29 Oct 2010

டைரிக்குறிப்பு




எல்லாம் இருந்தது அந்த கிராமத்தில்.

அரசு லைப்ரரி, அரசு உயர் நிலைப் பள்ளி(கம்ப்யூட்டர் வசதியுடன்) ஆரம்ப சுகாதார நிலையம், கால் நடைமருத்துவமனை என எல்லாம் இருந்தது.

 போஸ்ட் ஆபீஸ் ஒன்றும்,எக்ஸ்சேஞ்ச் ஒன்றும் ,வங்கி ஒன்றுமாய் இருந்த அந்த ஊரின் மொத்த ஜனத் தொகை மூவாயிரம் பேர்.


 எழுநூற்றிச் சொச்சம் குடும்பங்களில் நாவிதர் குடும்பம் இருந்தது.சலவைத் தொழிலாளியின் குடும்பம் இருந்தது.செருப்புத் தைப்பவரின் குடும்பம் இருந்தது.இது தவிர நிலஉரிமையாளர்களும், அதில் உழைத்து பிழைப்பு நடத்தும் கூலித் தொழிலாளர்களும் இருந்தார்கள்.


 நகரத்தை ஒட்டி பத்து கிலோமீட்டரில் வீற்றிருந்த அந்த கிராமத்தில் நகரத்தின் பாதிப்பும் நிறையவே இருந்தது .


இந்திய கிராமங்களின் வழக்கமான சாயல்களோடு அந்த கிராமத்திலும் குழந்தைகள் தாயின் மடியிலும் மார்பிலும் கிடந்தார்கள்.மாணவ,மாணவிகள் பஸ் ஏறிச் சென்று வெளியூர்களிலும்,பக்கத்து நகரங்களிலும் கல்வி பயின்றார்கள்.


இளைஞர்களும்,யுவதிகளும்தீப்பெட்டிஆபீஸ்,பஞ்சுமில்,கொத்தனார்,
சித்தாள் என வேலைக்குச் சென்றார்கள்.

வயோதிகர்கள் வீட்டைக் காத்துக் கொண்டு பெரிய, அல்லது சிறிய நோயுடன்./


குடும்பத்தலைவனும்,குடும்பத்தலைவியும் குடும்பத்திற்கு வருமானம் போதவில்லை என்கிற அங்கலாய்ப்புடன்./


இந்த அங்கலாய்ப்பில் மாதச் சம்பளம் வாங்குபவர் பங்கே பிரதானம்.வேலை நடந்த தோட்டம்,காடு,வயல்களில் றெக்கைகளுடன் வேலைக்காரர்களைக் காண முடிந்தது.


டீக்கடை ,பெட்டிக்கடை ,பலசரக்குக் கடைகளில் வியாபாரம் நன்றாக இருந்தது. தொழில்க் காரர்கள் கையில் சில்லறை புழங்கியது.


தொடர்ச்சியாக பெய்த மழையினால் விரிந்த பரப்பளவுள்ள மேட்டுக் கண்மாய் ஓரளவு நீருடன்.


இப்படி செழிப்பாகத் தெரிந்த அந்த ஊரில்தான் அவர்களும் இருந்தார்கள் இரண்டு பிரிவாக.

 ஊரிலுள்ள அந்த கோவிலின் திருவிழாவை யார் நடத்துவது என்கிற போட்டிதான் பிரிவிற்கு காரணமாய்./


போட்டி சண்டையாகி பஞ்சாயத்து பேசப் பட்டு,கோர்ட்டுக்குப் போய் அங்கும் தீர்ப்பாகி பின் போலீஸிற்குப் போய் தற்பொழுது அறநிலையத் துறையினரின் கைகளில் கோவில்.


 இவர்கள் சொல்கிறார்கள் கோவில் எங்களுக்கானது நாங்கள்தான் திருவிழா நடத்துவோம் என. அவர்கள் சொல்கிறார்கள் கோவில் ஊர் பொது நாங்களும் நடத்துவோம் என.


இந்த இரு ஜாதிக் காரர்களைத் தவிர இதரஜாதிக் காரர்கள் கப்,சிப், அல்லது ஆளாளுக்கு ஒரு பக்கம் சாய்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்களுடன்.


என்ன செய்ய ஊர் முழிக்கிறது இப்பொழுது.பார்த்தார்கள் இரு பிரிவினரும். வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி அவரவர்ஜாதிகளுக்கு புதிய கட்டுப் பாடுகளை விதித்தார்கள்.


அவர்களோடு, இவர்கள் பேசக் கூடாது.இவர்கள் குடும்பங்களுடன் அவர்கள் ஒட்டு,உறவு,கொடுக்கல்,வாங்கல்எதுவும்வைத்துக்கொள்ளக் கூடாது.

அவர்களிடம் இவர்கள் பால் வாங்கக் கூடாது.அவர்களது பலசரக்குக் கடை யில் இவர்கள் சரக்கு வாங்கக் கூடாது.இவர்களது டீக் கடைக்கு அவர்கள் போகக் கூடாது.என்கிற நிபந்தனைகளும் ,பேச்சுக்களும் அரக்க நகங்களாக நீண்டு, நீண்டு ,நீண்டு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,................பரஸ்பரம்  ஒருவருக்கொரவர், மனதளவிலும், வெளிப் படையாகவும் பிறாண்டிக் கொண்ட விஷயங்கள் நிறைய,நிறையவே.

 சரி இப்படி நிறைந்து போன விசயங்கள் அவர்களது மனதில் விஷவித்துக் களாய் மாறிமுளைவிட எதுதான் காரணமாக நிற்கிறது.


 இப்படி தலை விரித்து கோரத் தாண்டவம் ஆடுகிற அளவு ஜாதிப் பித்தை யும்,மத அபிமானங்களையும்,நம்மிடையே ஊட்டி வளர்த்து, பித்துப் பிடித்து ஆட்டம் போட வைக்கிற அளவு நம்மை உருவாக்கி விடுகிற ஜாதியத் தலைமைகள் விரிக்கும் விஷ வலைகளும் விரிபுகளும்தானே இம்மாதிரி யான விஷயங்கள் தலைஎடுக்கவும்,முளை விடவும் காரணமாகின்றன.


 ஆனால் அதன் வேரையும்,மூர்க்க முகத்தையும் அடையாளம் கண்டு கொண்ட பலர் இப்பொழுதும் அந்த கிராமத்தில்.


அவர்களது பலசரக்குக் கடையில் இவர்களும்,இவர்களது டீக் கடையில் அவர்களுமாய் டீ சாப்பிடுகிறார்கள். சரக்குகளை வாங்குகிறார்கள்.

அவர்களிடம்,இவர்களும் ,இவர்களிடம், அவர்களுமாய் சிரித்துப் பேசிக் கொள்கிறார்கள்.


 இன்னும் சிலர் காடுகளில் தோட்டங்களில் பேசிக் கொள்கிறார்கள்.அவர்களு ம்,இவர்களும் கொண்டுவந்த உணவை பரிமாறிக் கொள்கிறார்கள்.

அவர்களுக்குள்ளே கொடுக்கல்,வாங்கல் நடக்கிறது.மாணவ,மாணவிகள் தங்களது பள்ளிகளில் தங்கள் பேச்சைத் தொடர்கிறார்கள்.

பெரியவர்களும்,இளைஞர்களும் நகரங்களில் பார்த்துக் கொள்ளும் போது சிரித்து பேசிக் கொள்கிறார்கள். ஒன்றாக டீ சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகள் ஒன்றின் மேல் ஒன்று மண்ணை அள்ளி தூற்றி விளையாடுகின்றனர்.


அந்த மண் ஊரின் மேல் விரிக்கப் பட்டிருக்கும் ஜாதி வலையின் கோர முகத்தில் விழுந்து மூடிப் போகும் என்கிற அழுத்தமான நம்பிக்கையில் நகர்கிறது.அந்த கிராமத்தின் நாட்கள்.

No comments: