16 Sept 2019

நீர் கானலில்,,,,

காலை வேளையில் ஒன்பது மணி இவனுக்கு பிடித்த நேரமாக இருக்கிறது,

விழிப் படர்வின் பொழுதுகளும் அதன் சொல்லித் தீரா அவதானிப்புகளும், மாறிப் போகா அதன் தொனிகளும் தீர்மானிக்கப்பட்ட மணியை எடுத்துக் காண்பிப்பதாய் இருந்தது,

கையில் வாட்ச்கட்டி வருடம் ஒன்றுக்கும் மேலாகிப் போகிறது. கட்டகூடாது என்கிற தீர்மானமெல்லாம் இல்லை,

ஒரு நாள் காலை வேலையின் அவசரம்,சாப்பாடு தண்ணி பாட்டில் எல்லாம் எடுத்தவன் வாட்சைக் கட்ட மறந்து போனான்.அந்த மறதியே இப்பொழுது வரை சாஸ்வதம் ஆகிப் போனதாய்,,/

சாமிநாதன்தான்சொன்னான் வாட்ச் கட்டிக்கொண்டிருந்த காலங்களில்,வாட்ச இப்பிடி கையோட மணிகட்டு மேலகட்டாம அடிப்புறமா திருப்பிக் கட்டு, நல்லாயிருக்கும் என,/

“டிங்ட டிங்டாங்க,டிங்ட டிங்டாங்”,,,ராதாவும் ரஜினியும் திரையில் ஆடிக் கொண்டிருக்கிற காட்சிக்கு பின்னே பெண்டுலத்தை ஆட்டிக் கொண்டிருக்கிற கடிகாரம் இசையுடன் ஆடிக்கொண்டிக்கிறதை சொல்லிச்செல்லும் பாட்டு கேட்கவும் பார்க்கவுமாய் இருக்கிற ரம்மியத்தை காட்சிகள் பதிவு செய்வது போல் சாமிநாதனின் பேச்சும் பதிவு செய்து விட்டுப் போகிறது.

அப்பாடலுக்கென்று இவன் மனதில் எப்பொழுதும் தனி இடம் இருந்ததுண்டு.

அது போலவே சாமிநதனுக்கும் அவன் பேச்சிற்கும்,/

“அது பொம்பளைப்புளைங்க இல்ல அப்பிடிக்கட்டும்” என்ற போது ”ஏன் நீ கட்டுனா ஒன்னைய என்ன பொம்பளப்புள்ளைன்னா சொல்லப் போறாங்க, இப்ப இப்பிடியே ஏங் கூட கெளம்பி வா,எத்தன ஆம்பளைங்க இது போல வாட்ச் கட்டீருக்குறாங்கன்னு காட்டுறேன்” என்றவன், ”பொம்பளைப் புள்ளை ங்க கட்டுறாங்கன்னு ஒனக்கு தோணுறத விட நம்ம அப்பிடிக்கட்டுனா நம்மளையும்எங்கபொம்பளப்புள்ளைன்னுசொல்லீருவாங்களோன்னுபயத்துல கட்ட மாட்டேங்குறயா..” என்றான்,,

“கூடுமான வரைக்கும் வாட்ச் செயின கழட்டப் பாரு, அது என்னமோ மாட்டுக்கு கட்டுனது போல அசிங்கமா இருக்கு,அப்புறம் வலது கையில வாட்ச் கட்டாத ,எடது கையில கட்டு” என்றான், அழுத்தி/

அப்பொழுது அவன் அழுத்தியதற்கான காரணம் தெரியவில்லை,ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது, உண்மைதான் அவன் சொன்னது என்பது/

அவன் ஒரு இடது சாரி சிந்தனையாளன் என்பது மிக நீண்ட நாள்வரை இவனுக்குத் தெரியாது,ஒரே நிறுவனத்தின் வேறு வேறு கிளைகளில் பணி புரிகிறார்கள் என்பது தவிர்த்து அவர்களுக்குள்ளாக வேறெந்த பழக்கமும் இல்லை.

பரஸ்பரம் பிடிபட்டுப்போன மனது, பிடித்துப் போன பழக்க வழக்கங்கள்,மிகை மீறா நட்பு,தோள் தட்டல்,தோழமை பாராட்டுதல், வியந்தோதல்,,,, என இவர்க ளுக்குள் பிடிபட்டுப்போன ஈர முடிச்சுகள்தான் அவர்கள் இருவரது நட்பையும் இறுக்கி வைத்தது எனலாம்.

“ஏண்டா இவ்வளவு சாப்டா பழகுற, பேசுற,சிரிக்கிற ,வெளையாடுற,என்னைய போல சகமனுசங்க கிட்ட சாதாரணமா பேசுற,,,, இப்பிடி இருக்குற ஒனக்குள்ள ஆழமா ஒரு அரசியல் சிந்தனை இருக்குன்னு ஒரு இம்மி அளவுக்குக் கூட வெளியிலதெரியலையே,பொதுவாஇப்பிடித்தான்இருப்பையா,இல்லைஎன்னிட்ட மட்டும் வெளிக் காமிச்சிக்கிடாம இருந்துக்கிட்டயா,,,,?என இவன் கேட்ட போது ”இது என்னடா பெரிய கூத்தா இருக்கு,நான் இந்த மாதிரி ஒரு ஆளுன்னு கழுத்துல ஒரு போர்டு கட்டி தொங்க போட்டுக்கிட்டு திரியிரதா, ஏங் சிந்தனை எனக்குள்ள,அத ஒன்னையப்போல தானா உணர்ந்து தெரிஞ்சிக் கிறவுங்க கொஞ்சம்/ தெரிஞ்சிக்கிறாதவுங்க கம்மி, அப்பிடி தெரியாதவுங்க நேரா வந்து மோதி மூஞ்சி ஒடைபட்டுப் போயிருக்குறாங்க. அது போல ஒனக்கு ஏற்படல,அந்த வகையில நீ கொஞ்சம் அதிர்ஷ்டசாலி/ ஒனக்குப் பிடிச்சிருந்தாஎன்னையபாலோப்பண்ணுஇல்லைண்ணாவேணாம்விடு”என்பான் சாமிநாதன்,

அவன் சொன்ன அன்றிலிருந்து இன்று வரை அவனை பாலோ செய்பவனாகி றான்,

வார்போட்டகடிகாரம் கட்டிய நாளில் உணர்ந்தான் அதுஇருந்தது என/ நன்றாக வாட்ச்க் கடை பாய்தான் சொன்னார் ,”வேணாம் சார் ஒங்களுக்கு பிரவ்ன் கலர் ஸ்ட்ராப் ஒத்து வராது கறுப்புக்கலர்தான் நல்லாயிருக்கும்” என அவராய் வம்பு பண்ணி கட்டி விட்டார்,

சின்ன வயதில் ஜவ்வு மிட்டாய் விற்றவர் வம்பு பண்ணி கையில் ரோஸ் கலர் மிட்டாயை வாட்சாய் கட்டி விட்டதை பாயிடம் சொன்ன போது கட கடகடவென சிரித்தார்,

அது ஒரு காலம் சார்,இனிம அப்பிடி ஒன்னெல்லாம் தவம் இருந்தாலும் கெடைக்காது, நம்ம அப்பா தாத்தா காலங்கள்ல இருந்ததுல கொஞ்சத்தை யாவது நம்மகிட்ட கடத்திவிட முடிஞ்சது,இப்ப நம்ம சந்ததிகளுக்கு எதைக் கடத்தி விடப் போறோமுன்னு தெரியல,கடத்தி விடுறதுக்கு ஒண்ணும் பாக்கியிருக்காது போலயிருக்கு,எல்லாம் அப்பப்ப என்ன நடப்போ அது படி நடந்துக்குற வேண்டியதுதா ஆயிரும் போலயிருக்கு,அப்பிடி இருக்குறதுதான் அவுங்களுக்கும் சாஸ்வதம் ஆகிப் போகும் போல இருக்கு”. என்றார்,

வாஸ்தவம் உறைத்த அவரது சொல்லில் எஞ்சிக் கழிந்தது எதுவுமாய் இல்லை. அவர் வார் போட்டுக்கொடுத்த கடிகாரத்தை தொட மறந்து போன இந்த ஒரு வருடமாய் மணி பார்ப்பதெல்லாம் செல்போனில்தான், திறந்தால் பேச்சுஅல்லது மணி பார்ப்பது என்கிற உபயோகத்திற்காய் மட்டும் ஆகிப் போனது.

யானையை வளர்த்து பிச்சை எடுக்க விட்டது போல் ஆகிப் போனது. ஒன்பது பத்திலிருந்து ஒன்பதே காலுக்குள்ளாய் பஸ் வரும், அதற்குள்ளாய் போய் விட்டால் கொஞ்சம் பெரக்குப் பார்க்கலாம். கொஞ்சம் வேடிக்கையும்,கூடவே ஒரு ஏதோ ஒரு டீக்கடையிலிருந்து காற்றின் திசையில் கலந்து வருகிற இளையராஜாவின் இசை,

இளைராஜாவின் இசைக்கு செவிசாய்கிற அதே நேரம் கண்ணதாசன் வரிக ளில் அமிழ்ந்து போகாமல் இருக்க முடியவில்லை, விடுமுறை நாளின் ஒரு இளங்காலைப் பொழுதில் வந்து விழிப்பிற்கு தடை போட மனமில்லாமல் டீக் கடையில் போய் நின்ற வேளையில் உள் நுழைந்த கண்ணதாசன் கொஞ்சம் மனம்மிளக்கி விட்டார்தான்,

”வேர் என நீஇருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்” என்கிற வரிகள் டீயின்எண்ணிக்கையைஇரண்டாக்கிஉன்கண்ணில்நீர்வழிந்தாலையும்,உன்னை மணந்ததனால் வாழ்க்கை ஒளிமயமாயமானதடி” வரிகளையும் சேர்த்துக் கிளறி அர்த்தப்படுத்தி விடுகிறதாக்குறது,

போன மாதத்தின் ஒரு பகல் பொழுதில் சாப்பிட்டு விட்டு வழக்கமாக அரட்டை யுடன் இருந்த ஒரு மதியப் பொழுதில் மனைவியின்மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தவன் சடுயிதில் கண்களில் நீர் வைத்துக் கொள்கிறான்.

என்னவெனத்தெரியவில்லை.இப்பொழுதெல்லாம்அப்படித்தான்ஆகிப்போகிறது. ஏதாவது ஒன்றை பார்த்துவிட்டாலோ அல்லது கேட்டு விட்டாலோ படக்கென கண்ணீர் துளிர்த்து விடுகிறது,

நல்ல பாடல்,நல்ல சினிமா,நல்ல காட்சி,நல்ல படிப்பு என இதில் எதுவும் விதி விலகில்லை என ஆகிப்போனது.

சென்ற வாரத்தின் காலை வேளை,வழக்கமாக செல்கிற பஸ்ஸில் சென்று கொண்டிருந்தான், இளையராஜாவின் இசை பஸ் முழுவதுமாய் /

முதல்வார்த்தையில் ஆரம்பித்த பாடல் முற்றுப்புள்ளி பெறப் போகிற சமய மாய் உயிர் பெற்ற இசை பிரவாகமெடுத்த பொழுதில் கண்களில் நீர் துளிர் த்து விடுகிறதுதான் சட்டென/

பச்சைக்கலரில் சேலை கட்டியிருந்தாள், அதற்கு மேட்சிங்கில் சட்டை,பூ வைத்திருந்தாள்.நெற்றிக்கு இட்டிருந்தாள்,திருமண தினத்தன்று பார்த்ததை விட இப்போதுதான் அழகுபட்டுத் தெரிகிறாள்.

ரசிக்கிற மனதும் நேரமும் இப்போதுதான் வாய்த்திருக்கிறது போலிருக்கிறது.

உண்மைதான்.வருடமெல்லாம் ஓடித்திரிந்த ஓட்டம் ஏதாவது ஒரு புள்ளியில் நிலை கொள்கிற பொழுது ஆசுவாசம் கொண்ட மனது கொஞ்சம் ஓய்வு கொள்ளும் போது இப்படித்தான் ஆகித்தெரிகிறது,

ஏறிப் போன வயதும் வாய்த்துப்போன மனதும் இளகிப்போகிற நேரங்களில் இது போல் ஆகும் போலும்,

பச்சைக்கலர் சேலையும் ஜாக்கெட்டும் நெற்றிக்கு இட்டிருந்த திரு நீரும் குங்குமமும்,தலைக்கு வகிடெடுத்திருந்த இடத்தில் இழுத்திருந்த செந்தூர்க்க மும் கண்களில் நீரை வரவழைக்குமா என்ன,? மாறாக கண்ணதாசன் வரிக ளும் இளகிப்போன மனதும்தான் காரணமாகித் தெரிகிறது,

என்ன ஏன் இப்பிடி திடீர்ன்னு,,?என்னாச்சி,,? இந்நேரம் வரைக்கும் நல்லா ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டுதானஇருந்தீங்க,வர வர ரொம்ப உணர்ச்சி வசப் படுறீங்க போலயிருக்கு, கண்ணதாசன் வரிகள் எனக்கும் கேட்டுச்சி,என்றவள் எனக்கும்அப்பிடித்தான்இருக்குஎன்ன செய்ய,,? தாங்கிக்கிட்டுத்தான் ஓடுறேன் என்றாள்,

இல்லம்மா முன்ன மாதிரி இல்ல, இப்பயெல்லாம் கொஞ்சம் தளுதளுத்துப் போகுதுமனசு,ஏறிப்போனவயசு,கல்யாணமாகிப்போயிட்டபுள்ளைங்க,நெருங்கி வர்றரிட்டையர் மெண்டு எல்லாம் இப்பிடி யோசிக்க வைக்குது, என்னதான் வெளிய சுத்திக்கிட்டு மனச கல்லாகிட்டு திரிஞ்சாலும் கூட வீட்டுக்குள்ள வந்ததும் வீடு கொஞ்சம் இருக்கத்த கொண்டு வந்துருதுதா,

எத்தனைபாக்குறோம்,எத்தனை கேள்விப்படுறோம்,எத்தனைய படிக்கிறோம்,,, எல்லாத்துல ஏதாவது ஒண்ணு நமக்கும் நடந்து போகாதான்னு நம்புற மனுச மனசுதான,நம்புறது சாஸ்வதாம இல்லை தற்செயலாங்குறது அப்புறமா இருந்தாலும் கூட அந்த நேரத்து நடப்பு நெசந்தானே,,,,?

பித்துப்பிடிச்சமனசுஒரு வயசுக்கு மேல இப்பிடித்தான் யோசிக்குது உச்சாணிக் கொம்புலநின்னுக்கிட்டு.அதுக்குக் காரணம்சூழ்நிலையாகிப்போகுது, அந்த சூழ் நிலை சுய பச்சாதபத்த கொண்டு வரும் போது இப்பிடித்தான் ஆகிப்போகுது,

”பொதுவாஇதெல்லாம் இல்லாட்டிக் கூட பொண்டாட்டி மடியில படுத்துக் கிட்டு இந்த வயசுல அழுகுற கொடுப்பினை எத்தனைபேருக்கு வாய்ச்சிருக்கு, இதுக் காகவேகண்ணதாசன் வரிகள அடிக்கடி கேக்கணும் போல இருக்கும், கேட்டுக் கிட்டு அப்பிடியே எங்கிட்டாவது கைகோர்த்து காலாறா நடந்து திரியணும் போல தோணுது, பறந்து திரியிற பறவைங்க ,நெறஞ்சி தெரியிற மரங்க அதுகளுக்கு ஊடா ஊடாடித் தெரியிற புழுப் பூச்சிங்க, இன்னும் இன்னு மான மத்த மத்த ஜீவ ராசிங்கள விசாரிச்சிக்கிட்டு நாங்களும் இருக்கோம் கண்ணதாசன்வரிகளகேட்டுக்கிட்டுன்னு சொல்லீட்டு வரணுமுன்னு தோனுற மனச கட்டுப்படுத்த முடியலதான்,

இன்னும் சொல்லப்போனா கட்டுப்படுத்த வேணாமுன்னு கூடத் தோணுது, அப்பிடியே அதே மனோ நிலையில சுகிச்சித் திரியலாமுன்னு கனவு காணுது மனசு.அப்பிடியான கனவும் தப்பில்லைன்னு ஆகிப்போக இப்பிடியே இருக்கம்,

”உன்னைக் கரம் பிடித்தேன்,வாழ்க்கை ஒளி மயமானதடி,காலச்சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய்,அதில் என் விம்மல் தணியுமடி,,,,உன் கண்ணில் நீ வழிந்தால்,,,,,’

போதும் ரொம்ப யெளகிப்போகாதீங்க,நல்லாயில்ல,விடுங்க நமக்கு மட்டுமா இந்த வயசும் யெளகளும்,எல்லாருக்கும்தான,அத ஏன் பெரிசா நெனைச்சி ரொம்ப உணர்ச்சி வசபட்டுக்கிட்டும் தளுதளுத்துக்கிட்டும் இருக்கீங்க,எதுக்கு என்றவளின் குரலை தட்டி விட்டு விட்டவனாய் இல்ல அப்பிடி வர்றத அணை கட்டி தடுக்காம விடுறதுல தப்பில்லையில்ல என்றவனாய் தொடர் கிறான்.

சார் என்ன சார் டீயக் குடிக்காம,,?பாதி கிளாஸோட கையில வச்சிருக்கு றீங்களே,,,,எங்க அப்பிடியே கண்ணதாசன் கூட்டுட்டுக்கிட்டு போறாரா,ஹூம் அறுபது வயச நெருங்குற தம்பதிகளுக்குப்பூரா மனசலவுள இது ஒரு பெரும் பிரச்சனையா இருக்கு சார்,அது ஒண்ணும் பெரிய கொல பாதக குத்தமில்ல, இந்தா நான் இருக்கேன்ல்ல இப்பிடித்தான் அல்லாடிக்கிட்டுத் திரியிறேன், ஆனா எனக்கு கண்ணதாசன் வரிகளும் தெரியாது ,இளையராஜா இசையும் தெரியாது.

ஆனா அது கேட்டு மனசு யெளகிப் போறவுங்களப் பத்தி நல்லாத் தெரியும்.

நானும் யெளகிப்போறவனா இருக்கேன் சமயத்துல,,,,/

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்...

vimalanperali said...

நன்றியும் அன்பும்!

Yarlpavanan said...

கதை அருமை
தொடருங்க

vimalanperali said...

கண்டிப்பாக!

vimalanperali said...

நன்றியும் பிரியமும்!