23 Sept 2018

தயிர் மத்து,,,,

ஒரு கையளவு தயிர் சாதமே போதும் என்ற போது இடுப்பில் கை வைத்து கண்களை உருட்டி முறைக்கிறாள் மனைவி,

உருட்டிய கண்கள் உருட்டியபடியே இருக்க முறைத்த பார்வை முறைத்த படியே இருக்க அவள் அவளாகவே அசல் கொண்டு நிற்கிறாள்.

இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது, சன்னதம் கொள்ளாத சாமி ஒன்று சமை யலைறையில் உள் இருப்பு கொண்டு அருள் பாலிப்பதாய் படுகிறது,

பாலிக்கிற அருளில் முதலிடம் தயிர் அல்லது மோர் சாதத்துக்காய் இருக்க ட்டும்.

எத்தனைதான் இரவு வேளைகளில் டிபன் என்கிற பெயரில் இட்லி அல்லது தோசை இல்லையானால் வேறு ஏதாவது ஒரு டிபன் எனச் சாப்பிட்டாலும் கூட இல்லை அசந்தர்ப்பமாய் ஹோட்டலில் சாப்பிட்ட போதும் கூட இது போல் அமைவதில்லை.

நேற்றைக்கு முன் தினம் மாலை அலுவலகம் விட்டு வரவே தாமதமாகிப் போகிறது, ஒரு மணி நேரம் அல்லது ஒண்ணே கால் மணி நேரமாகிப் போகிறது, பணிபுரிகிற ஊரிலிருந்து வருவதற்கு,

இத்தனைக்கும் இரு சக்கர வாகனத்தில்தான் வந்தான் ,அதுதான் அவனுக்கு சரிப்பட்டு வருகிறது,

பஸ் இருக்கிறது போக வர என்கிற சௌகரியத்திற்கு,காலையில் பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமென்றால் எட்டரை மணிக்கு வீட்ட விட்டு கிளம்ப வேண்டி யிருக்கிறது ஸ்கூல் பிள்ளைகள் போல.

இரு சக்கர வாகனம் என்றால் ஒன்பது மணிக்கு கிளம்பினால் போதும், சமய த்தில் கோபம் கொண்ட கடிகாரமும் கிளம்ப ஆகி விடுகிற நேரமும் கைகோ ர்த்துக்கொண்டு ஒன்பதை தாண்டி ஒன்பது ஐந்து,பத்து,ஒன்பதே கால் என் காட்டிய போது கூட ஈடு கொடுக்கிற வண்டியின் வேகத்தில் பத்து மணிக்குள் ளாய் அலுவலகம் போய் விடுவான்,இது போலான தருணங்களீல் இரு சக்கர வாகனம்தான் கைகொடுக்கிற தெய்வமாக.என்ன அந்த தெய்வத்திற்கு கொஞ் சம் பெட்ரோலும் டீசலும் ஊற்றினால் மட்டும் போதுமானதுதான்,

தவிர அது தருகிற உடல் அலுப்பையும் உடல் வலியையும் சற்றே தாங்கிக் கொள்கிற மனமும் ஏற்றுக்கொள்கிற தயாளமும் வேண்டும்.

இருபத்தி இரண்டும் இருபத்தி இரண்டுமாக நாற்பத்தி நான்கு கிலோ மீட்டர் கள் தினசரி பயணம் கொண்டுதான் வேலைக்குப்போய் வர வேண்டியதிருக் கிறது.

மாலையில் வரும் பொழுது கொஞ்சம் ரிலாக்ஸ் காட்டியும் வேகம் குறைத்து மாய் வந்து கொள்வான்,

அன்றும் அப்படித்தான் மாலை கொஞ்சம் எண்ணங்கள் சுமந்த மனதினனாய் வந்த போது மணி மாலை ஆறாகிப்போகிறது,

சரியாக மல்லாங்கிணர் நெருக்கி வருகையில் இதுநாள் வரைக்கும் பஞ்சர் என்றால் என்னவென்றே இவனிடம் தெரிவிக்காதிருந்த வண்டி பஞ்சர் ஆகி நின்று போகிறது,

ஊருக்குள் ஒர்க்‌ஷாப் இருக்கிறது,ஊருக்குள் போனால் பஞ்சர் ஒட்டிக் கொள்ள லாம்,ஆனால் வண்டி நின்று நிலைகொண்ட இடத்திலிருந்து ஊர் வரை வண்டியை உருட்டிக் கொண்டு போனால் டயர் போய்விடும்.

இவனைக்கடந்து போன இரு சக்கர வாகனர் ஒருவரிடம் ஏதாவது ஒர்க்‌ஷாப்க் காரைஅனுப்பிவிடுமாறு சொல்லி விட்டு விட்டு ஒர்க்‌ஷாப்க்காரர் வந்ததுமாய் பஞ்சர் ஒட்டிக்கொண்டு கிளம்புகிறான்.அவரிடம் போன் நம்பர் வாங்கிக் கொண்டும் நலம் விசாரித்து விட்டுமாய்/

என்னவென்று தெரியவில்லை,அல்லது எப்பொழுது வந்து ஒட்டிக்கொண்ட பழக்கம் எனப்புரியவில்லை.

டீக்கடைக்குப்போனால் கூட டீக்குடித்து முடித்தபின்னாய் கடைக்காரரிடம் போய் வருகிறேன் எனச்சொல்லிகொள்வதும் அவர் கொஞ்சம் இடம் கொடுத் தாரானால் அவரது நலன் ஊர் வியாபாரம் என எல்லாம் கேட்டு விடுகிற பழக்கம் அமைந்து போனது.

பார்க்கிற பழகுற மனிதர்களிடம் கொஞ்சமாய் அல்லது சற்று இருக்கமாய் ஒட்டுதல் காட்டிக்கொள்வதுதான் இது என்றான் நண்பன்.

ஒர்க்‌ஷாப்க்காரரிடம் போன் எண்னை வாங்கிக்கொண்டு வண்டியைக்கிளப்பும் போது கண் வெளிச்சம் மறைந்து இருட்டி விடுகிறது,

லைட்டைப் போட்டுக் கொண்டான்.

கொஞ்சமாகவேணும் வேகம் காட்டிப்போனால்தான் ஊருக்குள் போகும் போது கண்கூசாத லைட் வெளிச்சத்தில் போக தோதாக இருக்கும்,

கே எஸ் பள்ளியை தாண்டிய பொழுது பள்ளியின் அருகாமையாய் இருந்த செம்பருத்துப்பு மரத்திலிருந்து உதிர்ந்த ஒற்றைப்பூ வண்டியின் ஸ்பீடா மீட்டர் மீது விழுந்து கீழே நழுவியது.

ஆகா பூ விழுந்த நேரம்,,,நன்றாகத்தான் இருக்கிறது,அப்படியே பூ விழுந்த மரத்தி உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு நிலவில் வடை சுடுகிற பாட்டியுடன் பேசிக்கோண்டும் உதிக்கிற நட்சத்திரங்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்துக் கொண்டுமாய் அப்படியே அமர்ந்து விடலாம் போல் தோணுகிறதுதான்,

தோணும்டா தோணும்,ஒழுக்கமா ஊருக்குப்போற வழியப்பாக்காம பூ விழுந் துச்சி மரத்துல ஏறுனேன்,நிலாப்பாட்டிக்கூட பேசுனேன், நட்சத்திரங்களுக்கு கைகுடுத்தேன்னு என்னடா நடக்குதிங்க,நீ வாட்டுக்கு நிலவு நட்சத்திரமுன்னு வேற்றுக்கிரகவாசியாயிடாதடா பாத்துக்க என எச்சரித்த மனதின் எச்சரிக்கை சிக்னலி ஏற்றுக்கொண்டு வண்டியை வேகம் குறைக்காமல் ஓட்டுபவனா கிறான்,

இவன் செல்கிற சாலையின் இருமருங்கிலும் மரங்கள் நிறைந்து இருக்கும் தான்,ஒற்றைக்கொன்றையில் ஆரம்பித்து வேப்ப மரம் புளிய மரம் செம்பருத் திப்பூ மரம் குடையாய் விரிந்து ஆங்காங்கே நிழல் காட்டுகிற கருவேல மரங் கள் என சாலை நிறைந்து காணக்கிடக்கிறவைகள் எல்லா இடங்களிலும் இருக்குமானால் காற்றும் சுத்தப்படும் ,சூழ்கொண்ட மேகங்கள் மழை தருவ தை கொஞ்சம் தயாளம் காட்டும்.என்கிர நினைப்புடனும் வேறு வேறு நினைவு சுமந்துமாய் ஊருக்குள் வந்த நேரம் இரவு மணி எழுக்கு மேல் ஆகிப் போகிறது தான்,

இனி என்ன செய்யலாம்,ஒரு டீக்குடிப்பது உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சம் தெம்பும் புது உற்சாகமும் கொடுக்கும் எனநினைத்தவனாய் ஒரு டீக்கடையின் முன் போய் நிற்கிறான்,

அங்கு போனப் பிறகுதான் தெரிந்தது ,இங்கு வந்திருக்கக்கூடாது என/

நாட்களின் நகர்தலில் பழகிப்போன ஒருவர் கடையில் டீக்குடித்துக் கொண்டி ருந்தார்,

டீக்கு சொல்லி விட்டு வடையை எடுத்து கடிக்கும் போதுதான் அவரைப் பார்க்கிறான்,

எவ்வளவு நேரம்தான் இவனும் அவரை பார்க்காதது போல் நடிப்பது,

அவர் இவனைப் பிடித்துக் கொள்கிறார்,

”தம்பிஅந்தக்காலத்துல பாத்திங்கின்னா நாங்க அப்பிடி இருந்தோம்,இப்ப இருக்குற ஒங்களப் போல இல்லை,இப்ப மாதிரி டூ விலர்,செல் போனு ஈ மெயிலு இண்டர் நெட்டு,,,அது டீ வியில இத்தன சேனலு நெனைச்ச நேரம் நெனைச்ச யெடத்துக்கு போய் வர்ற வசதின்னு எதுவும் இல்லாத நேரம்,ஆனா நாங்க அப்பிடி இருந்தோம் ,இப்ப இவ்வளவு வசதி இருந்தும் கூட நிங்க இப்பிடி இருக்கீங்க ஏங் புள்ளைங்க உட்பட என அங்காலாய்த்தவரிடம் சார் வேற ஏதாவது பேசுறதுன்னா பேசுங்க,இல்ல கம்முன்னு இருங்க,,,,தினமும் ஓட்ட ரிக்கார்ட் மாதிரி இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க எனச்சொன்னதும் அவர் பேசுவதை நிறுத்தி விட்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்,

அவரிடம் இதுநாள்வரை இவன் அப்படிப்பேசியதில்லை,என்ன நினைத்தா னோ பேசிவிட்டான்,அவர் குடித்த டீக்கும் இவன்தான் காசு கொடுத்தான்.

அப்படி அவரிடம் பேசி விட்டு வர ஒரு அரை மணியாகியது,

பொதுவாக ஆறு மணிக்குள்ளாக வீட்டுக்கு வந்துவிடுகிற இவன் அன்று வீடு போக எட்டு மணி தொட்டு விடும் போல் தோன்றியது.

நல்ல பசி வேறு,இது போலான நேரங்களில் மதுரை ரோட்டில் இருக்கிற அன் பரசன் ஹோட்டலில்தான் இவன் சாப்பிடுவதுண்டு.

கடையின் ஓனர் இவனைப்பார்த்ததும் இரண்டு கோதுமை புரோட்டாக்களை எடுத்து வைத்து விடுவார்,

அது போராடிக்கிற நேரங்களில் இரண்டு ஊத்தப்பம் கேட்பான்,அதுவும் கொஞ்சம் திகட்டிப்போகிற போது நூடுல்ஸ் என ஏதாவது வித்தையாசம் காட்டி சாப்பிட்டு வருவான்,

அந்தக்கடையைப் பொறுத்த வரை ஓனரே கல்லாவிலும் அமர்ந்திருப்பார், ஓனரே அடுப்பிலும் நிற்பார்,ஓனரே சப்ளையும் செய்வார் சமயத்தில்/

வாழ்வின் அடிமட்டத்தில் அடி பட்டு வந்தவரைத்தவிர்த்து இப்படியெல்லாம் யோசிக்க வேறு ஒருவராலும் முடியாது,

அன்றுசாப்பிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு தட்டு குறைந்த மோர் சாதம் போட்டு அதை கை நிறைந்து பிசைந்து சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லை.

அது சரி அதனால் என்ன,,,? இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்.என்கிற நினைப்புடன் அன்று தூங்கிப்போனவன் இன்றைக்கு தயிர் சாதம் சாப்பிடக் நினைக்கையில்தான் இத்தனையுமாய் ஆகித்தெரிகிறது வீடு.

இவன் அமர்ந்திருந்த இடத்திற்கும் அவள் நின்றிருந்த இடத்திற்குமாய் நேர் கோடிட்ட பார்வை குறிப்பிட்ட டிகிரி நேர் கோட்டில் சந்தித்து இடையில் ஒன்றுடன் ஒன்று முட்டி முடியிட்டுக் கொண்டதாய் ,,,/

”ஏன் பொய் சொல்கிறீர்கள் இந்த வயதில் இவ்வளவு பெரிய ஜீவாத்மாவுக்கு என்ன காணும் ஒரு கையளவான சாப்பாடு,கூடக் கொஞ்சம் தருகிறேன் சாப்பிடுங்கள் என தட்டில் இட்டு கொண்டு வந்த சாதம் வெண்மை நிற உருண் டைகளாய் சிறு சிறு வடிவெடுத்து அழகழகாய் தட்டு முழுவதும் பரவியும் விரவியுமாய் காணப்படும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது,

கூடவே கொஞ்சம் குழம்பும்,கொஞ்சம் மோர் அல்லது தயிர் இது போதும் இரவு உணவுக்கு என்பதுதான் இவனது தினசரிகோரிக்கை,

கோரிக்கை சுமந்து வருகிற மனதுக்கும் உடலுக்குமாய் இடைப்பட்டதை அவள் அறிவாள் என தெரிந்திருந்த இவன்சாப்பாட்டிற்கு அமர்கையில் கொஞ் சம் சாந்தம் கொண்டே/

சமையலறைமுழுவதுமாய்வெங்காயச்சருகுகளும்அறுத்தகாய்கறித்துண்டுக ளின் மிச்சங்களும் சிதறிக் கிடக்க கிச்சன் மேடையும் அதன் மேல் வைக்கப் பட்டிருந்த ஸ்டவ்வும்,அதன் அருகிலிருந்த பாத்திரங்களும் ஓரத்திலிருந்த சிங்கும் அதனுள்ளாய் விளக்குவதற்காய் குவிந்து கிடந்த பாத்திரங்களும் சிங்கிற்குஅருகைமைகாட்டிவைக்கப்பட்டிருந்ததண்ணீர்குடங்களும்சமையல்  அறையை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தது.

உருட்டி முறைத்த விழிகள் இரண்டிலிருந்துமாய் கழண்டு வந்த பார்வை படர்ந்திருந்த தரை பாவி இவன் மீது வந்து அம்பு இடுகிறதாய்/

உடல் முழுவதுமாய் தழுவிப்படர்ந்த பார்வையை கொஞ்சம் கூசியவனாய் தன்னிலிருந்து பிடுங்கி எறிகிறான்,எறிந்த பார்வை திரும்பவுமாய் முறைத்த விழிகளிலேயே போய் அவசரம் காட்டி ஒட்டிக் கொள்ளஇடுப்பிலிருந்த கை யை எடுக்காமலும் சமையலறையின் அடையாளாம் மாறாமலுமாய் வருகி றாள்

நடந்து வருகிற காலுக்கும் வலிக்காமல் ,தரையும் அதிராமல் மென் நடை யாய் வந்து கொண்டிருந்த அவள் கட்டியிருக்கிற புடவையில் இருக்கிற பூக்கள் புடவையிலிருந்து உதிர்ந்து போகாமல் இருக்க வேண்டும் முதலில் என்கிற நினைப்புடன் ஓடோடிப் போய் புடைவையிலிருந்து பூ ஒன்று கழண்டு விழுந்ததாய் கற்பனை பண்ணி அவளிடம் எடுத்துக் கொடுக்கிறான்.

கொடுத்தப் பூ அவளது முறைப்பை மாற்றி கொஞ்சமாய் ஆசுவாசபடுத்தி அவனிடமிருந்து பூவை வாங்கி தலையில் சூடிக் கொள்ளச் செய்து விடுகிறது,

புடவையிலிருந்து கழண்டது தலையிலா,,?என்கிற கேள்வியாய் அவளை ஏறிட்ட போது எப்படி இருந்தால் என்னபூபோனது அவளிடம்தானே இதில் தலையிலானால் என்ன புடவையிலானால் என்ன என்கிற மனச் சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது அந்த நேரத்தில்/

அள்ளிச்சொருகிய புடவையுடன் இவன் அருகில் வந்தவள் முறைப்பின் உள்ளீ டுகளில் ஏதோ மந்திரம் பொதித்தவளாய் பார்க்கிறாள் உதடு பிதுக்கி.

பரஸ்பரம் இது போலான கோபங்கள் இந்தவயதில் என்ன செய்து விடும் பெரிதாய், எந்த வயதிலும் வந்தணைகிற கணவன் மனைவி இடையேயான கோபங்கள் சட்டென எழுந்தமள்கிற தீப்பொறி போலத்தானே,,?உள் நோக்க ங்கள் ஏதுமற்ற கோபத்தின் ஜீவாலைகள் அருகில் வந்து அதிகம் சுட்டு விடாமல் அமந்து போய் விடும்தானே?

.கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் மிதமும் இருந்தால் சண்டையாகஉருக்கொள்ள நினைக்கிற பேச்சுக்கள் கூட தண்ணீராய் மாறிப்போகுமே என்பாள் மனைவி,

அப்படிச்சொல்கிற அவள் ஏன் இப்பொழுது விழி உருட்டி முறைப்பு மாறாம லும் இடுப்பில் வைத்த கை எடுக்காமலும்,தரை அதிரவுமாய் ஏன் இப்படி நடந் து வருகிறாள்.?

அவள் அப்படி வருவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.அவளது பேச்சில் கவனம் கொண்ட அவன் ஒரு கவளம் தீர்ந்ததுமாய் இன்னொரு கவளம் கேட்கிறான்,

“நீங்க இப்பிடி செய்வீங்கன்னு தெரியும் எனக்கு,இவ்வளவு பெரிய ஜீவனுக்கு எப்பிடி ஒருகை சாப்பாடு போதும் என்பதாய் யோசித்து வருவதற்குள்ளாய் சாப்பிட்டு முடித்தும் விட்டீர்கள்,

”இருங்க இன்னொரு கை கொண்டு வர்றேன்,ஒங்களுக்கு இருக்குற பழக்கம் மாதிரி ஒலகத்துல யாருக்கும் இருக்காதுங்க,

”சாப்பாடு இன்னும் கொஞ்சம் வேணுமான்னு கேட்டா போதுமுன்னு சொல் லீட்டு கொஞ்சமா தட்டுல போட்ட சாப்பாட்ட சாப்புட்டு முடிச்சிட்டு சாப்பாடு வேணுமுன்னு கேப்பீங்க,

“இட்லி தோசை சுடுற அன்னைக்கும்இதே பிரச்சனைதான்.சாப்புட்டு முடிச்சி ட்டு சூடா இன்னொரு தோசை கொண்டு வான்னு சொல்லுவீங்க, இப்பிடி நீங்க சாப்ட்டு எந்திரிக்கிறதுக்குள்ள நானும் புள்ளைங்களும் படுற பாடு இருக்கே பெரும்பாடுதான்,,,” என சலித்துக் கொள்வாள்,

“ஏங் இவ்வளவுதான் சாப்புடுற அளவுன்னு ஒங்களுக்குத் தெரியாதா,ஏன் இப்பிடி கொஞ்சம் கொஞ்சமா பிய்ச்சி பிய்ச்சி சாப்புடுறீங்க”என்பாள்.

அவனுக்குள் அப்படி எப்பொழுது அந்தப் பழக்கம் முளை கொண்டது எனத் தெரியவில்லை. எப்படி அது அவனிடம் தொற்றிக் கொண்டது எனவும் புரிய வில்லை.

வீட்டில் எல்லோருமாய் அமர்ந்து சாப்பிடும் போதும் இப்படித்தான் செய்கி றான், இவனது தட்டில் சாப்பிட்டு முடித்து விட்டு பக்கத்துத் தட்டிலிருந்து எடுத்துக் கொள்வான்,

மனைவி சம்மதிப்பாள் இதற்கு, ஆனால் பிள்ளைகள் சின்னவள் ஒன்றும் சொ ல்ல மாட்டாள் அப்படி எடுப்பதற்கு/ பெரியவள் தட்டில் எடுத்தால் அவளுக்கு முகம் எட்டுக் கோணலாய் போய் விடும்/ சொல்லி விடுவாள் நேரடியாக ,இப்படியெல்லாம் எச்சிக் கையோட எடுக்காதீங்கப்பா,எனக்கு சாப்புட ஒரு மாதிரியா இருக்குல்ல என/

“சின்னவள் அப்படியில்லை அவளது அம்மா மாதிரி, பொறுத்துக்கொள்வாள், ஒனக்குப் போகத்தாப்பா மிச்சம் என இவன் கேட்கக்கேட்க உருட்டு உருட்டித் தருவாள்.இவனும்வாங்கிவாங்கிசந்தோஷமாகச் சாப்பிடுவான்,

அந்த சந்தோஷங்கள் நிலைத்துக்கிளைக்கிற நேரங்களாய் அமைகிற தருண ங்கள் ஒருகையளவு தயிர் சாதம் போதுமே கூடவே உரித்து வைத்த பச்சை வெங்காயங்கள் இரண்டு,,,,,எனச்சொல்லிவிடத் தோணுகிறது/vimalann.blogspot.com

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// பேச்சுக்கள் கூட தண்ணீராய் மாறிப்போகுமே //

அருமை... உண்மை...

ஸ்ரீராம். said...

மல்லாங்கிணர்... நானும் விருதுநகரிலும் சாத்தூரிலும் பணிபுரிந்திருக்கிறேன்... 80 களின் பிற்பகுதியில்!

vimalanperali said...

வணக்கம் சார்,அன்பும் நன்றியும் .

vimalanperali said...

வணக்கம் சார்,எதில் பணிபுரிந்திர்கள்,,?

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்!

வலிப்போக்கன் said...

இதுக்கும் கொடுத்து வச்சிருக்கனும்.்..“எச்சி கையில எடுக்காதிங்கப்பா”

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றியும் அன்பும் வருகைக்கு,,/