29 Aug 2021

அரூபத்தில்,,,,

கையில் குழந்தையுடன்

வாசல் காத்து நின்றவள்
குழந்தைக்கு முத்தமிடுகிறாள்.
கன்னம் பட்ட தன் எச்சில்
துடைத்து உதடு கிள்ளுகிறாள்.
அள்ளியணைத்து தோள் சாய்க்கிறாள்.
கன்னம் பிடித்துக்கிள்ளுகிறாள்.
தூக்கிப்போட்டுப்பிடிக்கிறாள்.
முந்தானை விலக்கி பால் புகட்டுகிறாள்.
அழுகையமர்த்தி போக்குக்காட்டுகிறாள்.
நிலவைச்சொல்கிறாள்.
நட்சத்திரம் எண்ணுகிறாள்.
சூரியனைக்காட்டுகிறாள்.
காற்றின் போக்குக்கு பறந்த கூந்தலை
குழந்தைக்குக்காட்டி அள்ளி முடிகிறாள்.
சிரிக்கச்சொல்லி சுழியிடுகிறாள்.
அழுகையை அப்பால் விலக்கச்சொல்கிறாள்.
தலையில் பொய் கொம்பு வைத்து
"ஃபே" சொல்லுகிறாள்.
நாக்கு தொங்கவிட்டு
" ஆ" காட்டி சிரிக்கிறாள்.
காற்றடைத்த வாயை
கன்னம் குத்தி வெடிக்கச்செய்கிறாள்.
பசிபொறுக்கவும்
பொறுமை காக்கவுமாய்
பாடம் சொல்கிறாள்.
கைவீசி நடக்கிறாள்.
குழந்தை அதிரது ஓடுகிறாள்.
இப்படியாயும்
இன்னும் இன்னுமான
அவளது செய்கைகளை
அன்றாடம் கடக்கிற
தெரு முனை வீட்டு வாயிலின்
இரும்பு கேட்டை கடக்கிற கணங்கள் தோறுமாய்
பார்த்து விட முடிகிறது.

||||| ||__________🏡🏡🏡🏡

No comments: