26 Jun 2017

இருப்புப்பாதைகளின் வழி தொட்டு,,,,,,,,

போய்க்கொண்டிருந்த சாலையோரம் தனது இருப்பு காட்டி சடுதியாய் ஓடிக் கொண்டிருந்த இருப்புப்பாதைகள் மூன்றின் உள்ளும் புறமுமாய் புற்களும் செடிகளும் பெயர் தெரியாத சிறு சிறுப்பூக்களுமாய் முளைத்துக்கிடக்கின்றன..

உயரம் குறைந்து ஒற்றைக்குச்சிகளாய் நீட்டி நீட்டி நின்ற புற்களும் கூப்பி விரித்த கையின் அகலத்திறத்திலில் வீற்றிருந்த உயிர்க் குடையாய் அகலம் காட்டி விரிந்து முளைத்து நிற்கிற செடிகள்,மஞ்சளாய், சிவப்பாய், கத்தரிப்பூ கலராய்,,,,,என பல நிறம் காட்டி சிரிக்கிற சிறு சிறு பூக்கள் ஏதாவது செடிகள் அல்லதுபடர்ந்து கிடக்கிற கொடியின் பிடியில் நின்றதா இல்லை காற்றாடும் அந்தரத்தில் தானாக முளைத்து நிற்கிறதா என புரியாதஅளவிற்கு பூத்துப் போர்த்திக் கிடக்கிறது,

இதில் புற்களின் முனையில் படிந்து கிடக்கிற தூசியையும் புழுதியையும் விட்டு விட்டு பார்க்கையில் அதன் நடுப்பாகத்திலிருந்து அடிப்பாகம் வரை பச்சையான ஒற்றை வர்ணம் காட்டி நிற்பது போலும் அதன் அருகாமையா யும் தூரமாயும் இல்லாத படர் கொடியின் மேலிருக்கிற அழுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து மண் தொடப்போகிற வேளை அதன் அடிக்காம்பு கலர் காட்டியும் பிடிமானம் விட்டுக்கொடுக்காமலுமாய்/

இது இரண்டின் கூட்டிசைவிலும் நட்புறவிலுமாய் கை நீட்டி அரவணைத்து தோள் தழுவளைப்போல் பெயர் தெரியாத பூக்களை அள்ளி அரவணைத்து இருப்பு காட்ட அனுமதிக்கிறவையாய் அவ்விடத்தில் மூன்றின் காட்சிப்படுத லும் ஒன்றிணைவுமாய்/

பாதை தொட்டும் அது விட்டு விலகியுமாய் கிடந்த செடிகளின் முளைத்தலை தாங்கியும் காட்டியுமாய் ஓடிக்கடந்த இருப்புப்பாதையின் ஓரமாய் சென்ற சாலை கைப்பிடித்து அழைத்துச்செல்கிற இடம் மதுரை ரோடாயும்,ரயில்வே ஸ்டேஷனின் முகப்பு வாயிலாகாவும் இருக்கிறது.

முகப்பு வாயிலின் வலது ஓரமாய் அமைந்திருந்த கேண்டீனும் அங்கு சாப்பிடு பவர்களும் டீக்குடிப்பவர்களும் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது எளிதாய் கண்ணுக்கு புலப்பட்டவர்களாக/

அலுவலக நாட்களின் நகர்வொன்றில் இரவு நேரப்பணியின் போது டீ சாப்பி ட்டு வரலாம் கொஞ்சமாக தூக்கமும் களைப்பும் போகவுமாய்/ என நினைத்து நடு இரவின் அந்த நேரத்திற்கு டீக்கடை தேடி அலைந்த போது அது சுழியி ட்டு கொணர்ந்து சேர்த்த இடம் இவ்விடமாயும் இந்தக்கேண்டீனாகவும் ஆகிப் போகிறது.

டீக்குடித்து விட்டுக்கிளம்புகையில் உடன் வந்த ஆறு பேரில் மற்ற ஐந்து பேரும்உறுதியாகச்சொன்னார்கள்,என்ன சார் இது டீக்குடிக்கப்போகலாம் எனச் சொல்லிவிட்டு டீப்போட்டு பழகுகிற இடத்திற்கு கூட்டி வந்து விட்டீகளே என/

அவர்களின் ஆதங்கமும் உள் மனப்புழுங்கலும் உண்மையானதும் வாஸ் தவமானதுமே அள்ளிக்காட்டுவதாக அந்த நேரத்தில்/

அதை சரி பண்ணவும் சமாளித்துப்பூக்கவிடவுமான மறு நாளின் அதிகாலை யில் நல்ல டீயாய்ப்பார்த்துகுடிக்கவும் குடித்த அனைத்திற்கும் இவன் காசு கொடுத்து திருப்திப்பட்டுக்கொள்கிற படியாகவும் ஆகிப்போகிறது,

இப்படியாய் காட்சிப்பட்ட கேண்டீன் முடிந்து ஸ்டேசனின் நுழைவு வாயிலில் படி இறங்கி வருகிற இடத்தின் இடது புறமாய் வேலி கட்டி வளர்க்கப்பட்ட குரோட்டன்ஸ் செடிகளும் பூக்களுமாய் அழகுகாட்டிச்சிரிக்கின்றன எந்த வஞ் சைனையுமில்லாமல்/

அவ்வழியாய்செல்பவர்களுக்கும்,வருகிறவர்களுக்கும்ரயில்பயணிகளுக்குமாய் இதப்பட்டுப்போகிற அந்தக்காட்சியை கை வசம் கொண்டிருக்கிற பார்வையில் சூழ்கொண்டிருக்கிற இடத்தை கைபிடித்தழைத்து வந்த சாலை சுட்டிக் காட் டியது போலவே அந்த சாலை இங்கிருந்து அங்குமாய் அழைத்துச்செல்கிறது. வேறென்ன கைபிடித்துத்தான்/

பிடித்தழைத்துச்சென்ற கையின் ஈரம் காய்வதற்குள்ளாய் நடந்து முடிந்த நிகழ்வின் ஓரங்கமாயும் இருப்புப்பாதையின் உள்ளாய் முளைத்துக்கிடக்கிடக் கிறசெடிகளையும் புற்களையுமாய் மேய்கிற ஆடுகள் பெயர் தெரியாத பூக்க ளை தின்றுவிடத்துணியவில்லை.பச்சை காட்டிய புற்களையும் வெளிர் மஞ்சளும் அடர் பச்சையும் கலந்து கலர் கட்டி காட்டிய செடிகளை ஓடி ஓடி மேய்ந்தவாறும் ஆவலில் அள்ளி அள்ளி தின்றவாறுமாய் இருந்த ஆடுகள் மறந்தும் கூட பூக்களின் பக்கம் திரும்பி விடவில்லை

அவைகளை தொட்டுப்பறித்து தின்று விடவோ இல்லாததின் ரகசியத்தை கேட்ட வேளையில் ஆட்டுக்காரர் சொல்கிறார் படக்கென/

அவர் வைத்திருந்த கம்பு ஆளுயரத்திற்கும் மேலாய் அரவம் காட்டாமல் நிற் கிறது. என்ன இது ஏன் இவ்வளவு உயரம் காட்டுகிற கம்பு என்கிற இன்னும் இன்னுமான சிலவையாய் சேர்த்துக் கோர்த்து வரிசையாகவும் அது அற்று மாய் கேட்ட பொழுது அவர் சொன்னது சற்று அதீதம்காட்டிச் சென்றதாகவே இருந்தது அந்த இடத்தில்/

“எனதன்பிற்குரியஐயா அவர்களே இந்த ஒரு வாரத்தில் தினசரி காலையிலும் மாலையிலுமாய் உங்களை அயராது கவனிக்கிறேன்.அன்றாடங்களின் நகர்த லில் நிறைந்து போன ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் மாணவ மாணவிகளுமாய் பயணிக்கிற இந்தப்பாதையில் என்னை உற்றுக்கவனிக்கிற வெகு சிலரில் நீங்களும் ஒருவராய் இருக்கிறீர்கள்,

”உங்களது பார்வையின் தீண்டலும் அது தாங்கி வருகிற உள்ளுணர்வுமாய் என் மீது படர்கிற வேளை உள்ளின் உள் நுழைந்து ஏதோ சொல்ல வருவது போலவும் கேட்க வருவது போலவும் ஏதோ ஒன்றை அறிவுறுத்தி என் உள்ள த்தின் உள்ளில் திணித்துச் செல்வது போலவுமாய் தோணிப்போகிறது. அப்படி யான எனது அவதானிப்பு சரிதானா இல்லை தவறா என சரியாக தெரியாத தங்களை உற்றுக்கவனிக்கிற வேலையை மட்டுமாய் என்னால் விட்டுக் கொடு க்க முடியவில்லை. அதுவும் நீங்கள் வருகிற போகிற வேலையில் மட்டுமே/

ஐயாஎன்னிடம்வேறெதுவும்பெரிதாக அசையும் மற்றும் அசையாச் சொத்துக் கள் இல்லாத வேளையில் இந்த 52 ஆடுகளை ,மட்டுமே எனது உயிரின் மேலான சொத்தாகவும் எனது ஆத்தமார்த்தகாவும் கட்டி வளர்த்து வருகிறேன். இவைகளுக்கென தனி தொழுவம் தனி மேய்ச்சல் நிலம்,தனி தண்ணீர் காட்டும் இடம் எனஎதுவும் திட்டம் காட்டியோ அல்லது வரை படமிடபட்டோ என்னிடம் இல்லை.

“ஆனால் அதற்கும் மேலாய் அவைகளை நல்லபடியாய் வைத்து பாதுகாக்கிற மனதுஇருக்கிறது.அதுஒன்றேபோதும்எனநினைக்கிறேன்.அப்படிநினைப்பதால் தான் அவைகளை எனது உயிருக்கும் மேலாக நினைத்து பாதுகாத்து விட முடிகிறது,ஆனால்எனதுகனகுவைத்தான்என்னால்பாதுகாத்துவிடமுடியவில் லை.

கனகு என்கிற கனகா என் மனம் நிறைந்திருந்த நாட்கள் அன்று/மனம் நிறைந்த ஆசையையும்,உள்ளம் நிறைந்த கனவுகளையுமாய் உடலில் உள்ள காதல் செல்களில் அடுக்கி உருவாக்கியிருந்த நேசம் ஊனின் உள்ளில் உருக் கொண் டிருந்த நாட்கள் அவை.

“ஆசை மிகுந்த உள்ளத்துடன் உலாவரும் வேளையில் அரும்பிக்கிடந்த மீசை மயிர் காற்றில் பறக்க டவுனிலிருந்த மில்லுக்கு எங்களூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்கள் சைக்கிள் பயணத்தில் வேகம் காட்டியவனாய் இருந்தேன் அன்றாடங்களில்/

“ஊரின் உள்ளிருந்து நடுத்தெரு என பெயரிடப்பட்டு கதவு எண் இன்னது முகவரி இன்னது என தீர்மானிக்கப்பட்டஇடத்திலிருந்து தினசரி காலையாய் தினசரி கிளம்பி சைக்கிளில் வருகிற பொழுது ஊர் முடிவின் முக்குத் தெரு விலிருந்துஉள்வாங்கியிருந்த வீட்டிலிருந்து ஏதாவது சாக்கு வைத்துக் கொண் டும் காரணம் சுமந்து கொண்டுமாய் என்னை பார்க்க வந்து விடுவாள் தெரு முனை நோக்கி/

”காய்கறி வாங்குவதற்காக,பலசரக்கு வாங்குவதற்காக,டீகடைக்குச்செல்ல பெட்டிக்கடைக்குச்செல்ல என ஏதாவது ஒரு காரணத்தை மடியில் கட்டிக் கொண்டு வந்து நிற்பாள்.

”பலசரக்குக்கடைக்கும் பெட்டிக்கடைக்கும் பெண் பிள்ளை போவது சரி,டீக் கடைக்கும் பெட்டிக்கடைக்கும் வியாபாரம் நடத்திக்கொடுக்க உனது தம்பி இருக்கிறானே,பின் நீ எதற்கு ஒவ்வொன்றிற்குமாய் ஓடி அலைகிறாய் என என திண்ணையில் சம்மணமிட்டோ காலி நீட்டிக்கொண்டோ அமர்ந்து அவளது பாட்டி சொன்ன போது கூட சொன்ன சொல்லின் நுனி குத்திய காதை சற்றே மூடி வைத்து விட்டும்,பாட்டி சொன்ன சொல்லின் நுனி எடுத்து அதன் மென்னி பிடித்து தூர எறிந்து விட்டுமாய் அவனைக்காணும் ஆவலில் காலின் பெரு விரலை தரையில் விரலை தரையில் தேய்த்துக்கொண்டோ அங்கிருந்த வீட்டில் உள்ள பெண்பிள்ளைகளை அழைத்து பேண்பார்க்கிற சாக்கில் உறை கொண்டிருப்பாள்.

“கொண்ட உறையின் இருப்பு அவளது மனம் தாண்டியும் மனம் தாங்கியுமாய்/ இந்த இருதாங்கிகளைப்பார்க்கிற அவளது பாட்டி அவளை ஜாடைமாடையாகப் பேசித்திட்டித்தீர்ப்பாள் முற்றம் தாங்கிய வெளியெங்குமாய்/

“பாத்துடீ அவுந்து கெடக்குற அலைபாயுற மனச அள்ளிக் கட்ட பிரியமில்லாத வயசு இது,புத்திசாலித்தனமா பொழச்சுக்க, ஆத்தா காரியில்லாத வீடு, ஒங்க ப்பன்தோட்டங்காடுஒண்ணேகதின்னு கெடக்கான், வெள் ளாமை வெளைச்சல், வெதைப்பு ஒழவு,,,,,,,,,,ன்னு /நீ என்னடான்னா ரொம்பத்தான மனச விரிச்சிப் போட்டுக்கிட்டுத்திரியிற,,,,,,,,அப்புறம் ஏதாவது ஒண்ணுன்னா அத தாங்கிக்கிற சக்தி நம்மகிட்ட இல்ல,,,பாத்துக்க என்பாள் கண்களீல் நீர் கோர்க்க/

“விடு பாட்டி அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல,அதே நேரம் அப்பிடியில் லாமலும் இல்ல,என்றறிவித்த நாட்களில் பெண்ணின் அப்பா என்னைக் கூப்பிட்டனுப்பினார் கண்டிக்கிறேன் உன்னை வன்மை சுமந்து எனச்சொல்லி/

.”என்ன தகுதியிருக்கிறது உனக்கு என என் பெண்னை காதலிக்கிறாய். கல் யாணம் பண்ணிக்கொள்ளவும் முனைகிறாயாமே என் சம்மதமின்றி/

”இனிநினைக்காதேஅப்படியெல்லாம்வேண்டாம் இது போலான சிறு பிள்ளைத் தனமான விளையாட்டு. அழுக்கு மூட்டை போலான எண்ணங்களை சுமந்து கொண்டு திரியாமல் அதை கீழே போட்டு விட்டு புத்தியாய் பிழைக்கப்பார்,

“உனது அப்பாவிடம் பேசி விட்டுத்தான் வருகிறேன்.நீங்க போங்க மாப்புள ,ஏங் பையனால ஒங்க கௌரவத்துக்கு எந்தவித பங்கமும் வராது,அவன் வரட்டும், செருப்புட்ட நாலு போட்டு புத்தி சொல்லி வைக்கிறேன்.நீங்க கெளம்புங்க என அவர் சொல்லித்தான் அனுப்பினார்,

“அவர்சொல்லிஅனுப்பிய சொல்லுக்கும் வார்த்தைக்கும் கட்டுப் பட்டு அமைதி காத்துவந்திருக்கிறேன்நான்.அந்தவார்த்தைக்குஎந்தவிதசேதாரமும்ஏற்படாமல் பார்த்துக்கொள்.எனது பெண் வேறொரு வீட்டில் போய் வாழவேண்டியவள், நாங்கள் இன்னும் மிச்சமிருக்கிற நாட்களை நோக்கி வாழ்நாளை நகர்த்த வேண்டியவர்கள்ஆகவே,,,,,,,எனச்சொல்லிவிட்டுச்சென்றபெண்ணினதுஅப்பாவின் சொல்லை ஏற்றும் எனது தந்தையின் சொல்லை ஏற்றுமாய் நான் விட்டு விட்டேன்.

“அன்று முடிவு செய்தவர்தான் எனது அப்பா,சொந்தக்காரன் தான் என்றாலும் தகுதியிலும் தராதரத்திலும் நீ பக்கத்தில் நிற்க லாயக்கில்லாதவன் முகத்தில் காறிஉமிழ்ந்து விட்டானே,இனி நீ அவன் முன் நெஞ்சு நிமிர்ந்து நின்று பிழை த்துக் காட்ட வேண்டும்.என வசித்து வந்த வீட்டை விற்று ஆடுகள் இத்தனை யுமாய் வாங்கிகொடுத்தார்,

”அவர் வாங்கிக்கொடுத்த ஆடுகள் கொஞ்சமேயெனினும் அது பல்கிப்பெருகி இன்றுஇத்தனையாய்நிற்கிறது.என்னதான்அழிவு,பிறப்பு,விற்பனைஎன நடந்து கொண்டிருந்தாலும் கூட இப்பொழுது நிற்கிற இத்தனை ஆடுகளும் நிரந்தரம் காட்டி நிற்கும் என்னிடம்/

”இதுஎனக்குமிகப்பெரியபலம்.எனதுஅப்பா விற்றுத்தந்த வீட்டை இந்த ஆடுகள் விற்கும்பணம்மூலமாய்திரும்பவுமாய் வாங்கிவிட்டேன்/திருமணம் பண்ணிக் கொண்டேன்.ஆண்ஒன்றுக்கும்பெண் ஒன்றுக்குமாக தகப்பனாக இருக்கிறேன்.

”என் போலவே எனது கனகுவும் தமிழகத்தின் தூரத்து ஊர் ஒன்றில் கண்டிப் பாக வளர்ந்து நிற்கிற பிள்ளைகளுக்கு தாயாக இருப்பாள்.

காலம் கிழித்துப் போட்ட கோட்டில் அடி பிறழாமல் பயணித்துக் கொண்டிரு க்கி எங்களில் என் நினைவு தாங்கி அவளும்,அவள் நினைவு தாங்கி நானு மாய் உறை கொண்டிருக்கிறோம்.

“அந்தஉறைவின்நினைவு சாதா ரணமாக என்னில் எப்பொழுது வருவதில்லை. அப்படியாய் வருகிற தருணங்களில் மிகவும்தான் சங்கடப்பட்டுப்போவேன் எந்த ஒரு பிரஞ்சையும் அற்றவனாக/

அந்தசங்கடம் உறைகொண்ட நாட்களில் நான் நானாக இருக்கமுடிவதில்லை.

“அதைஉணர்ந்ததைப்போலவோஎன்னவோஆடுகள்என்னிடம் மௌன பாஷை யில் பேசி என்னை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடுவதுண்டு.

“பாதை மாறாமல்.அப்படியாய் அழைத்துச்செல்கிற வேளையில்தான் திடீரென மன விழிப்புற்றவனாய் கம்பைச்சுற்றி ஆடுகளை அடக்கி வழி நடத்திச்செல்ல இது உதவுகிறதுதான்.

“என்னைப்பொறுத்த வரை இந்த ஆறடிஉயரத்திற்கும் மேலான கம்பு ஆடு மேய்கிற கம்பிலிருந்து ஏ,கே பார்ட்டி செவன் வரை இதுதான் என அர்த்தம் காட்டிச்சொல்கிறது.

ஆகவே இதை விடுத்து என்னையோ என்னை விடுத்து இந்தக்கம்பையோ பார்த்துவிடமுடியாது.என்றுரைத்துக்கொண்டிருந்தமேய்ச்சல்நாளின்பொழுதொ ன்றில்தான் மஞ்சளும் சிவப்பும் கத்தரிப் பூக் கலருமாய் இருப்புப் பாதையின் ஊடாக முளைத்துக்கிடந்த பூக்கள் கருப்பும் வெள்ளையும் பிரௌவ்ன் கலருமாய் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளின் தலையில் பிடிவாதம் காட்டி ஒட்டிக்கொண்டிருந்தன.

கறுப்புக்கலர் ஆட்டின் தலையில் மஞ்சள் நிறப்பூ ஒற்றையாயும்., வெள்ளை நிற ஆட்டின்தலையில்சிவப்பு நிற பூக்கள் இரண்டுமாய் ,பிரௌவ்ன் கலர் காட்டிய ஆட்டின் தலையில் கத்தரிப்பூக்கலர் பூக்கள் இரண்டும் அதன் உதிர்ந்த இதழ் ஒன்றுமாய் பூத்து சிரித்தது போல் இடம் வலம் காட்டி சிரித்தது அழகாய்/

4 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
   அன்பும் ப்ரியமுமாய்/

   Delete
 2. Replies
  1. நன்றியும் அன்பும்!

   Delete