15 Oct 2016

எட்டித்தொட்டு விடும் தூரம்,,,,,/

பூத்துக்காய்த்துத்தொங்குகிற கிளைகளின் அடர்வுகளிலும் அது காட்டுகிற இலைகளூடு மாய் கூடு கட்டி அடைகாத்து குஞ்சு பொரித்து உயிர் வாழ்கிற பறவைகள் யாவும் சொல்வதில் லை.தாங்கள் வசிக்கிறஇருப்பிடம் தூரம் என,,,/ தவிர அவை பறப்பதையும், தனது இறகுகளின் அசைவுகளை மட்டுமே நம்பியுள்ளன.

அப்படியாய் தோற்றம் கொண்ட பறவைகளின் வசிப்பிடமான மரங்கள் எதில் அழிகிறதோ இல்லையோ நகரங்களுக்குள்ளாகவும், கிராமச் சாலை ஓரங்களிலும் விரிவு படுத்தும் போது அகற்றி விடுகிறார்கள் முதல் காரியமாக/

ஒரு ரூம் அட்டாச்ட் பாத்ரூமுடனாய், தவிர்த்து ஒரு பாத்ரூம் லெட்ரின் என கட்டி விடலாம், கையிலிருக்கிற கொஞ்ச நஞ்ச காசை வைத்தும் தேவைப்பட்டால் கடன் வாங்கியுமாய் என்கிற யோசனையுடன் இருந்த நாட்களில்தான் மாப்பிள்ளை மூணா ராணாவை பார்க்க நேர்ந்து விட்டது யதேச்சையாக/

”என்ன மச்சான் வீட்டு வேலைய பாக்கப் போறிங்களாம்ல,கேள்விப்பட்டேன்,என்றபோது ஆமா மாப்ள,புள்ளைங்க வளந்து நிக்குதுங்க,எங்களுக்காக இல்லைன்னாலும் புள்ளைங் களுக்காக பாக்க வேண்டியிருக்கு பெரியவ இப்பயே மூஞ்ச மூஞ்ச பாக்குறா தனியா இருக்க முடியல, வீட்லஒரு பிரவேஸி வேணுமில்ல,அது இல்லாதப்பா எப்பிடி ஒரு வயசுப்புள்ள,,,,,ன்னு சொல்ற ப்ப சங்கடமா இருக்கு,  சின்ன மகனும் அவ கூட சேந்துக்கிறான்.அதான் பாத்தேன்,சரி யெடம்கெடக்குள்ள ஒரு ரூம் யெக்ஸ்ட்ரன் பண்ணீரு வோன்னு பாத்தா அது செப்டிக் டேங்கு, லெட்ரின் பாத்ரூம், எக்ஸ்ட்ரா, எக்ஸட்ரான்னு வளந்து நிக்குது, என்ற என் பேச்சைக்கேட்ட மாப்பிள்ளைஅப்பன்னாகையிலவச்சிருக்குறதுகாணாதபோது நகை நட்ட வச்சித்தான ஆகணும், ஏந்தக்கச்சி கழுத்துல காதுல கெடக்குறது அடகுக்குப் போயிரும். அப்பிடித் தான என்றவனை இடை மறித்து ஆமா பெரிய ரொக்கப் புள்ளியப்பா,போன வருசம் நீயி மசுராண்டி வீடு மராமத்துவேலைபாத்தப்ப  ஏந்தக்கச்சி மூக்குத்தியக்கூடவுட்டு வைக்கலையே,,,,,,அந்த மூக்குத்தி தான் அவளுக்கு பொருத்தமாயிருக்கும். அதையும் புடுங்கிக்கொண்டோயி வச்சிறய லா நீயி,,,,,, இப்ப வந்துட்டு என்னமோ பெரிசா பேச வந்துட்ட என்ற என்னை இடை மறித்து அட போ மச்சான் அதை ஏன் கேக்குற கொடுமையிலும் கொடுமை,கையில இருக்க காசெல்லாம் போட்டு வீட்டு  வேலை பாத்து பாத்துட்டு எந்திரிச்சி நின்னப்பதான் அடுத்தபத்து நாள்ல பொங்கல் திருவிழா வந்துருச்சி,என்ன செய்யிறதுன்னு கையப்பெசஞ்சி நின்னப்ப ஓங்தங்கச்சி மூக்குத்திய கழட்டி கையில குடுத்தா,அதக்கொண்டோயி பேங்குல வச்சப்ப அவுங்க கல்லுக்குன்னு கழிவு போக மிச்சம்ன்னு சொற்பத்தொகை ஒண்ணக் குடுத் தாங்க,அதான் அந்த வருசம் தைப்பொங்கல கொண்டாட ஒதவுச்சி,ஓந்தங்கச்சி மூக்குத்தி தான் எங்க எல்லாரு மானத்தையும் காப்பாத்துச்சி மாப்ள,,,, இல்லைன்னா அந்த வருசம் பொங்கலுக்கு கரும்பு கூட வாங்கீருக்க முடியாது.”ஆமா என்றான்.

அங்க ஆரம்பிச்சவீடு நெல கொண்டு முடிஞ்சிருச்சி,இங்க இனிமேத்தான் எல்லாம்முடியணும் மாப்ள,அப்பிடி ஆகுற அந்த நேரத்துல கம்மல் என்ன மூக்குத்தி என்ன, எல்லாம் கலந்து போறதுதான் என்ற என்னை ஏறிட்டவன் ஒனக்கு என்ன மாப்புள கவர் மெண்டு வேலைக் காரன். நான் என்னதான் ஏக்கரா கணக்குல வச்சிருந்தாலும் தெனக் கூலிக்காரந்தான” எனச் சொல்லிவிட்டுப்போனான்.

அன்று இருவரிலுமாய் காலூன்றிய அந்தப்பேச்சு துளிர்த்து நின்று வேர்விட்ட போது நல்ல கொத்தனாரை பார்க்க வேண்டுமே என்கிற எண்ணம் துளிர் விடாமல் இல்லை.நல்ல கொத்த னாரும் நல்ல தச்சாளும் அமைந்து விட்டால் வீடு கட்டுகிற நாட்களில் ரொம்ப பாக்கியவான் நீங்கள் என்பார் நண்பர்/

நான் பாக்கியவானா அபாக்கியவானா என்பது இன்னும் சிறிது நாட்களில்வேலைஆரம்பிக்கிற போது தெரியும்,அதன் படியே நடந்து கொள்ள வேண்டியதுதான்.அதன் படியே சிறிது நாட்கள் கழித்துக் கொத்தனாரைக்கூப்பிட்டு சாமி கும்பிட்டுவிட்டு அவருக்கு தட்சணை கொடுத்து முடித்த உடன் அவர் சொன்ன முதல் வார்த்தை வானம் வருகிறது இந்த இடத்தில் மரத்தை ஒட்டி,ஆகவே வெட்டி விடுங்கள் அதை முதல் வேளையாக என்றார்.கையோடு நாளை ஆள் அனுப்புகிறேன் இரண்டாவது சிந்தனைக் கெல்லாம் இடம் வைக்காமல் முடித்து விடுங்கள் என்றார்.

மரத்தை வெட்டி விட்டு வானம் தோண்ட வேண்டும் என கொத்தனார் சொன்ன இடத்தில் லெட்ரின்வருகிறது, பதினைந்து வருடங்களுக்கு முன்பான ஒரு மழை நாளின் மாலை வேளை யாக உசிலம்பட்டி கார்டனில் போய் வாங்கி வந்த வேப்பக்கன்று பதினைந்து ஆண்டுகள் கழித்துமண்பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளை பாவி நெடித்து ஓங்கி பூவும் பிஞ்சுமாய் காட்சிப் பட்டு நிற்கையில் பூப்பத்தெல்லாம் காய்ப்பதற்குத்தானானாலும் காய்த்துப்பழுத்து கனி கொடுத் தவை ஒரு நாளில் வீழ்ந்து விடுமோ இந்த மண்ணில் என அந்த மரத்தை வெட்டிய நாளில் இவனுக்குகண்ணில்நீர் துளிர்த்து விட்டதுதான். சின்னவனானாள் இந்த மரத்தை விட்டு விட்டு வானத்தைத் தோண்டுங்கள் என்றான்.சரி பரவாயில்லை அப்படியே செய்து விடுவோம் என அவனை ஏமாற்றி பள்ளிக்கு அனுப்பி விட வேண்டியதாகிப்போகிறது.

வேர்களும்கிளைகளும்இலைகளும் பூக்களும் காய்களும் கனிகளும் ஊடு பாவி நெசவோடியி ருந்த பந்தத்தை பிரித்த வருத்தம் ஒரு வாரம் வரை இருந்தது கழிவிரக்கப் பேச்சுடனும் நடவடிக்கையுடனுமாய்/

இவனது கழிவிரக்கத்தில் அவன் மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து ஜனனம் எடுத்த பறவைகளும், மரத்தின் மீதாய் நெளிந்து திரிந்த புழுக்களும் இன்னபிற ஊடாடிய ஜீவன்களும் நீண்ட நாட்க ளாய்  கனவில் வந்து போனது.

புழு வந்த கனவும் பூச்சி வந்த கனவும் ஒவ்வொரு நாட்களின் நகர்விலும் ஒவ்வொன்றும் இவனை உறங்க விடவில்லை.

பின் வீட்டுக்காரி கூட கேட்டாள் எதுக்கு இப்ப மரத்தப்போயி வெட்டுறீங்க என,,/

அவள்கயலூர்க்காரி,இங்கு வாக்கப்பட்டு வந்தவள். பிழைப்பற்ற சுடுகாடான தேசம். மண்ணைத் தவிர மற்றதெல்லாம் குற்றம் பூசி வைக்கப்பட்டிருந்த பழக்கம் கொண்ட ஊர் அது.

ஆண்கள்பக்கத்து ஊர் கடைகளுக்கு கூலியாய் போனபின் பெண்கள் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கொண்ட ஊராயும் பிழைக்கக்கதியற்ற பூமியில் பின் வீட்டுக் காரியின் அப்பாவும் இரண்டு அண்ணன்களும் வேலை பார்த்த மில்லில் அடி தடிக்கும் போலீஸ் கேஸீற் குமாய் ஆள்அனுப்பும் போது அவர்கள் வேலை பார்த்த கடையின் முதலாளி கொலைக் கேஸ் ஒன்றில் கோர்த்து விட்டு விட்டார் அண்ணன்கள் இரண்டு பேரையும்/

வேறு ஒரு வீட்டிற்கு கூலியாய் போன வேலையாள் அந்த வீட்டில் தனியாக இருந்த பெண் போட்டிருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவளைத்தீர்த்து விடுகிறான்.தீர்த்தவன் தயவு காட்டும் பெரும் புள்ளியிடம் போய் தஞ்சம் அடைந்து விடுகிறான்.அந்த பெரும் புள்ளிக்கு அவன் தான் சகலமும் சப்ளை அண்ட் சர்வீஸ்/

அந்தசகலத்தையும் அனுபவித்த ஒருவராயும் அண்ணன் தம்பிகள் இரண்டு பேரையும் கொலை கேஸீற்கு கொடுத்தவராயும் அவர்கள் வேலை செய்த மில்லின் முதலாளி இருந்தார்.

சரி என ஒத்துக்கொண்டாலும் இது நாள்வரை சின்னச்சின்ன திருட்டு அடிதடி என போலீஸ் ஸ்டேசன்,கோர்ட் என போய் வந்தவர்கள் கொலைக்கேஸ் எனவும் யோசித்தபடி பின் வாங்கி விட்டார்கள். முதலாளியிடம் ஒத்துக்கொண்டு போனவர்கள் அவரது வக்கீலின் உதவியாளர் யோசனைப்படி கையில் சிக்கியதை அள்ளிக்கொண்டு ஊரை விட்டு காலி செய்து கொண்டு இங்கு வந்து விட்டார்கள்.இந்த யோசனையைச்சொன்ன வக்கீலின் உதவியாளருக்கு கோயில் கட்டிக்கும்பிடத்தான் வேண்டும் இவர்கள்.

“டேய் இப்பிடியே இருந்தீங்கின்னா எப்பிடி,எத்தன காலம் இப்பிடி அலைவீங்க, ஒங்களுக் கும் கல்யாணம் காச்சி புள்ளகுட்டி குடும்பன்னு ஆக வேண்டாமா,ஏண்டா போயிக்கிட்டு வம்ப இழுத்து மடியில கட்டிக்கிட்டுத் திரியிறீங்க,,,,,,என உண்மையை உணர்த்தி அவர்களை இங்கு அனுப்பி வைத்தபின் இங்கேயே செட்டில் ஆகி திருமணமும் செய்து வைத்து விட்டார்கள் தங்கைக்கு,/

அவர்களும் ஆளுக்கு ஒரு ஸ்பின்னிங்க் மில்லில் வேலையாக இருக்கிறார்கள்,அவர்களது அம்மா சிவகாசி ரோட்டிலுள்ள பஞ்சுக்கிடங்கில் வேலைக்குப்போகிறார்,அவர்களது அப்பா ஏ.டி.மில் செக்யூரிட்டியாக இருக்கிறார்,

மகள் வீட்டிலேயே ஒரு சின்ன ரூமில் அவருக்கென தங்க தூங்க என ஒதுக்கியிருந்தார்கள். அவரது மருமகனும் அவரை நன்றாகப் பார்த்துக்கொண்டார்,அவரது சின்ன வயதிலேயே அவரது அப்பா இறந்து விட்டதால் அந்த பாசம் என சொல்லவா வேண்டும்,,,,? பாசம் ஒரு பக்கமாய் இருந்த போதும் ஆயிரம் இருந்தாலும் மகள் வீடுதானே ஓசிக்கஞ்சி அல்லவா நாம் சாப்பிடுவது ஒட்டுமா  உடலில்,முடிந்தவரை தனியாளாய் ஓடிக் கொண்டிருப்போம் முடியாத போது வந்து இங்கு படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்த நாட்களின் இரண்டு பகல் பொழுதுகளிலேயே வீடொன்றைப் பார்த்து விட்டார்கள்,

அவர்கள்பார்த்தவீட்டில்பால் காய்ச்சி குடியேறிய நாளன்றுதான் இப்படிக்கேட்டாள் பின் வீட்டுக் காரி,இவனும் சொல்லி சமாளித்தான் முடிந்தவரை,ஆனால் அவள் சமாதானம் ஆனது போல் தெரியவில்லை.


பூத்துக்காய்த்துத்தொங்குகிற கிளைகளின் அடர்வுகளிலும் அது காட்டுகிற இலைகளூடுமாய் கூடுகட்டி அடைகாத்து குஞ்சு பொரித்து உயிர் வாழ்கிற பறவைகள் யாவும் சொல்வதில்லை. தாங்கள் வசிக்கிற இருப்பிடம் தூரம் என,,,/ தவிர அவை பறப்பதைத் தவிர்த்தும்,தனது இறகுகளின் அசைவுகளை மட்டுமே நம்பியுள்ளன.அப்படியாய் தோற்றம் கொண்ட பறவை களின் வசிப்பிடமான மரங்கள் எதில் அழிகிறதோ இல்லையோநகரங்களுக்குள்ளாகவும், கிராமச் சாலை ஓரங்களிலும் விரிவு படுத்தும் போது அகற்றிவிடுகிறார்கள் முதல் காரியமாக/

4 comments:

Nagendra Bharathi said...

மரங்களைக் காப்போம்

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்,
மேலான அன்பிற்கும்/

KILLERGEE Devakottai said...

யதார்த்த நிகழ்வுகளின் பேச்சொலிகள் அருமை நண்பரே
வீட்டு மரமும், குடும்பத்தின் அங்கத்தினர்தான்
த.ம.1

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/