19 Sept 2011

மண்ணரிப்பு,,,,,,,


 
                        
       அவரையும் இந்த சூழலையும் பாத்ததும் அவரோடு பேசவும் பகிர்ந்து கொள்ளவும் நிறையத்தான்  இருக்கிறது என்றாலும் நான் தயாராய் இல்லை.
     அவரது மனைவியின் தவறான உறவால் ஏற்பட்ட மனப் பிணக்கில் இந்த அந்திம காலத்தில் இப்படி அவர்/
     நீண்டு விரையும் சாலைகளின் அதிர்வுகளிலும் மிகுந்து போன நெரிசல்களுக்கு மத்தியிலும் அவரது  நாட்களின் நகர்தலைக்கண்டு  அதிர்ச்சியடைந்து போனேன்.
     நான் யாரோ, அவர் யாரோ,நான் எனது வேலையை பார்க்கிறேன்.அவர் அவரது வேலையை பார்க்கட்டும் என கூறி விட முடியவில்லை.
    “தம்பி ஒரு கால் ரூபா இருந்தா குடு ஊருக்குப் போகணும்”நகரின் ஏதாவது ஒரு நெரிசலானதெருவில்அல்லதுசாலைகளின் சந்திப்பில் டீக்கடை ஓரமாய்,பஸ்டாண்டிலும் இந்த குரலை கேட்க நேர்ந்த நேரங்களும் தினங்களும் அதிகம்தான்.
     அன்றாடங்களின்நகர்தலில்அவரைநோக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாய் பதிவாகிறார் என்னுள்.
     தூரத்தே விரையும் எனது சைக்கிளை சாலையின் அத்தனை நெரிசலிலும் அத்தனை வேகத்திலும் ஈஸியாய் இனங்கண்டு கொண்டு அவர் வாய் வார்த்தையால் பிரேக்கிட்டு விடுவார்.
     அப்புறமென்ன அவர் கேட்கும் வாய்வார்த்தை அவரின் தோற்றத்துடன் பிசைந்து வரும்.
     பிளாட்பாரம் ,டீக்கடை ஓரம்,பஸ்டாண்ட் இங்கெல்லாம் அவரை பார்க்க நேர்கிற கணங்களில் கேட்க நேர்கிற கேள்விகளை அவரது தோற்றம் மறக்கடிக்கச் செய்துவிடுகிறதுண்டு.
     மனம் பிசைய சங்கடத்துடன் இருபத்தைந்து பைசாவை கொடுக்கும் எனது கைக்கும்,அவரது கைக்குமான உராய்வு ஏற்படுகிற நேரம் என் மனதின் ஓரம் ஒரு மெகா சைஸ் கேள்வியை எழும்பி விடுகிறதுண்டு.
     லிங்கம் பலசரக்குக்கடை.ஐந்து பைசாவிற்கு கைநிறைய அள்ளித்தரும் கடுகு மிட்டாயிலிருந்து,அரிசிபருப்பு வரை இல்லாத வியாபாரம் இல்லை எனலாம்.
     அள்ளித் தருகிற வள்ளலுக்கு அடுத்தபடி இவர்தானோஎன எண்ணத்தோன்றும்.
     இப்போதுதானே எதற்கெடுத்தாலும் பத்து ரூபாய் நீள்கிறது.அப்போதெல்லாம் பருத்திதான்.
பருத்தி கொண்டு போனால் நிறுத்துப் போட்டுவிட்டு வேண்டியதை தருவார்கள்.
உள்ளூர் பருத்தி வியாபாரி விளையாட்டாயும், சங்கடத்துடனும் சலித்துகொள்வார் லிங்கத்திடம்.
    “நீங்கெல்லாம்என்னைக்குபருத்திவாங்க அரம்பிச்சீங்க்களோ,
     அன்னையிலிருந்து நம்ம வியாபாரம் பெப்பரப்பேதான்”
இத்தனைக்கும் வியாபாரி லிங்கத்துக்கு சொந்தம்தான்.ஏய் போன்னா அங்கிட்டு,,,,,,,,என்பார் லிங்கம் வியாபாரியை/
    மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் ஊர் மந்தை டீக்கடையில் சிரிப்பும்,பேச்சுமாய்டீக்குடித்துக்கொண்டிருப்பதைகாணலாம்.
     சின்னப்பிள்ளையாக இருக்கும் போது நான் அவரது கடைக்கு நிறைய தடவை போயிருக்கிறேன். “என்ன தம்பி எப்படி இருக்க?,பள்ளிக்கூட யூனிபார்ம் அழுக்குப்படாமக்கூட வந்து நிக்கிறயே,”என்பார்.
    அப்போது கடைக்கு வந்திருக்கும் என் வயது பையன்களிடம்,தம்பி படிக்கிற டவுன் படிப்புக்கு ஏத்தமாதிரி அவன் கொண்டு வர்ர பருத்தியும் எப்புடி இருக்குது பாருங்க  என மறக்காமல் சொல்வார்.
    வாஸ்தவம்தான்.அவர் சொன்னஎன் வயது  பையன்கள் பருத்தியில் லேசாக தண்ணீர் தெளித்துக்கொண்டு வருவார்கள்.அப்படி கொண்டு வருகிற பையன்களிடம் தராசில் வேலைகாட்டி  விடுவார் லிங்கம்.
     பருத்திக்காசு போக வாய்கணக்கு,வாரக்கணக்கு என நிறைய புழங்கும் அவரது கடையில்.
    லிங்கம் கடையில் கணக்கு என்றால் அவ்வளவு லேசெல்லாம் கிடையாது.அதையெல்லாம் மீறி ஓடியது கணக்குகளும்,கடையும்/
  
     அந்த அடைமழையோடு வந்து சேர்ந்ததுதான் ஆசைத்தம்பி குடும்பம்.அவர்கள் பூர்வீகம் என மலைசார்ந்த ஊரை சொன்னார்கள்.
    வரத்து ஆடு மேய்த்து பிழைப்பு நடத்துபவர்கள்.கையில் ஒரு பிள்ளையும் வயிற்றில் ஒன்றுமாய் அவர்கள் வந்து ஊர் சாவடியில் நின்றபோது லிங்கம் மனதிற்குள்ளேயே
அழுது விட்டார்தான்/
    உடம்பிலும்,உடையிலும் இல்லாமை.உருண்டு,திரண்டு மார்பு விரிந்து நின்ற கணவன் வாடிப்போயிருந்தான்.மனைவி பரட்டையாய் உடல் காய்ந்து.பிள்ளை அழவும் சக்தியற்று துவண்டுபோய்.அவர்களிடம் எச்சில் துப்பக்கூட திராணியில்லை.
    லிங்கம்தான் தனது தொழுவத்தில் தங்கவைத்தார் அவர்களை.முதலில் சாப்பாடு.அப்புறம்தான் என்ன,ஏதென்ற விவரம் கேட்டார்.
    ஆடு மாடுகளின் வாசனையோடு இருந்த தொழுவம் இப்போது மனித வாசனையுடனும்,சுத்தத்துடனும்/
    தங்களது பிழைப்பின் ஆதார நுனியை வெளியே பரப்பி படர்ந்து பற்றி பாவி நின்றார்கள்.இதுதான் லிங்கம் மனைவியின் மனதை நெருடி,நெகிழச்செய்திருக்க வேண்டும்.
    லிங்கம் குடும்பத்திற்கும்,சுத்தத்திற்கும் வெகு தூரம்.ஊர்பஞ்சாயத்தில் சொல்லி அவர்கள் இருவரையும் தினமும் குளிக்கச்சொல்லவேண்டும் என்கிற மாதிரியான பேச்சுக்களெல்லாம் நடப்பதுண்டு ஊருக்குள்.
   “மழை,குளிர் காலத்துல கூட சரி ,கண்ணுகுள்ளயெல்லாம் வேர்க்கிற இந்த வெயில் காலத்துல எப்படித்தான்,,,,,,,,,,,,?கண்றாவி புடிச்ச பையல்க”என்பார்கள் மறைமுகமாக.
    அவர்களது கடையும் அப்படித்தான்இருக்கும்.ஒன்றின் மீது ஒன்றாய்.அரிசிமூடை மீது பருப்பும்,எண்ணெய் டின் மீது உப்பும் சிந்திக்கிடக்கும்.கருவாடு தன் பங்குக்கு வாசனையை பரப்பிக்கொண்டு ஒரு மூலையில்.தவிரமிட்டாய் பாக்கெட்,அப்பள பாக்கெட் என தின்பண்டங்களின் ரகங்களும் வரிசைகட்டிக்கொண்டு நெருக்கமாய்/
    கடையின் வாசலை நெருங்கும்போதே ஏதோ ஒரு ரசாயன கலவை  வாசனை.வாசலில் நிரந்தரமாய் ஒட்டி இருக்கும் பிசுபிசுப்பு.தூசி,அழுக்கு படர்ந்து நிற்கிற ஈரம்.
    இதையெல்லாம் கடந்துதான் அவரிடம் சரக்கு வாங்க போகவேண்டும்.அப்படி சரக்கு வாங்கப்போகிற வேளைகளில் ஏழுகடல்,ஏழு மலை தாண்டுகிற பரமபிரயத்தனம் தெரிந்திருக்கவேண்டும்.
    லிங்கத்தை கடையில் பார்க்கிறதை விட அவருடைய ஒற்றை மாட்டு வண்டியில் பார்த்தவர்கள்தான் அதிகம்.காலையில் வண்டிக்கு மசையும்,மாட்டுக்கு இரையும் தண்ணீரும் விட்டு விட்டு கிளம்புவார்.மதியம் உச்சி வேளை வேளையில் திரும்பிவருவார்.தக்காளிக்கூடை,எண்ணெய் டின்,அரிசி மூடை இவற்றோடு கொஞ்சம் வைக்கோலும்/
    இப்படித்தான் ஒரு தடவை சரக்கேற்றி வரும் போது வழக்கம்போலவே தூங்கி கொண்டு வந்திருக்கிறார்.வழியில் ஆள் அரவம் இல்லை.வண்டி வந்து கொண்டிருக்கிறது.வண்டியை நிறுத்தி கையோடு கொண்டு வந்திருந்த புண்ணாக்கு தண்ணீரை மாட்டுக்கு வைத்துவிட்டு  லிங்கம் தூங்கிக்கொண்டிருந்த மூடையை மட்டும் விட்டு விட்டு மற்றதை நகட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.மாடும் புண்ணாக்குத் தண்ணீரை குடித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்திருக்கிறது.மறுநாள் அரிசிக்கடைக்காரரிடம் போய் சண்டை பிடித்திருக்கிறார் லிங்கம்.அவர் சிட்டையை எடுத்து காண்பிக்கவும் திருட்டை ஊகித்திருக்கிறார்.
   ”ஆடிக்காத்து வேகமா அடிக்கிற நேரம்,அசந்து கண்ண மூடுனது ஏந்தப்புதான்,”என கடைக்காரிடம் சொல்லியவராய் வந்திருக்கிறார்.ஒரு வாரத்தில் திருடனை பிடித்து விட்டாராம்.பிடிபட்டவன் கஞ்சிக்கு இல்லாத கொடுமை என கையெடுத்து கும்பிட்டு அழுதபோது திருடியதை பைசல் பண்ணிவிட்டு டவுனில் உள்ள தெரிந்த கடையை சொல்லியிருக்கிறார் வேலைக்கு சேரச்சொல்லி/
    காலையில் எழுந்திருப்பவர் முகம் கழுவுவதே மந்தை டீக்கடையில்தான்.பின் கண்மாய்,வண்டிமாடு,டவுன் பிரயாணம் இதுதான் அவரது அன்றாடகாலை நகர்வுகள்.பல்விளக்கி குளித்து,வீட்டில் சாப்பிட்டு என்பதெல்லாம் லிங்கத்திற்கு அப்பாற்பட்டவிஷயங்களாகவே இருந்துள்ளது எப்பொழுதும்.
    ஆனால் அந்த பழக்கங்கள் சரியாக இருந்த ஆசைத்தம்பி குடும்பத்திடம் லிங்கம் மனைவியின் மனது பறிபோனதில் ஆச்சரியம் இல்லை என்றார்கள் விஷயம் தெரிந்த சிலர்.
   முதலில்அரிசி,பருப்பு,அரசலவுஎனமுந்தியில் வைத்துபோயிருக்கிறது.நாள்பட,நாள்பட
எல்லாம்வெளிப்படையானது.
    காரணம்இப்படித்தான்சொன்னாள்.“அவர்களும்வந்தட்டி,நாங்களும் வந்தட்டி
(பிழைக்கவந்தவர்கள்)ஒருத்தருக்கொருத்தர் ஆதரவுதான்” என்றாள் லிங்கத்தின் மனைவி.
    அந்தஆதரவின்நிழல் லிங்கத்தின் மனைவி மீது நிரந்தரமாய் விழுந்து விட்டது
ஆசைத்தம்பியின்மூலமாய். லிங்கத்தின் குழந்தைகள் இரண்டும் ஆசைத்தம்பியின் சாயலில் இருப்பதாக பேசிக்கொள்வார்கள் ஊருக்குள்.    
    நைந்துமெலிந்துபோனதேகம்,மேலேமுரட்டுத்துணியில் போர்த்திய சட்டை,கோட்டின் தோற்றத்துடன்அங்கங்கேஒட்டுப்போட்டு.கனக்காலுக்குஏறிநிற்கும் அழுக்குக்கைலி,
படர்ந்து தொங்கும் மீசையுடனும், தலை கலைந்து காணப்படும் அவர் எப்பொழுதும் ஷேவிங் பண்ணிய தோற்றத்துடனேயே இருப்பதை பார்த்திருக்கிறேன்.
    அவர் என்னை பார்க்கிற போதெல்லாம் கேட்கிற வார்த்தைகள்,அந்த “கால் ரூபா,ஊருக்குப்போகணும்,”அதை தாண்டியோ அல்லது குறைவாகவோ கேட்டதாக ஞாபகம் இல்லை.
  அல்லது,ஒருடீ,காபி,டிபன்,சாப்பாடு,,,,,,,,இந்தமாதிரியெல்லாம்கேட்டதாகவும் ஞாபகமில்லை எனக்கு.
   நானும்எங்களுர்க்காரர்கள்சிலரைகேட்டுப்பார்த்ததுண்டு.வாஸ்தவம்தான்என்கிறார்கள்
குரலில் கேலி தொனிக்க.
   அந்த கேலியையும்,எல்லையும் மீறி,அதிர்வு மிகுந்த ,நெரிசலான இடங்களின் மத்தியில் அவரது குரல் கேட்காமல் இல்லை.
   “தம்பி ஒரு கால் ரூபா இருந்தா குடு, ஊருக்குப்போகணும்.” 

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
பதிவைப் படித்து முடித்ததும் அந்த சத்தத்தை என்னாலும்
உணர முடிந்தது.தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 1

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நலம்தானே?சப்தங்களை உணரச்செய்கிறபடைப்புகள் நம்மை கவனப்படுத்துகிறதுதானே.