6 Jul 2018

நிஜத்தின் தேட்டங்களில்,,/

படியேறும் போது வந்த சப்தம் இவனை பின்பக்கமாய் பிடித்துதிழுத்து பதில் சொல்ல வைக்கிறதாய்,/

சொன்ன பதிலுக்கும் கேட்ட சப்தத்திற்குமாய் செவிசாய்த்த புலன் விசார ணைகளில் பட்டுத் தெரிவதாய்,,,/

பொதுவாகவே இவன் இரண்டு அல்லது மூன்று மூன்றுபடிகளாகவே ஏறி பழக்கப்பட்டுப் போனவன்/

வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி.அப்படித்தான் அவனது பழக்கம்,அலுவ லகத்தில் கொஞ்சம் பரவாயில்லை,வீடானால் விடாப்பிடியாக மூன்று முன்று படிகளாகத்தான் ஏறி மாடிக்குப்போவான்,

ஒரு அதிகாலைபொழுதில் தண்ணீர் மோட்டாரைபோட்டு விட்டு மாடிக்குபோ டேங்கில் எவ்வளவு நீர் இருக்கிறது எனப்பார்க்கப் போனவன் வழக்கம் போல மூன்று மூன்று படிகளாக ஏறிப்போனான்.

அதை பார்த்துவிட்ட மனைவி இப்ப என்ன அவ்வளவு அவசரமா ஏறீப்போயி எந்தக்கோட்டையப்புடிக்கப்போறீங்க,சும்மா நிதானமா ஒவ்வொரு படியா ஏறித் தான போங்க ,வயசான காலத்துல இப்பிடி ஏதாவது கிரித்திர்யம் பண்ணிக் கிட்டு கீழமேல விழுந்து வைக்காதீங்க,அப்புறம் நாந்தான் தூக்கி சொமக்கணும் என்பாள்.

"அப்பறம் நீ தூக்கி சொமக்காம அதுக்குன்னு ஒரு ஆளையா வைக்கமுடியும் என கண்ணடித்த போது இன்னும் இது வேற ஆசையாக்கும்,மீசை நரைச்சி காதுலயும் கண்ணத்துலயும் குத்துறது காணல,இதுல ஆளுக்கேக்குதாக்கும் ஆளு,,,"என கையிலிந்த விளக்குமாரை தூக்கி அவனை நோக்கி எறிவாள்,

எறிந்த விளக்குமாறின் விசைக்கும் வேகத்திற்கும் கொஞ்சம் விலகியும் பயப்படுவது போலவுமாய் நடித்து விட்டு மாடிப்படியில் விழுந்த மாறை மாடியிறங்கி வரும்போது கையிலெடுத்துக்கொண்டு வருவான்.

”ஒங்களுக்கென்னங்க ஒடம்புக்குத்தான ஆகுது வயசு,மனச இன்னும் யெள மையாத்தான வச்சிருக்கீங்க,நீங்க மூணு மூணு படியென்ன நாலு நாலு படி கூட தாவி ஏறலாம் எனச் சொல்லுவாள் விளக்கு மாறை கீழே எடுத்து வந்து தரும் போது/

நாலு நாலு படியா ஏற எனக்கு ஆசைதான் ,நீ விடுவயா என மறு படியும் கண்ணடிக்கும் பொழுது பெரிய மகள் வந்து சப்தம் கொடுக்க ஆரம்பித்து விடுவாள்.

ஆரம்பிச்சிட்டீங்களா,ஏதாவது ஒரு சின்ன சாக்கு சந்தர்ப்பம் கெடச்சிறக் கூடா தே,,,ஒடனே ரெண்டு பேரும் சந்துல சிந்து பாட ஆரம்பிச்சிருவீங்களே, தலை க்கு மேல வளந்த பொம்பளப்புள்ளைங்க நாங்க ரெண்டு பேரு இந்த வீட்ல தான் இருகோம்ங்குறத கொஞ்சம் நெனைப்புல வச்சிக்கங்க என்பாள் இடுப் பில் கை வைத்துக்கொண்டே/

இப்படியாய் பேச பெண்பிள்ளைகளை எத்தனை வீடுகள் அனுமதித்திருக்கி ன்றன, அல்லது எத்தனை வீடுகளில் பெண்பிள்ளைகள் இப்படி பேசுகிறார்கள் உரிமையுடன் என நினைத்தவனாய் பேசிய பேச்சின் ஈரம் காயாயமல் ஓடி வரும் மகளை அருகில் அழைத்து தலை கோதி முத்தமிடுவான்,

ஊம்,சும்மா கெடங்க அதென்ன பழக்கம்,அது முத்தம் கித்தம் குடுத்துக்கிட்டு ,ஏய் போடி வீட்டுக்குள்ள ஆளப்பாரு ,போயி காலேஜிக்கு கெளம்புற வழியப் பாரு என அதட்டுகிற இவனது மனைவி கொஞ்சம் கறார் காட்டியே இருங்க பொம்பளப்புள்ளைங்ககிட்ட என்பாள்,ஒங்களப்போல மூணு மூணு படியா தாவித் தாவி ஏறிபோக வைக்கணுமின்னு நெனைக்காதீங்க,கீழயிருந்து கால் வைக்கிற மூணாவது படியப்பத்தி நிதானிக்கிற மனசும் தன்மையும் ஒங்க கிட்ட இருக்கு,ஆனா அதுககிட்ட அது கெடையாது,அதுகளச்சொல்லி குத்தம் இல்ல அதுக வயசு அப்பிடி,நம்மளும் அத கடந்துதான வந்திருக்கம்,அதுனால அதுகளுக்கு தெரியாமலேயே கயிற கொஞ்சம்இழுத்துப்புடிச்சிக்கங்க என் பாள்.

இரு சக்கர வாகனத்தை அலுவலகத்தின் வாசலாய் தெரிகிற போர்ட்டிக் கோவில் நிறுத்தி விட்டு அங்கிருந்து முளைத்தெழுந்து காட்சிப் படுகிற படிக் கட்டுகளில் தரை தளத்திலிருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது படிக்கு தாவி ஏறுவான்,

போர்ட்டிகோவில் சின்னதானதொரு பிரச்சனை,இடம் காணவில்லை ,இவன் வேலை பார்க்கிற அலுவலகத்தின் அருகிலிருக்கிற இன்ஸீரன்ஸ் ஆபீஸில் பணி புரிகிறவர்கள் வாகனம் வைக்கவும் இதுதான் இடம்.

நுழைய முடியாத வாசலில் ஒரு சாய்த்துக்கொண்டும் பக்க வாட்டாக உடம் பை தள்ளிக்கொடும் செல்வது போல் இரு சக்கரவாகனத்தை இடித்துக் கொண்டு வைக்க வேண்டும்.

இல்லையெனில் போர்ட்டிகோவின் அருகிலிருக்கிற மூத்திர சந்தில்தான் வைக்க வேண்டும்,

நல்ல சந்தாக இருந்தது இப்பொழுது அப்படி ஒரு அடை மொழி பெயருடன் உருவெடுத்து நின்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே/

நகராட்சியின்இடத்தில் பெட்டிக்கடை இருக்கிறது,கடைகுப்பின் இருக்கிற தெரு வாசிகள் நடந்தும் வாகனங்களில் செல்லவும் வெகுவாக சிரமம் கொள்கி றார்கள் என யாரோ சிலர் எழுத்தில் சமர்ப்பித்த மனு அந்த சந்தின் முன் வாசலில் இருந்த பெட்டிக் கடையை எடுக்க வைத்து விட்டது,

ஒரு நாள் அதிகாலை ஆறுமணிக்கு நகராட்சியின் லாரியில் வந்து தாயை விட்டு இழுத்துச்செல்கிற பிள்ளையைப்போல முளைவிட்டிருந்த மண்ணி லிருந்து கடையை வம்பாக பிரிதெடுத்து தூக்கிச் சென்றார்கள்,

பத்து வருடங்களுக்கும் மேலாக அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயாகவும்,தாதியாகவும் டீயும் வடையும் சமோசாவும் ரவாப்பணியாரமும் கொடுத்துக் கொண்டிருந்த அந்தக்கடையின் வாழ்வு லாரியில் தூக்கிப்போன அன்றோடு முடிந்து போனதாய் வருத்தம் கொண்டார்கள் அந்தப் பகுதியில் இருந்தவர்களும் சாலையில் போவோர் வருவோரும்/

காலையில்ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் சூடாய் ரவாப்பணியாரம் ரெடி யாகி விடும்,மில்லில் காலை சிப்ட் வேலை முடிந்து போகிறவர்க ளுக் காக, அது என்பார் கடைக்காரர், அதுதான் வேலை முடிந்து வீட்டுக்குத்தானே போகிறார் கள் பின் ஏன் இடை நிலை ஏற்பாட்டாக இந்தரவாப்பணியாரம் என்றால்,,, ”மொத நா ராத்திரி எட்டு மணிக்கு வேலை க்கு வர்றவுங்க மறுநா விடிஞ் சதும் ஆறு மணிக்கு மேலதான் மில்லுல யிருந்து வேலை விட்டு வெளியே றுவாங்க, எட்டு மணி நேரம் நான்ஸ்டாப்பா வேலை பார்க்குறப்ப அவங்க ஒடம்போட ஒட்டு மொத்த அவயங்களும் இயங்கும்.அப்பிடி வேலை செய்யிற அவுங்க இப்பிடி ஏதாவது வயித்துக்கு யெறை போட்டாத்தான் பசியை ஈடுகட்டமுடியும்.இலைன்னா அவுங்க செய்யி ற வேலைக்கு கைகால் நடுக்க மெடுத்து ஒடம்பு ஆடிப்போகும் ஆடி / இத்தனைக்கும் அவுங்க நடு ராத்திரி இல்லையின்னா அதிகாலை மூணு மணியளவுல சாப்பிடுவாங்க, இன்னும் சிலர்ன்னா பணிரெண்டு மணிக்கு ஒரு தடவையும் அதிகாலை மூணு மணிக்கு ஒரு தடவையுமா சாப்பிட்டுட்டு வேலை செய்வாங்க, எனக்குத் தெரிஞ்சி அப்பிடி வேலை செய்யிறவுங்கதான் அதிகம். பொது வாவே பகலை விட ராத்திரி கண் முழிச்சி வேலைபாக்குறப்ப அதிகமா பசிக் கும் அத மட்டுப் படுத்தத்தான் இது,,” என்பார் கடைக்கார்,

ரவாபணியாரம் முடிந்து பருப்பு வடை உளுந்த வடை,வெங்காய வடை.. என என உருவெடுத்து வீற்றிருக்கும் கடையில் ஒரு கடி, ஒரு குடி என்கிற உயி ரோட்டத்திலும் உறவிலுமாய் ஒடிக்கொண்டிருந்த கடையை எடுத்த அன் றிலிருந்து நன்றாக இருந்த அந்த சந்து மூத்திர சந்தாக உருவெடுக்க ஆரம்பி த்துவிட்டது,

அந்தசந்தில் இரு சக்கர வாகனத்தை வைத்து விட்டு வந்தால்அடிக்கிற வெயி லுக்கும் பெய்கிற மழைக்கும் காய்ந்து கொண்டிருக்கும் வண்டி/

அப்படியேகாய விட்டாலும்வண்டி சவண்டி ஆகிப் போகும்/ அதற்குப் பயந்தே இன்ஸீரன்ஸ் ஆபீஸ்க்காரர்கள் யாரும் வண்டி கொண்டு வருவதில்லை, அப்படியே கொண்டு வந்தாலும் கூட அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிற சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து விடுவார்கள். இவன்அப்படியெல்லாம் நிறுத்தாமல் போர்ட்டிக்கோவில்தான் வைப்பான், அப்படி வைக்கும் போதெல்லாம்இவனுக்கு ஏற்படுகிற பிரத்யோகப்பிரச்சனை யாக இன்ஸூரன்ஸ் கம்பெனியிலில் வேலை செய்கிற அன்னநாதனின் சைக் கிள்தான் இவனுக்கு இடைஞ்சலாக இருக்கும் .,

இவனில் சம வயது குறைவாக இருக்கிற அவன் இவனுடன் சரியாக வாயாடுவான்,

“ஏய் இது வண்டி வைக்கிறதுக்குன்னு இருக்குற யெடமுல்ல,இங்க கொண்டு வந்துசைக்கிள வைச்சிருக்குற,,,” எனச்சொன்னால் அட போங்கண்ணே வண்டி யாம் பெரிய வண்டி,ஆயிரம்தான் நீங்க பெரிய வண்டி சின்ன வண்டின்னு வச்சிருந்தாலும் சைக்கிள் போல வருமாண்ணே, வண்டியில நீட்டுன காலும் நீட்டுனகையுமாவெரைப்பா போகலாம் ,வரலாம் .அவ்வளவுதான்.ஆனா சைக் கிள் மிதிக்கிறது ஒடம்புக்கு எவ்வளவு தூரம் நல்லது,நல்ல ஒரு எக்ஸர் ஸைஸீ,அத விட்டுட்டு வண்டியாமுல்ல வண்டி,,” என்பான்.

அவன் சொல்வது போல் இவனுக்கும் மனதிற்குள்ளாய் மெலிதான ஆசை ஒன்று விதையிட்டுக்கொண்டே இருக்கும்தான்.

“ஒரு நல்ல சைக்கிளாய் வாங்க வேண்டும் ,எங்குபோனாலும் சைக்கிளில்தான் இனி போக வேண்டும்” என்றெல்லாம் இத்தியாதி இத்தியாதியாய் இவன் கண்ட கனவு இன்று வரை தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்தாக ஆகியிருக் கிறதே தவிர நிஜத்தில் கை கூடவில்லை/

என்றாவது ஒரு நாளில் கை கூடட்டும் என விட்டு விட்டு விட்டான், இரண்டு அல்லது மூன்றுமூன்று படிகளாக சேர்த்து மாடியில் இருக்கிற அலுவலக த்திற்குச்செல்கிற பத்தும் பத்துமான இருபது படிகளுக்கும் தாவி ஏறுவான்.

இப்பொழுது என இல்லை, இந்த அலுவலகத்திற்கு பணிக்குச்சேர்ந்த சிறிது நாளிலிருந்து அந்த நடை முறையை பழக்கமாகவே வைத்திருந்தான்.

ரவி சார் கூடச்சொல்லுவார்,”ஏன் மொத்தத்துக்கும் ஒரு கயிறு கட்டி ஏறீர வேண்டியதுதான,இல்லைன்னா கால்ல ஸ்பிரிங்க வச்சிகிட்டு ஒரே தவ்வா தாவுனா நேரா மாடிக்கே போயிருறலாமுல்ல” என/

ஒற்றை மனிதரின் கூட்டு உழைப்பிலும் சுழற்சியிலும் ஒட்டு மொத்த அலுவ லகமும் இயங்கிக்கொண்டிருந்த நேரம்,இவன் அந்த அலுவலகத்தில் ஜாயின் பண்ணிய பொழுது அவரின் உழைப்பையும் சுழற்சியையும் பிறர் அறிய இவனுக்கு கை மாற்றிவிட்டவர்,

உழைப்பையும்,உழைப்பின் மகத்துவத்தையும் மனம் வலிக்காமல் கற்றுக் கொடுத்ததோடு அதை மிகவும் நேசித்த அறிய மனிதர்,”சாக்கடை அள்ளுற வேலையா இருந்தாலும் அதுக்கு உண்மையா இருக்கணும்,அப்பத்தான் வாங் குற சம்பளமும் திங்கிற சோறும் ஒடம்புல ஒட்டும்” என்பார்.

வாஸ்தவம்தான் அவர் சொன்னது என பின் நாட்களில் புரிந்தது,

இவன் வேலை பார்க்கிற அலுவலகம் அல்லாத வேறொரு அலுவலகத்திற்கு செக் மாற்றப்போன நாள் அன்றில் கொஞ்சம்உடல் நிலை மோசமாகி அங்கேயே மயங்கி விழுந்து விட்டான்,

விஷயம் கேள்விப் பட்டும் ,தகவலறிந்தும் வந்து விட்டார் ரவி சார்,சரி போங்க,நேரா ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வீட்டுக்குப்போங்க இனிம ஆபீஸிக் கெல்லாம் போக வேண்டாம் என்றார்,

அந்த ”போங்கவில்,,,” இருந்த அன்பும் பிரியமும் வாஞ்சையும் இப்பொழுது வரை இவன் தோள் தட்டியும் மனம் தட்டியும் நகர்த்திச் செல்வதாக,,/

அழைத்தது சாரதியாகவும் திரும்பிப்பார்த்தது இவனாகவும் ஆகிப் போகி றார்கள் அந்த இடத்தில்/

ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகம் பக்கம் வந்து விடுகிற இவன் டீக்கடை மற்றும் நண்பர்கள் இன்னும் இன்னுமாய் எதில் ஒன்றிலாவதான கவனத்து டன் இருந்து விட்டு அலுவகத்தில் உரை கொள்கிற பொழுது மனது கொஞ்சம் சாந்தம் கொண்டும் ஆசுவாசப்பட்டுமாய்,,,/

அந்த ஆசுவாசத்தில் படர்கிற செடியில் மொட்டுவிட்டு மலர்ந்து நிற்கிற பூக்கள் மனம் முழுவதும் மனம் பரப்பிச்சிரிப்பதாக/

கிடந்து படர்ந்திருக்கிற பூக்களின் பூப்பும் மலர்வும் வெடித்துச் சிரிக்கிற அதன் சிரிப்பும் அதன் பாந்தத்தை ஒட்டி வைத்திருப்பதாய் தெரிகிறதுதான் அந்த நேரத்தில்/

சாராகிப்போன சாரதி தினந்தோறுமாய் பார்க்கக் கிடைக்கிறான்தான், சாரதிக் கண்ணு,சாரதிக்குட்டி,தம்பி சாரதி,,,என்பதுதான் இவன் அவனுக்கிட்டிருக்கிற அடை மொழிகளும் கூப்பிட்டழைக்கிற பெயர் விழிப்பிகளும்/

வழித்து வாரப் பட்டிருக்கிற தலைமுடியில் தூக்கிக்கொண்டு நிற்கும் ஒற்றை முடியும் பென்சிலால் வரையப்பட்டிருந்தது போலிருந்த இளம் மீசையும் ஒல்லியான உடம்பில் சேர்த்து வைத்துதைத்தது போல் ஒட்டிக் கொண் டிருக்கிற கட்டம் போட்ட சட்டையும் அதற்கு தகுந்தாற்போல் மேட்சாக ஒரு பேண்ட்டிலுமாய் அவன்எப்பொழுதும் துள்ளாலாய் பார்க்கக் கிடைக்கிறான் தான்,

என்ன கண்ணு என்ன விஷேசமா,,,,,,,,?என்றால் இல்ல சார்,அப்பிடியெல்லாம் என கொஞ்சமாய் வெட்கப்பட்டுக் கொள்வான். நல்லாயிருக்குப்பா ஒனக்கு இந்த பேண்ட்டும் சட்டையும் என்றால் அதே சிரிப்பும் அதே கொஞ்சமான நாணப் பட்டுக்கொள்ளலும் அவனுக்கே அவனுக்கானதுதான் போலும்.

“நீங்கதான் சொல்றீங்க சார்,எனக்கு என்னவோ பெரிசா ஒண்ணும் தெரியல சார்,இன்னும் சொல்லப்போனாவெறுத்துபோகுதுசார் இந்த பேண்ட் சட்டைய போட்டுக்கிட்டு வெளியில திரியிறதுக்கு,,,”என்பான்.

வாஸ்தவம் தானோ அவன் சொல்வதும் என நினைக்கத் தோணுகிற நேரங் களில் அவனிடம் இருக்கும் பேண்ட் சர்ட் எத்தனை என கேட்டு விட மறந்து போனோமே என நினைக்கத்தோணுவது உண்டு.

முதல்படிதாண்டி இரண்டாவதில் கால் வைக்காமல் மூன்றாவது படியேறி கடக்கையில்தான் சாரதியின் சப்தம் இவன் முதுகு படர்ந்து செவி தொட்டு கவனம் இழுத்து திருப்புகிறது,

திருப்புவதற்குள் சாரதி சொன்ன வணக்கம் சார் என்கிற சொல்லுக்கு சார் வணக்கம் என பதில் சொல் உதிர்த்து விட்டுதான் திரும்பினான் இவன்.

திரும்பினால் அங்கே சாரதி ,அவனுக்குறிய அடையாளத்துடன்,/

“என்ன சார் என்னையப்போயி சார்ன்னுட்டீங்க,,,” என சங்கடப்பட்டான், ”இருக் கட்டும் கண்ணு ஒன்னைய சார்ன்னு கூப்புடக்கூடாதா, இல்ல நீயி சார் ஆக மாட்டயா ஒரு நாளைக்கு” எனக் கேட்கையில் சாரதி சொல்கிறான்,

”வேணாம் சார் சாரதிக்கண்ணுன்னு கூப்புடுற வார்த்தையில இருக்குற ஒட்டு தலும் பிரியமும் ”சார்ல” இல்ல சார்,,,” எனச்சொல்லிவிட்டு படியேறி கடந்து விடுகிறான்,

இவனை பின் தள்ளிவிட்டு,கடந்து போன சாரதியை பார்த்தவாறு படியேறா மல் அப்படியே உறைந்து நிற்பவனாய் இவன் ,,,/

2 comments:

PUTHIYAMAADHAVI said...

வேணாம் சார் சாரதிக்கண்ணுன்னு கூப்புடுற வார்த்தையில இருக்குற ஒட்டு தலும் பிரியமும் ”சார்ல” இல்ல சார்,,,” எனச்சொல்லிவிட்டு படியேறி கடந்து விடுகிறான்,...

Wonderful.

vimalanperali said...

நன்றியும் அன்பும் மேடம்../