20 Mar 2020

விட்ட வேர்களும்,துளிர்த்த இலைகளும்,,,,,

அடர்ந்து பூத்துகிடக்கிறது சாலை.வலமும் இடமுமாய் விரித்துவிடப்பட்ட மண் வெளிக்கு நடுவிலாய் கீறி விடப்பட்டு நீண்டோடிய சாலையின் ஆரம்ப மும் முடிவும் எது எனத்தெரியவில்லை, 

இவன் முக்கு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறான் குடித்த டீக்கும் கடித்த வடைக்குமாய் காசு கொடுத்து விட்டு/ 

டீக்கடை,பழக்கடை,கரும்பு ஜீஸ் கடை,ஆட்டுக்கால் சூப்புக்கடை, வெங் காயம் விற்கிற மினி வேன்,சின்னதும் பெரியதுமான ஹோட்டல்கள்,, மோட்டார் கடை,பேக் விற்கிற கடை, ஜவுளிக்கடை, இங்கிலீஸ் மருந்துக் கடை,,,என அடுக்கப்பட்டுத் தெரிந்த இரு சாரியிலுமாய் மண் சிரித்து மகிழ்ந்து காண்பிக் கிறதாய்,,,/ 

மகிழ்ந்து சிரித்த மண் பயிர்களையும் தானியம் தவசிகளையும் காண்பிப்ப தை விடுத்து மனிதங்களையும் அவர்தம் மாண்புகளையுமாய் காண்பித்து அடை யாளப் பட்டது, 

விட்ட வேர்களும், துளிர்த்த இலைகளும், பரப்பிய கிளைகளும் பூத்த பூக்களும்,  காய்த்த காய்களும் ,பழுத்த பழங்களும் அது பரப்பிய மணமு மாய் காற்று வெளியெங்குமாய் பறந்து திரிந்த பறவைகளை ஈர்த்தும் தன்னில் காத்துமாய் கூடு கட்டி குஞ்சு பொரித்து வாழ்க்கை நடக்க வாய்ப் பேற்படுத்திக் கொடுத்தாய்,,./ 

கனிந்த காதல் ஒற்றையாய் அற்று சுற்றி வந்து கூட்டையும்,குஞ்சுகளையும் அடையாளப்படுத்தியதன்றி மட்டுமல்லாமல் வான் பறந்தவைகளின் இறகு சாட்சியாய்,,,/ 

வடை கொஞ்சம் சுமாரே,டீ நன்றாக இருந்தது, 

மாஸ்டரே சொல்கிறார்”என்னதான் கை வித்தையை காமிச்சாலுமிண்ணே, இப்ப விக்கிற வெலை வாசிக்கு நல்ல சரக்கா போட்டுக்குடுக்க முடியல, அப்பிடி போட்டுக்குடுக்க முடியாத போது இப்பிடியெல்லாம் ஆகிப் போகுது தான், என்ன செய்ய சொல்லுங்க,மன சாட்சிக்கு விரோதமா தொழில் பண்ணித் தான் ஆக வேண்டியிருக்கு,சுத்தமா நல்லதா போட்டுக் குடுக்கலாமுன்னா இந்த வெலையில விக்க முடியாது, கொறைச்சி விக்கிறதுக்கு மைகணக்குல கியூவுல நிக்கிறாங்க, அப்பிடிங்கும் போது எப்பிடி சொல்லுங்க, என்றவரை ஏறிட்ட போது கொஞ்சம் பாவமாய்த் தெரிந்தார், 

”ஊரே ஒங்கள் சார்ன்னு சொல்லும் போது எனக்கு ஒங்கள அண்ணேன்னு கூப்புடத்தான் புடிக்குது, சார்ல இல்லாத ஒரு நெருக்கம் அண்ணேண்ல இருக்கு, தவிர அப்பிடி கூப்புடையில ஒரு மன நிறைவு இருக்கு சார்” 

”எனக்கு நெனைவு தெரிஞ்சி சின்ன வயசுல எனக்கு அண்ணன் இருந்தாரு சார்,அப்பாவுக்கு அடுத்து அவருதான் வீட்ல,காலேஜி படிச்சாரு, நல்லா படிப்பாரு,ஏதோ ஒரு இதுக்காக கோல்டு மெடலெல்லாம் வாங்குனாரு. அப்ப அது எதுக்குன்னு எனக்குத்தெரியாது.நல்லா படிச்சதுக்குன்னு சொன் னாங்க, படிச்சிக்கிட்டு இருக்குறப்பவே லீவு நாட்கள்ல அப்பாகூட சமை யல் வேலைக்குப் போவாரு, வீட்டுல அரிசி,பருப்பு,அரசலவுலயிருந்து தங்கச்சிக்கு மனசுக்குப் பிடிச்ச கலர்ல தாவணி வாங்கித்தர்றது வரைக்கும் அவருதான் போயி நிப்பாரு, 

அண்ணணோட காலேஜில படிச்ச பொண்ணுக்கு அண்ணன் மேல கொஞ் சம் ஈர்ப்பு,அது காதலா என்னன்னு அவருக்கும் தெரியாது,அந்தப் பொண்ணுக்கும் தெரியாது, 

அப்பா இல்லாத பொண்ணு,கொஞ்சமில்ல ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பம், சேலம்பக்கத்துல ஏதோ ஒரு கிராமம்முன்னு சொன்னாங்க,அது என்னன்னு மனசுல இல்ல இப்ப, 

அவளுக்கு ஏங் அம்மா கூட பேசுறதுன்னா அவ்வளவு விருப்பம், என்னை க்காவது லீவு நாளையில வீட்டுக்கு வருவா,,,வந்தா ஏதோ வேண்டுதல் பொல அம்மாவிட்டுப்பிரிய மாட்டா,அம்மா அவளுக்கு பிடிச்ச மாதிரி என்னத்தை யாவது ஒட்டித்தட்டிப் போட்டு சமைச்சிப் போடுவாங்க, சாப்புட்டு சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டுப் போவா, நாந்தான் கொண்டு போயி விட்டுட்டு வருவேன், ஹாஸ்டல் போற வரைக்கும் நானும் ஒண்ணும் பேசிக்கிற மாட்டேன், அவளும் ஒண்ணும் பேசிக்கிற மாட்டா, ஹாஸ்டல் வாசல்ல யெறக்கி விட்டுட்டு வந்துருவேன்,இவ்வளவுதான் நான் அவளப்பத்தி அறிஞ் சது, 

அம்மாவுக்கு தீராத ஆஸ்துமா,,,,,,,அம்மாவோட வைத்தியச் செலவு, தங்கச் சிக்கு காலேஜி பீஸ்,அண்ணனுக்கு பீஸீ,இது போக குடும்ப பாரம் எல்லாம் சேத்து இழுக்கும் போது கொஞ்சமுல்ல ரொம்பவே செரமாகிப் போகும், இதுல அப்பாவுக்கு சீசன்ல மட்டும்தான வருமானம்,,வேற வழியெ இல்லாம அண்ணன் பெயிண்ட் அடிக்கிற வேலைக்குப்போனாரு. யார புடிச்ச நேரமோ, இல்ல யாரு கண்ணுபட்டுச்சோ வேலைக்குப்போன யெடத்துல சாரத்துல இருந்து கீழ விழுந்து பின் மண்டையில அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போற வழியிலேயே யெறந்துட்டாரு, 

அன்னைக்கி அந்தப்புள்ள வந்து அழுத அழுகையிருக்கே,ஊர் தாங்காது ,அந்தளவுக்கு அழுதாஅண்ணன தூக்குற வரைக்கும் அம்மா பக்கத்துலயிரு ந்து நகராத அவ பச்சை தண்ணி கூட குடிக்கலை அண்ணனை தூக்குற வரைக்கும்,/ 

என்ன செய்ய நடு வீட்டுல ஒடம்ப வச்சிக்கிட்டு எத்தன நாளு துக்கப் பட்டுக் கிட்டு இருக்குறது, 

எல்லாம் முடிஞ்சி பாக்குறேன் ஆளக்காங்கல அவள்,அம்மா கிட்ட கேட்டேன், ஏங் மருமக கல்யாணம் முடிக்காமலேயே துக்கம் சொமந்து போறாடா, மனசு முழுக்க ஏங்மகன சொமந்து அடைகாத்துக்கிட்டு இருந்ததவ அடை ஒடையாம போறாளேடா,”ன்னு ஒரே அழுகை, எனக்கு ன்னா யாரை சமாதானப்படுத்து றதுன்னு தெரியல, அழுதுக்கிட்டு இருக் குற எங்க அம்மாவையா, இல்ல ஏங் அண்ணன் கூட படிச்சவலையா,,,? 

”எனக்கு ஒரு நிமிஷம் என்ன செய்யிறதுன்னு தெரியல,சைக்கிள எடுத்துக் கிட்டு அண்ண படிக்கிற காலேஜ் பாதையில போனேன்,போயிக்கிட்டு இருந்தா ஒத்தையில பக்கத்துல போயி சைக்கிள நிறுத்தீட்டு ஒண்ணும் பேசத் தோணா நின்னுக்கிட்டிருந்தேன், ஓன்னு அழுவுதவ ஏங்கசைக்கிள்ல சாய்ஞ்சிக்கிட்டு எந்திருக்கவே மாட்டேன்னுட்டா,அவளா பேசுறா,அவளா பொலம்புறா,நான் கொஞ்சம் கொஞ்சமா சமாதானப்படுத்தி கூட்டிக்கிட்டு வந்து அங்கயிருந்த கடையில் சாப்புட வச்சி ஹாஸ்டலுக்கு கூட்டிக் கொண்டு போயி விட்டேன். 

”அன்னைக்கி அவ ஏங்கிட்ட பேசுன பேச்சுதான் கடைசி பேச்சா இருந்தது, அன்னைக்கித்தான் அவ பேரு கனகாங்குறைதையும் தெரிஞ்சிக்கிட்டேன், 

என்னதான் மனசுல துக்கம் இருந்தாலும் வயித்துக்குத் தெரியுமா அது. மறு வேலைபசியெடுக்கஆரம்பிச்சிருதுதான,,,? அப்பிடி கட்டாயத்துக்கு வேலைக்கு வந்தவந்தான் நானு,என்றார் மாஸ்டர். 

”கொஞ்ச நாள்ல அவ காலேஜீ படிப்பே வேணாமுன்னு போயிட்டதா அண்ணன் கூட படிச்ச பசங்க ரோட்டுல பாக்கும் போது சொன்னாங்க, 

”இப்ப அவ எங்க இருக்கா,எப்பிடி இருக்கான்னு தெரியல,,,,இந்நேரம் கண்டிப்பா கல்யாணம் ஆகி கொழந்த குட்டின்னு இருப்பா, 

அவர் கொடுத்த டீயை விட அவரது பேச்சு ஸ்டார்ங்காய் இருக்க கிளம்பி விட்டான்,அவ்விடத்தை விட்டு/ 

பூவும் பிஞ்சும் காயும் கனியுமான வேர்விடலின் நிலை கொள்ளலைப் போல சாலை அடைத்து விரைந்து கொண்டிருந்த கனரக மற்றும் இலகு ரக வாகனங்களின் ஊடாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களும் மிதி வண்டிகளும் பாத சாரிகளுமாய் விரைந்து சென்று கொண்டிருந்த சாலையை கடக்க நின்று கொண்டிருக்கிறான், 

பூ அழகு, பிஞ்சழகு, காயழகு, கனியழகு, அதன் மண மழகு,,,, என விரிந்து பரந்திருந்த மண்ணில் நிலை கொண்டிருந்த கடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வியாபாரம் தாங்கியதாய் இருந்தது. 

வலது பக்கத்தை விட இடது பக்கம் கூட்டம் அதிகமாயிருந்தது, இடது பக்கம் நிற்கிற கூட்டத்தை விட வலது பக்கம் சற்று குறைவாகவே தெரிந் தது. 

வலதுகளில் அப்படித்தான் போலும். 

பேருந்தில் ஒலித்த பாடல்களும் இசையில் லயம் விதைத்த இளையராஜா வும் நீண்ட நேரம் மனதை விட்டு அகல மறுத்தவர்களாக,,,/ 

பேருந்தை விட்டு இறங்கியதுமாய் வழக்கமாய் செல்கிற கடையில்தான் டீக்குடித்தான். 

அப்பொழுது வந்தபோனில் நண்பர் பேசினார்,பேசி முடிக்கும் போதுதான் கவனித்தான். செல்போனின் ஓரமாய் செருகி வைக்கப்பட்டிருந்த பஸ் டிக்கெட் அப்படியே இருந்ததை/ 

இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் .சட்டைப் பையில் வைத்தால் பையிலி ருக்கிற வேறு ஏதாவது ஒன்றை எடுக்கும் போது அதனுடன் ஒட்டிக் கொண்டு வந்து தவறி கீழே விழுந்து விடுகிறது, அதனால்தான் இப்படி என மனச் சமாதானம் கூறிக் கொண்ட போதும் இரண்டு நாட்களுக்கு முன்னாய் நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிய மறுகணம் செல்போனின் கவரில் செருகி விட்டவன் அடுத்த சிறிது நேரத்தில் போனை எடுத்துப் பேசுகையில் ஏதோ ஞாபகமாய் கவரின் ஓரம் செருகி வைக்கப்பட்டிருந்த டிக்கெட்டை எடுத்து ஜன்னல் வழியாக எறிந்து விட்டான், பின்தான் தெரிந்தது,”ஆகா இது இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எடுத்த டிக்கெட்டுல்ல” என்பது,/ 

கண்டக்டரிடம் கேட்ட போது ”நீங்க டிக்கெட் எடுத்ததும் உண்மை,நான் கொடுத்ததும் உண்மை, ஆனா அந்த சொல்லும் செயலும் செல்லாது இங்க, யெடையில் ஏதாவது ஒரு ஊர்ல செக்கர் வந்து நின்னுட்டாருன்னா எங்க பாடு திண்டாட்டம்தான் எனச் சொன்ன கண்டக்கடரின் சொல் முடியும் முன்னரே டிக்கெட்டிற்கான பணத்தை எடுத்து நீட்டினான், என்னைய தப்பா நெனைச்சுக் காதீங்க சார்,,, என்றவராய் தர்மசங்கடத்துடன் டிக்கெட்டை கிழித்துக் கொடுத் தார், 

வீட்டில் போய் சொன்னதும் இப்படி ஒரு மனுசன் இருக்கக் கண்டமா எங்கயாவது ?அததுக இருக்கறத இருக்கக்கட்டிவச்சிக்கிட்டு கெடைக்கிறத சுருட்டிக்கிட்டு வர்ற இந்தக்காலத்துல இப்படி இருக்குறதுயும் விட்டுட்டு கையில கெடைச்சதையும் கீழ போட்டுட்டு தெண்டம் அழுதுக்கிட்டு வந்து நிக்கிறீங்களே என்றதும் இரு மகள்களும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். 

பெரியவளின் சிரிப்பைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சின்னவள் இருக்கிறாளே ஏயப்பா,,,,,நமுட்டுச் சிரிப்பில் ஆளைக்கொன்று விடுவாள், அதில் ஆயிரம் இருக்கும்,ஆயிரத்தில் ஐநூறைக்குறைக்க சொன்னால் கூட பிடிவாதம் காட்டி குறைக்க மாட்டாள். 

பெருமாள் அத்தைதான் வைவாள்,”இப்பிடியா இருப்பாங்க படு பாவிகளா, புருசன் பொண்டாட்டின்னா ஏதாவது கொஞ்சமாவது சண்டை போடுங்கடா, ஊர் ஒறவு கண்ணு பட்டு பூத்துப்போயி நிக்குது,அவ ஒன்னைய வைஞ்சா நீ பேசாம இருந்துக்கிற,நீ அவள வையும் போது அவ பேசாம இருந்துக்கிறா, என்னடா கணக்கு ஒங்களுக்குள்ள”,,,என பெருமாள் அத்தை சொல்லும் போது  சிரித்துக்கொள்வான் இவன், 

“அட போங்கத்த,நம்ம மேல கண்ண வச்சிட்டு அவுங்க எங்கிட்டு நடந்து போவாங்க,,”என்றால் அதுவும் சரிதான்,என சிரித்துகொள்வாள். 

“சரி முன்னயெல்லாம் வீட்டு வாசலுக்கு வந்தா ஒரு டம்பளர் தண்ணி வாங்கி குடிச்சிட்டுப் போவ,இப்ப அதுவும் இல்லாம பேச்சே,எல்லாம் மறந்து போச்சி பெரிய ஆளாயிட்ட நீயி அப்பிடித்தான எனும் போது ஆமாம்த்தே முன்னய விட இப்ப ரெண்டு மூணு இஞ்சி வளந்துட்டேன்,என்கிற பேச்சிற்கும் சிரிப்பாள். 

சரிதான் நீ பேசுறதெல்லாம்,ஆனா இப்படியா ரெண்டு பேரும் வார்ப்புல எடுத்தாப்புல ஒருத்தர் தங்கமா இருந்தா ஒருத்தர் செம்பா இருங்க,ஒருத்தரு செம்பா இருந்தா ஒருத்தரு தங்கமா இருங்க,அப்பத்தான் ஈடாகும், அத விட்டுட்டு,,,,,,,,,இப்பியெல்லாம் இருக்காதீங்கப்பா என முடித்தாள் அவள். அவளது பேச்சிற்கு சிரிப்பதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியவி ல்லை ,அந்த நேரத்தில்…/ 

சென்ற வாரத்தின் மயங்கிய ஒரு நாளின் மாலைவேலையாய் வேலை விட்டு வந்து கொண்டிருந்தவனின் தோள் தொட்டும் ,செவி குத்தியுமாய் இவனை கவனம் திருப்பியது,”சார் வாங்க சூப் சாப்புட்டுட்டுப் போங்க என்கிற குரல்,, ”குரலை அனுப்பியவர் தெரிந்தவர், 

சிறிது நேரத்திற்கு முன்புதான் டீ க்குடித்து விட்டு வந்திருந்தான், இவனு க்கும் மிக நீண்ட நாட்களாய் சூப் சாப்பிட வேண்டும் என ஆசை, இப்போது அந்த ஆசையைநிறைவேற்றிக்கொள்ளலாம் என கடைக்காரரை நோக்கி இரண்டு சூப் சொல்லியதும் கடைக்காரர் மனைவியைக் கூப்பிட்டு ”கனகா ரெண்டு சூப்பு எடுத்துட்டு வாம்மா,,,” என்றார்,

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// என்னதான் மனசுல துக்கம் இருந்தாலும் வயித்துக்குத் தெரியுமா அது //

அதானே...

vimalanperali said...

நன்றியும் பிரியமும்...../

கரந்தை ஜெயக்குமார் said...

சார்ல இல்லாத ஒரு நெருக்கம் அண்ணேண்ல இருக்கு,

உண்மை

vimalanperali said...

நன்றியும் பிரியமும் சார்!

Related Posts Plugin for WordPress, Blogger...