19 Apr 2020

படர் கொடியாய்,,,,,


எனது இருபத்தி ஐந்தாவது வயது வரை
அவனை நான் சரியாக பார்த்தாய்
எந்தப்பதிவும் இல்லை என்னில்,
அவன் கருப்பா,சிவப்பா,உயரமா,குள்ளமா
இல்லை இரண்டிற்கும் இடைப்பட்டா
அதுவும் தெரியாது.
காற்றுக்கு தகவல் அனுப்பிக்கேட்ட போதும் கூட
அதையே ருசுப்படுத்தி விட்டுச்செல்கிறது,
அநேகமாய் அவனிலும் என்னைப் பற்றி
அப்படித்தான் இருக்கவேண்டும் தகவல்கள்.
நானும் அவனைப்போல ஒரு சாமாயன் தானே,,,?
அவன் ராம் என்கிற ராம்குமார், எனது நண்பன்,
சரக்குக்கும் சால்னாவுக்கும்,சைட்அடிக்கவுமாய்
கிளைத்ததில்லை அவனது நட்பு,
மண்பிளந்து துளிர்த்து இலை விட்டு கிளைபரப்பி
பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய்
நிறை கொ ண்ட மனதிலிருந்து விழுதிறக்கியவன்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடை பெற்ற
எனது சொந்தங்கள் மற்றும் தோழமை நட்பு வட்டாரத்தின்
திருமணங்களில் எனது கலப்பும் சிரிப்பும்
அடையாளப்பட்டிருந்த அடர் பொழுதுகள்/
ஒரு மழை மாதத்தின் இளங்காலைப்பொழுதில்
”வெள்ளென முகூர்த்தம்” என்கிற அடையாளத்துடன்
நடைபெற்ற நண்பனின் திருமணத்தில்
எனக்கு முன்பாய் வந்து நின்றிருந்தான்
அவன் மாப்பிளையின் தோழனாகவும்
,படர்ந்து பட்ட உறவினனாகவும்/
கொஞ்சம் பேச்சு,அதிராத மென் சிரிப்பு,ஆழ்ந்த அமைதி,,,,,
இவைகளுடன் மட்டுமே முடியிட்டு அடையாளப்பட்டிருந்தான்.
மேல் நோக்கி நீட்டுகிற ஒற்றை சுட்டும் விரலின்
பின்னால் போய் அவசரம் காட்டி
ஒழிந்து கொள்கிற பூஞ்சை உடல் அவனது,
ஒட்டி குழி விழுந்த கன்னம்,ஒடுங்கி உள்ளடங்கிய கண்கள்.
ஏறிய நெற்றி,தலையில் நட்டு வைத்தது போலாய்
அலசலாய் இருந்த முடிகள்,
அளவிற்கு மேல் இருந்தால் வலிக்கும் உடலுக்கு
என்பதாலோ என்னவோ மிகச்சொற்பமாய்
எலும்புகளையும்,அதை மூட சதையையும்
கொண்டவனாய்  தெரிந்தான்,
அதனால் என்ன எலும்பும் சதையும் மட்டுமல்லவே உடல்,,,,,?
உள்ளமும், உயிரும், மேலோ ங்கிய உணர்வுகளின்
கலவைதானே உடல்,,,,/
என நெருக்கம் காட்டி பேச விழைந்த நாட்களில்
அவரை ஒருமையில் அழைக்கவும்,
பேசவும் பழகவும் உரிமம் பெற்றிருந்தேன்,
அவன் சென்ற திருமண மற்றும் விஷேச நிகழ்வுகளுக்கு
இவன் சென்றானா இல்லை,
இவன் சென்ற திருமண மற்றும் விஷேச வைபவங்களுக்கு
அவன் வந்தானா தெரியவில்லை.
ஆனால் பெரும்பாலுமாய் இருவரும்
ஒன்றாகவே கலந்து கொள்வோம் திருமணங்களில்,
இத்தனைக்கும் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை
அவனை யாரென எனக்குத்தெரியாது,
அவனை யாரென நான் அறிந்திருக்கவில்லை.
இது குருவி உட்கார அல்ல,
அவன் உட்கார இவன்  நழுவி விழுந்த கதை,
”ஊரெல்லாம் திருமணம்,விஷேசங்கள்”,,,,,
எனப் போய்க்கொண்டிருக்கிற நீ
உனது திருமணம் எப்போது என பொழுதுகளில்
தன் வாழ்நாளில் அப்படியொரு பாக்கியம்
இனி இல்லை.தனக்கு வாழ்நாள் நீட்டிப்பு
என இனி இருப்பது அபூர்வமே/
உடல் கொண்ட நோய் உதிரம் குடித்து உயிரைப்போக்குவது உறுதி
ஆகவே மறையப்போகும் முன்னாவது,இம்மண்ணின் பரப்பையும்,
அதில் குடிகொண்ட மனிதர்களையும் பார்த்தே ஆக வேண்டும்
என்கிற உந்துதலும்,வேகமும் என்னில் இருக்கிறது,
அது உறை கொள்ளும் நாள்வரை
இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆகவே என் நலம் பற்றி பேசுவதை தவிர் நண்பா,,
என்றவன் உனது அனுமதியுடன்
”இப்போதைக்கு உன் தோளில் கைபோட்டுக் கொள்கிறேன்”
எனச்சொன்னவனை அதற்கப்புறமாய் இது நாள்வரை
திருமணம் மற்றும் விஷேச நிகழ்வுகளில் பார்க்க முடிந்ததில்லை,

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கதையே சொல்லி விட்டீர்கள் தோழர்...

vimalanperali said...

பேரன்பும் பெருநன்றியும்!