11 Mar 2017

காற்றுடைந்த வெளி,,,,,


அந்த வீட்டிலிருந்த பெண் இறந்து போகிறாள்.அவளது பெயர் ராமாமிர்தம்.


அதென்னகாளியம்மா,மாரியம்மா,சாந்தின்னுபேருவைக்கிறஊர்லபோயிக்கிட்டு ராமாமிர்தம்ன்னு வச்சா,,,,ஹூம் ரொம்பத்தான்,,,,ராமமிதமாமில்ல, ராமாமிர் தம் பெரிய உலகத்துல இல்லாத பேரு,,,,,என உற்றார் உறவினர் அக்கம் பக்கம் இடித்துரைத்தபோதும்கூட அவளது அம்மா அந்தப்பெயரைவைத்து விட்டாள்.

ராம+அமிர்தம்ஒன்று சேர்த்தால் முழுப்பெயர் வருகிறது. என அவள் சோட்டுப் பிள்ளைகள்அந்தப்பெயரை சுருக்கியும் விரித்தும் பிரித்தும் சேர்த்துமாய் எழுதி யும் சொல்லியும் பார்த்துக்கொண்டார்கள்.

ஏல ராமி,ஐ பஸ்ட்,ஏ,,,,,புள்ள அமிர்தம் ஐ, சிகெண்ட்,இந்த புள்ள ராமா,,,,,,,,,,,ஐ தேர்ட்,,,எனவிளையாடிக்கொண்டிருக்கிறவிளையாட்டில்,,,,,,பர்ஸ்ட்,செகெண்ட், தேர்ட்,, எனசொல்லிக் கொண்டார்கள்.அவர்களூக்குள்ளாயும், ராமாமிர்தத்தை சேர்த்துமாய் /

”ஏவுள்ளஅங்கஎன்னத்த அந்த மானிக்கி விளையாட்டு, வெளையாண்டு என்ன த்தக்கண்டுட்டவ,,ஒழுக்கமா வீடு வந்து சேரு, சோறு தண்ணி ஆக்கப்பழகிக்க ,,,நாளைக்கி இந்நோர்த்தன் வீட்ல போயி நிக்கையிலஏந்தலை உருளும்.புள்ள வளத்துருக்க வளமையப்பாருன்னு, அந்நேரம் நாக்கப்புடிங்கிட்டெல்லாம் நிக்க முடியாது என்னால”,,,,என பத்து வயதிலிருந்து தாயால் திருத்தி வளர்க்கப் பட்டராமாமிர்தம் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில்இறந்து போகிறாள்.

எந்தப்பொண்ணு,,,,?

அதான் நம்ம ராமாயியக்கா மக,,,/

என்னவாம்,,,,?

தெரியல,,,,சொல்றாங்கவாயிகூசியும்,கூசாமயும்,இதுபோலானநேரங்கள்லதான் நரம்பு இல்லாத நாக்கு என்னவேணாலும் பேசும்ங்குறது உறுதியாகிப் போகுது, பேசுறவுங்க நாக்கு அழுகிப்போகும் அந்தப் பேச்சுல தப்பிருந்தா,,,,என சொல் கிற அளவிற்காய் பேச்சு ஓடி விரிந்திருந்தது ராமாமிர்தத்தின் இறப்பு பற்றி/

எந்த வீடு,,,,,,?

அதான் அங்கயிருக்கில்ல,அந்த வீடுதான்,,,,

அந்தவீடுதான்,அந்தவீடுதான்னு,,,,சொன்னா எப்பிடி,,,,,?எந்த வீடு,எங்க இருக்கு, எந்த வீதியில யாரால நடப்பட்டிருக்கு அந்த வீடு,,,,?

”அதுஎதுக்குஒங்களுக்கு,அதான்சூசகமா சொல்லியாச்சுல்ல அந்த வீடுதான்னு, இன்னும் விளாவாரியா கேட்டுட்டுப்போயி அங்க போயி தம்பட்டம் அடிக்கி றதுக்கா,அதுக்குள்ள அங்க போயி இந்த வீடுதான் அது,இந்த வீட்லதான் இந்த மாதிரிஒருகெட்ட சம்பவம் நடந்து போச்சின்னு தம்பட்டம் அடிச்சிட்டுத் திரியி றதுக்கா,,,?”

”இல்லைய்யா தம்பட்டம்அடிக்கிறதுக்காகவாஒன்னையரெண்டு நாளா சுத்திச் சுத்தி வந்து தகவல் கேட்டுக்கிட்டு இருக்கேன்.எனக்கும் ஒரு வீட்டப்பாத்து வச்சிக்கிட்டா நாளப்பின்ன யாராவது வாடகைக்குக்கேட்டா சொல்லலாம்ல, என்னத்தையோ நானும் ரெண்டு வருமானம் பாத்துக்கிருவேன்ல,,,, என்று சொன்னதரகர்கேட்டவீடு வடக்குத்தெருவிலிருக்கிறது,

ரோடு விட்டு கீழிறங்கிப் போனால் கோடு கிழித்தது போலிருக்கும் தெருவில் மேல்நோக்கிப்போனால் சென்றதிசையில் எதிர் வந்து நிற்கும் வீடு,என அடை யாளத்தைபடமிட்டுக்காட்டிவிட்டுகோவிச்சிக்கிறதய்யா,,,,,ஏற்கனவே நொந்து போன குடும்பம் ஆம்பளப்புள்ள போல இருந்த ஒத்தப்புள்ளயையும் சாவுக்குக் குடுத்துட்ட பெறகு அந்த வீட்டுக்கு வருமானம்ன்னு பெரிசா ஒண்னும் கெடை யாது பாத்துக்க,இருக்கிற தோட்டங்காடுகள்ல வேலை செய்யவும் செத்துப் போன புள்ளையோட அப்பனுக்கு தெம்பு கெடையாது.சீக்காளி பாவம்,என்ன செய்வாரு,அவருக்கு இப்பதைக்கி இருக்குறது அந்த வீடு மூலமா கெடைக்கப் போற வாடகை வருமானம் மட்டும்தான் ,அதான் நானும் யாருகிட்டயும் சாமானியத்துல சொல்றதில்ல,நம்ம வாய்ப்பேச்சு மூலமா எதுவும் கெட்டுப் போயிறக்கூடாதுன்னு/என்கிற பேச்சு ஊர் உலவிக்கொண்டிருந்த நாட்களில் இவனும் இவன் நண்பனும் குடியேறினார்கள் தைரியமாக,/

வீட்டுக்காரரும் வீடு சும்மாக் கிடந்தால் மூதேவி அடைந்து போகும் என இவர்கள் கைவசம் ஒப்படைத்தார், வாடகை என்கிற பெயரில் ஏதோ வாங்கிக் கொண்டு/

அந்தவீட்டில்குடியிருந்தநாட்களில்தான்நம்பியும்,அவனதுஅம்மாவும்,அப்பாவும் பழக்கம்,சின்னப்பையன் பார்க்கவும்தூக்கிக்கொஞ்சவும் பஞ்சுப்பொதி போல இருக்கும்அவன் விட்டுமுறை நாட்களில் தினத்தின் பாதி நாளில் இங்கு தான் இருப்பான்,

எதிர்த்த வீடுதானே,பழக்கமாகித்தானே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இல்லாமல்ஆத்மார்த்தமானகுடும்பப்பழக்கமாய்இருந்தது,அவர்களதுபழக்கம்/

கோயம்புத்தூரில் இருந்து பிழைக்க வந்த குடும்பம்.வட்டிக்கு விட்டு பிழை த்துக்கொண்டிருந்தார்கள்,சுத்துப்பட்டியில் இருக்கிற இல்லாதவர்களின் வீடுக ளில்அவர்களதுபணமும் காசும்தான் பெரும் உதவியாகவும் அவர்களது பிழை ப் பிற்குகைகொடுக்கவுமாய் செய்தது.

அப்படியாய் கைகொடுத்த நாட்களிலிருந்து இறந்து போகிற தினத்தன்று வரை ராமாமிர்தத்தின் நன்றாகவே பழகி வந்தாள் அவர்களோடு எனத்தான் சொன் னார்கள்.

இறந்து போன ராமாமிர்தம் நல்ல வேலைக்காரியாம்,ஒரு ஆண்பிள்ளை செய் கிற வேலையை தனியாளாகசெய்துமுடிப்பாளாம்,இறப்பதற்கு இரண்டு நாட்க ளுக்கு முன்பாகத்தான் தனி ஒரு ஆளாக இருந்து வீடு முழுவதும் வெள்ளை அடித்து முடித்திருக்கிறாள்.கூட ஒரு பக்கத்து வீட்டு சின்னப்பையனை வைத்துக் கொண்டு/அவன் கூட உதவிக்குத்தான் ஏதாவது எடுத்துக்கொடுக்க எடுக்க என,,,,/

வருடத்திற்கு ஒரு தடவை அவள்தான் இந்த வீட்டிற்கு வெள்ளை அடித்தி ருக்கிறாள்.

சிலபேர் அவளது இறப்பை தற்கொலை என்கிறார்கள்,இன்னும்சிலபேரானால் அவளது இறப்பை இயற்கையானதுதான் என்கிறார்கள்,எதை நம்புவது எனத் தெரியவில்லை.

ஆனால் அவள் இறந்து போன மறுவாரம் அவளது தோழி தான் அந்த வீட்டின் முன்பு கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போட்டாள்.

அவளதுதோழிகூடஅந்தப் பெண்ணின் மரணம் இயற்கையானதா தற்கொலை தானா என யாரிடமும் சொல்ல மறுத்து விட்டாளாம்.

அந்தப்பெண்ணின் அப்பாவிடம் மட்டும் சொன்னதாகச் சொல்வார்கள். அடப் பாவிமகளே,இப்பிடின்னுஒருவார்த்த சொல்லியிருந்தா அவனுக்கே இவளைக் கட்டி வச்சிருப்பேனே,,,/பாவி மக இப்பியா பண்ணுவா,,, என அழுது விட்டுச் சொன்னாராம்,

நல்லாவாழவேண்டியவயசு,விளைஞ்சி நின்னா,,,பருவத்துக்கு சவால் விட்டுக் குட்டு,,,,அவளுக்கு வெனையே அவளோட கள்ளமில்லாத வெளைச்சல்தான் போலயிருக்கு.ஊருக்குள்ள வயசு ப்பையக அத்தன பேரு சுத்தி வந்தும் கூட அவளுக்குப்பிரியம் அவ மாமன் பொன்னுராசு மேலதான்.

கெடயாகெடப்பா,தவியாதவிப்பாபொண்ணுராசுமாமா,பொண்ணுராசுமாமான்னு,, ,அவன்அப்பிடி ஒண்ணும் இவளதூக்கி வச்சி கொண்டாடுறவனல்லாம் கெடை யாது.இவதான் ஏதோ கெதியத்துப்போயி திரிஞ்சாமாதிரி அவன் பின்னாடியே சுத்திக்கிட்டு திரிஞ்சா,

அவனையும்சும்மாசொல்லக்கூடாது,வேலைன்னுநெலையாஒண்ணும்இல்லைன்னாக் கூட அவனாட்டம் கெடச்ச வேலைய செஞ்சிக்கிட்டு சம்பத்திச்சிக்கிட்டு காட்டாறு போல ஓடிக்கிட்டுத்திரிஞ்சான்.

கூலி வேலைதான்,கெடைக்கிற வேலைய செய்யிறவந்தான்னாலும் கூட அவன் வேலையில இருக்குற நெளிவு சுளிவு இத்த வட்டாரத்துல இருக்குற கூலிக்காரங்கிட்ட யாருகிட்டயும் கெடையாதுன்னு சொல்லலாம்.

அவ்வளவு ஒரு தெளிவு நறுவிசு,பவுசு வேலையில,,,,,,,, உதாரணத்துக்குச் சொல்லப் போனம்ன்னா பழைய கட்டிடம் ஒண்ணு இடிக்கவோ இல்ல பழைய வீட்ட புதுப்பிக்கவோ போற யெடத்துல ஏதாவது இடிக்கனும்ன்னா இவனத் தான் விடுவாங்க,வேற யாருக்கும் இடிக்கத்தெரியாமையோ இல்ல இடிக்க மாட்டாமயோ இல்ல,அவுங்கநாளு முழுக்க செய்யிற வேலைய இவன்ஒரு ரெண்டு,மூணு மணி நேரத்துல செஞ்சி முடிச்சிட்டு வந்துருவான்,

என்ன ஏதுன்னு போயி கேட்டம்ன்னா அவுங்க மாங்கு மாங்குன்னு செய்யிற வேலைய இவன் கொஞ்சம் பொறுத்து நிதானமா செஞ்சாக்கூட எங்கதட்டுனா எப்பிடி போயி எந்தப்பக்கம் விழும் எவ்வளவு விழும்,விழுகுறது முழுசாவா இல்லை அரை கொறயாவான்னு கணிச்சிப்பாத்து செய்யிவான்.ஒடம்பயும் போட்டு பாடாப் படுத்தி புண்ணா ஆக்கிக்கிறமாட்டான்னு சொல்வாங்க,

அவனப்பாக்கையில கூட வேலை செய்யிறவங்களுக்கு போறமை ஏற்பட்டுப் போற அளவுக்கு வேலை செய்யிவான்னா பாத்துக்கவேன்,இது மட்டும் இல்ல, கட்டட வேலை,மம்பட்டி வேலை,மரம் வெட்டப்போக வெறகு வெட்டப் போகன்னு எந்த வேலையையும் விடுறதுல்ல,

அப்பிடி இவன் போற எந்த வேலையும்,வேலைத்தளமும் இவனை சந்தோ ஷம் கொண்டு ஏத்துக்குரும்.இவன் வேலை க்குக் கூப்புடுறவுங்களும் சந்தோ ஷமா வேலைக்குக்கூப்புடுவாங்க,,,,,/

சில பேரு செஞ்சி முடிச்ச வேலையப்பாத்தம்முன்னா வயித்தெரிச்சல்தான் வரும்,ஆனா சில பேரு வேலை செஞ்சிக்கிட்டு இருக்கும் போது பாத்துக் கிட்டேஇருக்கலாம்போலஇருக்கும்.அந்தமாதிரியானரகத்தச்சேந்தவன்நம்மாளு.

அதுக்காகவே அவன் வேலைக்கி டிமாண்ட் இருந்துச்சி.அவனுக்கும் கொராக்கி யும் இருந்துச்சி வேலை சீசன்கள்ல, அவன கையில பிடிக்க முடியாது, அவனும் வாங்குற சம்பளத்துக்கு வஞ்சமில்லாம வேலை செய்யிற ஆளு. ஆமா சும்மா வேலைக்கு வந்துட்டு ஒடம்ப நெளிச்சிக்கிட்டி ஒக்காந்து கதை பேசுறவுங்க மாதிரியெல்லாம் வேலை பாக்க மாட்டான்,அது போல ரெண்டு மூணு பேர அவன் கூட தொணையா சேத்துக்கவும் மாட்டான்.

ஏன்னா கூட வர்றவங்களால அவன் வேலையும் பேரும் கெட்டுப் போகும். இல்லைன்னா அவுங்க தப்பா செஞ்ச வேலைக்கு பழி இவன் மேல விழும், இல்லைன்னா இவன் மேல வம்பு கட்டி விட்டுருவாங்க,அதுக்குப்பயந்தே பாவம் அவனும் சேர்றதுமில்ல,பக்கத்துல யாரையும் சேத்துக்குறதுமில்ல, அவன்அந்தவகையிலவேலைத்தளங்கள்ல செய்யிற ஒரே வேலை அவுங்க ளோட ஒக்காந்து டீ சாப்புடறதுதான்.அதோட விட்டுறுவான்,

வருசமெல்லாம் இது போல அவனுக்கு உள்ளூர்ல வேலை கெடைச்சிக்கிட்டு இருந்தப்பகூடயும் ஊரெல்லாம் கூலிகாரங்க சும்மா இருக்கும் போது கூடயும் இவனுக்கு வேலை பஞ்சமில்லாம இருந்த நேரத்துலயும்,,,,, இவனுக்குள்ள ஒரு ஆதங்கம்,என்னடா இது நித்தம் ஒவ்வொரு யெடமா வேலைக்கி அலை ஞ்சி திரிய வேண்டியதிருக்குது.பேசாம ஏதாவதுஒரு மில்லுல வேலை கேட்டுப் போயிற வேண்டியதுதான்.ஒரு மதிப்பாவும் போகும் .அழுக்குப்படமா ஒரு கட்டம் போட்ட லுங்கி ஏதாவது ஒரு கோடு போட்ட அரைக்கை சட்டை, நல்லவளிச்சிசீவுன தலைமுடி,கைகால் நெறைய நெறைஞ்சி தேய்ச்சிருக்குற எண்ணெய்ன்னு ஒரு சைக்கிளோட பளபளன்னு போயி வரலாம்.சைக்கிள பளபளன்னு தொடச்சி எண்ண போட்டு வச்சிருக்கலாம்.என நினைத்த நாள் முதல் கொண்டாய் அவனுக்குள்ளாய் அவனுக்குள் ரோல் மாடலாய் உறை ந்து கிடந்தது உள்ளூர்க்கார பாண்டி அண்ணந்தான்,

அவர் துலுக்கனத்தூர் பஞ்சு மில்லில் வேலை செய்கிறார்,காலையில் எட்டு மணிக்குவேலைக்குக் கிளம்புகிறவர்இரவு பத்து மணிக்கு மேல்தான் வருவார்,

ரோமக்கட்டைதட்டாத ஷேவிங்கும் கட்டம் போட்ட லுங்கியும் வெள்ளைச் சட்டையுமாகத்தான் இருக்கும் அவரது தோற்றம்,மில்லுக்கு வேலைக்குச் செல்கிற நாட்களில்/

சைக்கிளை எப்பொழுதுமே பளிச்சென துடைத்து சுத்தமாகத்தான் வைத்திரு ப்பார், ஒருவர் தன் வாழ் நாளில் சைக்கிளை எப்படி வைத்திருக்க வேண்டும் என அவரிடம் தான் கற்க வேண்டும் போல தோணும்,

சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் கலர்க் கலரான பாசிமணிகளைகோர்த்து வைத்திருப்பார்,இது தவிர சைக்கிள் சக்கரத்தில் நடுவில் இருக்கும் குஞ்சம் சக்கரத்தை அழகாக்கிக் காட்டும் ,சைக்கிள் சக்கரம் ஒவ்வொரு முறை சுழலும் போதும்சக்கரத்தில் சுற்றியிருக்கும் மணிகள் அழகாகச் சுழலும்,பார்க்கையில் நன்றாக இருக்கும் கருப்பும் சிவப்பும் பச்சையும் ஊதாவுமாய் கோர்க்கப் பட்டிருக்கிற பாசிமணிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்துஅவரது சைக்கிளை தள்ளிக் கொண்டு போவது போலிருக்கும் பார்ப்பதற்கு/

கேட்டால் சொல்லுவார்,அதுதான் நம்ம மெயின் வாகனம்,அது நல்லாயிருந் தாத்தான் ஆத்துர அவசரத்துக்கு மட்டுமில்ல எப்பவும் நமக்கு ஒதவும், அது எப்பிடியும் இருக்கட்டுமுண்ணு விட்டுட்டம்ன்னு வையி, அவ்வளவுதான் படுத்துக்கிரும் பொழப்புஅப்புறம் நம்ம போகவேண்டியதுதான்அம்போன்னு,,,,,, என்பார் அவர்,

அவரிடம்தான் சொல்லியிருந்தான்.மில்லுல ஏதாவது வேலையிருந்தா சொல் லுண்ணேஎன,சரிசொல்றேன்எனசொல்லுவார்அவரைபார்க்கநேர்கிற கணங்களி ல்/

அது போக அவரை பார்க்கிற போதெல்லாம் அவருக்கு ஒரு டீயும் வடையும் கண்டிப்பாக வாங்கிக் கொடுப்பான்.

இது நாள்வரை அவருக்கு வாங்கிக்கொடுத்திருக்கும் டீ வடைக்கான காசை சேர்த்து வைத்திருந்தால் மில்லு வேலைக்குப்போகாமல் அதில் வரும் சம்பள த்தை இழந்தது போல் இருந்தது.

பரவாயில்லை,எதிர்பார்த்து கிடைக்கப்போகிற ஒன்றிற்காய் கொஞ்சம் இழப் போம்.என்கிற மனோ நிலையில்தான் அவருக்கு டீயும் வடையும் போனது, அவரும் சொல்வார் தவறாமல் இவனிடம் டீ வாங்கிகுடிக்கிற நாட்களிலெல் லாம்/

மாப்புள கவலைய விடுங்க,மில்லு மேனேஜரு நமக்கு ரொம்ப வேண்டப்ப ட்டவர்தான்,கவலைய விடுங்க அவர்ப்பாக்குற போது எப்பிடியாவது சைஸா பேசி ஒங்களுக்கு வேலை வாங்கிக்குடுத்துர்றேன் என்பார்,

அவரும் இப்படியாய் சொல்வதும் இவனும் இப்படி கேட்பதுமாய் நிற்காத ஒரு பொழுதுகளில் துலுக்கனத்தூர் மில் தாண்டி வெளியூருக்கு வேலைக்குப்போன ஒரு நாளில் வேலை முடிந்து திரும்பிவந்து கொண்டிருந்த சாயங்காலத்தில் மில்லுக்குள் நுழைந்து விட்டான் அவரது பெயரைச் சொல்லியும் அவரை பார்க்க வேண்டும் எனச்சொல்லியுமாய்/

செக்யூரிட்டி போய் தகவல் சொன்ன கால்மணிப் பொழுதில் வந்துவிட்டார் அவரும்.வந்தவர் நேராக மில் கேண்டினுக்கு கூட்டிக்கொண்டு போய் டீயும் வடையுமாய் வாங்கிக்கொடுத்து விட்டு நேராக மில் மேனேஜரிடம் கூட்டிக் கொண்டு போனார்,அவரது பேச்சும் பணிவும் மேனேஜருக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையுமே அவனுக்கு அந்த வேலைதர வைத்தது எனலாம்,

வேலைகிடைத்தஒருமாதத்திலேயேஆளேமாறிப்போனான்.அவனதுகனவான கட்டம் போட்ட லுங்கியும்,கோடு போட்ட சட்டையும் சைக்கிளும் கைவரப் பெற்றது.அவனுக்கு/

உள்ளூரில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நாட்களில் இடுப்புப்பட்டியில் அழுக்கு ஏறிய காக்கி டவுசர் இரண்டும்,ஊதாகலர் டவுசர் இரண்டும் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த துண்டும் காணாமல் போய் லுங்கியும் கோடு போட்ட சட்டையூமே நிரந்தரம் ஆகிப் போனது.

சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் அவரைப் போலவே பாசிமணிகளை கோர்த்து விட்டிருந்தான்.தினமுமாய் சைக்கிளைத்துடைத்தான்,எண்ணெய் போட்டான்,டேய் போதும்டாஎனஅடுத்தவர்கள் பார்த்து சொல்கிறஅளவிற்கு,,,/

அத்துடன் நின்று விட்டிருந்தால் பரவாயில்லை,அவரது பழக்கத்தை இவன் காப்பியடிக்கவில்லை எனச்சொல்லத்தோணும்.

அவர் வாரம் ஒரு முறை வீட்டி ற்குபுரோட்டாபார்சல்வாங்கி வருவார், பிள் ளைகளுக்கும் இவருக்குமாக சேர்த்து, மில் மேனேஜர் அப்படியாய் அவர் புரோட்டா பார்சல் வாங்கப்போகிற நாட்களில் தனக்கு ஒரு பாட்டில் வாங்கி வருமாறு பணிப்பார் அவரிடம்,அது அவருக்கு ஆரம்பத்தில் சங்கடமாக இருந்தாலும் போகப்போக பழக்கமாகிப் போனது.

அப்படியே அந்த பாட்டிலில் கொஞ்சம் அவருக்கும் கை மாறியது சிறிது நாட்க ளில்,அப்படியாய் கை மாறிய நாட்களில் இவனும் அவரிடமிருந்து கொஞ்சம் வாங்கப்பழகிக் கொண்டான்.

அதுதான் அவனுக்கு வினையாகவும் கூட ஆகிப்போனது,முன்பெல்லாம் விரு ந்துக்கும் மருந்துக்குமாய் இருந்த பழக்கம் வாரம் ஒரு முறை என ஆகி பின் தினசரி என ஆகிப்போனது,

தினசரியாய் ஆகிப்போன நாட்களில் மில்லுக்கு வேலைக்குப்போய் திரும்பிய சாயங்காலங்களில் அல்லது இரவில் குடிக்க ஆரம்பித்தவன் காலை மாலை என எந்நேரமுமாய் ஆகிப்போனான்,பாட்டிலுமாய் கையுமாய்/

வீட்டில்,,,,பின் பழகியவர்கள் உடன் வேலை செய்தவர்கள் யார் சொல்லியும் கேட்கவில்லை,கேட்பது போல் அப்போதைக்கு தலையாட்டினாலும் அவன் மனம் முழுவதும் பாட்டிலும் அதனுள் இருந்த திரவமுமே இவனை ஆட்க் கொண்டிருந்தது.

காலையில் எழுந்திருக்கும் போதே அதன் முகத்தில் முழித்துப்பழகியவனுக்கு வேறு எதுவும் தட்டுப்படவில்லை,பெரிது பட்டும் தெரியவில்லை.வீடு வீட்டில் இருக்கிற கஷ்டம்,அப்பா, அண்ணன் தம்பி,தங்கை பற்றிய கவலைகள் மற்றும் நினைப்பு,,,,,,,எதுவும் தங்கியிருக்கவில்லை.

தான் விரும்பிய மாமன் இப்படி ஆகிப்போனான் என ராமாமிர்த்தமும் அரசல் புரசலாக கேள்விப்பட்டாள்,சரி இது என்ன ஊரு உலகத்துல இல்லாத பழக்க மா, இருந்துட்டுப் போகுது”,சரியாயிரும் காலப்போக்குல என்கிற அவள் மனம் வேரிட்டுக்கொண்டிருந்தநாட்களில்அவன்குடித்துவிட்டுநிதானம்மீறிரோட்டில் விழுந்து கிடந்ததைப் பார்த்தாள்.அப்படி அவனைப்பார்த்த நாளிலிருந் து ஒரு மாதம் கழித்து இறந்து போனாள்,

அந்த ஒரு மாதமும் வீட்டிற்கும்,அப்பாவிற்கும் தெரியாமல் அவனை வைத் தியம் பார்க்கக்கூட்டிகொண்டு போயிருக்கிறாள்.ஊருக்குள் வருகிற பஸ்ஸில் தனித்தனியாக ஏறிக்கொள்வார்கள்,பின் டவுனில் போய் சேர்ந்து மது அடிமை மீட்பு மையத்திற்கு கூட்டிக்கொண்டு போவாள்.

சரியாகஒரு மாதம் இருக்கும்.வைத்தியம் முடியப்போகிற தினத்தின்றின் முடி வில் பஸ்ஸேறப்போகும் போது நீபோ நான் வர்றேன் பின்னாடி எனச் சென் றவன் மூக்குமுட்டக் குடித்து விட்டு வந்திருக்கிறான்.பின் நாட்களில் அதுவே வழக்கமாகியும் போனது,இப்போது அவனுக்கு மில் வேலையும் இல்லை, சம்பாத்தியமும் இல்லை.குடியை விடவும் இல்லை.

தான் விரும்பியவன் இப்படி ஆகிப்போனானே என மிகவும் மனம் நொந்து போனவள் என்ன செய்வது எனத்தெரியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண் டாள். யாருக்கும் சிரமம் வைக்காமல்,,,,/

சாவதற்கு முன்பாய் அவளது தோழியிடம் மட்டும் சொல்லியிருக்கிறாள். நான் இது நா வரைக்கும் எங்க வீட்டார் கிட்ட அது வேணும் இது வேணு ம்ன்னு எதுவும் விரும்பிக் கேட்டதில்ல,இப்ப மொதன் மொதலா நான் விரும்பி ஏத்துக்கிறாலாம்ன்னு நினைச்ச மனுசனும் இப்பிடி ஆயிட்டாரு,இனி நான் வேற ஒருத்தனுக்கு கழுத்த நீட்டவும் முடியாது,மனசார அவருகூட வாழ்ந் துட்டேன்,நல்லவரோகெட்டவரோ,,,,,நெனைச்சித்தொலைச்சிட்டேன்,அதுக்கான தண்டனைய நான் ஏத்துக் கிறதுதான் சரியா இருக்கும்,,,,என தோழியிடம் சொல்லி விட்டு இறந்து போன நாளில் யாரும் எதிர்பார்க்கவில் லை மனம் கொண்டவன் கெட்டுத்தூர்ந்து போனதை நினைத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வாள் என/

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கதை என்றால் பரவாயில்லை... நிஜம் என்றால் வருத்தம்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

குடி பெருங்குடிகளைக் கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது
அதன் உண்மை உணராமல் இளைஞர்கள் அடிமையாகித் தங்கள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
வேதனை நண்பரே

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கவிஞர் த.ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

மனம் கணக்கும் கதை...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாய்/