31 Oct 2010

காக்கை சிறகு
       

    


        


         அந்த காகங்களைப் பார்த்தால் சொல்லுங்களேன்யாராவது.
அவை  இப்பொழுதொல்லாம் இங்கு வருவதேயில்லை. அவை கள் யாரைக் கேட்டு வந்தன. யார் சொல்லி நின்றன.? தெரியவில்லை.
      அவைகளுக்கென ட்ராபிக் ரூல்ஸ்,ட்ராபிக் போலீஸ்,ட்ராபிக் சிக்னல்,அவர்களிடமிருந்து அனுமதி,,,,,,,,,,,,,,,,,, அதெல்லாம் ஒன்றும் தேவையாய் இருக்கவில்லை அந்த சின்ன ஜீவன்களுக்கு.

        மூன்று அங்குல நீள அலகும்,நான்கு அல்லது ஐந்து அங்குல நீள கால்களும்,ஒரு அடி நீள உடலும் கொண்ட அவைகளுக்கு எவ்வளவு தேவையாய் இருந்து விடமுடியும்.ஒரு கவளம் சோறு போதாதா ?

        அதைத்தான் நாங்கள் வைத்தோம். மதியம் மணி இரண்டு அடிக்க வேண்டும் என்கிற தேவையெல்லாம் இருக்கவில்லை அவைகளுக்கு.அதற்கு முன் காகங்கள் எங்களது அலுவக வாசலில் ஆஜர்.

         மதியம் 1.50 க்கெல்லாம் எங்களது அலுவலகத்தின் நீண்டு வளர்ந்த காம்பவுண்டு சுவரில் உட்கார்ந்திருக்கும் காக்கைகள்.நேரம் நகர,நகர சப்தமாய் கத்தியவாறே அலுவகத்தின் முன் வராண்டாவில் வந்து அமரும்.

தரையில்தான் வந்து அமரும் என்கிற கணக்கில்லை.எங்களது அழுவலக மேனேஜரின் T.V.S சுசுகி,எங்களது கிளார்க்கின் ஹீரோஹோண்டா, என ஒவ்வொரு வண்டியின் மீதுமாய் நான்கு,ஐந்து என அமர்ந்து கொள்ளும்.

      அதிலும் கழுத்தில் சாம்பல் நிறம் பூத்த காகம் இருக்கிறதே,ஏயப்பா அது பண்ணும் சேட்டை ,,,.........நல்ல ரசனை உள்ளவர்கள் ஜன்னல் மறைவில் நின்று படம் பிடிக்கலாம்.

பொசுக்,பொசுக்கென கண்களை மூடி,மூடித் திறந்து ,கழுத்தை சாய்த்தவாறே அங்குமிங்குமாய் பறந்து அமரும்,நடக்கும்.ஆட்களை நோட்டமிட்டவாறே தவ்வித் தாவித் அமரும்.சரியாக கருப்பு வண்டியில் உள்ள முன் கண்ணாடிமேல் ஏறி அமர்ந்து கொள்ளும்.

      கண்ணாடியின் மேல் அமர்ந்தால் அதன் உருவம் அதெற்க்கெப்படித் தெரியும்.அதை உணர்ந்தவாறோ என்னவோ கீழிறங்கி சீட்டின் மேல் அமர்ந்து கொள்ளும்.அதன் உருவம் கண்ணாடியில் தெரியத் தெரிய ஒரே கா,கா,கா,,,,,,,, தான்./

    பலசமயங்களில் அவைகளின் அழைப்பிற்கும் சப்தத்திற்கும் இணங்கி இரண்டரை மணிக்குள்ளாக கூட சாப்பிட ஆரம்பித்து விடுவோம்.
       சாப்பிட்டு முடித்து நாங்கள் வைக்கும் ஒரு கவளம் சோறே அவைகளுக்கு தேவாமிர்தமாய் மாறிப் போகும்.
   சமயத்தில் காகங்களின் வருகையைப் பொறுத்து நாங்கள் வைக்கும் சாப்பாட்டின் அளவு மாறிப் போகும்.

     அன்றாடங்களின் நகர்வுகளில் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த நேர் கோட்டு நிகழ்வுகள் தீடீரென சிவப்பு சிக்னலிட்டு நிறுத்தப்பட்டு விடுகிறது.
        இதற்கிடையில் கிராமத்திலிருந்த எங்களது அலுவலக கட்டிடம் பல்வேறு
காரணங்களால் வேறு ஒருவருக்கு விலை பேசி விற்கப் படுகிறது.

வாங்கியவரும் கட்டிடத்தின் முகப்பை மாற்ற ,ரூம் கட்ட என இறங்கி விடுகிறார்.
    கொத்தனார்,நிமிந்தாள்,சித்தாள் இன்னும்,இன்னுமான ஆட்களின் நடமாட்டம் அவர்களின் பேச்சு,செய்கைகள் ,,,,,,,,,,, எல்லாம் அந்த காக்கைகளை அண்டவிடாமல் செய்து விடுகின்றன
       நீங்களே சொல்லுங்கள்,இடையறாத மனித நடமாட்டத்திற்கும்

சப்த்திற்கும் இடையிலும் நாங்கள் அமர்ந்து கொண்டு சகிப்புத் தன்மையுடன் வேலை பார்ப்பதைப் போல அந்த காக்கைகளின் சகிப்புத் தன்மை இருக்குமா?  
     இப்பொழுதெல்லாம் எங்களின் அலுவக வருகை பதிவேட்டை விரித்து வைத்துக் காத்திருக்கிறோம்.அந்த காகங்கள் வந்து கையெழுத்திட்டு விட்டு சாப்பிட்டு விட்டுப் போக வேண்டி,அல்லது அந்த காகங்களின் வருகையை பதிய வேண்டி.
       காகங்களின் பாஷை தெரியுமா உங்களுக்கு ?அவற்றை கற்றுக் கொண்டு அவைகளை கூப்பிடலாமா என யோசிக்கிற வேலையில்,,,,,,,,

ஸ்ஸ்சூ,,,, அதெல்லாம் அனாவசியம் என அசரீரி வர நிதர்சனத்தை திரும்பிப் பாத்தால் ,,,,,,,,,

விளைச்சல் அற்று விரிசல் விழுந்து கிடக்கும் தோட்டம்,காடு ,வயல் வெளிகளின் மீதும்,ஆண்டனாக்களும்,வயர்களுமாய் பின்னிப் பிணைந்த வீடுகளின் மொட்டை மாடிகளின் மீதும் உண்ண உணவு தேடி ஒட்டிய வயிறுடன் தவித்தலைந்து திரியும் காகங்களைப் பார்த்தால் சொல்லுங்களேன்  யாராவது.

எங்களது அலுவலகத்தின் வருகைப் பதிவேடும்,எங்களது மதியச் சாப்பாடும் அவைகளுக்காய் காத்திருக்கிறதென./

No comments:

Post a Comment