13 Jun 2014

முறுக்குக்கயிறு,,,,,,

என்னைஅப்பா எனச் சொன்னவளுக்கு
இருபத்தியெட்டிற்குள்ளாக
இருக்கலாம் வயது.
புதுக்கருக்கு குலையாத தாலியும்
தங்கச்செயினுமாய்
முறுக்கித்தெரிந்தது கழுத்தில்.
அவளை இதற்கு முன்
நான் பார்த்ததில்லை.
அவள் எனக்குசொந்தமும் இல்லை.
கல்யாணம்,சடங்குவீடு,
ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவு
என்கிற எந்த அடையாளப்பிரிவுகளிலும்
பார்த்த்திலை.
நண்பர் வட்டாரம்,தோழமை, நலம் விரும்பிகள்,
என்கிற எந்த வகைக்குள்ளும்
அவள் வரவு இல்லை.
பின் எப்படி?
ஒருவேளை நான் பார்த்தறியாத,
கேள்விப்பட்டு அறியாத
உறவின் மக்களில் யாரவதாக இருப்பாளா?
அல்லது நான், எனது என்றில்லாமல்
நாம்,நமது என்கிற பொது வாழ்வின்
எல்லைகளில் அலைந்தபோது
என்னை இனம் கண்டவளாக இருப்பாளோ?
என்கிற எந்த ஞாபகமுடிவிற்குள்ளுமாய்
இருக்க மறுப்பவளாய்.
மகனது கல்லூரி சேர்க்கைக்காக
சென்றிருந்த எங்களின் எதிர்அருகாமையாக
நின்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
கல்லூரிச் சேர்க்கை பற்றியும்,
பாடங்கள் பற்றியும், கட்டணங்கள் பற்றியுமாய்
என பதிவாகிறது அவளை பார்த்த கணங்கள்.
கல்லூரி வளாகம்,ஆசிரியர்கள்,
மாணவர்கள்,வகுப்பறைகள்,
இடைவேளையின் போது
ஒலித்த மணி என இதர,இதரவாய்
எல்லாம் தாண்டி அவள் சொன்ன சொல்லே
பதிவாய் நின்றது .
எல்லாம் முடிந்து கல்லூரியை விட்டு வந்த பின்பும்.
சரி சொல்லி விட்டுத்தான் போகட்டுமே
என்கிற சமாதானத்திற்குள்ளுமாக
அவ்வளவு எளிதாக வந்துவிட முடியவில்லை.
அடுத்த முறை அவளைப் பார்க்கையில்
மறக்காமல் தெரிவிக்கவேண்டும்.
அந்த வார்த்தையின்
கணம் மனம் பிசைந்ததையும்,
கல்லூரி வாயிலில் நின்ற செடி ஒன்று
துளிர்த்து,மலர்ந்து நின்றதையும்./

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நினைவலைகளை தட்டிச் சென்றது மிக அருமைய வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

தந்தையர் தின சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தந்தையர் தின வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம், ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/