18 Mar 2019

கால் பதித்து,,,


எங்களூர் மந்தையில் புளிய மரம் ஒன்று இருந்தது,
யார் சொல்லியும் கேட்காமல் அதனிஷ்டத்திற்கு
பருத்தும் விரிந்தும் மேனியெங்கும்
முண்டும் முடிச்சுமாய் காட்சிப்பட்டது,

அதன் நிழலில்தான் அமர்ந்தார்கள்,
அதன் நிழலில்தான் படுத்துத்தூங்கினார்கள்,
அதன் நிழலில்தான் ஒதுங்கினார்கள்’
அதன் நிழலில் நடைபெற்ற சீட்டு விளையாட்டின் போது
நாலாவது தெருக்காரரை மூன்றாவது வீட்டுக்காரர்
மண்டையை உடைத்து விட்டார்.

சண்டையை முன்னிட்டு மத்தியஸ்தம் பண்ணியவர்கள்
கண்ணுக்குக்கண்,பல்லுக்குப்பல்,ரத்ததிற்கு ரத்தம்
என்பது சரியாய் இருக்காது,

உன் வீட்டுப்பிள்ளைக்கு உடல் நலமில்லாத போது
இரு சக்கரவாகனத்தில் கூட்டிப்போய்
ஆஸ்பத்திரியில் சேர்த்த நல்ல மனம் அவனிடம் இருக்கிறது,

அவன் வீட்டு விசேசத்தில் எல்லா வேலைகளையும்
யாரும் சொல்லாமல் இழுத்துப்போட்டுச்செய்த
நல்ல குணம் உன்னிடம் இருந்தது.

பரஸ்பரம் உங்களிருவர் போல்  ஈரம் வற்றிப்போகாத
மனங்கள் இருக்கிற வரை
இது போலான சண்டைகள் எல்லாம் சோப்புக்குமிழி போல
படக்கென  தோன்றி உடைந்து போகிற தற்செயல் நிகழ்வுகள்/
அதற்கு உருவகம் கொடுத்து பூதாகரப்படுத்த வேண்டாம்
என கை கூப்பியவாறே சொன்னவர்கள்
நடந்தது கெட்டது ,இனி நடப்பது நல்லதாய் இருக்க
ஆசை கொள்வோம் என சொல்லிவிட்டுச்சென்றார்கள்,
 
குமார் அண்ணனின் வீட்டிற்கு எதிர்புறமாய்
இருந்த மரத்திற்கு அவர் வீட்டிலிருந்துதான்
பாத்திரம் கழுவும் தண்ணீரிலிந்து
எச்சில் நீர் வரை எல்லாம் கலந்து போனது,
எதன் சுவையறிந்து எடுத்ததுக் கொண்டது மரம்
எனத்தெரியாவிட்டாலும் கூட
அதன் வளர்ச்சிக்கும் காய்த்தலுக்கும்
பஞ்சமில்லை என ஆகித்தெரிந்தது/

அதன் மேனியெங்குமாய் பட்டுத்தெரிந்த
மரப்பட்டைகளை உரித்து எரித்து குளிர் காயும்
இரவு வேளைகள் தவிர்த்து பகல் நேர
விடுமுறை தினங்களில் பள்ளிப் பையன்களில்
சிலர் புளியம்பழம் பறிக்க மரமேறினார்கள்,

மரமேறிய இருவரில் பெருமாள் அண்ணனின் மகன்
நான்காவது கிளையிலிருந்து விழுந்து விட்டான்.

எலும்பு முறிவிற்காகாய் வைத்தியம் பார்க்க பக்கத்து நகரத்திற்குப்போனார்கள்,

அரசு ஆஸ்பத்திரியின் மாவுக்கட்டும்
உள் சிகிச்சைகாய் அனுமதித்து
அவனுக்குத்தந்த பாலும் பன்னும்
அவனை தேற்றி விட்டன,

ஊர் திரும்பி பள்ளிக்குப்போய் விட்டு
திரும்பிய அவன் விடுமுறை நாளில்
புளிய பழம் பறிக்க வேண்டும் என திட்டம்
தீட்டிய நாளில் புளிய மரம் வேறோடும்
வேரடி மண்ணோடுமாய் வெட்டிச்
சாய்க்கப்பட்டிருந்தது மண்ணில்.
ஊர் வளர்ச்சிக்காய் ஏதோ அரசு அலுவலகம்
இடம் வேண்டி வெட்டினார்களாம்.

வருடத்திற்கு ஒருகோட்டை புளியம்பழங்களை
தந்த மரம் இனி இல்லை.,
அதன் நிழலில் ஒதுங்கியவர்களும்,
இழைப்பாறிக் கொண்டவர்களும்
சீட்டு விளையாடி சண்டை போட்டவர்களும்
நிழலில் ஒதுங்க இனி எந்த மரம் தேடிப்போவது
என யோசித்தார்கள்,


ஊரின் உயிர் சாட்சியாய் நின்றிருந்த
மரத்தை வெட்டி விட்டு அரசு அலுவலகம்
என்றால் வேடிக்கையாகவும்
வேதனையாகவும் இருக்கிறது
எனச்சொன்ன பறைவகள் இரண்டு
நாங்கள் இனி கூடடையவும் காதல் மொழி
பேசிக்கொள்ளவுமாய் எங்கு செல்வோம்
என நினைத்தவாறே வேறு மரம் தேடி பறந்தன.
பெருமாள் அண்ணன் மகனைக் கடந்து,,,/

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை

Thulasidharan V Thillaiakathu said...

வேதனையான விஷயம். அப்புளியமரம் எத்தனை பேருக்கு இன்பம் அளித்திருக்கிறது! காதல் ஜோடிப் பறவைகள் வரை...பாவம்...இப்படித்தான் வளர்ச்சி என்ற பெயரில் பல மரங்கள் வெட்டப்படுகின்றன...

துளசிதரன், கீதா

(கீதா: நான் இப்படி ஒரு மரம் பற்றி கதை எழுதிப் பாதியில் இருக்கிறது...)

vimalanperali said...

நன்றியும் அன்பும்!

vimalanperali said...

இப்படித்தான் வளர்ச்சி என்றபெயரில் இயற்கை காவு கொடுக்கப்படுகிறது!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து இடங்களையும் வளர்ச்சி என்கிற பெயரில் இதுபோல் கொடுமை தொடர்கிறது...

vimalanperali said...

வாஸ்தவமே,,/

வெங்கட் நாகராஜ் said...

வளர்ச்சிக்காக வெட்டப்படும் மரங்கள், தூர்க்கப்படும் நீர் நிலைகள்... வேதனை தான்.

vimalanperali said...

ஆமாம் வேதனையான உண்மை!