17 May 2020

சூறைக்காற்று,,,,,,

அவனது இருப்பு தர்மசங்கடப்படுத்துவதாயும்,கொஞ்சமாய் மனக்கிலேசத் தை உண்டு பண்ணுவதாயும்,,,/

திடு திப்பென அறிமுகமற்ற ஒரு அந்நிய மனிதர் வீட்டின் முன் அமர்ந்திருக் கிறார் என்றால் கொஞ்சம் யோசனையாகத்தானே இருக்கிறது,

கால்கள் இரண்டையும் நீட்டி வேப்பமரத்தில் தலையைச் சாய்ந்து படுத்திரு ந்தார்,

காலையில் வாசல் தெளிக்க எழுந்திருந்த மனைவிதான் பதட்டமாய் வந்து எழுப்பினாள் இவனை,

நல்ல தூக்கம் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படியாய் தூங்க வாய்ப்பது பாக்கியமே என்கிற எண்ணம் எப்பொழுதுமே இவனிடம் இருந்ததுண்டு. காரணம் அதற்கு முந்தைய நாள் முன் இரவு இஷ்டத்திற்கு கண்விழிக்கலாம், தாமதமாய் தூங்கலாம்.தொலைக்காட்சி அல்லது கையில் இருக்கிற கைபேசி வழியாய் ஏதாவது படம் செய்தி பார்க்கலாம்,இப்படிப்பார்க்கிற எதுவும் பிடிக்கவில்லையெ ன்றாலும் கூட யூட்யூப்பில் ஏதாவது குறும்படம் அல்லது மனம் பிடித்த பேச்சு, அல்லது கதையாடல் நிகழ்ச்சி என பார்ப்பதுண்டு.

இவனைபொறுத்த வரையில் இப்படியாய் பார்க்க,கேட்க,உணர,நேர்கிற எந்த ஒரு நல்ல நிகழ்வும் வீண் என நினைத்ததில்லை.அதனால்தான் அப்படியான நிகழ்வுகளின் நினைவுகளை வருடமெல்லாம் அசை போட்டுக்கொண்டிருக்க வாய்க்கிறது,

போடுகிற அசைவின் நன்மையும்,தீமையும் நன்றாகவேஅமைந்து விடுகிறது ண்டுதான் பெரும்பாலுமாய், நேற்று இரவு அப்படி ஒன்றும் பெரிதாக பாதித்த இரவாய் ஞாபகம் இல்லை.

சாப்பிட்டதும் சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தான்,என்ன புஸ்தகம் என்பது ஞாபகத்தில் இல்லை,மனம் ஒட்டாத படிப்பு,படிக்க வேண்டுமே என வம்பாய் படித்துக்கொண்டிருந்தான், பசிக்காத வயிற்றில் வம்பாய் கொண்டு சோற்றை வைத்து விட்டு வந்தது போல் தெரிகிறது,சிறப்பு அனுமதியெல் லாம் வாங்காமல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு போகாமல்,டிக்கெட் ஏதும் எடுக்காமல் உள்ளே ஏணி போட்டு இறங்கி சிறிது சாப்பாட்டை இறக்கி வைத்து விட்டு வந்து விடுகிற ஆபத்து நிகழ்ந்து போவதுண்டுதான், இறக்கிய சோற்றின் மணம் ருசி, உப்புப்புளி, காரத்தின் அளவு அனாவசியமாகிப் பட்டுத்தோணிப்போகிறதுதான் அங்கு/ ,பசி இல்லாது வம்பாய் சாப்புடுகிற போது அதன் ருசி இரண்டாம் பட்சமா கி தெரிகிறதுதான்,

நேற்று இரவும் அப்படித்தான் ,

தோசைக்கு ஊற்றிக்கொடுத்தாள், இவன் அறிய சின்ன வயதில் தோசை இட்லி என்பது தேவலோகத்து வாசிகள் மட்டுமே உண்கிற அபூர்வ பண்டாகித் தெரிந்ததுண்டு,

”அடி ஆத்தி,அவுங்க வீட்டுல இட்லிக்குப் போட்டுருக்காங்களாம்த்தா,அவுங்க வீட்டுல தோசைக்காமுல்ல போட்டுருக்காங்களாம், ஆத்தி,,, என கன்னத்தில் வைத்து ஊர் பெரு மூச்செறிகிற திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் ஊரின் மையமாய் இருக்கும் பெரிய ஆட்டு உரலில்தான் ஊரே தோசைக்கும், இட்லிக்கு மாய் மாவு ஆட்டும்,மற்ற நாட்களில் ராமண்ணன் போன்றவர்கள் தங்களதுஒற்றைக் காளைக்கும்,மற்றவர்கள் தங்களின் ஜோடி மாடுகளுக்கும் பருத்தி விதையும்,கம்பும் ஊற வைத்து அறைத்துக்கொண்டு போனார்கள்.

அது அப்படித்தான் ராமு அண்ணனைப்போல நிறையப்பேர் ஒற்றைக்காளை மாட்டை வைத்திருந்தார்கள்,அவர் வைத்திருந்தது இடத்து மாடு என்றால் யாரிட மாவது இருக்கிற வலத்துக்காளையை வாங்கிக் கொண்டு போய் வேலையை முடித்துக்கொண்டு வருவார்.

உழவுக்கு ,குப்பை அடிக்க,வண்டி அடிக்க என ஆடி மாதம் தவிர்த்து அவர்களுக்கு வேலை இருந்தது, ராமு அண்ணன் தன்னிடமிருக்கிற ஒற்றைக் காளையை வைத்துக்கொண்டு வருடமெல்லாம் ஏதாவது வண்டி மாட்டு வேலைக்கும் ,உழவு வேலைக்குமாய் போய்க்கொண்டிருப்பார்,ராமு அண்ண னிடம் இருந்ததைப்போல மந்தை வீட்டு பெருமாளிடம் இருக்கிற ஒற்றை மாடும், வடக்குத்தெரு முனியசாமியிடம் மாட்டு வண்டியும் வருடமெல்லாம் விவசாய நிலத்தின் மேல் நடந்த எல்லா வேலைகளுக்கும் போய் வந்தது, இது விஷயத்தில் பரஸ்பரம் மூவரின் கையும் மனமுமாய் பிணைந்திருக்க ஒரு கூட்டு வைத்துக் கொண்டார்கள்.

தன்னிடமில்லாத வலத்துக்காளையை இடத்துகாளைக்காரரிடமும்,. தன்னி டம் இல்லாத மாட்டு வண்டியை அதை வைத்திருப்பவரிடமுமாய் பரஸ்பர நட்பில் பரிமாறிகொண்டார்கள்,

அது போலவே ஒரே உரலில் பண்டிகைக்கும்,தனது வீட்டு விசேசத்திற்குமாய் ,மாவரைத்தவர்கள் இட்லி மாவு கொஞ்சத்தை அதை அரைக்காதவர்களிடம் கொடுத்து விட்டு தோசை மாவை அவர்களிடமிருந்து கொஞ்சமாய் வாங்கிக் கொண்டார்கள்,

வண்டி மாடுகளின் பரிமாற்றம் விவசாய நிலங்களிலும் இட்லி தோசை மாவுக ளின் பரிமாற்றம் வீடுகளிலுமாய் இருந்த நேரம் நினைவுக்கு வந்து போவது தவிர்க்க முடியாது போகிறதுதான்,

பொதுவாக தோசை சாப்பிடுவது இவனுக்கு ஆகாது அல்லது பிடிக்காது, எத்தனை வகை சட்னி அல்லது சாம்பார் வைக்கிற போதும் கூட தோசை என்றால் முகம் ஏழு கோணலாய்த்தான் போய் விடுகிறது,

“அந்த மானிக்கி அரைச்சி வச்ச சட்னியையும்,ஊத்தி வைச்ச தோசையையும் தூக்கி தலை வழியா கவுத்தி விட்டுருவேன் தெரியுமா,,,/ எப்பவாவது அத்தி பூத்தாப்புல ஹோட்டலுக்கு சாப்புடப்போகும் போது ஸ்பெசல் தோசைதான் வேணும்,அது சாப்புட்டா என்னோட எனர்ஜி ஏறி பயில்வான் மாதிரி ஆகிப் போவேன்னு சத்தியம் செஞ்சது போல தோசை மட்டுமே வாங்கி சாப்புட்ட கையோட வேற எதுவும் சாப்புடாம அப்பிடியே எந்திரிச்சிர்றீங்க,கூட வந்த பாவத்துக்கு நானும் ஆசைப்பட்டதக்கூட சாப்புடாம கடனுக்கு என்னத்தை யாவது சாப்புட்டுட்டு எந்திரிச்சு ஒங்க பின்னாடியே ஓடி வந்துரற துண்டுதான, இதுக்கு எதுக்கு கடைக்குப்போகணும் இதுக்கு எதுக்கு சாப்புடணுமுன்னு தெரியல, கடைக்குள்ள நீங்களும் நானுமா நொழஞ்ச ஒடனேயே சர்வர்லயிருந்து அடுப்புல நிக்கிற சரக்கு மாஸ்டர் வரைக்கும் சாருக்கு ஒரு ஸ்பெசல் தோசைன்னு சொல்லீருவாங்க,எனக்கு என்ன வேணுமுன்னு மறந்து போயிக்கூட கேக்க மாட்டாங்க,நானா ஆர்டர் சொன்னாத்தான்,அப்பிடி சொல்றதுலயும் ஒரு வம்பு இருக்கு,புருஷன்தோசை மட்டும் சாப்புடும் போது பொண்டாட்டிக் காரி இஷ்டத் துக்குஆர்டர் பண்ணி சாப்புடுறாளேன்னுநெனைச்சிறக்கூடாது.அந்த நெனைப்பு வந்துருச்சின்னா சாப்புடறது ஒடம்புல ஒட்டாது, நிம்மதியா சாப்புட முடியாது ,அவக்கு தொவக்குன்னு சாப்புட்டுட்டு எந்திரிக்க வேண்டியதிருக்கும்,ஏதோ பெரிசா ஒரு குத்தம் செஞ்சிட்டு மாதிரி பீலிங்கோட ஹோட்டல்ல இருந்து வர வேண்டியதா இருக்கு, அதுக்குத்தான் பேசாம ஒங்க கூட சாப்புட வார இருந்துக் குறது பெட்டர்,எதுக்கு ஒங்க கூட வந்துக்கிட்டு ,கடையில சாப்புடப்புடிக்கிற பண்டம் வீட்ல சாப்புடப்புடிக்காம போறதுக்கு என்ன காரணமுன்னு வீண் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு,,,,,, இதுக்கு பேசாம வீட்டுலயே இருந்துட்டுப் போகலாம், நீங்க ஒங்களுக்குப் புடிச்சத சாப்பிடுங்க என்பாள்,

வேண்டாததத்தின்ற காண்டா மிருகமாய் நுனி விரலால் ஒரு தோசையை மட்டும் பிய்த்து சாப்பிட்டு விட்டு படுத்து விட்டான், அன்றைக்கு மனசுக்குப் பிடித்த பழைய சோறு இல்லை.,

அச்சங்களின் பிடியிலும் அதன் வசத்திலுமாய் இருக்கிற மனது மிகவும் சங்கடமாகியே/

வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்த பொழுது வேப்ப மரத்தடியில் படுத்திருந்த அவன் பக்கத்தில் பைஜாமாவில் ஒரு பெண்,

அவளது வலது தோளில் குழந்தை, அனேகமாக இருவரும் அவனது மனைவி குழந்தையாக இருக்க வேண்டும்,

சிவப்பின் தீற்றலாய் குழந்தை அழகாய் இருந்தது,வெளிர்க்கலரில் சட்டையும் சிவப்புக் கலரில் அணிந்திந்த பாவாடையும் பார்க்க அழகாக இருந்தது .பசியி லும் தாகத்திலுமாய் அழுதழுது ஓய்ந்திருக்க வேண்டும் போலும்,

தாயின் தோளில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தது,கண்ணீர் வரிகளும் ,அதை துடைத்து பிஞ்சுக் கைகளின் தடமும் அழுக்கு முகத்தில் பட்டுத் தெரிந்தது. அவர்கள் சாய்ந்து படுத்திருந்த வேப்பமரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் இரண்டு அவளது உதட்டிலும் ,அவனது தலையிலுமாய் விழுந்தன, உதட்டில் விழுந்ததை எடுத்து தலையிலும்,தலையில் விழுந்ததை எடுத்து உதட்டிலுமாய் வைத்துப் பார்க்கிற பிடிப்பட்டுத்தெரிகிறது அவர்கள் இருவரையும் பார்த்த கணத்தில்./

அந்நேரமாய் கூவிய தூரத்துப் பறவைகள் இரண்டு தன் மரம் அது,தங்களின் குடியிடத்தின் கீழ் யாரது புதிதாக எனக்கேட்டதாய் படுகிறது,

பறவைகளின் பாஷை என்ன தேவை என வருகிற போது தேவ பாஷை கூட புடிபட்டுப்போகும் போலிருக்கிறதுதான்,

சரி அது கைவரும் போது பார்த்துக்கொள்ளலாம் .உயர்ந்து கிளைத்த கிளைகளுக்கும், அடர்ந்து பாவிய இலைகளுக்கும் ஊடே பறந்து பாவி கூடு கட்டி குடும்பம் கொண்ட எங்களின் இருப்பும் காதலும் அந்நியோன்யமும் சத்தியமானது இந்த கணத்தில் என்கிற உள்ளார்த்தமும் அதன் குரலில் இல்லாமல் இல்லை,

வேப்ப மரத்தில் அடர்வு கொண்ட இலைகள் அதன் இடது புறமாய் இருந்த தென்னை மரத்தின் கீற்றுகளைப்பார்த்து கண்ணடித்துச்சிரித்ததாய் பதிவு கொள்வோமே,யார்யாரோஎதெதெற்கோயார் யாரையோப்பார்த்து சிரிக்கும் பொழுது நான் இன்னொரு மரத்தைப்பார்த்து சிரிப்பதில் தப்பென்ன இருந்து விடமுடியும் பெரிதாய்,,,,,? என்பதுதான் அதன் பதிலாய் இருக்கிறது இந்த நேரத்தில்/

நீ என்னைப் பார்ப்பதும்,கண்ணடித்துச்சிரிப்பதும்,என் தோள் உரச ஆசை கொள்வதும் தப்பிலைதான், ஆனால் மித மிஞ்சிய மருத்துவ குணம் கொண்டு காணப்படுகிற உன்னிடம் நான் எப்படி சமதையாய் பழகி நிற்பது,?மண் பிளந்து துளிர்வு கொண்ட நாள் முதல் வளர்ந்து கிளைத்து நெடித்து பாவி,இலையும் ,பூவும்,காயும் கனியுமாய் ஆகுருதி காட்டி நிற்கிற உன்னில் எதுவும் வீண் இல்லை,எல்லாமே மருத்துவ குணம் கொண்டது.நான் அப்பிடியி ல்லை ஒற்றையாய் நெடித்து உயரம் காட்டி நிற்பதுதவிர்த்து என்ன இருக்கிறது என்னில்/ என்கிற தென்னையிடம் விலை மதிப்பில்லா தென்னங் கீற்றுகளும், தேங்காயும்,இளநீரும்உன்னில்தவிர்த்து வேறு யாரிடம்  இருந்து விட முடியும்,,,?

“ஏங்கிட்ட தஞ்சமடைஞ்ச பறவைங்க இங்க கூடுகட்டிக்கிட்டு ஓங்கிட்ட வந்து குஞ்சு பொரிக்குது,ஓங்கிட்ட குஞ்சு பொரிச்சிக்கிட்டு ஏங்கிட்ட வந்து குடும்பம் நடத்துது.அப்பிடி அங்கயும் இங்கயுமா மாறி மாறி சந்தோஷமா இருக்குற பாக்கியத்த நம்ம ரெண்டு பேருக்கும் வாய்ச்சிருக்குதே, இது பெரிய குடுப்பினை இல்லையா,அந்தக்குடுப்பினைதான் நமக்கு வாய்ச்ச பெருமை இல்லையா,இத விட எனக்கும் ஒனக்கும் வேறென்ன வேணும்,ஏங்கிட்ட மருத்துவ குணம் இருக்குதுண்ணா ஓங்கிட்ட வேற கொணம் இருக்குது,நம்ம ரெண்டு பேருல யாருக்கும் யாரும் கொறைஞ்சவுங்க இல்ல,தெரிஞ்சிக்க, என்றது வேப்ப மரம்.

“இருக்கட்டும் இருக்கட்டும் என்கிற சந்தோஷம் போர்த்தியதாய் மரங்கள் இரண்டும் சிரித்துக்கொண்டே கைகுலுக்கியும் ஒன்றின் மீது ஒன்றுமாய் படர்ந்து கொண்டன,

வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் எல்லாம் போட்டு ஓடோடி வந்து இவனை எழுப்பி விஷயம் சொல்லி கூட்டிக்கொண்டு போனாள்,

அவள் சென்ற வேகத்தில் மரத்தடியில் படுத்திருந்திருந்தவர்களை சிண்டைப் பிடித்து தூக்கி எறிந்து விடுவாள் போலிருந்தது,இவன் மட்டும் இல்லையென் றால் அதுதான் அங்கு நடந்திருக்கும் போல/

அசதியில்தூங்கிக்கொண்டிருந்தவனைஎழுப்பினான்,பதறிப்போய்எழுந்தவன் சொன்ன முதல் வார்த்தை மன்னிச்சிக்கங்கம்மா,ரொம்ப தூரம் நடந்து வந்த அசதியிலயும்,களைப்பிலயும் ,பசியிலயும் தூங்கீட்டம்மா,,,,இந்தா கெளம்பீர் றம்மா,,, என்றவனாய் அருகில் படுத்திருந்த மனைவியை எழுப்பினான்,

ஒன்றை ஒன்று நெருங்காமலும் தள்ளி நிற்காமலுமாய் கறுப்புக் கலரில் மெலிதாக இழுக்கபட்டிருந்த வெள்ளைக்கட்டங்கள் போட்ட சட்டை அவனுக்கு நன்றாக இருந்தது,அதற்கு மேட்சாய் அரை வெள்ளையில் பேண்ட் அணிந்திருந்தான்,

அருகில் படுத்திருந்த மனைவியை எழுப்பி விட்டான். படக்கென திடுக்கிட்டு எழுந்தவள்பேந்தப்பேந்தவிழித்தாள்,மன்னிச்சிக்கங்கம்மா,இதோகெளம்பீடுறோம், என்றவளாய் படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தவள் அருகில் தூங்கிக் கொண்டு  இருந்த குழந்தை தூக்கி தோளில் போட்டுக்கொள்கிறாள்.

கீழே தரையில் விரித்திருந்த துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண் டவன் ”ஒரே குழந்தைதாம்மா ,நல்லா வளக்கணுமுன்னு நெனைச்சோம், அவளுக்கு இன்னொரு கொழந்த பெத்துக்குற அளவுக்கு ஒடம்புல தெம்பு இல்லைன்னு டாக்டர் சொல்லீட்டாரு, அத்தை பொண்ணு தான், இவதான் வேணுமுன்னு ஒத்தைக்கால்ல நின்னு கட்டிக்கிட்டேன், கல்யாணமெல்லாம் நல்ல படியாத்தான் நடந்தது,ரெண்டு பேரும் உள்ளூர்க்காரங்கதான்,அவுங்க வீடு மெயின் ரோடு,ஏங் வீடு அந்த மெயின்ல இருந்து பிரியிற சந்துல மூணாவது வீடா இருந்தது,ரெண்டு பேருக்கும் ”கண்டதும் காதல் கட்டுனா இவளத்தான் கட்டுவேன்னு” எதுவும் கெடையாது,அவ வீட்டு வழியா போகும் போது தற்செயலா அவளப் பாத்தேன், வீட்ல வந்து சொன்னேன்,அடுத்த மாசமே கல்யாணம் நடந்துருச்சி, உள்ளூர்லயே இருந்தா பொழப்புக்கு வழி வேணுமே,விருந்தும் மருந்தும் மூணு நாளைக்கு மேல கசந்து போகுமுன்னு சொல்லுவாங்கல்ல,,, அப்பிடித் தான் ஆகிப்போச்சி எங்க பொழப்பு,

“உள்ளூர் பொழப்புக்கு வழி குடுக்க முடியல,வேற வழியில்லாம திருப்பூர் பக்கமா போனோம் ரெண்டு பேரும் ,அங்க போயித்தான் இந்தக் கொழந்தையப் பெத்துக் கிட்டம்,

”புதுசான ஊரு ,புதுசான பழக்கம்,அதுவரை செஞ்சி பழகாத வேலை,,, எல்லாம் கை வந்திச்சி,தேவைக்காகவும் அவசியத்துக்காகவும் ஒருத்தருக் கொருத்தர் சார்ந்து இருக்க பழகீட்டோம், எங்களப்போல பொழைக்க வந்த குடும்பங்க அங்க ஆயிரக்கணக்குல இருந்தாங்க,அனேகமா அவுங்க எல்லாரும் அந்த ஊர தன்னோட சொந்த ஊராத்தான் நெனைச்சாங்க, பொழப்புக்காக போனவுங்க அங்கேயே புள்ளைங்க படிப்பு சொந்த வீடு, கையில் கொஞ்சம் காசுன்னு சேக்க ஆரம்பிச்சி வேர் விட ஆரம்பிச்சிருந்த நேரம் எல்லாம் ஒழைச்சிப்போட்ட மாதிரி இந்த நெருக்கடி வரவும் அப்பிடியப்பிடியே போட்டது போட்ட படி வந்துட்டம்மா, என்னோட சேந்து ஐநூறு பேராவது வந்திருப்பாங்க எல்லாம் இந்த டவுனுக்குள்ள அங்கங்க இது மாதிரி தூங்கிட்டும் தூக்கமில்லாமயும் கெடப்பாங்கம்மா, எங்களுக்கு பொழப்பு தான் போச்சே ஒழிய எங்கள்ல யாரும் பிச்சைக்காரங்க இல்ல, எங்க எல்லாருக்கும் பேங்குல ,சேமிப்பு இருக்கு,இன்னும் சில பேரு பேங்க் செக்புக்கு கூட வைச்சிருக்காங்க,ஏடிஎம் கார்டு,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுன்னு வாழ்ந்தவுங்க,இன்னும் சில பேருன்னா தவணை முறையில வீட்டு மனைவாங்குறதுக்கு சீட்டு கட்டி வச்சிருக்காங்க,சில பேரு தெருவுக்குள்ள சீஇட்டுபோட்டு வச்சிருக்காங்க,,,, கையில எப்பவும் அஞ்சி பத்துன்னு ரொக்கம் வச்சிருக்குறவுங்க,என்னதான் வயித்துக்கு இல்லைன்னாக்கூட யார்கிட்டயும் திருட்டுப் பழக்கம் கெடையாதும்மா,வலியப்புனைஞ்சி பொய் சொல்றதோ, ஏமாத்துற பழக்கமோ கெடையாது.

”நாங்க எல்லாம் உண்மையா உழைச்சி,உண்மையா வாழ்ந்து, உண்மையா இருந்து பழகீட்டோம்,இனிமேலும் அப்பிடியேதான் இருப்போம்,எந்த இடர் பாடும் இடையில் வந்தாலும் சரின்னு நெஞ்சு நிமிர்த்தி வாழ்ந்துக்கிட்டு இருந்தோம், திடீர்ன்னு காலம் ஒழைச்சிப்போட்ட சீட்டுக்கட்டாட்டம் ஆகிப் போனம்,

எங்களோட வந்தவுங்க எல்லாம் அங்கங்க படுத்துக்கெடக்காங்க இந்த ரோடு முழுக்க இருக்குற மரத்தடியிலயும் வீடுங்க முன்னாடியுமா,,,,,என்றவன் முடிச்சை கட்டிக் கொண்டு குழைந்தையையும் மனைவியையும் கூட்டிக் கொண்டு கிளம்புவதற்கு ரெடியாகி நிற்கிறான்,

அவனது கையில் இவனும் மனைவியும் கொடுத்த கோதுமை மாவு பாக்கெ ட்டும், கொசம் காய்கறிகளும்,பலசரக்கும்/ கூடவே கொஞ்சம் நம்பிக்கையும்/


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏதோ ஒரு நம்பிக்கையில் நாட்கள் நகருகிறது தோழர்...

vimalanperali said...

நன்றியும் பிரியமும் சார்!

கவிஞர்.த.ரூபன் said...

நடப்பதெல்லாம் சிறப்பாக நடந்தால் சரி
வாழ்த்துக்கள்

vimalanperali said...

சிறப்பு செய்து கொள்வோம் சார்.

Kasthuri Rengan said...

அருமையான நடை தொடர்க தோழர்

Yarlpavanan said...

சிறப்பான படைப்பு
தொடருங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...