கொடுக்க வேண்டிய சில்லறைக்கு
பதிலாய் சாக்லேட் தந்துவிடட்டுமா
எனக் கேட்ட டீக்கடைக்காரரை
எங்கோ பார்த்ததாய் ஞாபகம்.
எங்கென சரியாகத்தெரியவில்லை.
அறிமுகமாகிய முகமாயும் இல்லை.
பின் எப்படி?
கடை வீதியில்,கூட்ட நெரிசலில்,
சினிமா தியேட்டரில்,கோவிலில்,,,,,
இப்படி எங்கேனுமாய் பார்த்திருக்கலாமோ?
என்கிற எண்ணத்துடன்
அவர் கட்டிக்கொடுத்த ஆறு வடைகளையும்,
சாக்லேட்டையும் வாங்கிக்கொண்டு
கிளம்புகிற போது சென்ற வாரம்
நண்பரிடம் பேசியது ஞாபகம் வந்தது.
எங்கிருக்கிறீர்கள் இப்பொழுது?
இருக்கிற இடம் சொல்லுங்கள்,
கார் பிடித்தாவது
வந்து பார்த்து விட்டுச்செல்கிறேன்,
இப்படியே விட்டால் முகம் மறந்து போகும்.
எனச்சொன்னது ஞாபகம் வர
திரும்பி டீக்கடைக்கார்ரை ஏறிடுகிறேன்.
என்ன சார், அப்படிப்பார்க்கிறீர்கள்.
உங்களது மூன்றாம் வீட்டுக்காரன் நான்.
என ஸ்னேகமாய் சிரிக்கிறார்.
No comments:
Post a Comment