22 Mar 2019

ஒலிக்கீற்றாய்,,,,,,,

          
                                          முன் ரோடு,,,



சாலையின் நடுவாய் உருண்டு கிடந்த
சின்னதான வெங்காயத்தை
இடது கால் முனையால் சற்றே விளையாட்டாய்
எட்டி உதைத்த பொழுது சாலையோரமாய் நின்ற
குப்பைத்தொட்டியில் போய் விழுகிறது,

குப்பைத்தொட்டிக்கு போய் விழவேண்டும் என
ஆசைப்பட்டு உதைத்ததுதான் உதைத்தாய்,
உதாசீனம் காட்டி உதைக்காமல் கொஞ்சம் அன்பு கலந்து உதைத்திருக்கலாமே,,?
இல்லையெனில் கையால் தூக்கி வீசி இருக்கலாமே,?
என்றவாறே விழுந்த வெங்காயம்
குப்பையுடன் குப்பையாய் கலக்காமல் தனித்துத்தெரிகிறது,
நாலு கிலோ வெங்காயம் ஐம்பது ரூபாய் என
கூவி விற்கிற வேன் வியாபாரத்தை போல,/

அதை ஓரக்கண்ணால் பார்த்தவாறே
சாலையைக் கடக்கும் பொழுது
சாலையின் இரு மருங்கிலுமாய்
நின்றிருந்தவைகள் காய்கறிக்கடை ,பலசரக்குக் கடை டீக்கடை,ஹோட்டல்,என இன்னும் இன்னுமான
கடைகளாய் காட்சிப்படுகிறது.

அவைகளி ல் ஒரு கடையை தேர்ந்தெடுத்து
டீக்குடித்துக் கொண்டே
காய்கறி வாங்கலாம் என யோசித்த வேளை
அருகிலிருந்த முருக்குக்கடைக்காரர்
கட்டைக்காலுடன் நின்று
முறுக்குப்பிழிந்து கொண்டிருந்தார்,

     **********************      
 
கீச்சுச்சொல்,,,,,,,,

காற்றின் திசை கொள்ளாது
பறந்து சென்று கொண்டிருந்த
தூரத்துப்பறவை ஒன்று
போட்டு சென்ற விதை
மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து
கிளைத்து பரந்து பாவி
இலையும் கிளையும் பூவும் பிஞ்சுமாய்
நிற்கிற நேரம்
அதில் சந்தோசித்து கூடைந்த பறவைகள் இரண்டு
காதல் பாஷை பேசிக் கொண்டிருந்த வேளையில்
வேகம் கொண்டு வந்த யந்திரங்கள் இரண்டு
வரிசையாய் நின்ற மரங்களை வெட்டிச் சாய்க்கின்றன,


வெட்டுண்ட மரங்கள் கொண்ட இலைகளையும் கிளைகளையும்
கிள்ளி எறிய தனியாய் நின்ற யந்திரம் ஒன்று
அதன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது,


வெட்டுண்ட மரங்களும் அறுபடும் அதன் கிளைகளும் இலைகளும்
கூர் முனை கொண்ட யந்திரத்தின் பல்லில்
அறுபட்டுக்கொண்டிருந்த வேளை
ஆறாதும் ,தீறாதும் பறந்து பறந்து கூடைந்து
காதல் பாஷை பேசிகொண்ட பறவைகளும்

அதன் குஞ்சுகளும் ரத்தம் தோய அறுபட்டு
வெட்டப்பட்டுக்கிடந்த மரத்துண்டுகளின் மீது
உயிர் சாட்சியாய் துடித்துக்கிடக்கிறது.
நிறைந்து தெரிந்த அத்துவான வெளி முழுவதுமாய்,,,/

                          ********************

                           சைரன்,,,,


சடுதியில் எழுந்திரு கண்ணே,
உனது தூக்கம் கலைந்த விழிப்பில்
ஒரு வேகமும் புத்துணர்ச்சியும்
கைகூடி இருக்க வேண்டும் கண்டிப்பாக/


அப்பொழுதுதான் நீ குளித்து சாப்பிட்டு
சீருடை அணிந்து கிளம்ப சரியாய் இருக்கும்,
அதற்குள் பள்ளிப்பேருந்து
உனது வருகைக்காய் காத்திருக்கும்,
சைரனை சப்தமாய் ஒலித்தபடி/
சடுதி காட்டி எழுந்திரம்மா,என் கண்ணே,,,,
என அரை தூக்கத்திலிருந்தவளை
எழுப்புகிற அம்மாவை ஏறிட்டவள்
வீட்டுப்பாடம் எல்லாம் சரியாய் எழுதியாயிற்று,
படிக்க வேண்டியவற்றை தவறில்லாமல்
மனனம் செய்து மனதின் ஓர அடுக்குகளில் பதிந்து வைத்தாயிற்று/
பென்சில் ,பேனா,ஜாமெண்டரி பாக்ஸ்,,,
மற்றும் மற்றுமானவைகளை இரவே எடுத்து
ஸ்கூல் பேக்கிற்குள் வைத்தாயிற்று,
இதையெல்லாம் செய்து முடித்து விட்டு
தூங்கப்போக நேற்று இரவு மணி பணிரெண்டாயிற்று,
அழுப்பும் தூக்கமும் உடலையும் கண்களை
அழுத்தும் இருள் கலையாத இந்த அதிகாலையில் எழுந்து என்னசெய்யப்போகிறேன் நான்,,,?
இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிக்கொள்கிறேனே,,,,
என அம்மாவிடம் கெஞ்சியாவாறும்
படிப்பு என்பது விரும்பி ஏற்பதுதானே,,,,,
இப்படி மனதில் கட்டி வலிய திணிப்பதல்லவே
என நினைத்தவாறாய் வேண்டா வெறுப்புடனுமாய்
எழுந்தமர்கிறாள் படுக்கை விட்டு
எல்,கே,ஜி பயிலும் பள்ளிச்சிறுமி,,,/

                       *******************

                             பாவு

தண்ணீரில் முக்கி எடுத்த போது
சாயம் இறங்காத புதுத்துண்டின்
ஊடுபாவாய் துண்டை நெசவிட்டவரின் முகமும்
நூல் முக்கி எடுக்க பாகுகாய்ச்சியவரின் முகமும்
வேற்று வேலை தேடி அலைபவர்களாய் வந்து போகிறது,,,,,
                             *****************

கலையா நிமிடங்களில்,,,,/


இரு கண்ணே வருகிறேன்,
கொஞ்சம் தாமதம் ஆகிப் போனது.
பொறுத்துக்கொள்,

வேலை பார்த்த இடத்தில்
வார முடிவில்தான் சம்பளம் என
கறார் காட்டிய முதலாளியிடம்
காலில் விழாக்குறையாய் கெஞ்சிக் கெதறி
காசு வாங்கி வர நேரமாகிப்போனது.
வாங்கிய பணத்தில் உனக்கும்
நம் குடும்பத்தேவைக்குமானதை
வாங்கிக்கொண்டேன் சிறிதே,,,/

நான் ஏறிய பேருந்து இன்னும் கால் மணியில்
நமது ஊரை நெருங்கி விடும்.

பேருந்திலிருந்து இறங்கியதும்
சடுதியாய் வீட்டுக்கு ஓடோடி வந்து
நொறுங்கலரிசி கஞ்சி காய்ச்சித்தருகிறேன்,

கொஞ்சமாய் தண்ணீரைக்குடித்துக்கொண்டு
வயிற்றில் தீயாய் எரியும் பசியை மட்டுப்படுத்திக்கொள்/

மூடிவிட்ட ஆலைகள் திறக்கும் வரை
தினக்கூலியான நம் குடும்ப நிலை இதுதான் கண்ணே/

உனக்கு மதியம் பள்ளியின் சத்துணவு சாப்பாடும்
இரவுக்கு நொய்க்கஞ்சியும்தான் உணவாய்வாய்த்தது
என வைத்துக்கொள்வோம் கண்ணே/

கோபம் கொள்ளாமலும் எரிச்சல் காட்டாமலுமாய்
பொறுத்திரு கண்ணே பொறுத்திரு,இதோ வந்து விடுகிறேன்,

அதுவரை உனது பள்ளிப்பாடம் வீட்டுப்பாடம்
மற்ற மற்றதான எதுவும் இருந்தால்
படித்துக்கொண்டிரு வாழ்க்கையையும் சேர்த்து,,,/
இதோ வந்து விடுகிறேன் கண்ணே சடுதியில்,,,/


                        *****************

அணையிட்டு,,,


எப்பொழுது வருவாய் எனதருமை தாயே/
எப்பொழுது வருவாய்,,?

நிறைவில்லாத சாப்பாட்டை
நன்றாய் இருப்பதாய்ச்சொல்லி
கற்பிதம் காண்பித்து
எனக்கு ஊட்டி விட்டு அவசர அவசரமாய்
கிளம்பி வேலைக்குச்செல்கிறாய் நீ/

எங்கு செல்கிறாய் என்ன வேலை செய்கிறாய்
என பலமுறை உன்னிடம் கேட்டபோதும் அது பற்றி
பேச மறுத்து சொல்லை மாற்றி
ரத்தம் கன்னிப்போன விரல்கலையும் ,
காப்பு ஏறிப்போன கையையும் மட்டுமே காட்டியிருக்கிறாய்,
வம்பாய் பிடித்திழுத்துப்பார்த்த பொழுது/

பக்கத்து வீட்டு பள்ளித்தோழி
தின்பண்டம் என ஒரு அடி நீளத்தில்
ஏதோ வாங்கி வைத்துக்கொண்டு தானாய் தின்கிறாள்.

பள்ளி நேர இடைவேளையின் போது
அப்பாஎடுத்துக் கொடுத்ததாய்
புத்தாடை உடுத்து வருகிறாள் உடன் படிப்பவள்.

மதிய சாப்பாடு இதுதான் என  ஏதோதோ கலர்கலராய்
கிண்டி எடுத்து வருகிறாள் என் பின் பெஞ்சில் அமர்ந்திருப்பவள்,

வாரகணக்கு வைத்து பள்ளியின் பக்கத்துக் கடைக்காரனிடம்
 ஐஸ்கிரிம் வாங்கிச் சாப்பிடுகிறாள்.நாலாவது வீட்டுக்காரி.

இது போக ஒற்றைஜடை போட்டும்,
இரட்டை ஜடைப் பின்னலுடனுமாய்
தலைநிறைந்த பூவுடன் பளிச்சென வருகிற
பிள்ளைகளைப்பார்க்கிறேன்/

இப்படி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும்,
எச்சில் விழுங்கியவாறாய் ஏங்கிக்கொண்டும்,
யோசனை செய்து கொண்டும் தவதாயப்பட்டுக்கொண்டுமாய்
இருக்கிற எனக்கு அவர்களது செயலில்
பாதியையாவது செய்யத்தோணாமல் இல்லை.

ஆனால் அன்றாடம் கூலிக்குச்செல்கிற
உன்னையும் அப்பாவையும் பார்க்கிற போது
எனது ஆசைக்கு அணை போட்டு விடுகிறேன் எனதருமை தாயே/
                                      ******************

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை தோழர்...

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் சிறப்பு.

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தோம்..

துளசிதரன், கீதா

vimalanperali said...

அண்பும் பிரியமும்!

vimalanperali said...

பிரியங்கள் விதைத்து!

vimalanperali said...

ரசிப்பின் மகிழ்வு!

vimalanperali said...

நன்றியும் பிரியமும்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ரசித்தேன்
நன்றி நண்பரே

வலிப்போக்கன் said...

அருமை...நல்லவேளை என் காலத்தில் LKg . வரவில்லை தப்பித்தேன்...

vimalanperali said...

நம் யார் காலத்திலும் வரவில்லை
என்பதே நிஜம்,,,/