9 Jan 2017

காற்றின் தூற்றலிலே,,,,,,/

தட்டவில்லைதான் கதவை,உதறினேன்தான் துண்டை,

ஆரஞ்சுக்கலரில் வேறெதுவும் கலக்காமல் உருக்கி ஊற்றியது போல் நூல்க ளின்கூட்டுறவிலும்நெசவின் கைகோர்ப்பிலுமாய் பட்டுப் படர்ந்திருந்த டர்க்கி டவலாய் அது.எத்தனைதான் அதை டர்க்கிட்டவல் என்கிற பெயரில் பல பேர் விளித்த போதும் இவனைப்பொறுத்த அளவில் அதன் பெயர் தேங்காய்ப்பூ டவல்தான்.

மிகவும் நெருக்கமாயும் அல்லாமல் மிகவும் இடைவெளி விட்டும் அல்லாமல் சொல்லி வைத்துச் செய்தது போல் துண்டின் மீது பூத்திருந்த பூக்கள் ஒன்றின் மீது ஒன்று இடிக்காமலும் ஒன்றை முந்தி ஒன்று பூத்துப்படராமலும் அழகு காட்டிச்சிரிக்கிறது.

அதில் ஒரு பூவை கிள்ளினாலோ அல்லது அதை மென்மை காட்டி தீண்டித் திருகி முத்தமிட முற்பட்டாலோ அது நாணிக் கொண்டது கண்டுஇன்னொன்று சற்றே கோபித்துக்கொண்டதுண்டு.என்னது எனக்கில்லையா இந்த முத்தமும் கிள்ளலும் என்பது போலாய்,,/

இப்படியான நாணலும் கிள்ளலும் முத்தமும் முகம் திருப்பிக்கொள்ளலுமான பூக்களை உள்ளடக்கிய துண்டை எம் ஆர் எம் கடையில்தான் வாங்கினான். பெரிய கடை வீதியில் இருக்கிற சந்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வைத்திருந்தது போல்வைத்திருந்தார்கள்கடையை,

கடையில் அப்படி ஒன்றும் மிகவும் நவீன ரக துணிகளோ அல்லது ரெடிமே டோ இல்லை.அல்லது 1000 இரண்டாயிரம் ரூபாய் போட்டு எடுத்து பின் இரண்டே மாதங்களில் சரியில்லை இது.அல்லது காணவில்லை இதன் அளவு என தூக்கி எரிவது போலான துணிகள் கொண்டதாயும் இல்லை.

சேலைகள் ஜாக்கெட் பிட் பேண்ட் பிட் சட்டைத் துணிகள் வேஷ்டி லுங்கி போர்வை ஜமுக்காளம் தலையணை என எல்லாம் வைத்திருந்த கடையில் சேலைகளே நிறைந்து தெரிந்தன.

விசாரித்ததில் சேலைகளே இங்கு அதிகமாய் விற்கும் என்றார் கடைக்காரர், வாடிக்கையாளர் அல்லது கடைக்கு வருகிறவர்களுக்கு சேலைகளை எடுத்து பிரித்துக்காண்பிக்கிறபோதுஏற்படுகிற மன நிறைவும் சந்தோஷமும் வேறெ ந்த துணிகளை காண்பிக்கும் போதும் இருந்ததில்லை என்பார் கடைக் காரர்.

”எத்தனை ஆண்பிள்ளைகள் வந்தாலும் அவர்களுக்காய் துணி எடுத்துக் காண் பித்தாலும் அல்லது அவர்கள் நமக்கு நமக்கு நெருக்கமானவர்களின் பிள்ளைக ளாகவோ இல்லை நம் வீட்டு பிள்ளைகளாகவோ இருந்த போதும் கூட பெண் பிள்ளைகள் இருப்பது போல இருக்காது சார்,

““அவர்களது சாப்பாடு உடை கவனிப்பு பழக்கம் படிப்பு இத்தியாதி இத்தியாதி என எல்லாம் அவதானிக்கிற போது அவர்கள் நாளை வளர்ந்து ஓரிடத்திற்குப் போய் வேலை சம்பாத்தியம் திருமணம் குடும்பம் என எதிர் கொள்கிற பிரச்ச னையில் அக்கறை என்பது ஈஸியாக பட்டுத்தெரிந்து விடுகிறதுதான்.

அகத்தின்அழகு முகத்தில் என்கிற சொல்பதத்தின்உதவிதேவையில்லாமல்,,,/ சுட்டெடுக்கிற ஒவ்வொரு தோசையையும் அவித்தெடுக்கிற ஒவ்வொரு இட்லியையும்அவள்ஹாட்பாக்ஸிலோ அல்லது வேறெதாவது ஒரு தட்டிலோ வைக்கும் போது அதற்கு முதல் நாள் அரிசிமாவும் உளுந்த மாவும் கிரைண்டரில் போட்டு அரைத்தெடுக்கிற பதமும் அக்கறையும் அவளது கண் முன்னே தெரிகிறதாய்,,,/

அரை படுகிற மாவில் சிக்குண்டு சுழல்கிற அரிசியையும் பருப்பையும் மாறி மாறி பதம் பார்த்துக் கொண்டே கையிலிருந்த மொபல் போனிலும் இண்டர் நெட்டிலும் வாட்ஸ் அப்பிலும் இன்னபிற விஷயங்களிலுமாக போய் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறாள்தான்.அறிவை அகண்டமாக்கிக்கொண்டும் பார்வையைவிசாலப்படுத்தியும்கொள்கிறாள்தான்.

அப்படியாய் விசாலப்படுகிற தருணங்களை உள் வாங்கியும் வீட்டு வேலை களில் தன் கைகளையும் மனதையும் கலந்து விட்டு விட்டு ஒன்றை செய்து முடித்து விட்ட திருப்தியுடன் கடைக்கு வருகிற பெண்பிள்ளைகளும் பெண்க ளும் நாங்கள் எடுத்துப்போடுகிற சேலைகளை பிரித்துப்பார்த்து அதன் மீது கைகளும் மனமும் படரப்பார்க்கிற போது எங்களுக்கு கொஞ்சம் பெருமையா கவும் கொஞ்சம் நிமிர்வாகவும் ஆகிப்போகிறதுதான்.

அந்த சேலைகள் காற்றில் பறந்து பார்க்கிறவர்களை அள்ளி எடுத்துக்கொண்டு போய்அத்துவானமாய்பறந்துதெரிகிறவான்வெளியில்வெளிஉலகின் சுகந்தத் தையும் எடுத்து உடுத்தப்போகிற புடவையின் விரிந்து படர்கிற மேன்மையை யும் சொல்லிச்செல்லும் பூக்கள் பூத்திருந்த சேலைகளும் ,அது அல்லாது டிசைன் காட்டிச்சிரிக்கிற சேலைகளும் அடர்ந்த சோலைக்குள்ளாய் துள்ளிப் பறந்து கண் சிமிட்டுகிற பட்டாம் பூச்சிகளின் பறத்தலையும் துள்ளலையும் காட்டி விட்டு வருகிறது என்ற கடைக்காரர் எடுத்துக்காட்டிய துண்டுகள்தான் அதுவாக இருந்தது.

துண்டு பண்டலை எடுத்துப்பிரித்துக்காட்டிய போது அதில் பத்துத் துண்டுகள் இருந்தது, பத்தில் பிடித்தது ஆரஞ்சுக்கலர் துண்டும் ஊதாக்கலர் துண்டுமா கவே பட்டுத் தெரிந்தது.

இப்படியெல்லாம் சந்தோஷப்பட்டும் உள உவகையுடன் சேலைகளையும் துண்டுகளையும் எடுத்துக் காட்டிய கடைக்காரரின் மனைவி மூன்று மாதங்க ளுக்கு முன்னால் இறந்து விட்டதாகச்சொன்னார்.

அதற்கு பின்பான நாள் ஒன்றில் கடைக்குப்போயிருந்த போதும் எப்பொழுதும் போல சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போதும் அவர் எப்பொழுதும் போல கிளீன் ஷேவில் காணப்பட்டார்.

ரோமக்கட்டை தட்ட விடாத கிளீன் ஷேவிங் பண்ணிய முகம்.பார்க்கிற நேரங்களிலும் பார்க்கிற போதெல்லாமும் முகத்திற்கு நேராக கம்பீரமாக பேசுகிற தனம்.சரி என்றால் சரி தவறு என்றால் தவறு.அதை தாண்டியோ அதற்கு மேலாகவோ வேறெந்த சொல்லும் இல்லை என்பது போல அவரது பேச்சு இருக்கும்.அது போலான சொல்லை ஒட்டியே அவரது செயலும்/

ஆனால்துண்டு வாங்க சென்றிருந்த அன்று அந்த கம்பீரமும் அந்த சொல்லும் செயலும் பளிச்சென்ற ஷேவிங்கும் கண்ணை உறுத்தாத உடைகளும் காணா மல் போயிருந்தது அவரை விட்டு/

கடை இருக்கிற ஒடுக்கமான சந்திற்குள் வண்டியை சத்தமில்லாமலும் சடுதி யில்லாமலும் போய் கடையின் அருகில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் வேகமாகத்தான் நுழைவான்.

கடையில்நுழைகிறபோதேஎல்லோருக்கும்வணக்கம்சொல்லிவிட்டு வேகமாய்த் தான் நுழைவான். கடைக்குள் நுழைகிற போதே கடையில் வேலை பார்க்கிற பெண் உட்பட கடையில் இருக்கிற எல்லோருமாய் நன்றாக இருக்கீறீர்களா எனக்கேட்டுக் கொண்டுதான் நுழைவான்.

இது போலான இவனது பதிவான கேள்விகளும் மனம் பூத்திருந்த சிரிப்பும் அவர்களுக்கு வழக்கமும் ஏற்பும் உடையதாகவும் அதற்கு அவர்கள் சொல்கிற பதிலும்சிரிப்பும்இவனுக்குபழகிப்போனதாகவேஇருந்திருக்கிறது எப்பொழுதும்.

அன்றும் போனான் அப்படித்தான் கடைக்குள் .இருந்தார்கள் எல்லோரும் வழக் கம் போலவே/

ஆனால்கடையின் வழக்கமும் நடைமுறையும் எப்பொழுதும் போல் இல்லை. சற்றே எதிர் மறை பட்டுக் காணப்படுகிறது,

கடைக்குள் நுழைகிற போது மெலிதாக மூக்கைத்துளைக்கிற ஊது பத்தி வாசனை,கடை ஓனரின் செல் போனில் ஒலிக்கிற மெலிதான மெலடி,,,,,,,. எதுவுமே ஒழைக்கப்படாமல்இருக்கிற ஒழுங்கு என கடையையும் அந்த இடத் தையும்காட்டுகிற வரிசைக்கிரமம். சற்றே மிஸ்ஸாகிப் போன எழுத்துப்பிழை போலானதாய் த்தெரிந்தது.

ஏன் இந்த எழுத்துப்பிழை நிலையும் கடையின் அனர்த்தப்பட்ட நிலையும் எனத்தெரியவில்லை.அப்படியே போய் விடலாமா திரும்பி என்பது சரியாக இருக்காது அந்த நேரத்திற்கு.

வந்த இடத்தில் வந்த வேலையையும் வந்த நோக்கத்தையும் விட்டு விட்டு திரும்பிப்போவது நன்றாக இருக்காது அவ்வளவாய் என்கிற உயரிய நோக்கில் அவரிடம் சென்ற போதுதான் அவர் சொல்கிறார்.மனைவி இறந்து போன அதிரடியான விஷயத்தை/

“வீட்டம்மாவின்ஊர்சேலம்சார்.பெண்பிள்ளைகள்இரண்டுபேரும் வாழ்க்கைப் பட்டு பெங்களூரிலும் சென்னையிலுமாக இருக்கிறார்கள் சார்.அவர்கள் இருவரும் அவர்களது குடும்பம் பிள்ளைகள் அவர்களதுஅன்றாடப்பாடு என இருக்கிறார்கள்.நாங்கள் இங்கு தனியாக இருந்தோம்.

அம்மா அப்பா அடுத்த தெருவில்தான் இருக்கிறார்கள்.அவர்களும் ஓய்ந்த நேரத்தில் வந்து கடையைப் பார்த்துக் கொள்வார்கள்.

அந்த நேரத்தில் எனக் கென பிரத்யோகம் காட்டி இருக்கிற வேலைகளை செய்து முடித்துக் கொள்வேன்.நான் சின்னதான வேலை ஒன்று செய்கிறேன். குளிர் பானம் ஒன்றிற்கு ஏஜெண்டாக இருக்கிறேன்.டீலர் இன்னொருவர்.அந்த வேலை ஒரு நாளில் பாதியை தன் வசப்படுத்திக்கொள்ளும்.மீதி நேரம் கடை வீடு,குடும்பம் பிள்ளைகளை பார்க்க லீவு போட்டு விட்டு பெங்களூர் சென்னை போக அங்கிருந்து வர என ஓடிக்கொண்டிருந்த ஓட்டத்தில் சட்டென ஏதோ ஒரு தடை கல்லை போட்டது போல ஆகிப்போனது எனது மனைவியின் மறைவு.

நன்றாக இருந்து திடீரென இறந்து விட்டாள் எனச்சொல்லிவிட முடியவில் லை.அவளுக்கு கேன்சரின் அறிகுறி என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பே உறுதியாகிவிட்டது.அதில் உடல் ரீதியாகவே சோம்பல் பூசித்தான்க் காணப் பட்டாள்.உடலில் ஏற்பட்டு விட்ட தீராத்தொந்தரவு,சுணக்கம் அடிக்கடி ஏற்பட்டு விடுகிற உடல் தளர்வு எல்லாவற்றின் கூட்டிசைவும் ஒன்று சேர்ந்து முடக்கி விட்டது அவளை.ஆனாலும் மனோரீதியாக தைரியமாக இருந்தாள் அவள். முடங்கிவிடவில்லை வீட்டிற்குள்/ நடமாடினாள்.பஜாருக்கு,கடை கண்ணிக்கு, கோயில் குளம் என போய்க்கொண்டுதான் இருந்தாள்.கடைசி நேரத்தில்தான் அவளை வைத்துப்பார்க்க முடியவில்லை.பெங்களூரில் இருக்கிற மகள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டேன்.,

“சும்மா சொல்லக் கூடாது மகளையும்,அவளும் நன்றாகத்தான் பார்த்துக் கொ ண்டாள்.இந்தக் காலத்தில் பெற்றவர்களை அப்படி வைத்துப்பார்க்கும் பிள்ளை கள் அபூர்வம்/

நான் தான் இங்கும் அங்குமாய் சண்டிங் அடித்துக்கொண்டு இருந்தேன்.கடை எனது ஏஜென்ஸி வியாபாரம்.எனது அம்மா,அப்பா என இங்கும் மனைவி பிள்ளைகள் என பெங்களூருக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன்.கேன்சர் வந்து விட்டால் உறுதிதான் சாவு என்கிற நிலையில் இருந்த போதும் கூட அவளைஅப்படிவைத்துப்பார்த்துக் கொண்டோம்.எந்த விதத்திலாவது ஏதாவது ஒரு மாயம் ஏற்பட்டு பிழைத்து விட மாட்டாளா அவள் என்கிற பேராசை எங்கள் எல்லோருக்குமாய் இருந்தது,

இதில் எனது தந்தைக்கு அவள் மீது எப்பொழுதும் மிகை பாசமும்,மிகை அன்பும் எப்பொழுதுமே உண்டு.அதை அவளிடம்நேரடியாககாட்டிக்கொள்ளா விட்டாலும்கூட என்னிடம் சொல்லுவார்,

“அவ நம்ம வீட்டு மருமக மட்டும் இல்லடா எனக்கு மக” என்பார்.அவள் மகள் வீட்டில் படுக்கையில் கிடந்த போது எவ்வளவு வற்புறுத்தியும் கூட பார்க்க போக மறுத்து விட்டார்.”இந்த நெலமையில அவள பாக்குற சக்தி எனக்கு இல்லடா”, எனச்சொல்லியவராய்,,/

பெங்களூரில் இறந்து போன அவளை சேலத்தில் வைத்துதான் தகனம் செய் தோம்.அவளது ஆசையும் அதுவாகத்தான் இருந்தது.

நேரம் கிடைக்கிற போதெல்லாம் என்னைக்கூப்பிட்டு எல்லோரும் தூங்கிப் போன இரவில் சொல்வாள்.அப்படி சொல்லிய சொல்லின் பலனாய்த் தான் அவளை அவளது அம்மா ஊரில் வைத்தே தகனம் செய்தோம்.

அவளைசிதையில் வைத்து எரித்த அன்று என்னில் பாதி உயிர் போய் விட்ட பீலிங் இருந்தது எனச்சொல்லியவாறே அவர் கொடுத்த துண்டை வீட்டில் பாத்ரூமில்துவைத்து ஈரம் போக பிழிந்து விட்டு உதறிய போதுதான் மனைவி கேட்டாள் என்ன கதவைத் தட்டுனீங்களா என,,,,/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை...

vimalanperali said...

வணக்கம் திண்dடுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

மனதை என்னவோ செய்துவிட்டது முடிவு! அருமை!

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார் .நன்றி வருகைக்கும்.கருத்துரைக்குமாக.../

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனைதான் நண்பரே

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

"ஏன் இந்த எழுத்துப் பிழை நிலையும் கடையின் அனர்த்தப்பட்ட நிலையும் எனத்தெரியவில்லை." என்பதைப் படித்ததும் எவ்வளவோ எண்ணத் தோன்றுகிறது.

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,,,/
படித்ததும் எவ்வளவோ எண்ணதோணுகிறது
என்கிற தங்களின் வார்த்தைகளே என்
போன்றோர்களை ஊக்குவிக்கிறது எனலாம்.