12 Sep 2019

தாங்கு கம்பி,,,,,

எதிர் பார்க்கிற நேரத்தில் எதிர்பார்த்த பேருந்து வரவில்லை எனும் போது ஏற்படுகிற ஏமாற்றம் எல்லோரையும் போலவே இவனுள்ளுமாய்./

எல்லோரும் விதை கொண்ட மண்ணில் இவனும் ஒருவனாய்த்தான்.

இருக்கிற நூறில் நீயும் ஒருவன்,

உனக்கடுத்து நூறல்ல,,,,என்பார் ரத்தினம்/

தனக்கென ஒரு பாதை,தான்தான் எல்லாம்,தான் அம்புக்குறியிடுவதுதான் தனக்கான வாழ்க்கை,,/

ஏற்படுகிற ஏமாற்றங்களும் அவமானங்களும் மனதினை இறுக்கியும் செதுக்கி யும் பண்படுத்தும் என்பார்கள்,

வெள்ளைநிறத்தில் பூ வைத்த பேருந்து,என்னபூஎனத்தெரியவில்லை ஆனால் பார்க்கஅழகாகஇருக்கிறது.ஊதாக்கலரில்வரைந்திருந்தார்கள். இதழ்கள் அகல கைகாட்டி விரித்திருக்க நட்டு வைத்த வெள்ளைப் பந்து ஒன்று திசை எங்கும் செல்லும் காற்றின் பக்கங்களில் நடமிட்டுத் தெரிவதாய்/

காற்றின் திசைக்கு தலையாட்டி வேகமெடுத்துச் செல்கிற பேருந்தின் அசை வில் பூக்களின் இதழ்கள் கழண்டு பூமியில் விழுந்து விடுமோ என்கிற அச்சம் பூவையும் ,பஸ்ஸையும் பார்க்கிற நேரம் தோணாமல் இல்லை,

படர் கொடியின் அடர்வுகள் பூத்த மென் மனதில் பூவென்ன அது அற்ற வெற்றுச்செடி என்ன எல்லாம் ஒன்றெனவே ஆகித் தெரிவதாய்/

கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான் பூவை வைத்தவருக்கும் பூவின் படம் வரைந்தவருக்குமாய்/

வாடிப்போகா மென் பூ ஒன்று தரை விட்டெழுந்து மெல்ல நடை பயின்று போய் யாரினது எனத் தெரியாமல் யாரோ ஒருவரின் தலையில் அமர்ந்து மென் வாடை வீசிக்கொண்டிருப்பது போல் பயணிகள் பலரை ஏற்றிக்கொண்டு விரைவு காட்டிச்சென்று கொண்டிருக்கிற பேருந்து எப்பொழுதும் போல் இன்றும்போய் விட்டதா என்னவெனத் தெரியவில்லை.

அது செல்ல வேண்டிய நேரத்தை வைத்துப் பார்த்தால் இந்நேரத்திற்குப் போயிருக்க வேண்டும்,

ஆனால் போய்விட்டதே என நினைக்கிற சமயத்தில் வந்து நிற்கும்,கம்பீரம் காட்டி/ என்ன இது என்றால் சிரிப்பார் கண்டக்டர்,

”என்னசெய்ய சார் நாறப்பொழப்பு சார் எங்க பொழப்பு,எங்க வண்டி டயத்துக்கு கால் மணி நேரத்துக்கு முன்னாடி எடுக்க வேண்டிய பஸ்ஸ எடுக்க மாட் டேங்குறான்,அவன்,ஆள்கஏறுறவரைக்குமா ”டுர் டுர்ன்னு” பஸ்டாண்டு வாசல் வரைக்குமா வண்டிய உருட்டிக்கிட்டே போறான்,அப்புறமா டைம் கீப்பர் வந்து கொஞ்சம் சுண்டி பேசுனதுக்கப்புறம் வண்டிய எடுக்குறான், இதுலயே அஞ்சி நிமிஷத்துக்கு மேலாகிப் போகுது.இந்த அஞ்சி நிமிஷத்துல எங்க வண்டிக்கு வரவேண்டிய பேஷஞ்சர்ஸ் அந்த வண்டியில ஏறிர்றாங்க, எங்களுக்கு வேற வழி இல்ல,அடுத்து பேஷஞ்சர்ஸ் ஏறுற வரைக்கும் காத்தி ருந்துதான் வண்டிய எடுத்துட்டு வர வேண்டியதா இருக்கு.அதுக்குள்ள டைம் கீப்பரோட நச்சு வேற வண்டிய எடு வண்டிய எடுன்னு,,, அவருகும் தாக்காட்டிட்டு பேஷஞ்சர்ஸையும் ஏத்திக்கிட்டு வேற வழியில்லாம அவரோட மல்லு க்கும் நின்னுக்கிட்டு வர வேண்டியதாஇருக்கு,அதுலஆகிப்போற லேட்டுதான்,

”அந்த வண்டிக்கு அஞ்சி நிமிஷம் டைம் குடுத்தயில்ல, லேட்டா எடுக்க, அது போல எங்களுக்கும் குடுண்ணு கேட்டு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கும் போதேஅஞ்சிநிமிஷத்துக்குமேலாகிப்போகும், அப்பிடியே நாங்களும் வண்டிய எடுத்துக்கிட்டு வந்துருவம்.

”ஏண்ணே இப்பிடிப்பண்ணுறீங்க,அந்தந்த வண்டிகள அந்தந்த டயத்துக்கு எடுக் கச் சொல்லி கண்டிப்பா சொல்ல வேண்டியதுதான,எதுக்குப்போயிட்டு அஞ்சி நிமிஷம் லேட்ப்பண்ணி அனுப்பி,அது லேட்டானதுனால நாங்க லேட்டா எடுத்து எதுக்கு இதெல்லாமுன்னு கேட்டா அவரு சொல்லுவாரு,

“தம்பி நீயி மோட்டாருக்கு இப்ப வந்த ஆளு ,நான் அருப்புக்கோட்டைக்கு ஒண்ணார்ரூவா டிக்கெட்டு கிழிச்ச காலத்துல இருந்தே பஸ்ஸீல ஓடுன ஆளு,

அப்பயெல்லாம் பஸ்டாண்டு சிறிசு,அந்தா அந்த தெக்குப்பக்க முக்குலதான் பஸ்ஸீக நிக்கும், நான் பஸ்ஸீக்கு கீழ நின்னு அருப்போட்ட ஒண்ணார் ரூவா,அருப்போட்டாஒண்ணார்ரூவான்னு சத்தம் போட்டுக்கிட்டே இருப்பேன், பஸ்ஸீ டயம் எடுத்து பஸ்டாண்டு வாசலக்கடக்குற வரைக்கும் சத்தம் போட்டுக்கிட்டே போவேன்,

“பஸ்ஏற முடியாத பெரிசுங்க,சின்னப்புள்ளைங்களயும்,லக்கேஜ் எதுனா வந்துச் சின்னா நாந்தான் ஏத்தி விடுவேன்,நாளெல்லாம் நின்னுக்கிட்டே இருக்கணும் .ஒடம்பெல்லாம் வலிக்கும்,மொதல்ல இடுப்புல ஆரம்பிக்கிற வலி அப்பிடியே மெல்ல மெல்ல பரவி ஒடம்பு பூரா உக்காந்துக்குரும் பாத்துக்க, நேரமாக நேரமாக வலி அப்பிடி கொண்ணு எடுத்துரும் பாத்துக்க அதுக்கு ஆத்த மாட் டாம அப்பிடியே ஒரு டீயக்குடிக்க,ரெண்டு வடைகள சாப்புட்டுக்குறன்னு பொழுது ஓடிக்கிரும் ,இதுக்கு ஆத்தமாட்டமத்தான் பஸ்ஸீல கொஞ்ச நா செக்கரா ஓடுனேன்,இல்ல நீயி டயம் கீப்பராவே இரு நீ செக்கரா வந்ததுக்கப் புறம் பஸ்ஸீல ஏறுற டிக்கெட்டு கொறைஞ்சி போச்சின்னு திரும்பவுமா டயம் கீப்பரா நிக்க வச்சிட்டாங்க,என்ன செய்ய பின்னே,பழைய படியும் சத்தம் போட்டு ஆட்கள ஏத்தி விட லக்கேஜிகள தூக்கி விடண்ணு போயிருக்கு காலம்,

நாங்க இருந்த நேரத்துல இருந்த ஈவுசாவும்,இறக்க குணமும் ஒங்கள மாதிரி பயல்ககிட்ட இல்லடா,பஸ் டாண்டுக்குள்ள நிக்கிற டயம் கீப்பர்ங்க நாங்க என்னதான் நாறப்பேச்சு பேசி சண்டை போட்டுக்கிட்டாலும் ஒருத்தருக்கொரு த்தரு விட்டுக்குடுக்காம இருப்போம்,ஏதாவது பிரச்சனையின்னு வந்தா கடைசி வரைக்கும் நின்னு பாத்துருவம்,

“அப்பிடித்தான்இன்னொருடயம் கீப்பரு, அவரு அவங்க பஸ்ஸ சத்தம் குடுத்து வெளியேத்துற நேரமா ஓட்டமா ஓடி வந்த ஆளு பஸ்ஸ புடிக்க முடியாம விட்டுட்டான்,அவன்ஓடிவாரதுபஸ்டாண்டுமெயின்வாசலுக்குபக்கமா,பஸ்ஸீ பஸ்டாண்டு பொற வாசல கடக்கப்போகுது, காலை யில நேரம் பஸ்டாண்டுக் குள்ள நின்னுக்கிட்டு இருக்குற கூட்டத்த கடந்து அவன் நீந்து வாரதுக்குள்ள பஸ்ஸீ போயிருச்சி,

”ஓடி வந்த வேகத்துல மூச்சு வாங்குனவன் நேரா செக்கருகிட்ட சண்டைக்கிப் போயிட்டான்,நான்வாறதுக்கு முன்னாடிஎப்பிடிவண்டிய எடுக்கலாமுன்னு, ஏற் கனவே வண்டி அஞ்சி நிமிஷம் லேட்டு இதுல ஒவ்வொருத்தரா வரக்காத் திருந்து பஸ்ஸ எடுத்தா எந்நேரம் பஸ்ஸீ போக வேண்டிய யெடத்துக்குப் போறது,

இது போக அடுத்து பின்னாடியே காத்து இருக்குற வண்டி டயம் எடுக்கணுமு ன்னுசொன்னாகேக்கமாட்டேங்குறான்,பேசுனதையேபேசிக்கிட்டு இருக்கானே ஒழிய சத்தம் போடுறத விட மாட்டேங்குறான்,பேசுன யெடம் பஸ்டாண்டு ஆச்சா ஒடனே என்னையப் போல டயம் கீப்பர்க கூடிட்டம்,

“என்ன ஏதுன்னு போற நேரம் சத்தம் போட்டவன் படக்குன்னு டயம் கீப்பரு சட்டையப்புட்டிட்டான்,அவரு வயசான வராச்சா,சட்டயப்புடிச்ச வேகத்துக்கு தள்ளமாடிட்டாரு,ஒடம்பெல்லாம் வேர்த்துருச்சி, கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி.

“எனக்குன்னா கொஞ்சம் சங்கடமாக்கூடப் போச்சி. எங்கிருந்து வந்தாருன்னு தெரியல ,வேகமா வந்த டிரைவரு ஒருத்தரு,

”சத்தம்போட்டு அவருசட்டயப்புடிச்சவன சத்துன்னு அடிச்சிப்புட்டாரு, ஏண்டா, யாருன்னு நெனைச்ச அவர, அவரு இந்த பஸ்டாண்டுக்கே காவல் தெய்வம் மாதிரிடா, எங்க கூடப்பொறக்காத அண்ணண்டா அவரு,அவரு மேலயா கைய வச்ச,கையதுண்டா எடுத்துருவம்”,,,,,,,,,,”ஒழுக்கமா ஓடிப் போயிரு நாயேன்னு சத்தம் போட்ட ஒடனே அவர விட்டுட்டு டிரைவரப் புடிச்சிக்கிட்டான்.

“நான் யாரு தெரியுமா வைக்குமான்னு அலப்பரைய குடுக்க ஆரம்பிச்சுட்டான், அவன் ஒரு விருதா போலயிருக்கு,ஒடனே கூட்டாளிகளுக்கு போன் பண்ணி வரச் சொல்லீட்டான்.,வந்தவிங்க நாலைஞ்சி பேரு இருக்கும்.வந்த வேகத்துல டிரைவர் மேல பாய் ஆரம்பிச்சிட்டாங்க,எங்களுக்குன்னா பயம் ஆகிப்போச்சி,

“நாங்க டயம் கீப்பரு நிக்குறது ரெண்டு பேருதான் நிக்கிறம்,அவரு டிரைவரு ஒரு ஆளு .இவிங்க நாலைஞ்சி பேரு,எல்லாம் யெளவட்டப்பயலுக,என செய் யிறதுன்னுநடுக்கமெடுக்கஆரம்பிச்சுருச்சி,பஸ்டாண்டுக்குள்ளஇருக்குறபோலீஸ் வந்து தடுத்துப்பாக்குறாங்க,கேக்க மாட்டேங்குறாங்க,லேடி போலீஸ் பாவம் அவுங்களும் ஒரு லெவலுக்கு மேல ஒண்ணும் செய்ய முடியல, சமாதானம் பண்ணிப்பாத்து அலுத்துப்போயி ஒதுங்கிப் போயிட்டாங்க,

”எங்கயிருந்துதான் வந்தாங்களே அத்தனை டிரைவருங்க, வண்டிய நிறுத்திப் போட்டுட்டு வந்து கூடிட்டாங்க,என்னடா எங்க டயம் கீப்பர் மேலயும் டிரைவர் மேலயும் கைய வச்சிட்டு இங்கயிருந்து போயிருவயாடா நீயின்னு வச்சி மெரட்டி பேசுனதுக்கப்புறமும்,அடிக்கப்போனதுக்கு பின்னாடியுமா ஒன்னைய வச்சிக்கிரேண்டா, பாத்துக்கிறேண்டான்னு போனாங்கெ,

“இதுக்கு முன்னாடி பஸ்டாண்டு அப்பிடி ஒரு ஒற்றுமையப் பாத்தது இல்ல, எல்லாரும் கொஞ்ச நேரம் அப்பிடிடியே ஒறைஞ்சி போயி நின்னுட்டாங்க,இத குறுகுறுன்னு பாத்துக்கிட்டு இருந்த டீகடைக்காரருஅங்க இருக்குற அத்தன பேருக்கும் டீப்போட்டு கொண்டாத்துட் டாரு, ரொம்ப நெகிழ்ந்து போனவரா,/

அண்ணே இதுக்கு முன்னாடி நான் இது போல பாத்ததில்லண்ணே, இத்தனை க்கும் இப்ப கூடியிருக்குற எல்லாரும் ஒண்ணுக்கொண்ணு அவ்வளவு அந்நி யோன்யமா பேசிப்பழகி நானு இது நாள் வரைக்கும் பாத்ததில்ல,நீங்க வாட்டு க்கு வருவீங்க,நீங்க வாட்டுக்கு டீக்குடிப்பீங்க, நீங்க வாட்டுக்கு வண்டிய எடுத்துட்டுக்கெளம்பீருவீங்க,நான் கூட நெனைச்சிக்கிருவேன்,

“என்னடா இவங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணு கலந்துக்காம இப்பிடி தனித்தனி தீவா இருக்காங்களேன்னு,ஆனா அது தப்புன்னு இன்னைக்கித்தான் தெரிஞ்சி ச்சி,

நீங்களெல்லாம் அதிக அளவு ஒன்னோட ஒன்னு பேசிப்பழகாம இருந்துக் கிட்டாக்கூட ஒங்களுக்குள்ள ஒற்றுமைஇழை ஓடிக்கிட்டே இருந்துருக்குண் ணே,அதுதான் இப்பிடி ஒண்ணா கைகோர்த்து களத்துல யெறக்கி விட்டு ருக்கு,

“மொதல்லடீயச்சாப்புடுங்கண்ணே,ஏங்சப்பளையாஇருக்கட்டும்,அம்மாபோலீஸ் -காரம்மா நீங்களும் வாங்க டீ சாப்புடுங்க,இந்த நிமிஷம் சொல்றேன் சார் நாமல்லாம் ஒரே குடும்பமுன்னு தோணுது இப்ப.,ஒங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா என்னைபோல டீக்கடைக்காரங்க எல்லாரையும் ஒங்க கூட சேத்துக்கங்கன்னஒடனேடிரைவர்கண்டக்டரெல்லாம்சிரிக்கஆரம்பிச்சிட்டாங்க,

‘ஏன் சிரிக்கிறீங்கன்னு டீக்கடைக்காரர் கேட்ட ஒடனே நாங்க எப்ப ஒங்கள விட்டு வெலகிப் போனோம்,இப்ப சேக்குறதுக்கு/ஞாபகமிருக்கா ஒங்களுக்கு பஸ்டாண்டுலயெடஞ்சலாஇருக்குண்ணுடீக்கடைகளப்பூராம்எடுக்கச்சொன்ன ப்ப நாங்க டிரைவர் கண்டக்டர்ங்க டயம் கீப்பர் அத்தனை பேரும் ஒங்க கூட சேந்து நின்னு கடைகள எடுக்கக்கூடாது போராடுனமே ஞாபகமிருக்கான்னு சொன்ன டிரைவரை நோக்கி டீக்கடைகாரர் சிரிச்ச சிரிப்பு இன்னைக்கு வரைக்கும் பஸ்டண்டுல நெறைஞ்சி நிக்குது” என்றார், கண்டக்டர்,

எல்லோரிலும் இவனும் ஒருவன்தானே என்பதை எப்போதும் இவன் மறந்து போனதும்இல்லை,ஞாபகப்படுத்திக்கொள்ள விடுபட்டதும்இல்லை.அட போங் கடா டேய்,,, மறக்குறது தப்பு,மறக்காதது நல்லது,,,ராமையா அண்ணந்தான் சொல்வார், இருக்குற அத்தனை பேர்ல நம்மளும் ஒரு ஆளுன்னு நெனைக்க ணும், அத விட்டுட்டுநம்மளத்தாண்டிதான்ஆயிரம் பேருன்னு நெனைச்சமுன் னா சுருங்கிப் போவம்.இல்ல, அடையாள மத்துப்போயிருவம் என்பார்,

எதையும் கொஞ்சம் நுட்பமாக பார்க்கக்கூடியவர்,நுட்பமான தன் பார்வையின் மூலம் பிறரை தெளிய வைக்கக்கூடிய நபர்,ஆனால் தான் பார்க்கிற நுட்பத் தையும் ,அதன் நன்மையையும் சொல்லி புரிய வைக்கக்க தெரியாதவர்.

மூத்தவள்தான் பஸ் நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டாள், கே.ஆர் நகர் பஸ்டாப்,

உள்ளபடிக்குச் சொல்லப் போனால் அது பஸ்டாப்பே கிடையாது.பஸ்டாப்பாய் ஆகி விட்டார்கள்,அந்த ஏரியாவாசிகள் எங்கு போய் பஸ்ஸேற வேண்டுமா னால் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக வேண்டும்,அதுதவிர்க்கவே அந்த எரியா வாசிகள் தற்காலிகமாய் நின்று பஸ் ஏறிய இடம் இப்பொழுது நிரந்தர பஸ் டாப்பாய் ஆகிப் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்,

இறக்கி விட்டு விட்டு போகும் பொழுது மூத்தவளிடம் கேட்கிறான்,ஏதாவது வேணுமா வடை, கிடை வாங்கீட்டுப்போறியா எனக்கேட்க ,இல்லை வேண் டாம், என்கிறாள்.

வழக்கமாய் இவன் குடிக்கிற கடைதான்,பஸ் வர இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது,

இவனைப்பார்த்ததும்டீக்கடைக்காரர் உதிர்த்த மென் சிரிப்பு அழகாக இருந்தது,

அவரது மூலதனமே சிரிப்புத்தான் போலும்.

பாய்லரிலிருந்து வந்த புகை இடை விடாது பட்டுப்படர்ந்திருந்தது,

எங்கிருந்தோ காற்றின் திசையில் கலந்து வந்த இளையராஜாவின் பாடல் மனதுக்கு இதமளித்ததாய்/

டீக்கடையின் அருகில் நின்ற வேப்ப மரத்திலிருந்து பறந்திறங்கிய பறவைகள் இரண்டு தான் தின்று கொண்டிருந்த வேப்பம்பழத்தின் கொட்டையை துப்பி விட்டு அருகில் வேலிக்க்காத்தான் முள் வெளியிலிருந்து காய்ந்து உதிர்ந்து கிடந்த முள் குச்சியை தூக்கிக்கொண்டு பறந்தது.

வழக்கம் போல சாலை சடுதி காட்டி தன் அடையாளங்களுடன் கனரக மற்றும் மித ரக வாகனங்களையும் மனைதர்களையும் சுமந்து கொண்டு,,/

கையில் வைத்திருந்த டீயைக் குடித்து முடிக்கபோகிற நேரமாய் தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது.

நேற்று வந்த டைம் கீப்பர் இன்றும் கண்டக்டருடன் வரலாம்/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வுகள் கண் முன்னே... அருமை...

vimalanperali said...

அன்பும் பிரியமும்!

kowsy said...

கதை சொல்லிக் கொண்டு போகும் விதம் அருமை. நிகழ்வுகளை நேரே கொண்டு வந்து நிறுத்தியுள்ளீர்கள்

vimalanperali said...

நன்றி மேடம்!

Related Posts Plugin for WordPress, Blogger...