19 May 2019

ஒற்றை,,,,,,

காய்கறிக்கடைச்சிட்டையில் கத்திரிக்காய்இருந்தது,
வெண்டைக்காய் இருந்தது,முருங்கைக்காய் இருந்தது,
பின் சுரை,புடலை,அவரை,பீட்ரூட்,முட்டைக் கோஸ்,தக்காளி,,,,என கருவேப்பிலை கொத்துமல்லியுடன் கைகோர்த்துச் சேர்ந்து கொள்கிறது,
தேங்காய் இல்லாமல் போனால் காய்கறி வாங்கிய வழக்கில் வராது என அதில் இரண்டையும் சேர்த்து விலை எழுதியிருந்த சிட்டையில்
வீட்டில் எல்லோருக்கும் பிடித்த முக்கிய காய்கறியின் விலை இல்லாமல் போனது,


                                             
                                                          ******************

இறங்கியவர்கள் பத்து பேருக்கும் குறையாதவர்களாய் இருந்தார்கள்,
ஏறியவர்களின் எண்ணிக்கையும் அதற்கு சற்றேறக் குறையாமல்,,,,/
ஒவ்வொரு ஊரிலுமாய் பேருந்து நின்ற போது இறங்கி ஏறியவர்களின் எண்ணிக்கை சம நிலை கொண்டே வந்து கொண்டிருக்க பேருந்தின் உள்ளே இருந்தவர்கள் கொஞ்சம் விழி பிதுங்கித்தான் போகிறார்கள்.
விழிபிதுங்கியவர்கள் சுமந்து அன்றாடம் பேருந்துடைத்து எல்லா ஊர்களிலுமாய்,,,,/

                                                      *******************

இஷ்டத்துக்கு முடி வெட்டு விடுகிறார்,
தொழிலில் சிறிதும் கவனம் ஏதுமின்றி,,,,,
என இடைவிடாமல் குறையும் குற்றமுமாய்
வாசித்தவன் சலூனில் சேரில் அமர்ந்தவுடன்
தன்னிஷ்டத்திற்கு செல்போனில் பேசவும்,
அரிக்கிற இடங்களில் சொரியவும்
தெரிந்தவர் வந்தால் பேசிக்கொண்டும்
இவை ஒன்றுமில்லையெனில் தூங்கியும் போய் விடுகிறார்,


                                    *************************

அட,,,,, மழை பெய்கிறது,
பஞ்சம் பிழைக்கப்போன கதையாக
வேர் விட்ட அலுவலகத்திலிருந்து பணிநிமித்தமாய்
வேறோர் ஊரின் கிளை அலுவலகத்திற்கு
சென்றிருந்த மாலை வேளையாய்
பெரும் குரலெடுத்துப்பெய்கிறது மழை,
சாலை நனைகிறது,மண் நனைகிறது,
மனிதர்கள் நனைகிறார்கள்,கூடவே சாலையும்,
சாலையில் வாகனங்களும்,பேருந்துகளும்,
இரு சக்கர, வாகனங்களும் விரைந்து கொண்டிருந்தன.
மண்ணை நனைத்து பெருக்கெடுத்து ஓடிய நீர்
சாக்கடை நீரின் வாசனையை இலவசமாய் தந்து விட்டும்,
தூரத்தில் ஓடிய கால்வாய் தண்ணீரை காட்சிப்படுத்திவிட்டும்,,/
இரு சக்கரவாகனர்கள் சாலையின் ஓரம் நிழல் தேடி ஒதுங்கினார்கள்,
பேருந்தும் ஆட்டோக்களும் தன்னை முழுக்க மூடி முக்காடிட்டுக்கொண்டு போனது,
சாலையோர கட்டிடங்களில் நின்றவர்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிந்தார்கள் மழையை/
வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை
மின்னல் ஒலிகண்ணைக்குத்திவிடக்கூடும்,
இடி சப்தம் காதை பழுதாக்கி விட வாய்ப்புண்டு,
அடிக்கிற சாரல் பேண்ட் சட்டையை நனைத்து விடும்,
ஆகவே வந்து விடுங்கள் உள்ளே என கைபிடித்து இழுக்காத குறையாய் ஒலித்த குரலை சற்றே ஓரம் கட்டி வைத்து விட்டவனாய்
இப்படியான மழையைப்பார்த்து வருடங்கள் ஒன்றுக்கு மேல் உருண்டோடி விட்டது.ஆகவே என்னைக்கொஞ்சம் விடுங்கள்,,,,
என பெய்து கொண்டிருந்த மழையைப்பார்க்கிறேன்.
மிதமாகவும் இல்லாமல் வெகு கனம் கொண்டும் அல்லாமல்
இரண்டுக்கும் இடையிலான கைகோர்ப்பிலும் ,நெசவிலுமாய்
வானத்திற்கும் பூமிக்குமாய் நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளைப்போல் பெய்து கொண்டிருந்த மழையிடம் பேச எனக்கு இதற்கு மேல் என்ன இருக்கிறது,

மழை பார்ப்பதும் ,மழை ரசிப்பதும்,மழை கேட்பதும்
மிகவும் புண்ணியமாகியும் ,புனிதப்பட்டுமாய் போய் விடுகிறது/
இரு கைகளையும் நீட்டி வரவேற்றவனாய் மழையினூடே இறங்கி நடக்கிறேன்/
உடல் நனைத்த மழை என்னை குளிர்வித்து மனம் நனைத்துச்சென்றதாய்,,,/


                                                 **********************

எந்தநேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற
சாலையின் இடது ஓரமாய் நான்கு பேர் நின்றிருந்தார்கள்.
நின்றிருத்தலும் நிலைபெறுதலும் விவாதித்தலும் பேசுதலும்,,,,
இடது ஓரத்திற்குத்தான் பொருந்தும் போலும்.
பூத்து நின்ற மலர்ச் செடியாக காட்சிப்பட்ட
இருசக்கரவாகனத்தின் மீது சாய்ந்து பேசிக்கொண்டிருந்த
யுவதியின் பேச்சும்,அவளைச்சுற்றி நின்ற இளைஞர்களின் ஊடாடலும் வேறென்னவாய் இருந்து விட முடியும்,,,,?
தங்களின் கல்லூரி,படிப்பு,ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு
அடுத்த நிலை என்ன என்பது தவிர்த்து,,,,?
சமயத்தில் அது காதலான பேச்சாகக்கூட இருந்து விட்டிருக்கலாம்.
அதுவும் வாழ்க்கையின்ஒரு அங்கம்தானே,,,,?
என யோசித்துக்கொண்டிருந்த கணத்தில்
அவளின் ஒற்றை ஜடையில் இருந்து விழுந்த ரோஜாப்பூவை கையிலெடுத்துக் கொடுக்கிறான் நால்வரில் ஒருவன்.
உடுத்துதலிலும் ,ஒப்பனை மீறா உறுத்தாத அழகிலும் அவர்கள் பேசி விட்டுக்கலைந்த வேளை வேகம் கொண்டு வந்த இரு சக்கர வாகனம் ஒன்று சாலையின் குறுக்காக ஓடிய நாய் மீது மோதி விட சரிந்து விழுந்த வாகனத்
திலிருந்து பை திறந்து விழுந்த டிபன் பாக்ஸ்
சிந்திய சாப்பாட்டையும் கீழே விழுந்தவரையுமாய் அடையாளம் காட்டுகிறது,
தரை சிந்திய சாப்பாட்டை விட்டு விட்டு மீதி சாப்பாட்டுடன் கீழே விழுந்தவரையும் கைபிடித்துத்தூக்கி விட்ட நால்வருமாய் மிகை மீறா உறவுடனும் அன்பும்,நட்பும் தோழமையுமாய் கடந்து செல்கிறார்கள் சாலையை,,,,/

                                      *****************************


சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் மற்றும்
இளம் கத்தரிப்பூ நிறமுமாய் வெடித்துச் சிரித்திருந்த
பூக்கள் இலைகளுடன் தன் இருப்புகாட்டி இரண்டு தொட்டிகளில் பூத்தமர்ந்திருக்க அவற்றின் இடையில் தொந்தி சரிந்து வாய் கொள்ளாமல் சிரித்த தங்க நிற குபேரர் பொம்மையின் முன் வெள்ளிக் கலரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
ஊதி வத்தி ஸ்டாண்டில் எரிந்து முடித்த ஊதுவத்தியின் மிச்சங்களாய்,,,/
பளிச்சென துடைக்கப்பட்ட கண்ணாடியை உற்றுப் பார்த்தவாறும்
சாலையின் நகர்வில் முழுக் கவனம் கொண்டுமாய் வட்டக்கட்டயை இறுகப்பற்றி வழியின் திசையில் சாரதி அடையாளம் பூண்ட ஓட்டுனர்,
தன் பணி தனக்குறியதுதான் என மட்டுமே நினைத்தவராய் பயனச்சீட்டுகளைக் கிழித்துக் கொடுத்தவாறே பேருந்திற்குள்ளாய்
முழு வேகம் காட்டி நகர்ந்து கொண்டிருக்கிற நடத்துனர்,,,/
மலர்ந்திருத்தலும்,குபேரத்தனங்களும்,வாசனை நிறை கொண்டுமாய் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் நிலை பெருதல் அக்கணத்தில் பெரும்
பேரு பெற்றதாயும்,இசை நனைவுகொண்டுமாய்,,,,/


                                       *******************************

கையில் கொஞ்சம் காசும் மனதில் கொஞ்சம் இடமும் இருந்தால்
ஏதாவது வாங்கிச்செல்லலாம் வீட்டிற்கு எனத்தோணிப் போகிறதுதான்,
மேம்பாலத்தின் அருகில் இறங்கி முக்கு ரோடு நோக்கி நடக்கையில் முகத்தில் மோதிய காற்றுபேருந்துப் பயணம் முழுவதுமாய் தூங்கி வந்த தூக்கக்கலக்கதை விரட்டுகிறது சடுதியாய்,,,,/
விலகிப்போன தூக்கத்தின் கைபிடித்து நடக்கையில் லேசாகத் தூறிய சாறல் மழை கொஞ்சமாய் கறுத்துத்திரண்டிருந்த மேகங்கள்,பார்த்துப்பேசிய ஒன்றிரண்டு நண்பர்கள் மற்றும் தோழர்கள் எனவுமாய் ஆனவர்கள் தோணிய எண்ணத்தை இன்னும் கனியச் செய்கிறவர்களாய் ஆகித்தெரிகிறார்கள்,
இந்த வேலையில் இந்த மனோ நிலையில் வீட்டிற்கு ஏதேனுமாய் வாங்கிச்செல்வது தவிர்த்து வேறு பேறு என்ன வேண்டியிருக்கிறது,,,,?


                                               **************************

வீட்டின் நடுவாய் வைத்து குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தேன்.
ஊட்டிய சாதத்தில் கொஞ்சம் தரை பட்டு சிந்தி விடுகிறது.
சிந்திய பருக்கையை எடுத்து எனக்கு ஊட்டுகிறாள் குழந்தை,
அந்தக்கணத்தில் அவள் எனக்கு அம்மாவாகிப் போகிறாள், நான் அவளது மகனாகிப்போகிறேன்,
நான் அவளிடம் கேட்கிறேன் இறைஞ்சி/
எனக்கு கொஞ்சமாய் சோறு ஊட்டு தாயே,
என்னை ஆசையாய் ஏதாவது சொல்லி அழை தாயே,
அருகில் அழைத்து உச்சி மோந்து முத்தம் கொடு தாயே,
கோபம் கொண்டு கொஞ்சம் திட்டு தாயே,
முடிந்தால் கொஞ்சம் கனம் கொண்டு அடித்து கூட விடு தாயே,
காய்ப்புக்காய்த்த உனது பழுத்தகரங்களால்
என்னை இழுத்து அணைத்துகொள் தாயே,,,,,
ஆனால் இது ஏதுமற்று வெறுமையாய் மட்டும் என்னை திரிய விடாதே,,,
என மடியில் இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருந்த
குழந்தையை நோக்கி மனமெடுத்து தேம்புகிறேன்,,,/

                                           **************************

சமயத்தில் அப்படித்தான் ஆகிப்போகிறது.
உடுத்தியிருக்கிற நேர்த்தியிலும் ,
நெற்றிக் கிட்டிருக்கிற வாகிலும்,
தலை வாரிப்பின்னியிருந்த அழகிலும்,
ஒற்றைக் கொன்ற மலராய் தலைக்கு
பூச்சூடியிருந்த மலர்விலுமாய்
அவளைப் பார்க்கிற பொழுது எனக்கே எனக்கும்
கொஞ்சம் வெட்கம் வந்து விடுகிறதுதான்.
எட்டப்போய் பத்தடி தூரத்தில் நின்று கொண்டு
அவள் அழகை கண் கொட்டாமல் ரசிக்கலாம் எனவும் படுகிறது,
யாருமற்ற அத்துவானம் காத்த வெளியில் இருவர் மட்டுமே
தனித்துக்கதை பேசி மகிழலாம் போலவுமாய் இருக்கிறது.
இனி ஒரு முறை பிராயம் பூண்டு ஊரெல்லாம்
சுற்றித் திரியலாம் போலவும் தெரிகிறது.
மோகத்தையும்,ஆசையையும் அறுபதிற்கும், முப்பதிற்குமாய்
அடகு வைத்து விடாத கணவன் மனைவிகளுக்கு வாய்ப்பது போல் இவனுக்கும் அவளுக்குமாய் இந்த ஐம்பது தாண்டிய வயதிலும்
இது போலாய் வாய்க்கப் பெற்றிருக்கிறதுதான்.
வாய்க்கப் பெற்றவைகள் யாவும் வரமே எனக் கொள்வோம்/

4 comments:

ஸ்ரீராம். said...

அனைத்தும் அருமை. மழைக்கவிதை மிக அருமை.

vimalanperali said...

அன்பும் மனம் கொண்ட பிரியமும்!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை தோழர்...

vimalanperali said...

நன்றியும் அன்பும்..!