27 Jul 2016

ரிவிண்டிவிண்டா,ரிவிண்டிவிண்டா,,,,,,,,டண்டணக்கா,டண்டணக்கா,,,,

எவ்வளவுநேரமாய்சொக்கிதன்னைஅப்படிப்பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என்பது தெரியவில்லை.ஆனால் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறாள். 

பார்த்த விழி பார்த்தபடியெல்லாம் இல்லாமல் பூத்திருக்கவுமாய் அல்லாமல் பார்த்துக்கொண்டுதான்இருந்திருக்கிறாள்.எவ்வளவு நேரம் என்பதல்ல இங்கு கணக்கு,,,,,பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதுவே நிஜமாகிப்போகிறதாய்/ 

சிறுவயதில் பார்த்த சொக்கி,அதே மஞ்சள் சிவப்பில் அப்படியேதான் இருக்கி றாள் ,சிவப்புக்கலர் பாவடை,மஞ்சள் கலரில் சட்டை, யார் சொல்லி அவள் அப்படி ஒரு உடை பூண்டாள் என்பதும் யாரும் சொல்லாமல் மனம் பிடித்தக் கலரை இன்று வரை உடல் போர்த்தி தக்க வைத்துக்கொண்டிருக்கிறாளா என்பதும் இன்றுவரை உறுதியாக தெரியாத்தகவலாகத்தான் இருக்கிறது.

சிவப்புக்கலரில் ஏதாவது வேண்டும் எனக்கேட்க பொய்யாய் கழுத்தறுத்து ரத்தம்பெருக்கிக் காட்டிய சிறுமியைப்பற்றிய கவிதை ஞாபகம் வராமல் இருக் காது அவளைப் பார்க்கிற கணங்களிலெல்லாம்/

முதன் முதலாய் சொக்கியைப்பார்த்தது பாட்டி வீட்டு சந்தில்தான் என்பதாய் ஞாபகம்/

ஊரில் தெருச்சாக்கடையில் இருப்ப தைப் போல பாட்டி வீட்டின் பக்கத்துச் சந்தில் நுழைந்து விட்டான் ஒண்ணுக்கிருக்க/நேற்று இரவு வந்ததிலிருந்து பார்க்கிறான் ஒண்ணுக்கிருக்க வசமான இடமில்லை. 

மல்லிஅத்தையுடன்தான்வந்திருந்தான்,நேற்றுமாலை.டவுனுக்கு.பருத்தி மூட் டை கள் ஏற்றிக் கொண்டுபோன வண்டியில் இவனையும் கூட்டிக் கொண்டு வந்தாள்.

டவுனுக்கு வேலையாக வந்தவள் வேலையையெல்லாம் முடித்து விட்டு இவனது வீட்டிற்கு வந்து விட்டாள்.எப்பொழுது டவுனுக்கு வந்தாலும் வீட்டி ற்கு வந்து நான் வந்திருக்கிறேன் டவுனுக்கு எனச்சொல்லி விட்டுத்தான் போ வாள்,

அவளுக்கும் அம்மாவிற்கும்அப்படிஒருஒட்டுதல். ஆமாடி ஒனக்கு ஒன்னொன் னும் சொல்லிக்குடுப்பாங்க ,மெனக்கெட்டு டவுனுக்கு வந்து போற,வீட்டுக்கு வந்து புள்ளைங்கள ஒரு எட்டு எட்டுப்பாத்துட்டுப் போகலாம்ன்னு தோணல ஒனக்கு,,,,என இவனின் அம்மா கனமாக சப்தம் போட்ட அன்றின் மறு நாட்களிலிருந்து டவுனுக்கு வந்தால் வீட்டிற்கு வராமல் போகிற பழக்கம் இல்லை மல்லி அத்தையிடம்.

மல்லி அத்தை வந்தால் வீட்டு ரெண்டு படும்அவ்வளவு கலகலப்பு,அது போல பேச்சில் மட்டும் என இருக்க மாட்டாள் ,வீட்டு வேலைகளிலும் தன் கைக ளையும் உழைப்பையும் கலந்து விடுவாள். இதெல்லாம் அவள் வீட்டிற்கு வந்த ஒன்றுஅல்லது இரண்டுமணி நேரம் தான், ஊருக்குக்கிளம்புகிறேன் எனக் கிளம்பி விடுவாள் தான் வந்த தடத்தைதானே அழித்தவாறும் தனது இறக் கைகளை உள்ளிழித்து மடக்கிக் கொண்டவாறும், பொழப்பு கெடக்கு வீட்டுல எனக் கூறியவாறுமாய்/ 

அவள் எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் அவள் காலடி வீட்டில் படும் முன் அவள்கொண்டுவரும்தேன் மிட்டாய் பாக்கெட்டின் மணம் வீடு முழுவதுமாய் பரவி விடும்.இவன் பரவாயில்லை,இந்த முப்பத்தைந்து வயதிலும் இவனது அப்பா மல்லி அத்தை கொண்டு வருகிற தேன் மிட்டாய் பாக்கெட்டை ஒத்தை ஆளாக காலி பண்ணி விட்டு பின் இவனை விட்டு கடையில் போய் ஏதாவது வாங்கி வரசொல்லுவார் மல்லி அத்தைக்கு கொடுத்தனுப்ப/

பெரிய பாசமலர் அண்ணன் தங்கச்சி,இவுக கொண்டு வந்து தேன் மிட்டாய் குடுப்பாங்களாம், பதிலுக்கு அவுங்க சேவு, மிக்சர்ன்னு ஏதாவது வாங்கிக் குடுத்து அனுப்புவாங்களாம்எனவம்பு இழுக்கிற அம்மாவிடம் ”ஏங் மதினி நீங்க எங்க அண்ணனுக்கு அப்பப்ப இனிப்பு கினிபுன்னு ஏதாவது வாங்கிக் குடுத்திருந்தா அவரு நான் கொண்டு வர்றத இப்பிடி ஒத்தை ஆளா தின்னு காலி பண்ண போறாரு” எனச்சொல்லுவாள் மல்லி அத்தை சிரித்தபடி/ 

”ஆமாமா அவருக்கு இப்ப என்ன கொறையாம்,இங்கன என்ன காஞ்சு போயா கெடக்காரு திங்க ஏதும் இல்லாம,அவர போகச்சொல்லுங்க,அவரு யாராவது இனிப்புக்குடுத்தா பின்னாடியே போயிருவாருங்குற அளவுல நிக்குறாரு, அவரப் பத்தி ஏங்கிட்ட பேசுறயாக்கும், இப்ப எனக்கு என்ன பயம் வந்துருச் சின்னா யாராவது இனிப்பகண்ல காமிச்சி கூட்டிட்டிப்போயிட்டா ஏங்கதியும் ஏங்புள்ளைங்க கதியும் என்னாகுங்குற கவலையா இருக்கு,” என்பாள் அம்மா பதிலுக்கு விடாமல்.

”என்ன ஆகும்,நீ பேசாமபுள்ள குட்டிகள கூப்புட்டுக்கிட்டு ஏங் வீட்டுக்கு வந்துற வேண்டியதுதா” என்பாள் மல்லி அத்தையும் சிரிக்காமல்/ 

”ஏய் என்ன ரெண்டு பேரும் ஏங் தலைய உருட்டி வெளையாட ஆரம்பிச் சிட்டீங்கஎன இவனது அப்பா சப்தம் போட்டதும் அய்யாவுக்கு கோபம் வந்துரு ச்சிச்சாக்கும்” என அம்மாவும் மல்லி அத்தையும் கேலி பேசிக்கொண்டே கிளம்பி விடுவார்கள்,மல்லி அத்தையை கொண்டு போய் விட அம்மா போய் விடுவாள்.

அன்றும் அப்படித்தான் மல்லி அத்தை கொண்டு வந்திருந்த தேன் மிட்டாயை தின்று கொண்டே ஊருக்கு வண்டியிலேறி வந்திருந்தான்.

இரவு தூக்கக்கலக்கத்தில்எங்கு ஒன்னுக்கு போனான் என்பது நினைவில்லை சரியாக/இப்பொழுது காலையில் எழுந்தவுடன் ஒன்னுக்கு அவசரம் காட்டியது. பாட்டியிடம் கேட்டபோது கண்மாய்க்கரைக்கு போய் விடு என்றாள். அங்கு போக ஐந்து நிமிடங்களாவது ஆகும் என யோசித்த படி நின்றிருந்த பொழுது தான் பக்கத்து சந்து தெரிந்தது.சரியென சந்தில் நுழையப் போன சமயம் இவனை பார்த்து விட்ட சொக்கி சந்தின் அந்தப் பக்கமாய் தலை குனிந்து கொண்டே ஓடினாள்.

அன்றும் சரி அதற்கு பின்புமாய் இதுபோலாய்ஊருக்கு வருகிற சமயங்களில் பார்த்திருக்கிறான்சொக்கியை/அதுஇப்பொழுதுவரைதொடர்கிறதாய் நினைக் கி றான். இடைப்பட்ட இத்தனை வருடங்களுக்கும் மேலான காலத்தில் சொக்கி யை இவன் பார்த்ததில்லை. பாட்டிஇறந்த நாளன்று வந்தது,அதற்கப்புறமாய் இப்பொழுதுதான்பார்க்கிறான்,படிப்புவேலை, திருமணம் குடும்பம் என இருந்து விட்டான். 

கருப்பசாமி அமர்ந்திருந்த லோகு அத்தையின் திண்ணை டைமன் சைஸில் கட்டம் கட்டி செங்காவி பூசி காட்சிப் பட்டுத்தெரிந்ததாய்/

காவி நிறத்தின் வெளுப்பு ஆங்காங்கே தேய்ந்து போய் காணப்பட்டிருந்தது வட்டமாகவும் சதுரம் காட்டியுமாய்/

கட்டியகட்டங்களுக்குள்ளாக உறைந்து போயிருந்த காவி நிறம் இழுத்துப் போ யிருந்தகோட்டிற்குள்ளாகஉறைந்தும்தேய்ந்தும்,,,/ 

அந்தத்திண்னையைத்தாண்டித்தான் லோகு அத்தையின் கடைக்குள்ளாக போக வேண்டும்.

”ஐயா இஷ்டமிருந்த சரக்கு வாங்கு.இல்லையின்னா போயிக்கிட்டே இரு” என்பதுதான் லோகு அத்தையின் கறார் பேச்சுக்களில் ஒன்றாக இருக்கும், கறார் இருக்க வேண்டியதுதான் அதற்காக கடையேறி வருபவர்களிடம் இவ்வ ளவு பேச்சா என்றால் சும்மா இருங்க நீங்க, இந்தப் பேச்சு கூட பேசலைன்னு வைங்க,அவ்வளவுதான்கொஞ்சநாளையிலநான்தலையிலமுக்காடு போட்டுக் கிட்டு போக வேண்டியதுதான் என்பாள்.

அவளும் கடைக்குவந்து போகிற எல்லோரிடமும் அப்படியெல்லாம் பேசுவ தில்லை.இழுத்தடிக்கிறவெகு சில பேரிடமே. அப்படியாய் நடந்து கொள்வாள். 

“ஏய்நீயும்தான பாக்குற தினம் தோறுமா கடைக்கி வந்து போகையில, அரிசி பருப்புஅரசலவு எல்லாம் வாங்குற தேங்காய்ச் சில்லு மொதக்கொண்டு,,,,, அடுப்புல ஒலையஏத்தீட்டேன்னு வந்து நிக்குறப்ப நாங்களும் இல்லைங்காம குடுக்குறம் ஒங்க வயிறு காஞ்சிறக்கூடாதுங்குறதுக்காக/ நீயும் அதுக்குத் தகுந்தாப்புல நடந்துக்கணும்,அத விட்டுப்புட்டு இழுத்தடிச்சியின்னா நாங்க எங்க போறது,சொல்லு”,,,,?

”நித்தம் கடைக்கி சரக்கு வாங்க டவுனுக்குப்போகும் போகும் போது எதக் கொண்டு போறது, நீயும்தான பாக்குற ரெண்டுநாளைக்கு ஒருதரம் முழு மூட்டைஅரிசிய சைக்கிள்பின்னால வச்சிக்கிட்டு அந்த மனுசன் ஒத்தையில அத்துஅலஞ்சிஅல்லாடிதான்வர்றாருஅது கூடயா பாவமா தெரியல என்னமோ நாங்களும்ஒங்களமாதிரிதான்,நீங்கஅஞ்சி பத்தா கடன்படுறீங்க, நாங்க ஆயிரக் கணக்குல படுறோம்/அவ்வளவுதான் வித்தியாசம்” என்பாள்.

அப்படி சொல்லி கொஞ்சநாள் கழித்து கணக்குப் பணம் வரவில்லை சபதம் போட்டு விடுகிறாள்.

சப்தம் என்றால் கண்முழியாத சப்தம் இல்லை. அவள் பேச்சு பேசப்பட்டவர்க ளிடம் ஏளனமாக பார்க்கப்படும் பொழுதோ இல்லை அவளது பேச்சிலிருந்து நூலெடுத்து நூற்க ஆரம்பிக்கிற அரிச்சை தெரிந்தால் பிடித்து விடுவாள். அப்படியாய் உடும்புப்பிடி பிடித்த கையோடு அப்படியே விட்டு விடுவதும் இல்லை.

சப்தம் போட்ட இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்தப்பக்கமாக சம்பந்தப்பட்டவர்கள்போகும் பொழுது கூப்பிட்டு சொல்லுவாள், ”என்ன கடைப் பக்கமே ஆள் வரல,என்கிற அவளது பேச்சிற்கு பின்ன நீங்க மூஞ்சில முழிக் காத மாதிரி பேசுங்கீன்னா எப்படி வர,,,?அதான் மனசு சங்கடப்பட்டுட்டு இருந் துட்டேன்” என்பவர்களிடம் ”ஆமா பெரிய அந்த மானிக்க மனசு சங்கடப் பட்டுட்ட,வா இங்கிட்டு சங்கடப்படுற மனசுக்கு பசி தாகம் தெரியுமா,இல்ல வீட்ல புள்ளைங்கதான் பட்னி கெடக்குமா சொல்லு.எப்பயும் போல கடைக்கி வந்து போகவுமா இரு,ஏங் சங்கடம் என்னோட ஏதோ பேசீட்டேன்,மனசுல வச்சிக்காத,வா கடைக்குள்ள” என அழைப்பவளிடம்தயக்கம் காட்டி வருபவ ர்கள் நீங்க சொல்றதும் சரிதாம்மா,நீங்களும் எங்கதா போவீங்க எங்கள மாதிரி வாங்குனவுங்க பத்து பேருக்கிட்ட ரூவா நின்னுக்கிருச்சின்னா என்னதான் செய்வீங்க பாவம்,பின்ன டவுன் கடையில போயி என்னத்த கொ ண்டு போயி குடுப்பீங்க,அந்த மன சங்கடத்துலதான் கடைப்பக்கம்வரல, தப்பா நெனைச்சிக் கிறாதீங்க,நீங்களும்நாங்கவந்துகேக்குறநேரமெல்லாம்இல்லைனுசொல்லாம தர்றீங்க அதுக்குத் தகுந்தாப்புல நாங்களும் நடந்துக்கணும், எங்களால அது முடியல, கூலிஜனங்க நாங்க,சொன்ன சொல்லுக்கு உண்மையா நிக்க முடியல, நினைச்ச நேரம் நெனைச்சிப்போற வேளை நடக்க மாட்டேங்குது, வருசமெல்லாம் நாயா ஒழைச்சாலும் கையில காக்காசுக்கூட மிஞ்ச மாட் டேங்குது என்ன செய்ய சொல்லுங்க ,இல்லாதவுங்க நாங்க பொல்லாதவுங் களா ஆகித்தாம் போறோம்/இத எங்க தலையெழுத்துன்னு சொல்றதா இல்ல, போதாத காலம்ன்னு சொல்றதான்னு தெரியல,,,,,,எங்க வீட்டுக்காரரும் வருச மெல்லாம் ஓடிக்கிட்டுத்தான் திரியிறாரு பாவம்,வேலை வேலைன்னு,,,,உப்பு விக்கப்போனநேரமா மழை பெய்யிது,மாவு விக்கப்போற நேரமா காத்தடிச்சிக் கெடுக்குதுங்குற கதையா ஆகிப்போகுது,ஊர்ல மம்பட்டி பிடிச்சி வேல செஞ் சிட்டுத்திரிஞ்ச ஆளு,வேறபக்கம் போயி வேல செய்யத்திரியல,அதுக்காக காடு கரைகள்ல்ல வேலை வெட்டி இல்லாத நாட்கள்ல கட்டட வேல மில்லு வேலைன்னு போகும் போது ஒடம்பு ஒத்துக்குற மாட்டேங்குது,மீறிப்போகும் போது ஒடம்புக்கு ஏதாவது வந்து படுத்துர்றாரு.போனவாரம் ஏதோ கட்டட வேலைக்குநிமிந்தாளுவேலைக்குன்னுபோறம்ன்னு போயிபெரிய பெரிய கல்லு களத்தூக்கிப்போடும்போதுமயங்கிவிழுந்துட்டாரு.அதுக்கப்பறம் அந்த வேலைக்கும் யாரும் கூப்புடுறதுல்ல.இப்பிடியா கைக்கு வர்ற ஒவ்வொரு வேலையும்தட்டிப்போகும்போதுஅவரும்மனசு ஒடிஞ்சிபோயிர்றாரு, கேரளாப் பக்கம்பதிவாவேலைக்கிப்போயிர்றேன்னுசொல்றாரு,நாந்தான்வேணாம்ன்னு கையிலபுடிச்சி வச்சிக்கிட்டு இருக்கேன்.அங்கிட்டுப்போயி ஒடம்புக்கு ஏதாவது ஒண்ணு வந்துருச்சின்னா கண்ணுக்குத்தெரியாத தேசத்துல என்ன செய்யிறது ஏது செய்யிறது சொல்லுங்க,,அதான் பொழச்சவரைக்கும்போதும்ன்னு இங்க னயே இருந்துட்டம்.நானும் கூட மாட ஏதாவது வேலைக்குப் போயிக்கிர்றேன். ஏதோ ஓடுது பொழப்பு தட்டுத்தடுமாறி ,ரொம்ப தடுமாறுற நேரத்துலதான் இது மாதிரி தொட்டிப்பள்ளம் விழுந்துருது.ஒங்கள மாதிரி ஆட்களோட மொக த்துலமுழிக்கவும் பேசவும் சங்கடமா இருக்கு.அதான் ஒதுங்கிப் போயிட்டேன் ,தப்பா நெனைச்சிக்கிறாதீங்கம்மா,,,,,,”என்கிற அவளது பேச்சுக்கு ”அட வா நீயி வாட்டுக்கு என்னென்னத்தையோபேசிக்கிட்டு,,,,அதான் ஓன் புருசன் ஒரு நல்ல சமையல்கொத்தனாராப்பாத்துவேலைக்குச்சேந்துட்டாருல்ல,பின்ன என்ன இனிம நல்ல நேரம்தான்,ரொம்பத்தான் சங்கடபடாத” எனச்சொல்லிய வா று அவர்களை பக்கத்தில் அழைத்து அரவணைக்கிற பாங்கு லோகுஅத்தையைத் தவிரஅந்தஊரில் வேறு யாருக்கும் வாய்த்ததில்லை எனலாம்.

இது போலான வழக்கங்களும் வழக்கமில்லாத்தனங்களுமானதை காட்சிப் படுத்திக் காட்டுகிறலோகு அத்தையின் கடையைப் பார்க்க நேர்கிற கணங்களி லும் அவளது திண்ணையில்அமர்ந்து எழுந்திருக்கிற பொழுதுகளிலுமாக கடை விரிக்கும் காட்சி மனக் கண் முன்பாக/ 

லோகுஅத்தையின்கடை திண்னை முன்பாகத்தான் மேளம் வாசித்துக் கொண் டிருந்தார்கள். சுருதி சேர்த்த அடி ஒன்று போல ஏற்ற இறக்கமாய்.

லோகு அத்தையின் திண்ணையில் இருந்த டைமன் சைஸ் கட்டம் போல அவர்கள் கட்டம் கட்டி நின்று கொண்டிருந்தார்கள் காட்சி காட்டி/ 

கொட்டுக்காரர்கள் எந்த ஊர் எனத்தெரியவில்லை,ஆனால் நாயணம் உள்ளூர் அழகர்/

ஆல்இண்டியாரேடியோவில் வாசித்தவர் என்று சொல்வார்கள்,நிறைய மெடல் கள் வீட்டில் வைத்திருக்கிறார்.அவரது பிராயத் தில் கொடி கட்டிப் பறந்தவர், இப்பொழுது வயதாகிப்போனது ஆந்து போனார், வெளியூர் வாசிப்புக்கெல்லாம் போவதில்லை.ஆள் துணையில்லாமல் அவரால் தணித்து எங்கும் போக இயலாது என்கிற காரணம் ஒன்று.அது போக பார்வை மட்டுப்பட்டு விட்டது, உடல் தொந்தரவு வேறு.சேர்ந்தாற்ப்போல ஒரு இடத்தில் ஐந்துநிமிடத்திற்கு மேல் நின்று வாசிக்க முடியவில்லை.அடிக்கடி ஒண்ணுக்குப் போகவேண்டிய தொந்தரவு வேறு.இவைகளெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு அவர் வெளி யூர்களுக்குப் போவதை அனுமதிக்கவில்லை.

வெள்ளை வேஷ்டியும் வெள்ளைச்சட்டையுமாய் நின்றிருந்தார் வாயில் நாயணத்துடன், அவரது வாசிப்பில் மேளமும் மேள வாசிப்பில்அவரது நாயண சபதமும் இணைந்து அந்தஇடத்தைக்கடந்தவர்களை சிறிது நேரம் நின்று போகச் செய்தது அல்லது கொஞ்சம் காலூன்றி நிற்க வைத்தது.

ரிவிண்டிவிண்டா,ரிவிண்டிண்டா,,,,,,டண்டணக்கா,டண்டணக்கா,,,,வும் மறந்தி ருந்திதே பார்க்கும்மர்மம்என்ன,,,,,வின்நாயணச்சப்தமும் கைகோர்த்து நடம் புரிந்த வித்தை இவர்கள் போகும் போது நடந்து கொண்டிருந்தது. 

கடந்து போய் விட்டார்கள் இவனும் இவனது மனைவியுமாய்.

இறந்தவரின் வீடு அடுத்த சந்தில் இருந்தது,இவன் சிறு வயதில் ஒண்ணுக்கு இருக்கப்போன அதே சந்து .இப்பொழுது கொஞ்சம் விரிவடைந்து பரந்து விரிந்து காட்சி தந்தது, அந்த சந்தில் முளைத்துத்தெரிந்த செடிகளும் அழுக்கும் முட்களும் இப்பொழுது அழகு பட்டிருந்த வீடுகளாகவும் அது தாங்கி நின்ற குடும்பங்களாகவும்/

ஒருமாலை வாங்கி வந்திருக்கலாம்.மறந்து போனது.அவசரத்தில்அண்டாவிற் குள்ளாக மட்டும் இல்லை அகல வாய் திறந்திருந்த தொட்டிக்குள்ளாகக்கூட கை போகவில்லை என்பது நினைவு வந்ததாய்,சாவு வீட்டிற்குள்ளாக போய் வந்தார்கள்,இவனும் மனைவியுமாய்,/

பிரீஸர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை தொட்டுக் கும்பிட்டு விட்டுமனைவிவீட்டிற்குள்ளேயே அமர்ந்து விட்டாள்.இவன் அங்கிருந்த சொந் தங்களிடம் பேசி விட்டு கழண்டு லோகு அத்தையின் கடை திண்ணையில் அமர்ந்திருந்தபொழுதுதான்சொக்கிதன்னைபார்த்துக்கொண்டிருந்ததெரிந்தது, 

எவ்வளவுநேரமாய்சொக்கிதன்னைஅப்படிப்பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என்பதுதெரியவில்லை.ஆனால்பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறாள்.

பார்த்த விழிபார்த்தபடியெல்லாம் இல்லாமல் பூத்திருக்கவுமாய் அல்லாமல் பார்த்துக்கொண்டுதான்இருந்திருக்கிறாள்.எவ்வளவு நேரம் என்பதல்ல இங்கு கணக்கு,,,,,பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதுவே நிஜமாகிப் போகிறதாய்/

4 comments:

Unknown said...

சாவு வீட்டிலும் தொடரும் சொக்கியின் பார்வையில் இவன் சொக்கிப் போனதா தெரியவில்லை :)

'பரிவை' சே.குமார் said...

எப்பவும் போல் உங்கள் நடையில் சுவராஸ்யமாய்....

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைகுமாக/