6 Apr 2020

படு முடிச்சு,,,,

பேருந்து அந்தத்திருப்பத்தில் திரும்பும் போதுதான் கையசைத்தவாறே ஓடி வந்து கொண்டிருந்தார்கள் மூவரும்,

பங்குனியின் உக்கிரம் மணி மாலைஆறாகப்போயும் கூட இன்னும் தனியா மல்,உடலெல்லாம் காந்தல் எடுத்தது,ஊறியது,இறுக்கமாகக்கட்டிய சேலைக் குள்ளும் ஜாக்கெட்டுக்குள்ளுமாய் கையை விட்டு சொறிய முடியவில்லை. ஏற்கனவே கசகசத்துக் கொண்டிருந்த உடல் ஓட அரம்பித்ததும் இன்னும் கொஞ்சம் வேர்த்தது. கூடவே மூச்சிரைத்தது.

மேற்கே மறைந்த சூரியன் தன் கலர் காட்டி செவ்வானத்தை முன்னறிவித்துக் கொண்டிருந்தது,

கிரீச்சிட்ட பறவைகள் கூடடைய போய்க்கொண்டிருந்தன,பாதையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்புகள் போவோர் வருவோரை நலம் விசாரித்த வாறே தன் இரை தேடி ஓடியும் ,சேகரித்ததை தன் கூட்டுக்கு சென்று சேர்க்கும் முயற்சியாயும்/

வழியில் இவர்களை முந்தி ஓடிக்கொண்டிருந்த நாய் தனக்கிடப்பட்டிருந்த பணியின் அவசரம் சுமந்து ஓடிக்கொண்டிருந்ததாய்,நாய் விட்ட பெரு மூச்சில் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகள் நான்கைந்து சிதறி ஓடி பபாதையின் ஓரமாய் இருந்த மர இலைகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டதாய்/

மூவரில் ஒருத்திக்கு ஐம்பது வயதிற்கு அருகாமையாய் இருக்கலாம், இளம் வெளிர் நிறத்தில் காட்டன் சேலை அணிந்திருந்தாள்.சேலையில் பெரிதாகவும் சிறிதாகவும் இருந்த பூக்களில் சில அவளது நடையின் வேகத்திலும் அதிர்விலும் கீழே உதிர்ந்து விழுந்து விடும் போலிருந்தது, பரவாயில்லை உதிர்ந்தாலும் அள்ளி அதே டிசைனில் இருந்த ஜாக்கெட்டில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். கழுவிய முகத்தில் இருந்த ஈரம் முன் தலைமுடியில் ஒட்டுக் கொண்டு காயாமல் தெரிந்ததாய்,,,/

இன்னொருத்தி தனக்கு இருபத்தைந்து வயதிற்கு மேல் இருக்காது என அறுதி யிட்டுக் கூறினாள்,கோடு போட்ட பச்சைகலர் புடவை அவளுக்கு நன்றாகவே இருந்தது, வெளிர் பச்சையில் இருந்த ஜாக்கெட் கொஞ்சம் ஒட்டாமல் தெரிந்தது, கழுவித்துடைத்த முகத்தில் குங்குமம் இட்டிருந்தாள்.

மற்றொருத்தி முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது வயதிற்கு மேற்பட்டவளாய்,,/ பளிச்சென துடைத்து வைத்த சிலை போல் தெரிந்தாள்.சேலை முந்தானை யை அள்ளி தலையில் போர்த்தியிருந்தாள்.அனேகமாய் மூவரும் ஒரே ஊராக இருக்க வேண்டும்.அதெப்படி தெரியும் இவனுக்கு என்பதெல்லாம் இங்கு அனாவசியம்.

ஒற்றையாய் விரிந்து நீண்டிருந்த மண் சாலையின் இரண்டு புறமுமாய் குடை போல் கவிழ்ந்து கிடந்த வேப்ப மரங்களும்,புளிய மரங்களும் இன்னும் பெயர் தெரியா சில மரங்களும் அடர்ந்து காட்சிப்பட்டதாய்,,,/

உதிர்ந்த இலைகளும்,மரத்தோர குப்பைகளும் மண் பாதையின் மேல் பூச்சாய் பட்டுத் தெரிகிறது.

கைகோர்த்து நீண்டு சென்ற மரங்கள் முடிவுற்ற இடத்தில் தென்பட்ட ஊருக்கு சற்று முன் தள்ளி இருந்த மில்லில்தான் அவர்கள் மூவரும் வேலை செய்தார்கள்,

“ஏய் வாங்கடி வெரிசா,எல்லாரும் எட்டி நடை போட்டா பஸ்ஸ புடிச்சிறலாம். சீக்கிரம்,சீக்கிரம்,,,,.இந்த வயசுல இப்பிடி ஊர்ந்துட்டு வர்றவ,,,என இருபத்தை ந்து வயதுகாரியை ஐம்பது வயதுக்காரி அவசரப் படுத்திகொண்டிருந்தாள்.

“இந்தா வந்துக்கிட்டுதான இருக்கேன்,அதுக்குள்ள அவசரப்பட்டா எப்பிடி,,,?என முனகியவளைப்பார்த்த முப்பத்தைந்து ஐம்பதின் போய் அது வேற ஒண்ணும் இல்லக்கா,எப்பயும்போல அவளுக்கு பீரியட் டைம் பிரச்சனை.அதான் நடக்கக் கூட முடியாம சொணங்குறா,நீங்க போறதுன்னா முன்னாடி போங்க பஸ்ஸீ வர்ற நேரம்,நான் அவளக்கூட்டிக்கிட்டு அடுத்த பஸ்ஸீக்கு வந்துர்றேன் என்றாள்,முப்பத்தைந்து,

அது என்ன ஒங்களூக்கு ஒரு பாதை எனக்கொரு பாதையா,வாங்க எல்லாரும் சேந்தே போவம்,அவள அந்த மரத்தடியில் கொஞ்ச நேரம் ஒக்காரச்சொல்லி தண்ணி பாட்ல எடுத்துக்குடு,குடிக்கட்டும்,ரோட்டுக்குப்போனதும் கடையில ஒரு டீ வடை சாப்புட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும்,அப்பிடியே பஸ்ஸீ வரக் காத்திருந்துஏறிப்போயிறலாம்.நேத்துக்கூடகொஞ்சம் தெம்பாத்தான இருந்தா, அதுக்குள்ள என்ன,நல்லா சாப்புட்டு ஒடம்ப கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது தெம்பா வச்சிருக்கணும்,அணில் கொறிச்சமாதிரி கொறிச்சா இப்படித்தான் வழக்கமா வர்ற பிரச்சனையக்கூட ஒடம்பு தாங்காது,என்கிறாள் ஐம்பது.

”இல்லக்கா ,இன்னைக்கோட அவளுக்கு அஞ்சாவது நாளாம் ,இன்னும் நிக்க மாட்டேதுங்குறா,மாசமாசம் ரத்தப்போக்கு கூடுதே தவிர்த்து கொறையக் காணோம்ங்குறா,”என்றாள் முப்பது.

”என்னதான் செய்யிறது இவளுக்கு இந்த வயசுல இப்பிடிப் பண்ணுதுண்ணா ஒன்னு ஒடம்புக்கோளாறா இருக்கணும்,இல்ல மனசுக் கோளாறா இருக்க ணும்,“மனசுக் கோளாருக்கும் பீரியட் டையத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க,இவ ஏற்கனவே அழுத்தக்காரி. மனசுக்குள்ளயே எல்லாத்தையும் பூட்டி வைச்சிக்கிருவா,எதையும் வெளியில சொல்ல மாட்டா,வீட்டுல எதும் பிரச்சனையின்னாலும் சரி,மில்லுல ஏதும் பிரச்சனையின்னாலும் சரி.எதுவும் பெரிசா காட்டிக்கிற மாட்டா,

இப்பிடித்தான் போன வாரம் அந்த எடுப்பு ஏதோ திமிரா பேசிருக்கான்,இவளும் பதிலுக்கு சத்தம் போடாம ரெண்டு நாள் கழிச்சி ஏங்கிட்ட சொன்னா,நான் போயி நாலு சத்தம் போட்டு ஓனர் கிட்டப்போயி நின்னேன்,”அவன் இனிமே இந்த மாதிரி பேசாம நான் பாத்துக்கிறேன்னு,” சொல்லி அனுப்பீட்டாரு,அது மட்டுமில்ல எதையும் வெளிப்படையா பேசி மனச ஆத்திக்கிற பழக்கம் இருந்தாக்கூட இதெல்லாம் சரியாகுன்னுவாங்க.

”நல்ல டாக்டராப்பாத்து வைத்தியம் பாக்கக்கூடாதான்னு கேட்டா இப்பதைக்கு கௌவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குப்போயி மாச மாத்திரை வாங்கீட்டு வர்றேன் னு சொல்றா அவ்வளவுதான், அத ஒழுங்கா நேரத்துக்கு சாப்புடுறாளோ ,இல்லையோ தெரியலையே, எனக்குத்தெரிஞ்சி அவ அப்பிடி சாப்புட்ட மாதிரி தெரியல,சாப்புட்டிருந்தா ஏன் திரும்பித் திரும்பி இப்பிடியாகுதுன்னு கேட்டா கண்ணக்கசக்குறா,நமக்கும் ஓரளவுக்கு மேல சொல்லுறதுக்கு சங்கடமா இருக்கு,

நேத்துத்தான் கேட்டேன்,இந்த மாதிரி நேரங்கள்ல வீட்டுல இருந்துற வேண்டியதுதான லீவு போட்டுட்டுன்னு சொன்னதுக்கு லீவு போட்டா விட்ல அடுப்பு எரியாதுக்காங்குறா,இதுக்கு மேல என்ன பேச,,,,,

சேலைய தூக்கிக்காமிக்கிறா உள்ளுக்குள்ள ரெண்டு பாவாடை கட்டிருக்குறா, அது போக ஜட்டி வேற போட்டுருக்கேன்னு சொல்றா, பாவாடையெல்லாம் அங்கங்க ரத்தத்திட்டு,அடப்பாவமேன்னு தலையில அடிச்சிக்கிட்டு இதென்னா பொம்பளையா பொறப்பெடுத்ததுக்கு கெடைச்ச வரமான்னு மனசுக்குள்ளயே மருகிக்கிட்டு அவள தேத்திக்கூட்டிக்கிட்டு வந்தேன்.

ஒண்ணு ஆஸ்பத்திரியில குடுத்த மருந்து மாத்திரைகள இவ சரியா சாப்பு டாம இருந்துருக்கணும்,இல்லைன்னா இவ ஒடம்புல ஏதாவது கனமான பிரச்சனை இருக்கணும்.

முன்னைக்கி ஆளே இப்ப ரொம்ப வெளுத்துப்போயில்ல இருக்கா,இதெல்லாம் எங்க வயசுல உள்ள ஆளுகளுக்கு வர்ற பிரச்சனை,இவளுக்கு வருதுன்னா ரொம்ப ஆச்சரியம்தான் போ,,,/இன்னைக்கோட அஞ்சாவது நாளுன்னு வேற சொல்றா,,,,/

இவர்கள்மட்டுமில்லை,மில்லில்.கனகா,லட்சிமி,துர்க்கா,காளீஸ்வரி,,என பத்து பேருக்கும் குறையாமல் வேலை பார்த்தார்கள்.

பத்து பேருடனுமாய் இருபத்தைந்து வயதுக்காரிக்கி நல்ல பழக்கம்,அவர்களது வீடுகளில் விஷேசங்களுக்கு போய் வருகிற அளவிற்கு பூத்திருந்த அந்நி யோன்யம் அவர்களுக்குள்ளாய் இருந்தது,

இதில் துர்க்காக்கா கொஞ்சம் வாயாடுவாள்,அதிலும் இருபத்தைந்து வயதுக் காரியுடன் சமமாக வாதிடுவாள்.

மில் வேலை முடிந்த மாலை வேளையில் மில் பாத்ரூம் அருகில் இருக்கிற தண்ணீர் தொட்டியில் அனைவரும் கை கால் முகம் கழுவிக்கொண்டிருக்கும் போது தொட்டியின் ஒரு பக்க மறைவில் அமர்ந்து கொண்டு குளித்துக் கொண்டிருப்பாள் ஒட்டுத்துணியில்லாமல்.மற்ற எல்லோருமாய் கொஞ்சம் முகம் சுளித்து ஏக்கா இப்பிடி என்றால் ”இப்ப என்ன காணாததய கண்டுட்டீ ங்க, ஒங்க எல்லாருக்கும் இருக்குறதுதான இங்கயும் இருக்கு, அப்புறம் என்ன சோலியப்பாத்துட்டு போங்க என்பாள்.

இருங்க,இருங்க ஒங்க மொதலாளிகிட்ட சொன்னாத்தான் சரிக்கி வருவீங்க,,, ,என்பாள் பதிலுக்கு இருபத்தைந்து/

சொல்லு இப்ப என்ன அவரு வந்து,,,,என்கிறஅவளின்பேச்சிற்கு கோகொல்லே என சிரிப்பார்கள் அனைவரும்/

துர்க்காக்கா நன்றாகச்சாப்பிடுவாள்,எல்லோரும் மதியச்சாப்பட்டிற்கு ஒரு டிபன் டப்பா கொண்டு வந்தால் அவள் இரண்டு டிபன் கொண்டு வருவாள்,

கேட்டால் ”காலையில அவுக்கு தொவக்குன்னு சாப்பிட்டும் சாப்புடாம அரை கொறையா ஓடி வர்றது.அதுமதியம் சாப்பாட்டு வேளை வரைக்கும் தாங்க மாட்டேங்குது,அதான் காலையில பதினொன்றை மணிக்கு டீக்குடிக்க வர்ற வேளையில ஒரு குடுப்பு குடுத்துட்டம்ன்னா (சிறிது சாப்பிட்டு விட்டோம் என்றால்,,)வயிறு அது வாட்டுக்கு கல்லுப் போல கெடக்கும் மத்தியானம் சாப்புடுற வரைக்கும்,,,,,,/யெடைப்பட்ட நேரத்துல நாம சாப்புடுற டீயும் வடை யும் ஒரு தடவை ஒண்ணுக்கு போயிட்டு வந்தா சரியாப் போயிரும்.

நம்மளப் போல ஒழைக்கிற ஜனங்களுக்கு ஒடம்புதான மெயினு,பத்துக்கு பத்து பளுதில்லாம பாத்துக்காட்டிக்கூட பத்துக்கு ரெண்டாவது பாத்துக்கிருவ ம், என்ன சொல்ற நீ” என்பாள் அவள்/

”இதுபோக ஒடம்புல ஒட்டிக்கெடக்குற ஆயிரம் ஆவலாதிக, அது தனி”என்பாள் கூடவே/

அவளது பேச்சு நூறு நரை முடிகளுக்கு இடையில் தென்படுகிற ஒரு கறுப்பு முடி போலவும்,நூறு கறுப்பு முடிகளுக்கு மத்தியில் தென்படுகிற ஒரு நரை முடி போலவுமாய் இருக்கும்,

இதில் துர்க்காக்காவும் இன்னும் சிலருமாய் மில்லுக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிலுள்ள ஊர்களிலிருந் துமாய் வேலைக்கு வருகிறார்கள்,

இவர்கள் மூவர் மட்டும் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊரிலிரிருந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்,

துர்க்காக்கா கொஞ்சம் தைரியமானவள்,மில்லில் வேலை பார்க்கிற பத்துப் பேரில் முதலாளியிடம் அவர்களுக்காய் தைரியமாய் முன்னின்று பேசுபவள், மற்றவர்களைப்போல் இல்லாமல் எதுவென்றாலும் மென்று முழுங்காமல் பட்டென்று பேசுபவள்,

அதனாலேயே அவளை முதலாளிக்குப்பிடிப்பதில்லை,ஆனாலும் அவள் கள்ள மில்லாத வேலைக்காரி என்கிற படர்வே அவளை மில்லில் இன்னும் இருத்தி வைத்துக் கொண்டிருக்கிறது.

யாருக்குப்பிடிச்சாஎன்னா,பிடிக்காட்டிஎன்னா,கள்ளம்கபடமில்லாத உழைப்பும் சுத்தமான மனசும் நம்மகிட்ட இருக்கு,அதுல பழுதில்லாம இருக்குறது நம்ம யாருக்கு கை கட்டி நிக்கணும்,என்பாள்.

துர்க்காக்கா கூட அவர்கள் மூவரையும் பார்த்து கேட்பதுண்டு, ஏம்மா மூணு பேரும் ஏழுமணிக்கெல்லாம் இங்க வேலைக்கி வந்துர்றீங்களே, ஏன் எட்டு மணித்தான வேலை,அடுத்த பஸ்ஸீக்கு வர வேண்டியதுதான, என்ன இப்ப கொறஞ்சி போச்சி,ஒருஅஞ்சி நிமிஷம் பத்து நிமிஷம் லேட்டா மில்லுக்குள்ள போகப் போறீங்க,அவ்வளவுதான,அந்த பத்து நிமிஷ தாமதத்த வேலை பாக்குற வேகத்துல சரிக்கட்டீற வேண்டியதுதான,

”நீங்க வந்துதான் இப்ப தூக்கி நிறுத்தப் போறீங்களா? அதான் அடுத்த பஸ்ஸீ எட்டு மணிக்கெல்லாம் வந்துருதுல்ல, இங்க,,,, என்கிற துர்க்காவை இடை மறிக்கிற மூவரில் ஒருவள்,,,,,ஆரம்பிப்பாள்.

”அது அப்பிடியில்லக்கா,,,,நாங்க வர்ற பஸ்ஸீ கரெக்டா எட்டு மணிக்குதான் வரும். அதிலயிருந்து யெறங்கி மில்லுக்குள்ள போயி சேர்றதுக்கு எட்டே காலு மணியாகிப்போகும்,அப்புறம் ஓனர் அதுக்கு வேற காலு பூலுன்னு கத்துவாரு,சும்மாவே அந்தாளு ஆயிரம் கணக்குப் பாப்பாரு, போனவருஷம் தர வேண்டிய போனஸவே இப்பம் வரைக்கும் பிச்சிப் பிச்சித் தந்துக்கிட்டு இருக்காரு ஆயிரம் காரணம் சொல்லிக்கிட்டு/மொத்தமா குடுத்தாளாவது ஏதாவது கை சேரும்,என்னமோ சொன்ன கதையா நம்ம ஆகிப் போனம்.இதுல லேட்டா வேற வந்தமுன்னு வையி,கண்டிப்பா சம்பளத்துல கை வச்சிருவாரு அந்தாளு. அவரு சம்பளத்தப்புடிக்கிறாரோ இல்லையோ அவரோட எடுப்புச் சோறு ஒண்ணு இருக்குல்ல,அது கண்டிப்பா சம்பளத்தப் புடிக்கச் சொல்லி ரெண்டு பிட்டப்போடும்., அது ஒரு முதுகெலும்பில்லாத ஜென்மம்.அது பேச்சக் கேட்டுக்கிட்டு ஓனரும் ஆட்டமா ஆடுவாரு,பன்னி ஒறசுதேனு பதிலுக்கு நம்மளும் பக்கத்துல போயி ஒரச முடியுமா,சொல்லுங்க.இது எதுக்கு நமக்கு வம்பு பொழைக்க வந்த யெடத்துலைங்குற நெனைப்புல ஒதுக்கிறதுதான்க்கா, இப்ப என்ன ஒரு அரை மணி முன்னாடி வர்ற பஸ்ஸீல ஏறி வரப்போறோம், அவ்வளவுதானே,நமக்கு சம்பளம் குடுக்குற மில்லுக்குக்காக ஒரு அரைமணி நேரம் முன்னாடி வர்றதுனால கொறைஞ்சி போயிறப்போறோம்,,? என்கிறவ ளின் பேச்சிற்கு மற்ற இரண்டு பேரும் தலையசைப்பார்கள்.

‘நீங்க பேசுறதெல்லாம் சரிதான், நம்ம வேல பாக்குற மில்லுதான்,நம்ம உழைப்புதான்,நம்மசம்பாத்திச்சிக்குடுத்ததுதான்ங்குறபேச்செல்லாம் சரிதான், ஆனா நமக்கு கைகாலுக்கு ஒண்ணுன்னா ,மேலுக்குச்சரியில்லை ன்னா கொஞ்சம்முன்னாடி வீட்டுக்குப்போக விட்டிருக்காரா அந்த ஓனரு, இல்லைன் னா ஒரு அரை மணி நேரம் லேட்டாப்போன ஒரு மணி நேர சம்பளத்த புடிச்சிக் கிறாருல்ல.அவரு அவ்வளவு கறாரா இருக்கும் போது நம்ம ஏன் மலிஞ்சி போயி போகணுங்குறேன்,காலையில எட்டு மணிக்கு மில்லுக்குள்ள வர்றவுங்க சாய்ங்காலம் ஆறு மணிக்குத்தான வெளிய வர்றோம், மதியம் கொஞ்சம் சாப்பாட்டு நேரம் தவிர்த்து.அதுலயும் சாப்புட்டு ட்டு கொஞ்சம் ஒண்ணுக்கு கிண்ணுக்கு போயிட்டு வந்தா சாப்புட்டு வர இவ்வளவு நேரமா ன்னு ஓனர் கிட்டயிருந்து திட்டு வேற,,/

நம்மள என்ன வீதியிலயா பெத்துப் போட்டுட்டுப் போயிருக்காங்க,நமக்கும் குடும்பம்,புள்ளகுட்டி,வீடு,வாசல்லன்னு இருக்குல்ல, வெறும் மொட்டுக் கட்டைகளா நாம,,,,,,?என்கிற துர்க்காக்காவின் பேச்சிற்கு தலையசைத்தவர் களாய் ”நீ ஒரு மூலையில நின்னு பேசுறக்கா,நாங்க ஒரு மூலையில நின் னு கேக்குறோமுக்கா,,,,ரெண்டு பேரும்எப்ப ஒண்ணு சேருவோமுன்னு தெரியல,  சேந்துருவோம் கூடிய சீக்கிரம்” என்றவாறு சிரிப்பார்கள் மூவரும்/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிய நடையில் நிகழ்வுகள்... அருமை தோழர்...

vimalanperali said...

நன்றியும்,பிரியமும்!

Kasthuri Rengan said...

வழக்கம்போலவே ஒரு சிறந்த பதிவு

vimalanperali said...

நன்றியும் ,அன்பும்,,,/