தரையை கூட்டும் போது
முன்னால் வந்து நின்று
கொண்டிருந்த
நாயைவிரட்டுகிறேன்.
போக மறுத்து என்னையே
உற்றுப் பார்த்தவாறு சுற்றி வருகிறது.
வலப்பக்கம் திரும்பினால்
இடப்பக்கம் போகிறது.
இடப்பக்கம் திரும்பினால்
வலப்பக்கம் வந்து நிற்கிறது.
முன்னங்கால்கள் இரண்டையும்
நீட்டிப்படுத்து விறைப்பாய்
உடல் நெளிக்கிறது.
கல் எடுத்தால் போக்குக்காட்டுகிறது.
கைதட்டி விரட்டினால் பம்முகிறது.
சப்தமிட்டு அதட்டினால்
அருகில் வந்து குழைகிறது.
இடுப்பில் கைவைத்து முறைத்தால்
அப்பாவியாய் விழிமூடி
அண்ணாந்து பார்க்கிறது.
கோபமாக்க இருப்பவரின்
முன்னால் மலர்ந்து சிரிக்கிற
குழந்தையின் வெள்ளைச்சிரிப்பாய்
அதன் செய்கைகள்.
திரண்டு நின்ற தூசியையும்,
இதுவரை கூட்டிய மரத்திலைகளையும்,
கையில் வைத்திருந்த விளக்குமாறையும்
கீழே போட்டு விட்டு
தலையில் தட்டி அதனுடன் விளையாட ஆரம்பிக்கிறேன்.
2 comments:
ரசித்தேன்... படமும் அருமை...
நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.வணக்கமும் சேர்த்து/
Post a Comment