10 Aug 2017

மெல்லப்பறக்கின்ற சில்லுமுடி,,,,,,,,,

மருத்துவம் பார்த்து விட்டு வெளியே வந்து விடுகிறான் வெளிக்காற்றை சுவா சித்தவனாயும்,சற்றேநிம்மதிசுமந்தவனாயும்…/

ஒருமணி நேரமாய் காத்துக் கிடந்த மனது கொஞ்சமாய் ஆசுவாசமும் அந்திய ந்தமும் கொள்கிறதுதான்.

அப்படித்தான் ஆகிப்போகிறது இப்பொழுதெல்லாம்,மருத்துவரைப்பார்க்கவோ அல்லது மருத்துவ ஆலோசனைகள் கேட்கவோ வேண்டுமானால் ஒருமணி நேரமாவது காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது,சமயத்தில் அது தாண்டியும் கூட போய் விடுகிறது,

அது போலானநேரங்களில் எரிச்சலும் கோபமும் ஒரு சேர தலையெடுக்கிறது. அதுவும் கொஞ்ச நேரமே,பின் சரியாகிப்போகிறது, டாக்டர் முகம் பார்த்ததும், அவர் மருத்துவம் செய்யும் போதுமாய்/

சென்றமுறை இவனும் இவனது மனைவியுமாய் சென்றிருந்த போது இப்படித் தான்காத்திருக்கவேண்டி வந்தது.

இவர்கள்அமர்ந்திருந்தபெஞ்சிற்கு எதிர்த்தாற்ப் போலவே வயதான பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார்,

பக்கத்து ஊராம்,அவர் சொன்ன ஊர் இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும்,

பெஞ்சில்கொஞ்சமாய்இருந்தஇடத்தை சுட்டிக்காட்டிசும்மா உக்காருங்க தம்பி, ஒங்க அம்மா போல நெனைச்சிக்கங்க என்னைய,,என்றார்,

இவனும்மனைவியுமாய் பக்கத்தில் அமர்ந்த நேரம் அவர் சொன்ன சொல்லின் தொடர்ச்சிஆரம்பித்திருந்தது.மூணுபசங்க தம்பி,எனக்கு/ஒரு பொம்பளப் புள்ள .பொம்பளப்புள்ளைய வெளியூர்ல கட்டிக்குடுத்துட்டேன்.

பயகள்லஒருதன் மெட்ராஸ்ல வேலை பாக்குறான்அங்கயே குடுமபத்தோட இருக்கான்,அவன் மூத்தவன். ரெண்டாவது பையன் பெங்களூர்ல இருக்கான் அவனுக்கு ஒரு பெண் கொழந்த இருக்கா.

.மூணாவதுபையனுக்குஉள்ளூர்லயேநல்லயெடமாப்பாத்துகட்டிவச்சம்,பொண்ணோட வீட்டுக்காரங்க எங்கள் வுட கொஞ்சம் மீறுனவுங்கதான்.வசதி கூடுன யெடம், இவனுக்கு சம வயசு இருக்கும் புள்ளைக்கு,வசதி இருக்குற கித்தா ப்புல ஊருக்குள்ள யாரையும் மதிக்காததால ஊருக்குள்ள யாரும் அவுங்க கூடபேசுறதில்ல,பழகுறதில்ல,என்னன்னா என்னங்குற அளவுலதான் இருந் தாங்க தம்பி.

இதுலகட்சி காண்ட்ராக்ட்டுன்னு,,,,,, கூடிப் போன பழக்கம் வேறயா, சரி பெரிய யெடம் நமக்கு எதுக்கு தொரட்டுன்னு யாரும் அவரோட பொண்ணக்கூட கேட்டு வரல.

தலைக்கு மேல வளந்த பொண்ணு.டவுனுக்கு போயி வந்து நாலெழுத்து படிச்ச பொண்ணு.

அப்பயே ஊருக்கு காலேஜ் பஸ்ஸீ வந்து கூட்டிக்கிட்டு போகும், அப்படி வராத தினங்கள்லஇவஅப்பனே கொண்டுபோயி விட்டுட்டு வருவான்,அப்பிடி பஸ்ஸீ வராத நாள்கள்ல அந்தப்பொணே டவுன் பஸ்ஸீ ஏறிப்போயி காலேஜிக்கு போயிட்டு வந்துரும்,

அப்படி டவுன் பஸ்ஸீல போன ஒருநாளுதான் கூட்டத்துல தெரியாதனமா வந்து இடிக்கிறது போல இடிச்சி ஒருவிருதாப்பைய அந்தப்பொண்ணு கையப் புடிச்சிட்டான்,

இவளும் சரி எதார்த்தமா பட்டிரிச்சின்னு பெரிசா எடுத்துக்கிறாம விட்டுட்டா, பஸ்ஸீ போகப்போக கூட்டம் நெரிசல் கூடக்கூட அவன் இவ கையப்பிடிச்ச பிடிய விடாமயும் இவ மேல ஒரசவுமா இருந்த ஒடனேதான் இவளுக்கு விகல்பமா பட்டிருக்கு,

ஆகா இது கூடாத ஒரு செயல்ன்னு சொல்லி மறு நிமிஷம் கொஞ்சக்கூட தாமதிக்காம கால்ல கெடந்தத கழட்டி அடிச்சிட்டா,அந்த விருதாபயல/ அவ னும் விடல தண்ணியடிச்ச வேகத்துக்கும் அதுக்கும்,கத்தி தீத்துப்புட்டான், கடைசியில கண்டக்டர்தான் அவன சமாதானம் சொல்லி யெறக்கி விட்டுருக் காரு பஸ்ஸ விட்டு/

இது இவ வீட்டுக்கோ அப்பனுக்கோதெரியாதுமொதல்ல,அப்புறமா ஒரு வாரம் பத்து நாக்கழிச்சிதான் கண்டகடர்மூலமா இந்த விஷயத்த கேள்விப் பட்ட இவ அப்பன் அவன ஆள்கள விட்டு கூட்டிட்டு வரச்சொல்லி சும்மா தொளிச்சி எடுத் துட்டான் தொளிச்சி/

அன்னையிலருந்து அவன் அக்கா தங்கச்சியக்கூட ஏறிட்டுப்பாத்துருக்க மாட் டான்னு நெனைக்கிறேன்.அதுக்கப்புறமான நாட்கள்ல இவள காலேஜிக்கு அனுப்புறத நிறுத்தீட்டாரு,இவ எதை நெனைச்சி பயந்து பஸ்ஸீல நடந்தத சொல்லாமஇருந்தாளோ அது நடந்தே போச்சி கடைசியில,இவளும் ஏங் படிப்ப நிறுத்த வேணாம் இனிம இது போல நடக்காம பாத்துக்கிறேன்ன்னு தலைகீழ நின்னு பாத்தா,ம்ஹூம் மசியல இவ அப்பன்,சரி படிப்பைதான் நிறுத்தீட்டான், காலாகாலத்துலஇவளுக்குஒருமாப்புளைபாக்கணும்ன்னுகூடவாதோணல.,,,,,,

அதுஅவனச்சொல்லி குத்தமில்ல ,அவனப்பிடிச்சிருந்த கூத்தியாகாரி பண்ணுன வேலை,வாரம்தவறாம அங்க போயிறுவான்,பக்கத்து ஊருதான்.

வீடுலவயசுக்கு வந்த பொம்பளப்புள்ள இருக்கான்னு அவனுக்கும் கூறு கெடை யாது,அவளுக்கும் கல்யாணத்துக்கு நிக்கிற புள்ள இருக்கான்னு கூறு கெடை யாது,

ரெண்டு பேரு வீட்லயும் இப்பிடி இருக்கும் போது அவனும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான்.

இத கண்டிக்க வேண்டிய பொண்டாட்டி காரியாவது கண்டிச்சிருக்க வேணாம், அவளும் நமக்கென்னன்னு இருந்துட்டா,அவளும் என்னதான் செய்வா பாவம், வாயில்லாத புள்ளப்பூச்சி/

ஏங்கூட்டாளின்னாஇந்நேரம்தொடப்பத்தஎடுத்துக்கிட்டுமல்லுக்குநின்னுருப்பேன்,அவ பாவம்.

சரி இங்கதான் இப்பிடின்னா கூத்தியாளா இருந்தவளுக்கும்,கூத்தியாள வச்சிக் கிட்டிருக்குறவனுக்குறவனுக்குமா அறிவில்லாம போச்சி/

என்னமோ சொலவம் சொன்ன மாதிரி யார் சொல்லியும் நிறுத்த முடியா போச்சி கூத்தியா சகவாசத்த அவனால,,,/

அவனையும் சும்மா சொல்லக்கூடாது,அங்க போறதுனால இந்த வீட்டையோ, இங்க இருக்குறதுனால அந்த வீட்டையோ அவன் விட்டுறல,ரெண்டு பக்கத் துக்கும் எந்த பங்கமும் இல்லாமத்தான் நடந்துக்கிட்டான்,என்னத்தையோ சகதியில மிதிச்ச மாதிரி கால அசிங்கம் பண்ணீட்டானே தவிர்த்து வேற ஒண்ணும் தப்புத்தண்டவாவோ,அடாதடியாவோ குடும்பத்துகுள்ள ஏதும் நடந்துக்குற மாட்டான்.

இத வெளியில இருந்து பாத்தவுங்களுக்கு தப்பா நெனைச்சாங்க,

என்ன நெனைச்சானே என்னவோ தெரியல ஒரு நா அரிசி பருப்பு வாங்க கடைக்கி போயிட்டு வர்றப்ப கடையில இருந்து ஒரு பார்வை என்னைய தொடர்ந்து வந்த மாதிரி இருந்துச்சி,என்னிட்டஎன்னமோ கேக்கப்போற மாதிரி யான அரிச்சியும் தெரிஞ்சிச்சி.

இத இப்பிடியே விடக்கூடாதுன்னு கடைக்கி திரும்பப்போயி என்ன கடைக் காரரேஎன்னவிஷயம்ன்னு கேட்டப்ப எல்லாம் நல்ல விஷயந்தான், கட்சிக்கா ரரு பொண்ணுக்கு ஒங்க பையன குடுப்பீங்களான்னு கேக்கச் சொன்னாங்க, நீங்கவந்துநின்ன ஒடனே கேப்பமுன்னு தோணிச்சி,

அப்புறமும் சரி வேணாம் நல்ல மனசுக்காரங்க அவுங்களுக்குத்தகுந்தாப்புல என்னத்தையோபொழச்சிட்டி இருக்காங்க ,அதுலப்போயி ஒழப்பீற வேணாம் ன்னு தான் கேக்கல,

இன்னும் அவரு பொண்ண எப்பிடி வளத்து வச்சிருக்காரோ, இங்க கடைக்கெ ல்லாம் வரும்,அப்பன் மாதிரி நிமிந்ததனமா யாரையும் மதிக்காமபேசாது ,அண்ணன்ங்குற சொல்லுக்கு மறு பேச்சு பேசாது, வந்துச்சின்னா வீட்டுக்கு தேவையானது போக அது திங்குறதுக்குன்னு ஏதாவது வாங்கீட்டு போகும்,

”ஏம்மா அப்பா ஏதும் வாங்கிட்டு வர மாட்டாரா,ஊரெல்லாம் சுத்துற மனுசனு க்கு பொண்ணுக்கு வீட்டுக்கு ஏதாவது வாங்கணும்ன்னு நெனைப்பு இருக்கா தான்னுகேட்டம்ன்னாஅதெல்லாம்வாங்கீட்டுவருவாருசேவு மிச்சரு, ஸ்வீட்டு பழங்கன்னு வாங்கீட்டு வருவாரு,ஆனா அது பூரா அவருக்கே பத்தாது, இதுல தண்ணிஅடிக்கிறசமயத்துலகூட்டாளிகளவேறசேத்துக்குருவாறு,கூட்டாளிகளா வர்றவுங்கவேறயாரும்இல்ல,எல்லாம் எங்க சொந்தக்கார வுங்கதான்.

அவுங்க எல்லாம் ஒண்ணு சேந்துட்டாங்கன்னா அவரு வாங்கிட்டு வந்த திண் பண்டம் தண்ணியடிக்கிற அவுங்களுக்கே சரியாப்போகும்,எங்க அப்பாவுக்கு எங்கிட்டுச்சுத்தியும் நித்தம் தண்ணியடிக்கலைன்னா விடியாது, அவரோட அந்தப்பழக்கமே எனக்கு சுத்தமா புடிக்காம போச்சி/

அதுனாலயே அவரு கொண்டு வர்றத தொட்டுக்கூட பாக்குறது கெடையாது. எப்பயாவது ஏதாவது திங்கணும்ன்னு ஆசை வந்திச்சின்னா அம்மாகிட்டச் சொல்லுவேன், ஒங்க கடையிலதான் வாங்கீட்டு வந்ததா சொல்லி வந்து குடுப்பாங்க,இன்னைக்கு நானே வந்துட்டேன்னு போற போக்குல பேசிட்டு போகும்,

கடையில யாரும் இல்லைன்னா சமயத்துல இங்கயே ஒக்காந்து சாப்புட்டுப் போகும்.யாருகிட்டயும் எதுவும் பேசாது,ஏம்மா இப்பிடி இருக்குறன்னு கடைசி யா வந்தப்ப கேட்டப்ப எங்க அப்பாவுக்கு கட்சி காண்ட்ராக்ட்டுன்னு அலை யவே நேரம் போத மாட்டேங்குது,வீட்ல என்ன நடக்குது ஏது நடக்குங்குறத கவனிக்கிறதையே அவரு மூணாம் பட்சமா நெனைக்கிறாரு,வர வர வீட்ல இருக்குறதே பெரிய பாரமவும்,முள்ளு மேல இருக்குற மாதிரியும் ஆகிப் போச்சி.எங்கயாவதுஒரு அப்புராணி சப்புராணியா ஒரு பையன் இருந்தா சொல்லுங்கண்ணே,எங்க அப்பா மாதிரி வேணாம்ன்னேன்னு அந்த பொண்ணு அன்னைக்கி சொல்லீட்டு போனா,அந்த சொல்ல அப்படியே இன்னைக்கி வரைக்கும்மடியிலகட்டிவச்சிக்கிட்டு திரியிரேம்மா,என்னமோ ஒங்களப் பாத்த ஒடனே கேக்கணுன்னு தோணுச்சி,அத தைரியமா கேக்கமாட்டாம மருகி நின்னப்ப நீங்களே கேட்டுட்டீங்க,ஒங்க பையனுக்கு அந்தப்பொண்ண பாத்துர லாமா,,,,,?ன்னுஅந்தகடைக்காரரு கேட்டப்ப எனக்கு ஒண்ணும் மறுத்துப் பேசத் தோணல,

அந்தபொண்ணோடஅப்பனுக்காக இல்லாட்டி கூட அவ கொணத்துக்காக அந்த பொண்ண ஏத்துக்கிற தயாரா இருந்தேன்,ஏங் பையன்கிட்ட சொன்னப்ப நீங்க பாத்து எது செஞ்சாலும் சரித்தாம்மான்னுட்டான்,என்ன உள்ளதச் சொல்லீரு ங்க,நான்மில்லுலவேலைபாக்குற கொறஞ்ச சம்பளம் வாங்குற ஆளுன்னு, அப்புறம் பின்னாடி நான் என்னத்தையோ நெனைச்சி என்னமோ ஆகிப் போச் சின்னு வந்துறக்கூடாதுன்னு சொன்ன அவன் சொல்லையும் ஏத்துக்கிட்டு ஒண்ணுக்கு பத்து தடவையா அவுங்க வீட்டுக்கு நடையா நடந்து போயி சொல்லீட்டு வந்தப்பக்கூடயும் சரி சரின்னு நான் சொன்னதுக்கெல்லாம் தலை யாட்டினவுங்க இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் வந்து இக்கன்னா வச்சிப்பேசி பொண்ணப்பிரிச்சி கூப்புட்டுக்கிட்டு போயிட்டாங்க,

கேட்டாபுள்ளஇல்லைன்னுஒருசொல்லசொல்றாங்க,ஏம்பா ஓங் மககிட்டதான கொற பாடு இருக்குன்னு தெரிஞ்சி போச்சில்ல,அதுக்கு இப்ப மாத்து வழிதான் யோசிக்கணுமேதவிர புருசன் பொண்டாட்டிய பிரிச்சி வச்சா சரியாயிப் போகு மா சொல்லுங்கன்னு கூட கேட்டுப்பாத்துட்டேன், பிடிவாதமா நின்னு பிரிச்சிக் கிட்டு போயிட்டாங்க,

அவனுக்கு அவன் கௌரவம் முக்கியம் தம்பி. என்ன ஏதுன்னு தீர விசாரிக் கிறமாதிரி போயி கேட்டப்ப கேள்விப்பட்ட விஷயம் வேற மாதிரி இருந்துச்சி.

எல்லாம் அந்தப் பொண்ணோட அப்பன் பண்ணுன வேலைன்னு தெரிஞ்சிச்சி,
அவனோடகௌரவத்துக்குஅவன்பொண்ணுஇந்தவீட்லவாழ்றதுகேவலம்ன்னு நெனைச்சி டைவர்ஸ் பண்ண ஏற்பாடெல்லாம் பண்ணீட்டான்,

இப்ப டைவர்ஸ் கேட்டு நோட்டீஸீக்காக எதிர்பாத்து காத்துக்கிட்டு இருக்குற நெலைமையில நாங்க இருக்கோம்,

இந்த நிலைமையில அந்தப்பொண்ணு எங்கயாவது என்னைய பாத்தா ஒரே அழுகையா அழுது தீக்குறா,பொழம்பா பொழம்பித்தள்ளுறா,,,என்ன செய்ய சொல்லுஇப்பிடிபிரிச்சி வச்சிருக்குறதுல அவளுக்கு துளி கூட இஷ்டம் இல்ல, இதுல டைவர்ஸீக்கு வேற அப்ளைப்பண்ணப்போறானா அவுங்க அப்பன். அவளுக்கு துளி கூட பிடிக்காம போச்சி,மனசு விட்டுப் போனா ,வேற என்ன செய்வா பாவம் வெளி உலகம் போகாத பொம்பளப்புள்ள என்னைய பாக்குற நேரம்பொழம்பித்தீக்குறதத்தவுரஅவளுக்கு இப்ப வேற வழியேதும் இல்லாமப் போச்சி,தெரியாமயும் போச்சி,,,

இப்ப அவ அங்கிட்டு அப்பன் வீட்லயும் இவன் ஏங்கிட்டயுமா இருந்து மருகுறா ங்ககெடந்து,அவுங்களுக்குஒரு விடிவு காலம் வந்தாநான் நிம்மதியா கண்ண மூடிருவேன்,என்றாள்.

அந்த அம்மாள் அமர்ந்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்புறச் சுவர் கிழக்கு பார்த்த தாயும் புதிதாக வர்ணம் அடித்துமாய் காணப்பட்டது.

ஆனாலும்பெயிண்ட்அடித்தசுவரிலிருந்துஉதிர்ந்த காரை அது பழைய கட்டிடம் என்பதை சொல்லிச்சென்றது,இப்பொழுது யார் இவ்வள நீளமாய் படி வைத்து கட்டுகிறார்கள்,ஒன்று இரண்டு மூன்று,,,,,,என வைக்கப்பட்டிருந்த படிகளில் மூன்றுமே ஒன்று போல காவி பூசி இருக்கிறதாய்,

மூன்று படிகளிலுமாய் அடிக்கப்பட்டிருந்தமுனைக்கோடுகள்பார்க்க அழகாக இருந்தன.ஒன்று இரண்டு மூன்று என இறங்கிய படிகள் ஒன்றன் முன் ஒன்றாக காட்சிபட்டு கை கட்டி நின்றதைப் போல இருந்தது, 

                                                            --பாகம் 2--

காலையில்வந்துமருத்துவம் பார்த்து விட்டு அலுவலகம் போகலாம் என்றால் அது முடியாத காரியம்.

ஆபீஸ் நேரம்தாண்டிதான் மருத்துவர் வருகிறார்.வந்தப்பிறகு மருத்துவ மனையை கூட்டி சுத்தம் செய்து விட்டு எதிர்த்த கடையிலிருந்து வரும் தண்ணீர்கேனை வாங்கி வைத்து விட்டு அவர் கையை காலை சுத்தம் செய்து கொண்டு மருத்துவரின் இருக்கையில் அவர் அமரும் போது மணி காலை பதினொன்றை தாண்டி விடும்,

அந்த நேரம் வரை பெர்மிஷனும் போட முடியாது.அதற்கு மேல் இவன் மருத் துவம் பார்த்துவிட்டு அலுவலகம் போக முடியும் என்றா நினைக்கிறீர்கள், ம்ஹூம்,,,,,தலைகீழாக நின்றாலும் முடியாது.அல்லது எவ்வளவு வேகமாகச் செல்கிற வாகனத்தில் போக நினைத்தாலும் கூட முடியாதுதான், இதை நினைத்துத்தான் நேற்றைக்கு முன் தினம் விடுமுறை எடுத்துக் கொண்டு மனைவியுடன் வந்தான் மருத்துவரைப் பார்க்க.

இவர்களும்உட்கார்ந்துஉட்கார்ந்துபார்த்தார்கள்.இவர்கள்காத்துக்கிடந்தவேளை யின்நொடிகள்நிமிடங்களாகி,நிமிடங்கள்கால்மணி,அரைமணிஎனகைகோர்த்து. நின்ற பொழுது மனைவியை ஏறிடுகிறான்.இவன் நினைத்ததையே அவளும் நினைத்து அடைகாத்துக்கொண்டிருந்தது போல இதோ வந்து விட்டேன் தங்களது பின்னாலேயே.தாங்கள் செல்கிறஇடத்திற்கு சொல்கிற வழியில் வர காத்திருக்கிறேன்,நீங்கள் காலால் உத்தரவிடுங்கள், அதை நான் தலையால் ஏற்றுச்செய்கிறேன்.என பஜார் போய் பலசரக்கு ஜாமா ன்களும் மார்கெட் போய் காய்கறிகளும் வாங்கிக்கொண்டு வந்து விடலாம் என அவள் சொன்னதற்கு இவன்ஆமோதிப்பை தெரிவித்தான்.

பஜாருக்குப்போகிற போது ஆஸ்பத்திரிக்கு போய் விட்டு போய் விடலாம் என நினைத்துவந்தஇடத்தில்தான்இப்படியாய்ஆகிப்போகிறது,மாலைவேளையாக வரலாம் என்றாலும்நாளெல்லாம் அலுவலகம் தின்று முடித்த உழைப்பு போக மிச்சமிருக்கிற நேரத்தில் வேறு ஒன்றிற்காய் போய் காத்திருக்க மனமில்லை அல்லது முடியவில்லை.அது சொந்த உடம்பிற்காய் இருந்த போதும் கூட,,/

அது மட்டும் என இல்லை, படக் கெனஓடோடி வந்து ஒட்டிக்கொள்கிற மித மிஞ்சிய சோம்பேறித்தனம் வேறு. வேறுவழியில்லாமல் இன்றைக்கு ஒரு நாள்வீவுசொல்லிவிட்டு வந்திருந்தான்.

சுவாசித்தகாற்றுகொஞ்சம் நிம்மதியைத் தந்தது,நிம்மதி,நிம்மதி,நிம்மதி,,,,,, அது தேடி ஓடுவதே இப்போது பெரிய வேலையாயும் மிகப்பெரும் மன பாரம் சுமந்துமாய்,,,/

அது போலான நிம்மதியும் கொஞ்சமாய் சுகந்தம் தருகிற காற்றும் காலையில் வாக்கிங் போகும் போது கிடைக்கிறதுதான்,அதிகாலை எழுந்தால் சரி இவனும் மனைவியுமாய் ஜோடி சகிதம் காட்டி கிளம்பி விடுவார்கள். இல்லையா ,எழக் கொஞ்சம் தாமதம் இல்லை வேறு மாதிரியான மனக் காரணங்கள் ஏதாவது இருந்தாலும் கூட வாக்கிங்கிறகு தடைதான்/

நண்பன்முத்துமேகத்தின் வாக்கிங் பற்றி இவன் அறிவான், ரொம்பக் காலமாக. தினம் தவறாமல் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து அவரது வீடு இருக்கும் ஏரியாவிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கிராமத்து ரோட்டிற்கு போய் விடுவார்,அங்கு கைகாலை வீசி அவர் வாக்கிங் செல்லும் முறை ஏதோ சொல்லிமிகப்பெரிய உத்தரவிற்கு கட்டுப்பட்டது போலவும், குறிப்பிட்டவரிசைகிரமம்தாங்கிஇயங்குகிறசெயல்கள்போலவுமாய்இருக்கும். ஒன்று அது இந்த செயலுக்கு,,,,இரண்டு அதன் அடுத்த தொடர்ச்சிக்கு,,,,மூன்று என இப்படியாய் போய்க் கொண்டிருக்கிற அவரின் இயக்கம் அவர் வாக்கிங்க செல்கிற அரைமணி நேரமும் பார்க்க ஏதோ ஒரு ராணுவ உத்தரவிற்கு கட்டுப் பட்டு நடப்பது போல் இருக்கும்,

இதற்கு நேர் மாராய் இருக்கும் நண்பர் கண்ணன் செய்வது,அதிகாலை எழுந் ததும் வேக வேகமாக ட்ராக் பேண்ட் சர்டெல்லாம் போட்டுக்கொண்டு ரோட் டில்இறங்கி விடுவார்,

அவர் வாக்கிங்கிற்காய் எடுத்து வைக்கும் முதல் எட்டின் போது அவரது கையிலிருக்கிற சிகரெட் புகைய ஆரம்பித்திருக்கும்.

அவரதுஒவ்வொரு எட்டெடுத்து வைப்பிற்கும் ஒவ்வொரு இழுப்பு என கணக்கு வைத்துக் கொள்வார் போலும்.இது எதற்கு சார் இப்படி, இப்படியெல்லாம் வாக்கிங்க்போகாவிட்டால்தான்என்னசொல்லுங்கள் எனக் கேட்டால் சிரிப்பார்  கேட்பவர் தோளில் தட்டி/

அந்த சிரிப்பிற்கு அர்த்தம் அவருக்குத்தான் தெரியும்போலிருக்கிறது அல்லது அவர்ஏன் இப்படி எல்லாம்சின்னப் பிள்ளை போல ட்ராக் பேண்ட்,சூட் எல்லாம் போட்டுக்கொண்டுவாக்கிங்செல்கிறார்,பேசாமல்எப்பொழுதும்போலநார்மலாக செல்ல வேண்டியதுதானே வேஷ்டி சட்டையில்அல்லதுகைலி பனியனில்,, எனச்சொல்கிறஅவரது நல விரும்பிக்குத் தான்தெரியும்போல/

என்னதான் அவர் மீது இவர் இப்படியாய் ஒரு விமர்சனச் சொல்லை சுமத்திய போதும் கூட அவர் வாக்கிங் முடித்து எல்லைக் கோட்டின் முடிவில் வந்து நிற்கையில் இருவருமாய் சேர்ந்து பற்றவைக்கிற சிகரெட்டின் முதல் துளிர் புகையில் எல்லாம் காணாமல் போகும்.

இப்படியான வேறு பட்ட இருவரது வாக்கிங்கிற்கும் அவரவர்கள் வீடு இருக்கிற பகுதியிலிருந்து ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் நடந்து அவர்களது வாக்கிங்கை முடித்துக்கொள்கிறவர்களும் உண்டு,

இடையில் டீ சிகரெட் வடை ரெஸ்ட் எதுவும் கிடையாது,இது போலானாவர் களை பார்க்கிற போது இவனுக்கும் அது போலாய் நடக்க வேண்டும் என ஆசை மேலோங்கி எழும்தான் அந்த நேரத்தில்.

அன்றாடம் படுக்கையை விட்டு எழும்போது அந்த ஆசை காணாமல் போய் விடுகிறதுதான்,அல்லது ஆசை இருக்கும்,செயல்பாட்டில் கலைந்து போகிற மெல்லிய புகையைப்போல காணாமல் போய்விடும்/

அப்படியாய் கலையாமல் புகை அடைகாக்கப்பட்ட நாட்களில் வாக்கிங்க் செல் கிற போது ஆண்களும் பெண்களும் வயதானவர்களும் வாக்கிங்க் வருவதை பார்த்திருக்கிறான்.

இதுபரவாயில்லை.அறுபதுவயதைநெருங்கப்போகிறஒருவர் சின்னதான டயர் வைத்த சைக்கிளில் ஆள் உயர ஹேண்ட்பாருடன் ஓட்டித் திரிவார். காலை வேளையில்வழக்கமாக வாக்கிங் போகிறவர்கள் இந்தக் காட்சியை தவறாமல் பார்க்கலாம்.

அதுபோலாய் வாக்கிங்,சைக்கிளிங் என தினமு மாய் போக இவனுக்கும் ஆசைதான்.ஆனால் முடியாமல் போய் விடுவது இவனின்அன்றாடமாய் இருக்கிறது.

அபூர்வமாய்என்றாவது ஒரு நாள் வாங்கிங் போவான்.அது தவிர்த்து மன ரீதியாய் புத்துணர்ச்சிக்காய் ஏதாவது பண்ணிக் கொண்டால் உண்டு. அப்படி யான தினங்களில் காற்றின் மற்றும் சுகந்தத்தை அனுபவித்துக் கொள்கிறான்.

டீக்குடித்தால்கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும் போல தோணியது,டீ என்பது வெறும்டீ மட்டுமல்ல, மருத்துவர் சொல்கிறார்,என்னிடம் வருவதற்கு முன்னு ம் வந்து போகிற அரை மணி பொழுதிற்குமாய் டீ காப்பி எதுவும் சாப்பிடா தீர்கள்.என .

ஆனால் இவனால்தான் கேட்டுக்கொள்ளவும் டீக்கேட்கிற மனதிற்கு அணை போடவுமாய் முடியவில்லை.லேசாக தண்ணீர் தவிப்பது போல் இருப்பதில் ஆரம்பித்து பசிக்கிறது போல் இருக்கிறது வரை எதற்குமே இவன் தஞ்சம் கொள்வது டீயே,.

இது தவிர நண்பர்கள் தோழர்கள் உறவினர்கள் என யாரையாவது பார்த்து விட்டால்அல்லது பார்க்க தலைப்பட்டு விட்டால் வாங்க டீசாப்புடப் போகலாம் என்பதே இவனது முதல் வார்த்தையாக இருக்கும்.அப்புறம்தான் மற்றதெல் லாம்,

மற்றமற்றதில்பெரிதாகஒன்றும்இருக்காது,அவர்களதுநலம்பிள்ளை குட்டிகள், பேரன் பேத்திகள்,,மற்றும் அவர்கள் வேலை,பிழைப்பு பொருளாதாரம் என பேசி விசாரிப்பான்.

அதில் பிரதானமாய் அவர்களது உடல் நலம் இருக்கும். கொஞ்சம் ஒட்டுதல் பட்டு தெரிபவர்கள் என்றால் வீட்டின் ஹால் வரை போய் வருவான் பேச்சில் ,சமயத்தில்சமையலறையைக்கூடஎட்டிப்பார்ப்பது உண்டு,அந்த உரிமையை யும், ஒட்டுதலையும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படியாய் இல்லாதவர்கள் வீட்டின் வாசல்படியோடு வந்து விடுவான். அல் லது அவர்கள் தெரு முனைவரை எட்டிப்பார்ப்பதுடன் சரி.இதெல்லாம் இல்லா த நாட்களில் தனிமை சுமந்து வந்த போதும் சரி, மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த நாட்களிலும் சரி, காய்கறி வாங்கிய பையுடன் இங்குதான் வருவான்.

தாகமெடுத்து வறண்டு போன வாயயையும் டீக்குடிக்க முனைப்பு கொண்ட மனதையும் ஒரு சேர அள்ளிக்கட்டிக்கொண்டு/

மார்க்கெட்டில் காய் கறி வாங்கிய கடையிலிருந்து இங்கு வருகிறது வரை வழியில்நிறையகடைகள்தென்படும்அங்கெல்லாம் குடிக்கலாம்தான், மோச மாய் ஒன்றும் இருக்காது டீ,ஆனால் அதையெல்லாம் விடுத்து இங்குவந்து தான் குடிப்பான், இத்தனைக்கும்டீமற்ற கடைகளை விட இரண்டு ரூபாய் அதிகம்.

இப்பொழுது நிறைய இடங்களில் ,,நிறைய நேரங்களில் பார்த்தும் கேள்விப் பட்டும் இருக்கிறான்,இவன்டீக்குடிக்கிற எல்லையான கலெக்டர் ஆபீஸ் வரை இது போலான விலை அறிவிப்பை தொங்கவிட்டிருக்கிற கடைகள் ஒன்றி ரண்டை பார்த்திருக்கிறான்,

சும்மாக்காச்சுக்குமாய் அல்லது மனது ஏதாவது ஒன்றை சிதறவிட்டுவிட்டு அள்ளிக்கட்டமனமில்லாமல்திரிகிறநாட்களில்அப்படியே கலெக்டர்ஆபீஸ் வரை இருசக்கர வாகனத்தை ஒரு முடுக்கு முடுக்கி விடுவதுண்டு.

இவன் வேலை பார்க்கிற அலுவலத்தின் தலைமை அலுவலகம் கலெக்டர் ஆபீஸில் அருகில்தான் உள்ளது,அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர், பெரும் பாலுமாய் பஸ் அல்லது இரு சக்கர வாகனத்தில்தான் பயணிப்பான்.

இவனைப்பொறுத்தவரை பஸ் என்பது இது போலான வேலைகளுக்கு சரிப்ப ட்டு வராது. போகிறவேகத்தைபொறுத்துஅமையாது, அல்லதுபோகிற வேலை யை கணக்கில் கொள்ளாமல் பஸ் அந்தப்பக்கமாய் வந்து போகிற நேரத்தை யே கணக்கில் கொள்ளச்சொல்லும்.அதனால் அரை மணி முன்னோ பின்னோ இரு சக்கரவாகனம்தான் சௌகரியப்படும்.

அப்படியாய்சௌகரியம்கொள்கிறதினங்களில்பழகிப்போனதுதான்மாரியண்ணன் டீக்கடை,அவர்எப்பொழுதுபோனாலும் சிரித்துக்கொள்வார்,டீ இல்லைமுடிந்து விட்டதுஎன்பதைக்கூடசிரித்துக்கொண்டேதான் சொல்லுவார் மனிதர், நாலு வார்த்தை பேசுவதற்குள்ளாக நாற்பது சிரிப்பு சிரித்து விடுவார்,

என்ன சார் என்ன இந்தப்பக்கம் ரொம்ப நாளா காங்கலையே,,,,,என்பதற்கு என்கிற சொல்லுக்குஇவனின்பதில் சிரிப்பை எதிர்கொள்பவர் அது சரி,ஏதாவது வேலை இருந்தாத்தான வரப்போறீங்க,எதுக்குப்போயி அனாவசியமா இந்தப் பக்கம் எனச்சிரிப்பார்,

அட என்னய்யா,,,இதுக்கும் சிரிப்புத்தானா,,,,என் ஏறிட்டால் என்ன பண்ணச் சொல்றீங்க காசா பணமா,என்னால முடியுது அள்ளித்தர்றேன்,ஏதோ என்னால முடிஞ்ச ஒரு இலவச சேவை மாதிரின்னு வச்சிக்கங்களேன் என்பார்.

அவரது சொல்லையும் செயலையும் சிரிப்பையும் பேச்சையுமாய் பார்க்கிற அந்த வேலையில் அப்படித்தான் தோணிப்போகும்,

சார் வாங்க கடையில டீ முடிஞ்சி போச்சி ,வாங்க அந்த நாலாவது கடையில போயி சாப்புட்டுட்டு வரலாம் என கூட்டிக்கொண்டு போவார்,அவர் அழைத்துச் செல்கிற கடை ஒரு ஹோட்டலின் முன் வாசலில் அமைந்திருக்கும், அந்தக்கடையின் டீமாஸ்டர் கூட கேட்பார்,என்ன சார் ஒங்களையும் தொணை க்கு சேத்து இழுத்துக்கிட்டு வந்துட்டாரா,நல்ல சாப்பாட்டு வேளையில போயி இப்பிடி டீ சாப்புட வர்ற ஒரே ஆளு நீங்க ஒருத்தராத்தான் இருக்க முடியும் இந்த ஏரியாவுல என்கிற டீக்கடைக்காரரின் பேச்சிற்கு அதெல்லாம் ஒண்ணும் இல்லை,நல்ல பசி எடுக்கிறமத்தியானவேலையில டீக்குடிக்கிற ஆள்களா நாங்க ஒரு பத்து பேரு இந்த ஏரியாவுல இருக்கோமுல்ல,அது ஒனக்கும் தெரியுமில்ல,அத கணக்குல எடுத்துக்கிறாம பேசுனா எப்பிடி என்பவர் ஏன் சார் ஆபீஸ் வேலையா வர்ற நேரமெல்லாம் நல்ல பசி வேளையா பாத்து வர்றீங்களே அப்பத்தான் ஒங்க ஒடம்புவேகமா வேலை செய்யும் போல/

என்ன செய்ய சொல்றீங்கண்ணே,இந்நேரமா பாத்துதான் அனுப்புறாங்க,அது ஒருவிதமான மனவீம்புதான்,போகிறவனுக்கும்பசிக்குமே அவனுக்கும் வயிறு இருக்கிறதே என்கிற நினைப்பெல்லாம் இல்லை,தவிர இப்படியாய் போகிற இடங்களில்போகிறநேரத்தில்பசிக்கிறக்கத்தில்ஏதாவதுஒன்றுஏற்பட்டுப்போனால் என்னசெய்வதுஎன்கிறகவலையெல்லாம்அவர்களைப்பொறுத்தவரைஅனாவசியம் என்றான்,

இதில் அவர்களின் மனவிருப்பங்களிலிருந்து மன வன்மம் வரை வெளிப்ப டு ம் என்பான் அவரின் பேச்சிற்கு பதில் பேச்சாக/

அவரிடம் பேசிய கையுடன் அப்படியே கிளம்பி வருபவன்தான்.குடித்த டீக்கு பசி அடங்காதது போல் தெரிந்தால் இன்னுமொரு டீக்குடித்து விடுவான்

அப்படியாய் குடித்து குடித்து பழகிய டீக்களின் வலிமை ஒன்று சேர்ந்து இது போலான தருணங்களில் ஏதாவது ஆசை காட்டி இழுத்துப்போய் விடும் போலிருக்கிறது.

ரோட்டிற்கு அந்தப்பக்கமாய் இருக்கிற டீக்கடைக்குப்போவது அவ்வளவு லேசு கிடையாதுதான்,

மிகுந்துபோனட்ராபிக்இருக்கிற நால்ரோடு சந்திக்கிறமுக்குச்சாலையாய் அது. எந்நேரமும்கனரகமும்இலகுரகமுமாய்பிஸியாகவே இருக்கிற சாலையின் தலை மாட்டில் வலது பக்கமாய் இருக்கிற கடை எந்நேரமும் கூட்டமாகவே இருக்கிறது.காரில் போகிறவர்கள் கூட காரை ஓரம் கட்டி விட்டு வந்து குடித்துப்போகிற கடையாய் இருக்கிறது.

இவன் தினசரிகளில் தவறாமல் போய் டீக்குடிக்கிறவனெல்லாம் இல்லை. என்றாலும்கூட எப்பொழுதாவது தோணுகிற சமயங்களிலும் ,தினங்களிலு மாய் செல்கிற கடையாக அதுதான் இருக்கிறது.

அப்படியாய் குடிக்கிற தினங்களில் ஏதாவது தின்ன வேண்டும் என நினைத் தால் பெரும்பாலுமாய் இவனது சாய்ஸ் அலுமினிய தட்டில் இருக்கிற அதிரசமாகத்தான் இருக்கும்.

அந்தபக்கம் இருக்கிற டீக்கடைகள் எதிலும் கிடைக்காத அதிசயமாய் இருக்கிற அதிரசம் கொஞ்சம் ருசியாகவே இருக்கும் சாப்பிடுவதற்கு.என்ன கொஞ்சம் எண்ணெய் ஜாஸ்தியாக இருக்கும்./

அதைசகித்துக்கொண்டும்ருசித்துக்கொண்டுமாய்சாப்பிட்டுமுடிக்க வேண்டும். அப்படி சாப்பிட்டு முடித்தருசி நாக்கில் ஒட்டிக் கிடக்க எப்பொழுது டீக்குடிக்கப் போனாலும் அதிரசத்தை எடுக்கச்சொல்லி விடும்,

அதன்மீதுகொண்டருசியின் காரணமாக சமயத்தில் வீட்டிற்கு பார்சல் வாங்கிப் போகும்அளவு காதல் கொண்டுவிடுவதுண்டு அதன்மீதும்அதன்ருசிமீதுமாய்,,/

அந்த ருசியே இன்றும் மருத்துவமனைக்கு எதிர்தாற்போல் இருக்கிற இந்தக் கடைக்கு இவனைப்போகச் சொல்லி தள்ளி விடுகிறது எனலாம்.,,,,

கடைக்கு நகரும் போதுதான் கவனிக்கிறான்.நேற்று இவனிடம் பேசிக் கொண் டிருந்த அம்மாவை கூட்டிக்கொண்டு போன இரு சக்கர வாகனத்தை ஒரு இளம் பெண் ஓட்டி வந்து கொண்டிருந்தாள் நடமாட்டம் மிகுந்த சாலையில்,,,/

10 comments:

 1. நிகழ்வுகள் கண் முன்னே...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. படமும் பதிவும் பாராட்டும்படி உள்ளது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அசோகன் கருப்பசாமி சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

   Delete
 3. Replies
  1. வணக்கம் சார்,
   நன்றியும் அன்பும் பிரியமும்/

   Delete
 4. Replies
  1. வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
   நன்றியும் அன்பும் வணக்கமும்/

   Delete
 5. சீ பட்டாலும் கவுரமா சீ படனும் போல..........மண்ணாங்கட்டி கவுரம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார்,
   நன்றியும் அன்புமாய்/

   Delete