14 Jan 2015

பூப்பூ,,,,,

நண்பர்களே, கிராமத்தில் பிறந்து, நகரத்திற்குச் சென்று வாழ்பவர்கள் அதிகம். ஆனால் நகரத்தில் பிறந்து, கிராமத்தில் தஞ்சம் புகுந்தவர் இவர்.
     ஒரு கிராமத்தில் மனிதன் இருப்பதற்கும், ஒரு மனிதனை கிராமம் வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, உணர்ந்து வளர்ந்தவர் இவர்.
     தோட்டம், காடு, வயல் வெளிகள் என பசுமை நிறைந்த மண் வாசனையினையும், மண்ணின் ஈரத்தினையும், மண் சார்ந்து வாழ்வு நடத்தும் மனிதர்களின் ஈர மனதினையும் ஒரு சேர அறிந்தவர் இவர்.
     இடுப்பில் அழுக்கேறிய சிவப்பு டவுசரும், தோளில் துண்டுமாய், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என இருபத்து நான்கு மணி நேரமும உழைப்பிற்கே, தன் வாழ்வினை உரிமையாக்கி, கிராமம் தாண்டாமல் வாழ்ந்தவர் இவர்.

     கொஞ்சம் படித்து, நிறைய உழைத்து, பாண்டியன் கிராம வங்கியில் ஊழியராய், இவர் இணைந்தது தனிக் கதை.
    வங்கியில் எண்களோடு மட்டுமே உறவாட வேண்டிய வாழ்க்கையில் நுழைந்த இவர், எழுத்துக்களின் வழியாக வெளிப்பட்டது வியப்பிற்குரிய நிகழ்வுதான்.
     எழுத்து என்றால் கிராமிய மணம் கமழும் எழுத்து. கிராமத்து மண்ணைக் கிளறிவிட்டால், எழுமே ஒரு மண் வாசனை, ஈர மண் வாசனை, அந்த ஈர மண் வாசனையினையும், ஈர மனிதர்களின் வெள்ளந்திப் பேச்சுக்களையும், ஒவ்வொரு எழுத்திலும், ஒவ்வொரு சொல்லிலும் சுமந்து வரும் எழுத்து இவரது எழுத்து.
நண்பர்களே, இந்த எழுத்திற்குச் சொந்தக்காரர் நண்பர் விமலன் அவர்கள்தான், என்று நான் சொல்லி, நீங்கள் அறிய வேண்டிய நிலை இல்லை, என்பதனையும் நான் அறிவேன்.
      வலையுலக உறவுகள் அனைவருமே இவரை நன்கறிவார்கள்.
காக்காச் சோறு
2008 ஆம் ஆண்டு முதற் பதிப்பு கண்ட இவரது நூல்,
ஆறு ஆண்டுகள் கடந்து,
மீண்டும் ஒரு பதிப்பு கண்டு,
தமிழ் உலகை வலம் வரத் தொடங்கியிருக்கிறது.
    பல நூல்கள் அச்சக அறைகளிலேயே, கட்டாய ஒய்வு எடுக்கும், இக்கால கட்டத்தில், ஒரு நூல் மீண்டும் அச்சேறி, அரியணை ஏறுவது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி அல்லவா?. இதற்காகவே விமலன் அவர்களை ஒரு முறை பாராட்ட வேண்டும்.
     அங்குட்டிங்குட்டு தூரந் தொலவுல இருக்குற கூடப் பொறந்தவுங்க ரெண்டு பேருமே, இங்க வந்துருங்க, இங்க வந்துருங்கன்றாங்க.
     மதுரையில இருக்குற தம்பி வீட்லதான் கக்கூசு பாத்ரூம் சகிதம் இருக்கு.
     ஆனா பாட்டிக்கு அங்கன போக மனசு ஒப்பல.
     தனியாளா இருந்தாலும், இங்கன இருக்குற சௌகரியம் அங்க வருமாங்குறா. என்ன இருந்தாலும், இன்னோர்த்தங்க வீட்ல போய், பெட்டிப் பாம்பா எப்படி இருக்க? அப்பிடீங்குறா, என்ன செய்ய சொல்லு?
     பேச்சற்று கடந்த சிறிது நேர இடைவெளிக்குப் பின் அவரேதான் தொடர்ந்தார்.
     சீக்கிரமா கொண்டு போ, வீட்ல புள்ளைங்க ஆசையா காத்து கெடக்கும்.
     எங்களுக்குத்தான் இப்படி ஒரு குடுப்பின இல்லாமப் போச்சு.....
     சொல்லும் போதே குரல் தழுதழுத்தது. அழுதவாறே உட்கார்ந்து விட்டார் தாத்தா. பக்கத்திலேயே அவரது கண்ணீரைத் துடைத்தவளாய் பாட்டியும்.
     நண்பர்களே, இன்று எத்தனை வீடுகளில் தாத்தா, பாட்டி இருக்கிறார்கள். நண்பர் விமலனின் ஒத்தப்பனை இது.
     வணக்கம் நண்பனே, இறந்துபோன உனக்கு கடிதம் எழுதுவதென்பது, அவ்வளவு பெரிய தேச விரோத செயலா என்ன? பலர் சொல்கிறார்கள். பரவாயில்லை, சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே. அந்த தேச விரோதச் செயலை செய்து விட்டுப் போகிறேன். என்ன லாஜிக்காய் கொஞ்சம் இடிக்கும். விடு நண்பா, இங்கே லாஜிக்காய் எதுதான் ......?
    
      உயிருடன் உள்ள உறவுகளுக்குக் கூட, கடிதம் எழுத, எழுதுகோலை திறக்க மறுக்கும் மனிதர்கள் நிரம்பி வழியும் இவ்வுலகில், இறந்து பேன, தன் நண்பனுக்கு ஓர் கடிதம் எழுதுகிறார் இவர். சுடரினுள்ளே .. எனத் தலைப்பிட்டு. கடிதம் இருளில் விளக்கொளியாய் மின்னுகிறது.
     ஆம்பள இல்லாத வீடுன்னு தெருவுல திரியுர கண்ட கழுதைகளெல்லாம், மோப்பம் புடிக்குது, மூஞ்சக் காட்டுது. அந்நேரம் ஈரக்கொலையே ஆடிப் போகுது.
     இருக்குறப்ப நல்லவுங்களா தெரிஞ்சோம். இப்பம் இல்லாதப்ப, பொல்லாதவுங்களா தெரியுறம்.
     கழுத எங்கிட்டாவது தூர தேசமா போயிரலாம்னா, அதுக்கும் வழியில்லை. எங்கயாவது ஆத்துல கொளத்துல விழுந்து உசுர மாச்சுக்கிறலாம்னு பாத்தா, புள்ளைங்க மொகம் வந்து கண் முன்னாடி நிக்குது.
      இன்றைய சமூகத்தில் மனிதாபிமானம் கிழிந்து போய் கிடப்பதை, வெளிச்சம் போட்டுக் காட்டும், இச்சிறுகதையின் பெயர் கிழிசல்.
     இப்படியான பேச்சுக்களையும், பார்வைகளின் அனர்த்தங்களையும், தூது விடல்களையும், விடலைகளின் சீண்டல்களையும், சொந்தங்களிடமும், உடல் முடியாத தாய் தந்தையிடமும் சொன்னபோது,..
      எல்லாம் எங்களுக்குத் தெரியத்தாம்மா செய்யுது, தாலி அறுத்தவ தலவிதி அதுதான் என்றார்கள்.
       நீர்க்குமிழி நெஞ்சை விட்டு அகல வெகு நேரமாகும்.
மறு பதிப்பு கண்ட
காக்காச் சோறுக்கு
வாழ்த்துக்கள் நண்பரே.
வெளியீடு
வம்சி புக்ஸ்,
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை 606 601
தொலைபேசி 04175 251468
அலைபேசி 94448 67023

(எனது காக்காச்சோறு சிறுகதைத்தொகுப்பிற்கு கரந்தை ஜெயக்குமார்அவர்கள் எழுதிய விமர்சனம் 
அவரின் வலைத்தளமுகவரி /http://karanthaijayakumar.blogspot.com/)

15 comments:

KILLERGEE Devakottai said...

படித்தேன் நண்பரே வாழ்த்துகள்
தமிழ் மணம் 2
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

vimalanperali said...

மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்.

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி சார்,
நன்றி வருகைக்குஜ்ம்,வாழ்த்திற்குமாய்/

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Yarlpavanan said...

தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும், வாழ்த்திற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

”தளிர் சுரேஷ்” said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Unknown said...

மறு பதிப்பா ,சாதனை படைத்த காக்காச் சோறு ..வாழ்த்துக்கள் !
த ம 4

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்.இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வனக்கம் பகவான் ஜி சார்,நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/

விச்சு said...

காக்காச்சோறு தொகுப்பை நானும் வாசித்துவிட்டேன்.. உங்கள் கிராமிய மணம் தவழும் எழுத்துக்களை நானும் கொஞ்சம் பருகிக்கொண்டேன்.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,புத்தக வாசிப்பிற்குமாய்/