுடன் இருக்கிற ஊதாக்கூரை வேயப்பட்டக் கடை.

பார்க்க நன்றாக அச்சுப்பிசகாமல்,அதது அதனதன் இடத்தில் மிகச் சரியாக அளவெடுத்தது போலும் மிகச்சரியாக அடுக்கி வைத்து அளவெடுத்தது போலவுமாய் இருக்கிற கடைக்கு அவ்வள வாய் ஆட்கள் போக மாட்டார்கள்.

எதிர்த்தாற்போல் சுடுகாடு.இத்தனை நாளாய் எனக்குத் தெரியாது அது. ஒரு நாள் தற்செயலாய் அந்தக்கடையில் டீக்குடித்துக் கொண்டி ருக்கும் பொழுது தான் கவனிக் கிறேன்.”அட ஆமாம் இதுதான் விஷயமா என கடைக் காரரிடம் கேட்ட பொழுது ஆமா சார் விபரமில்லாம வந்து கடை போட்டுட்டேன்,இந்த கடைக்காக செலவழிச்ச காசுகூடபோகட்டும்.இந்த தகரசெட்டக்கூட பிரிச்சிக் கொண்டுபோயிறலாம்.குடுத்தஅட்வான்ஸக்கூடதிருப்பக்குடுத்துரேன்னுட்டாரு கட்டட ஓனரு.ஆனா எனக்குத்தான் வேற எங்க போயி கடை போடுறதுன்னு தெரியல.வேற எதத்தொட்டாலும் போட்டியாத் தான் இருக்கு. எனக்கு இந்த டீ ஆத்துறத விட்டா வேற தொழில் தெரியாது. ஒரு கடையில கேட்டு வச்சிருக்கேன் டீ மாஸ்டர் வேலைக்கு,கெடச்சா பேசாம கடைய மூடிக்கிட்டு போயிற வேண்டியதுதான், கடையக்கட்டிக் கிட்ட நட்டப்படுறத விட பேசாம சம்பளத்துக்கு இருந்துட்டுப்போயிரலாம்” என்றார்.

அரை வெள்ளைக்கலரில் பேண்ட்டும்,வெளிர் ஊதாக்கலர் சட்டையும் நண்பர் பாண்டியனுக்கு நன்றாக இருந்தது. அவர் இது போல் உடைகள் உடுத்தி நான் பார்த்ததில்லை. பார்க்கிற நேரங்களிலெல்லாம் அடர்க்கலர் சட்டையும் பேண்ட்டும்தான் அணிந்திருப்பார்.தவிர உடைகளின் நிறம் குறித்து அவ்வளவாய் சிரத்தை கொண்டவராய் தெரிய மாட்டார்.அவரது இசை,அவரது மென் நிற உடை அவர் டீக்கடைக்கு கேடிட்ட அவரது மயிரடர்ந்த கையின் அசைவு,,,, என எல்லாம் கவனித்தவாறு அவரது பின்னாலும் அவரது பக்க வாட்டிலு மாகச்செல்கிறேன் இரு சக்கர வாகனத்தை உருட்டியவாறே,,/

ஆளுக்கொருவடை டீ என சாப்பிடலாம் என நினைத்திருந்தேன் நான். ஆனால் நண்பர் அதைத்தடுத்து ஆளுக்கு இரண்டு வடைகள் சொன்னார், சமீபமாக டீக்கடைகளில் போய் இரண்டு வடைகள் வாங்கி சாப்பிட்டதாய் இப்போ தைக்கு ஞாபகம் ஏதும் இல்லை.

கடைக்காரர் வடைப்பெட்டியிலிருந்து இரண்டு இரண்டு உளுந்த வடைகளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் தட்டில் வைத்து சட்டினியும் சாம்பாரும் கலந்து ஊற்றிக் கொடுத் தார்.

பிய்த்துப்போட்டுச்சாப்பிடவும் தொட்டுச்சாப்பிடவும் நன்றாகத் தான் இருந்தது.

நண்பர்தான்சொன்னார்,கிழமைக்குஒருசட்னியும்கிழமைக்கு ஒரு வடையு மாகப் போடுவார்கள் என,,/

தேங்காய்ச்சட்னியும் உளுந்த வடையும் எல்லாக் கிழமை களிலும் நிரந்தரம் என்றார்.

மல்லிச்சட்னி ஒரு நாள், தக்காளிச் சட்னி ஒரு நாள். புதினாச்சட்னி ஒரு நாள்,துவரம்பருப்புசட்னி ஒரு நாள்,சாம்பார் ஒரு நாள் ,,,எனவும் பருப்பு வடை உளுந்த வடை,,,தவிர்த்து வெங்காய வடை,கீரை வடை,காய்கறி வடை கேப்பை வடை,,,,எனவுமாய் தினசரி ஒரு டிஸ்ஸில் கலக்குவார் என்றார்.

அங்கு நின்று டீசாப்பிடும் போது எதிர்தாற் போல் இருக்கிற பஸ்டாண்டதான் காட்சிப்பொருளாய் இருக்கும். சென்ற மாதத்தின் மாலை கவியும் நேரமாக அங்கு டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பஸ் வாசல் தாண்டி கொஞ்சம் உள்ளீடாக சலசலப்புக் கேட்டது, மெலிதாக ஆரம்பித்த சலசப்பு நேரமாக நேரமாக கொஞ்சம் அடர்த்தி சுமந்தும் சற்று நாரசமாயும் காதில் குத்தியது.சரி போய்ப்பார்க்கலாம்,முடிந்தால் தேவையைப்பொறுத்து ஆபத்பாந்தவனாக மாறலாம் என்கிற நினைப்பில் நானும் நண்பருமாக ச்சென்றோம் பஸ்டாண் டிற்குள்ளாக,/

அங்கேதான் பஸ் டிக்கெட் புக் பண்ணுகிற கவுண்டருக்குப் பக்கத்தில் ஒருவ ருடன் ஒரு பெண் சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள்,அந்தப்பெண்/

சப்தம் போட்டவளுக்கு முப்பதுக்கு மேல் இருக்கலாம் வயது,சப்தத்திற்கு இலக்கானவருக்கு நாற்பத்தைந்திற்கு மேல் இருக்கலாம்.

அவர்களுக்குள் என்ன எனத்ஹ்டெரியவிலை,அவர் யார் எனவும் ஏன் அந்தப் பெண் அவரை பிடித்து இந்த வாங்கு வாங்குகிறாள் என்பது புரியவில்லை.

”என்ன மறந்து போச்சா எல்லாம்,,,,புதுசா கை நீட்டுறீங்க ,, ,, அடிச்சிட்டா வெல கிப் போயிறுவேன்னு நெனைப்பா, நாங்க இருக்கோம் மொத்தமா ஜனங்க ஒழுங்கா மரியாதையா நேத்து அனுப்பிச்சி வச்ச யெடத்துக்கான காசக் குடுத் துட்டு யெட்டத வுட்டு நகரு சொல்லிப் புட்டேன்,இதுக்கு மேல ஏன் மேல கைய வச்ச மானம் மரியாதை எல்லாம் கெட்டுப்போகும் பாத்துக்க, வேற வழியத்துதாய்யா இந்த பொழப்புக்கு வர்றோம், வேற தெரிஞ்ச ஆள் தொண இல்லாதப்ப ஒண்ணைய மட்டும் தானய்யா நம்பித்தான இந்த பொழப்புக்கு வந்தேன், ஒன்னைய ஏங் புருசனுக்கு மேல நம்புனேனேயா, நீயி போகச் சொன்ன யெடத்துக்குப் போனேன், வரச் சொன்ன யெடத்து வந்தேன் ,குதிக்கச் சொன்ன பள்ளத்துல கண்ண மூடிக் கிட்டுக்குதிச்சேன். ஏறச்சொன்ன மேட்டுல ஏறி நின்னேன்,இது வரைக்கும் நீயி ஏங் இப்பிடி சொல்ற எதுக்காக என்னைய இப்பிடி பாடாப்படுத்துறயின்னு ஒரு வார்த்த கேட்டுருப்பேனா,,,,,அது கூட போனாபோயிட்டுப் போகுது ஏதோ பொழப்புக்காக கை காட்டுற மனுசன் என்னத்தையோ கருப்பட்டி பானைக்குள்ள கைய விட்ட கதையா கொஞ்சம் சாப்டுட்டுப் போறைன்னு நினைச்சா நீயி ஏன் பொழப்ப முழுசுமா அழிக்க நினைச்சையின்னா சும்மா விட்ருவேனா ஒன்னைய,இனிம நான் இதுல இருந்து போனாலும் ஏங்கிட்டுப்போயி என்ன வேலை செஞ்சி பொழச்சி ஏங் குடும்பத்தக்காப்பாத்துவேன் சொல்லு,ஏங் வீட்டுல ஆள் கணக்குன்னுஒன்னு இருக்கு புருசன்ங்குற பேருல,அது சம்பாதிக்கிற சம்பாத்தியம் அதோட கூத்தியா வீடு,அதுக்கு ஆஸ்பத்திரிச் செலவுன் னு சரியாப்போகுது, வீட்ல ஆம்பள ஒழுங்கமா இருந்த நான் இப்பிடி பொழப்பத்து தொண்ணாந்துட்டுத் திரிறேன் சொல்லு,நீயி பெரிய இவனாட்டம் ஆட்டய களக்கப் பாத்தியின்னா எப்பிடி,,கொஞ்ச நாளா ஒருத்தி மினிக்கிட்கிட்டே சுத்திக்கிட்டுதிரியிறா அவள வளச்சிப் போட்டுறலாம்ன்னு பாத்துட்ட,,,என்னைய விட்டுட்டு,,,, ”என்றாள்,

”இல்லம்மா அப்பிடியெல்லாம் ,,,,,என அவர் எவ்வளவு தான் சமாதானம் சொல்ல முயன்ற போதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவள். இத்தனைக்கும் அவளது சொந்தக்காரன்தானாம் அவர்.அவர்தான் இவளை இவ்வழிக்கு பழக்கப் படுத்தியிருக்கிறார் என்றாள்.

எல்லாம் முடிந்து கடைக்கு வந்து இன்னொரு டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கை யில் அந்தப்பெரியவர் வந்தார்,நாந்தான் கேட்டேன் மெதுவாக,என்ன அண்ணே என்னாச்சி ஏங் இவ்வளவு தூரம் சப்தமாகிப்போச்சி,,, எனக் கேட்டதற்கு அவ சொன்ன விளக்கமாய் இதுதான் தெரிய வந்தது.

”இல்லப்பா பெரிசா ஒண்ணும் இப்ப துப்பாக்கி தூக்கி சண்ட போட்றல நாங்க என்ன ஆள்க கூட்டமா நிக்குறயெடத்துல நடந்தததால பெரிய விஷயமா தெரிஞ்சிருச்சி,

அவ வேற யாரும் இல்ல,ஏங் சொந்தக்காரப்புள்ளதான், எங்க ஊருதான், ரெண்டு பேரும் பக்கத்துப்பக்கத்து வீடு கூட,அவளுக்கு சின்ன வயசுல வேற ஒருத்தன் மேல பிரியம் இருந்துச்சி,அவன் இல்லாத வீட்டுப் பையன், என்ன செய்ய வீட்டுல இந்த பொண்ண அமட்டி சத்தம் போட்டு வசவா வஞ்சி பேச்சா பேசி இவுங்க அப்பன் ஆத்தா நாங்க சொல்ற பையனுக்கு வாக்கப்படலைன்னா தீய வச்சிக்கிட்டுசெத்துப் போவோம்ன்னு மெரட்டி காரியம் சாதிச்சிட்டாங்க, பெறகு என்ன செய்வா பாவம் மனசுக்குப் பிடிக்காதவனோட ரெண்டு பெத்துக் கிட்டுதான் குடும்பம் நடத்துனாதா,ஆனா இவ புருஷன் காரன் வேற ஒருத்தி கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தான்,

இது கல்யாணத்துக்கு முன்னாடியே இருந்துருக்கு, அப்பறம் என்ன யெழவு பேசாம இருந்துருக்க வேண்டியதுதானேன்னு கேட்டா இந்தப்புள்ளயோட அப்பன் ஆத்தா சொன்னாங்க கல்யாணம்முடிஞ்சா சரியாகிப்போகும்ன்னு நெனைச்சோம்ன்னு/

வம்படியா முடிச்சி வச்ச கல்யாணத்துல இதுதா ஆச்சி இவ இப்பிடியும் அவன் கூத்தியா வீடே தஞ்சம்ன்னு கெடக்கவும் சரியாப் போச்சி ,

அதுக்குபல காரணங்கள அடுக்குறாங்க,இவளோட வீட்டுக் காரந்தான் இவளை இந்தப்பழக்கத்துக்கு ஆளாக்கி விட்டான்னு வேற பேசிக்கிறாங்க,எது எப்பிடி யோ இப்பிடி ஆகிப் போச்சி பொழப்புன்னு ஏங்கிட்ட வந்து அழுதா,நாந்தான் அவள இப்ப கூட்டிகிட்டு வந்து போயிக்கிட்டு இருக்கேன்,,,,,,”என்றார்,

அந்தக்கடைக்குப்போகிற நாளன்றின் முடிவுகளில் அல்லது ஆரம்பத்தில் இது போலான நிகழ்வுகளை பார்ப்பதுண்டு.

அந்தக்கடையில் டீ சாப்பிட்டு விட்டு வந்து கொண்டிருக்கும் போது தான் பார்க் கிறேன் அவனை.

நான் ஆட்டிய கையை அவன் பார்த்தானா இல்லையா தெரியவில்லை.முன் சென்ற அவனதுஇரு சக்கர வாகனத்தை எவ்வளவுதான் வேகமாய் பின் தொட ர்ந்த போதும் அதை எட்ட முடியாமல் கிலோ மீட்டர்களின் முடிவில் எட்டித் தொட்டுவிடுகிறேன் கொரியர் ஆபீஸ் அது தாண்டி வந்து விடுகிற ட்ராபிக் சிக்னல்,பர்மாக் கடை,பஜார் முக்கு ,,,,என்கிற அடுக்கில் அவனுக்குச் சொன்ன வணக்கத்தின் விசையுடன்,,,/

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சில குடும்பங்கள்இப்படித்தான் ஆகிவிடுகின்றன

Yarlpavanan said...

அருமையான கதை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாம் ஒன்று நினைக்க...

vimalanperali said...

வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
யதார்த்தம் சுடும்/

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றியும் பிரியங்களுமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
யதார்த்தங்களின் சுடு தன்மை,,,/

Nagendra Bharathi said...

கதை அருமை

vimalanperali said...

நன்றியும்.பிரியமும்/