24 Sept 2015

பூத்தூவலாய்,,,,,,பூந்தூறலாய்,,,/

                        இச்சி மரம் சொன்ன கதை

வணக்கம் நண்பரே. இறந்து இரண்டு தினங்களாகிப்போன, தங்களுடன் பேசலாமா, கூடாதா எனத் தெரியவில்லை.ஆனாலும் பேசிப் பார்க்கலாம் அல்லது இப்படியுமாய் எழுதியும், வணக்கம் சொல்லியும் மகிழலாம் என்றிருந்த, நீண்டு போன, பொழுதுகளின் மதியம் ஒன்றில், தோன்றி மறைந்த யோசனையின் படியாய், தங்களுக்கு எழுதுகிறேன் அல்லது எழுத்து மூலமாய் பேசுகிறேன்.

     நண்பர்களே, முதல் கதையின், முதல் வரியிலேயே, ததும்பிக் கொண்டிருக்கும் மனிதம் நம்மை நெகிழச் செய்யும்.
   என்ன புத்தகம்? அதை யார் எழுதியது என்ற கேள்வி எழுகிறதல்லவா?
   இதுபோல் எழுதக் கூடிய நண்பரும் வலைப் பூவில் இருக்கிறார், எழுதுகிறார், எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதில் நாமெல்லாம் பெருமைப் படலாம்.
     தான் வாழும் சூழ்நிலையில் இருந்தே சிறு சிறு, விறு விறு கதைகளை உருவாக்குவதில் வித்தகர் இவர்.
     வீட்டு ஜன்னலின் கம்பி வழியே தெரியும், கொல்லைப் புறங்களையும், அதை ஒட்டிய வெற்று வெளியையும், அதனைத் தாண்டியிருக்கும் வீடுகளையும், ரோட்டையும், அது தழுவிக் கொண்டிருக்கும் மனிதர்களையும் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் இவர்.
      சார் வாங்க, அப்படியே ஒரு தேநீர் அருந்தலாம் என்று கூப்பிடுவது போல, கதைகளை இவர் சொல்லிச் செல்லும் பாங்கே அலாதியானது.
இவர்தான்,
விமலன்
இவரது வலைப் பூ
தாங்கள் நன்கு அறிந்ததுதான்
www.vimalann.blogspot.com
இவரது புத்தம் புதிய நூல்

இச்சி மரம் சொன்ன கதை.
நீண்ட நாட்கள் கழித்து பார்க்க வருவதாலும், மறந்து போன ஒருவரை பார்க்கப் போவதாலும், ஏதாவது வாங்கிப் போகலாம் என்கிற நினைவை தடுத்தாண்டவராக, அப்பொழுது முத்தமிழன் காண்கிறார்.
சாப்பிடுவதற்கும், செலவழிப்பதற்குமாய் அவருக்கு ஒன்றும் பஞ்சமில்லை, தட்டுப்பாடும் இல்லை.
பேசுவதற்கும் அரவணைப்பதற்கும்தான் மனிதரும், உள்ளமும் இல்லை. இப்பொழுது அதுதான் தேவையும் ஆகிப் போகிறது.
     இன்றைய முதியவர்களின் நிலையை கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறார்.
அவ்வளவுதான், ஆசை தீந்துருச்சி அவனுக்கு. காதுல கெடந்த ஒரு ஜோடி கம்மலையும், மூக்குத்தியையும், நைச்சியமா பேசி, புடுங்கிட்டு பத்தி விட்டுட்டான்.
பாவம் இவ, கையில் காசில்லாம ரயில் ஏறி ஊர் வந்து சேந்துருக்கா. இப்ப இங்க இருக்கா. பத்து வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டு, பத்து வீட்டுலேயும் மூனு வேளை சாப்பாடு, மாசம் பொறந்தா சம்பளம்ன்னு போயிக்கிட்டுருக்கு அவ பொழப்பு.
    படிக்கப் படிக்க, கதை என்பதையும் மறந்து இவ்வுலகில் கைவிடப் பட்ட அபலைகளுக்காக மனம் பதைபதைக்கிறது.
கணவன் மனைவி, இரண்டு குழந்தைகள், ஆணொன்றும் பெண்ணொன்றுமாக. ஆண் பிள்ளை ஐந்தாவது படிக்கிறான், பெண் பிள்ளை ஏழாவது படிக்கிறாள்.
பெண் பிள்ளை என்பதில் கடைக்காரருக்கு எப்பொழுதுமே ஒரு பெருமை இருந்ததுண்டு.
இவன் அங்கு டீ சாப்பிடப் போகிற பொழுதுகளிளெல்லாம் இவனிடம் சொல்லி பெருமை பட்டுக் கொள்வார்.
என்னைக்கிருந்தாலும் பொம்பள புள்ளைங்க தாய் தகப்பன நினைக்கும்.
அதுக எங்க போனாலும், அதுக்கு எத்தன வயசு ஆனாலும், அதுக நெஞ்சுக் கூட்டுக்குள்ள, தாய் தகப்பன் நெனப்பு ஈரம் கட்டிக் குடியிருக்கும்.
ஆனா ஆம்பளச் பசங்க அப்படியில்ல சார், அத்துவிட்டுப் போயிருவாங்க.
    உலகை அறிந்தவர், மனிதத்தை அறிந்தவர் விமலன் என்பது, ஒவ்வொரு பக்கத்திலும் புலப்படுகிறது.
இல்லப்பா, ஸ்கூல் மிஸ்கிட்ட கேட்டிருக்கேன்ப்பா, ஸ்கூல் பேட்லயிருந்து ஒன்னு தர்ரேன்னு சொல்லியிருக்காங்கப்பா. ஒரு பத்து நாளாகும் அந்த பேட்டு வர்றதுக்கு.
அதுவரைக்கும் லீவு போடுற புள்ளைங்க பேட்ட, மாத்தி மாத்தி வாங்கி சமாளிச்சிக்கிறேன்பா.
விடுங்கப்பா, எனக்கு பேட் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லப்பா ....நீங்க வீட்டு பாட்டப் பாருங்கப்பா.
அவளையும், டிவி பார்த்துக் கொண்டிருந்த மூத்த மகனையும், அருகில் கூப்பிட்டு, உச்சி முகர்ந்த இவன், மனைவியையும் அருகில் அழைத்தான்.
அன்பொழுகிய பார்வையுடன் வந்த அவள், இவனைப் பார்த்ததும், வெட்கித்தலை குனிந்து கொண்டாள். போங்க அங்கிட்டு என இவனது தோளில் சாய்ந்தவாறு.
   நண்பர்களே, மனம் மகிழ்கிறது அல்லவா.
விடும்மா, அப்பா எது செஞ்சாலும் சரியாத்தாம்மா இருக்கும் என்ற பெரியவள், அப்படியே கையில் நுனியில் இருந்த இட்லியின் விள்ளலை தட்டில் போட்டுவிட்டு, இவனின் மடியில் சாய்ந்து கொண்டாள்.
சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் சுழற்சியும், எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டின் வெளிச்சமும், மகளின் முகத்தை பிரகாசமாக்கிக் காட்டியது. தலையின் முடிகள், இவனது மடியிலும் தரையிலுமாய் படர்ந்திருந்த்து.
படுத்திருந்தவளை தலை கோதியவாறே, சிறிது நேரம் உற்றுப் பார்த்தவனின் கண்களில் நீர் சுற்றி விடுகிறது.
மனதின் ஆற்றாமை, இப்படி கண்ணீராய் சுற்றி விடுகிற நேரங்கள் நன்றாகத்தான் இருக்கிறது.
சிறிதே மந்தமாயும், செயல்பாடற்ற மனோ நிலை நிறைந்ததுமாய்.
இதை உணர்ந்தவளாகவோ என்னவோ, இவனுக்கு எதிர்த்தாற் போல, அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி, ஏய், சாப்புட்டு எந்திரிங்க முதல்ல, ரெண்டு பேரும் என, இவனுக்கு வலப் புறமாய் மடியில் படுத்திருந்த சின்னவனையும் சேர்த்து சப்தம் போட்டாள்.
சிரித்தவாறே எழுந்த பெரியவள், சின்னவனைப் பார்த்து கண்ணடித்து, இது அம்மாவோட எடமாம், நாமெல்லாம் படுக்கக் கூடாதாம் என்றாள்.
ஆமாடி, என்ன இப்ப, ஏங் புருசன் மடி எனக்குத்தான். நாங்க நெனைச்சா, நாளைக்கே கூட ஊருக்கெல்லாம் பத்திரிக்க வைச்சி, இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவோம் என்றாள்.
பண்ணிக்குங்க, பண்ணிக்குங்க யாரு வேனாம்னாங்க. தெனம் தெனம் கூட கல்யாணம் பண்ணிக்குங்க, மாங்கல்யம் தந்துனானேன்னு. நானும் தம்பியுமாய் வந்து, வாழ்த்துச் சொல்லி, தாலிக் கயிறு எடுத்துத் தர்ரோம் என்கிற பேச்சுக்கு மகளையும், மகனைவியையும் பார்த்தவாறே ஏதும் சொல்லாதவனாய் சிரித்துக் கொள்வான் இவன்.
     நண்பர்களே படிக்கப் படிக்க மனம் நெகிழ்கிறதல்லவா.
     நாம் மனிதனாய் பிறந்த்தன் பலனை அனுபவிக்கும் நொடிகள், இது போன்ற தருணங்கள்தான் அல்லவா.
நண்பர் விமலனின்
இச்சி மரம் சொன்ன கதை
படித்துத்தான் பாருங்களேன்.
நெகிழ்ந்துதான் பாருங்களேன்
வாழ்வின் மென்மை நிமிடங்களை
உணர்ந்துதான் பாருங்களேன்.

தொடர்புக்கு

விமலன்,
94863 21112
வெளியீடு

ஓவியா பதிப்பகம்,
17-16-5ஏ, கே.கே. நகர்,
பட்லகுண்டு – 642 202
அலைபேசி 96296 52652

என்னுடைய இச்சி மரம் சொன்ன கதைக்கு திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தனது வலைப்பக்கத்தில் “கரந்தை ஜெயக்குமார்” http://karanthaijayakumar.blogspot.com எழுதிய விமர்சனம்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்
தம+1

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றி எனது புத்தக விமர்சனத்திற்கு,,/
வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன்/

Yarlpavanan said...

அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின்
தளத்திலும் படித்தேன் தங்கள் நூலைப்பற்றி
தங்கள் கைவண்ணம் வாசகர் உள்ளம்
நிறைவடையச் செய்யும் அழகு இருந்தும்
தாங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள்
வாசகரைக் கட்டிப் போட்டு விடுமே!
தங்கள் நூல் வெளியீடு வெற்றியைத் தரும்
வாழ்த்துகள்!

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/