20 Mar 2015

விமர்சனம்,,,,,,,,,

  விமலனின் காக்காச்சோறு தலைப்பு என்னைக் கவர்ந்தது. இந்த தலைப்பைக் கேள்விப்பட்டவுடன் கவிஞர்  அப்துல் ரகுமானின் காக்கைச்சோறு எனும் கவிதை நூல்தான் எனக்கு ஞாபகம் வந்தது. காக்கைகள் நாம் உணவு வைத்தவுடன் கூட்டமாக வந்து தன் உணவைப்பகிர்ந்து கொள்ளும் என்றுதான் நாம் நினைக்கிறோம். அதில் விஷம் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் காக்கைகள் தன் இனத்தைக் கூப்பிட்டு சோதித்துப்பார்க்கும் என்று கவிதை நடையில் நாம் யோசிக்காத தெரிந்திருக்காத வகையில் அப்துல் ரகுமான் புது விளக்கம் தந்திருப்பார்.
விமலனின் காக்காச்சோறு நூலில் இடம்பெற்ற  அதே தலைப்பிலான கதையில் காக்காவிற்கு சோறு வைப்பதும் அது சினேகத்துடன் பழகுவதும் அழகான நடையில் எழுதியிருப்பார். கதையின் இடையில் அரிசி ரகங்களை சொல்லி அவர் அடிக்கும் கமெண்ட் அருமை. கதை முடிவில் அவர்கள் டவுனு க்கு போனதும் காட்சிகள் மாறி காக்கைகளுக்கு நேரும் கதியினை எழுதி முடித்திருப்பார்.
  நீர்க்குமிழி எனும் சிறுகதையில் தாலி அறுத்தவளின் மனநிலையை அழகாக விவரித்திருப்பார். கிராமத்தில் இதுபோன்ற நிலைமை இன்னும் தொடரத்தான் செய்கிறது. ராமு அண்ணன், அவரின் பாட்டி போன்றோரின் உழைப்பினை கிராமத்துப்பாணியில் விமலன் அழகாகக் கூறியுள்ளார். முடிவில் “தாலி அறுத்தவ தலைவிதி அதுதான்” எனும்போது நெஞ்சு கனக்கிறது.
இடக்கரடக்கல் எனும் கதையில் வனராஜன்எனும்பெயரைஅறிமுகப்படுத்தும் பாங்கு அலாதியானது.
  வாய்க்கரிசி எனும் கதையில் ஒரு டெய்லரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரித்திருப்பார். எங்கள் ஊரில் நான் பார்த்த ஒரு டெய்லரும் இதே பாணிதான். இந்தக்கதையில் வரும் டெய்லர் குடிகாரராக மாறவும் வீட்டின் நிலைமையே மாறுகிறது. தினமும் அவன் டீக்குடிக்கும் கடை, அங்கு டிபன் சாப்பிட அவன்படும்பாடு, ஒரு கட்டத்தில் அவனுக்கு டீ கொடுக்கக் கூடாது என முடிவெடுக்கும் முதலாளி , டெய்லரின் பிள்ளைகள் என கதை யின் ஒவ்வொரு பாத்திரமும் கவனத்தை ஈர்க்கிறார்கள். இறுதியில் அவன் இறந்ததும் மனைவியும், பிள்ளைகளும் வாழ வேண்டிய வயது என முடித்திரு ப்பார்.
வேனற்காடு எனும் கதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி இருக் கிறார் விமலன். நல்ல எழுத்து நடை. சந்தேகப்புத்தி எனும் விஷவிதை ஒட்டு ரகம், வீரிய வித்து, கலப்பின வித்து எதனிதனையும் தாண்டியதாக அவனுள் விழுந்து துளிர்விட்டிருந்தது எனும் அவரது நடை வாசிக்க சுகமானது.
 காக்காச்சோறு நூலில் மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொரு கதையை பற்றியும் எழுத எனக்கு ஆசைதான். அது படிப்பவர்களுக்கு அயற்ச்சியைத் தரும். விமலனின் கதையில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள், டீக்கடை, உடன் பணியாற்றுபவரின் மனநிலை என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தி இருப்பார். இந்த நூலில் சில கதைகளின் தலைப்பு நமக்கு ஆச்சர்யமூட்டும். ஒத்தப்பனை, உப்பாங்காத்து, உள்கூடு, விருசல், இடக்கரட க்கல், சனாதனங்கள் எனப்பட்டியல் நீளும். வம்சி புக்ஸ் நிறுவனத்தார் விமலனின் காக்காச்சோறு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
(என்னுடையமுதல்சிறுகதைத்தொகுப்பானகாக்காச்சோறுக்கு
”அலையல்ல சுனாமி” திரு விச்சு அவர்கள் எழுதியுள்ள விமர்சனம்) அவரின்வலைப்பக்க முகவரி http://alaiyallasunami.blogspot.com/2015/03/blog-post.html#ixzz3UzEq2dmu

3 comments:

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
வாழ்த்துகள்

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/