22 Nov 2010

தொடர்வண்டி,,,,,,

         


       கொஞ்சம் இப்படித்தான் நினைத்துப் பாருங்களேன்.உடலில் கண் இருக்க வேண்டிய இடத்தில் காதும்,காது இருக்க வேண்டிய இடத்தில் மூக்கும்,மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் நீண்டு வெளியே தொங்கும் நாக்கும், வாய் இருக்க வேண்டிய இடத்தில் கண்களும்,கைகள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு கால்களும்,கால்கள் இருக்க வேண்டிய இடத்தில் கைகளுமாய் முளைத்து உடலே முறுக்கி செதில்,செதிலாய் ஆங்கிலப் படத்தில் வரும் வேற்று கிரகவாடிகள் போல இருந்தால்?
    கனவில் கூட நாம் அப்படி இருக்க சம்மதியோமே,/ஏன் அப்படி சிறிது இருந்துதான் பார்போமே என நம்மில் யாரும் துணிவதில்லையே,?
    ஐந்தரை ஆறடி உயரத்திற்கு ஆணுக்கு ஃபேண்ட் சர்ட்டும், பெண்ணுக்கு சேலை ரவிக்கையும்,சல்வார் கம்மீஸீம் தேவையாயிருக்கிறது.
   இதில் நிறைந்து போன ஸ்டோர்களின், டெக்ஸ்டைல்ஸ்களின்  விளம்பரங்களும் நம்மை மயக்கி விடுகிறதுண்டு.விஷேச நாட்களன்று நீங்கள் அணிய வேண்டிய உடைகளை அவர்கள் தீர்மானித்து சொல்கிறார்கள்.நாமும் கேட்டு விட்டு தலையாட்டி விடுகிறோம்,அல்லது தலையாட்டிக் கொண்டே இருக்கிறோம்.
    கனவுகளும்,ஆசைகளும்,நைச்சியங்களும் விதைக்கப் பட்ட மனதாக  நம் மனதை மாற்றுகிற சக்தி படைத்த விளம்பரங்கள் தீர்மானிக்கிற உடையை அணிந்து கொள்ள பழகிப்போன நாம் அப்படியெல்லாம் இருக்க சம்மதிக்கமாட்டோம்தானே?
     நமது வீட்டில் யாருக்கும் எந்தவித  இடைஞ்சலும்  இல்லாமல் அமர்த்தப் பட்டிருக்கும் டீ.வி நம்மை(குறிப்பாக நமது குடும்பத்தலைவிகளை அன்றாடம் சிதைத்து,நமது மனங்களை காயடித்து காயப் படுத்தி விடுகிறதுதானே?
     திங்கள் முதல் வெள்ளி வரை என விளம்பரப் படுத்தப் பட்டு கிட்டதட்ட இரவு பத்து பணிரெண்டு மணிவரைக்கும்  ஓடுகிற சிறியதும்,பெரியதுமான மெகாத் தொடர்கள்,இரவு பத்து மணிக்குமேல் ஓடுகிற மர்மத்தொடர்கள் (இப்பொழுது சில மெகாத்தொடர்களே இந்த வேலைகளில் இறங்கி விட்டது வேறு கதை.)
      அப்படி என்னதான் இருக்கிறது,என்னதான் சொல்கிறது இந்த மெகாத்தொடர்களும்,மர்மத்தொடர்களும்?
       தனது குடும்பத்திற்காக தன்னையே வதைத்து உருக்கி ஊற்றிக் கொள்ளும்,தியாக தீபங்களாக,,,,,,,எரியும்திரியாக,,,,,,அம்மாஞ்சியாக,,,,,,,,,,,
அழுகை முகத்தோற்றத்துடன் தோன்றும் கதாப்பாத்திரங்கள் ஒரு புறம் என்றால்,,,,,,,,,குடும்பத்தினர்சகலரையும்பயமுறுத்தும்,வில்லியாக,
குடும்பத்திற்குள் குண்டு வைத்து குழப்பம் விழைவிக்கும் வன்மம் நிறைந்த முரட்டு மனம் படைத்தவர்களாக சித்தரிக்கப் படுகிற பெண்கள் நிறைந்த உலகமாய் காண்பிக்கப்படுகிறது.
      இப்படியெல்லாம் பார்க்கவும்,பேசவும் வைக்கப்படுகிற தொடர்களின் உலகம் எதுவாக இருக்கிறது?அந்த உலகத்தை பார்க்கிற நாம் எதுவாக ஆகிப் போகிறோம்?
   கேட்பவர்களும்,பார்பவர்களும் எதுவாகவோ இருந்தால் எதிலேயோ நெய் வடியுமாமே? ஆமாம் நெய் வடிகிறது.
      நமது சேனல்களில் மர்மத் தொடர் எழுதும்  எழுத்தாளர் ஒருவர் சொல்கிறார். “ஒருநாள் தொலைதூர பயணமாக பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்.இடையில் ரயில்வே கேட் அடைப்புக்காக பஸ் நின்றது.
அந்த சமயம் நான் இறங்கி சாலையை விட்டு சற்று தள்ளி உள்ள புளியமரத்தோரமாய் நிற்கிறேன்.அந்த புளியமரமே எனக்கு வித்தியாசமாய் தெரிகிறது.நான் புளிய மரநிழலில் நின்று கொண்டிருந்த சிறிது நேரத்தில் நான் இறங்கிய பஸ்ஸின் பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதி ரயில்வே கேட்டை இடித்து நிற்கிறது. பஸ்ஸில் ஜன்னலோரம் நான் உட்கார்ந்திருந்த சீட் தனியாக பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக அந்த புளியமரம் என்னை காப்பாற்றியது.” என.   (தற்செயல் நிகழ்வுகளைச் சொல்லி நம் மனதை இலக வைத்து அதனுள் தனது சரக்கை இறக்கி வைக்கும் உத்திதானே?)
    ஆனால் கடந்து போன வருடங்களில் இல்லாத அளவு பெருகிப் போன மெகாத்தொடர்களும், மர்மத் தொடர்களும் நம் நேய மனோபாவங்களை எப்படி பாதிக்கின்றன? எதை கற்றுக்கொடுக்கின்றன?
    அண்மையில் நடந்து விட்ட ஒரு சாலைவிபத்தைப் பற்றி தொலைக் காட்சியில் செய்தியாய் வாசிக்கிறார்கள்,படமாய் காட்சி விரித்து காண்பிக்கிறார்கள்,அதில் லாரியும் காரும் மோதி நிற்கிறது.காரில் வந்தவர்கள் குடும்பத்துடன் இறந்து போகிறார்கள்.அதில் ஒரு சின்னக் குழந்தையும் அடக்கம்.சேதமடைந்து நிற்கும் லாரி,அப்பளமாக நொறுங்கி நிற்கும் கார்,இறந்து கிடக்கும் மனித உடல்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,, மாறி,மாறி காண்பித்த காமிரா சோகத்தை விதைத்து விட்டு செல்கிறது.
     இப்படியான சோகத்தை காண்பித்துக் கொண்டிருக்கும் போதே “மெகாத்தொடர்”தான் வேண்டும் என சிலர் அடம்பிடித்து சேனலை மாற்றுகிறார்கள்.
   “அது எங்கனயோ நடந்த ஆக்ஸிடெண்டு,அதப் போயி பெருசா காட்டிக்கிட்டுஇருக்காங்க,நாமளும் வேலையத்துப் போயி இதப் பாத்துக்கிட்டு,வா நாடகம் பாப்போம்”என கிளம்பிவிடுகிறார்கள்.
    சிதறி உயிரற்றுக் கிடக்கும் மனித உடல்களை பார்த்தும் கூட இறக்கப் படாத மனோநிலையை எது விதைக்கிறது?மறத்துப் போன மனம்தானே?அப்படி நம் மனதை இந்த நேரத்தில்  மரத்துப் போக வைத்தது எது ?உண்மையில் நம் மனம் மரத்துதான் போனதா,இல்லை மரத்துப் போக வைக்கப்பட்டதா?ஏன் அப்படி என்கிற கேள்விக்கு விடைதெரியாதவரை கண்ணும்,மூக்கும் இடம் மாறிப் போனவர்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுவிடுவோம்.
அப்படி வைக்கப்படுவது நமக்கு சம்மதம்தானா?         

7 comments:

Ravichandran Somu said...

வணக்கம்!

தங்களது வலைப்பதிவின் அறிமுகம் சமீபத்தில்தான் கிடைத்தது. ஒரு சக கிராமத்து மனிதரை வலைப்பதிவிற்கு வருக... வருக என வரவேற்கிறேன். நல்ல எழுத்து நடை... வாழ்த்துகள்!

தொடருங்கள்...

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

I .Felix said...

ரொம்ப அருமையா சொன்னீங்க. முற்றிலும் உண்மை.

vimalanperali said...

வணக்கம் ரவிச்சந்திரன் சார்.உங்களது கருத்துரைக்கு நன்றி.உங்களது வரவேற்பை தலை வணங்கி ஏற்கிறேன்.

vimalanperali said...

வணக்கம் i.Felix சார்.நன்றி உங்களது கருத்துரைக்கு.

Aathira mullai said...

//நம் மனம் மரத்துதான் போனதா,இல்லை மரத்துப் போக வைக்கப்பட்டதா?ஏன் அப்படி என்கிற கேள்விக்கு விடைதெரியாதவரை கண்ணும்,மூக்கும் இடம் மாறிப் போனவர்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுவிடுவோம்.//
இப்போதுதான் தங்கள் வலைப்பதிவை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கூர்மையான் அறிவாயுதமாய் மிளிர்கிறது.
இன்றைய மனிதர்கள் கண்ணும் மூக்கும் இடம் மாறியவர்களாக.. இதை நானும் ஆமோதிக்கிறேன்..

Aathira mullai said...

சொல்ல மறந்தே போனேன்... என்னைத் தொடரும் அன்புக்கு நன்றி விமலன்.

Anonymous said...

தனது குடும்பத்திற்காக தன்னையே வதைத்து உருக்கி ஊற்றிக் கொள்ளும்,தியாக தீபங்களாக,,,,,,,எரியும்திரியாக,,,,,,அம்மாஞ்சியாக,,,,,,,,,,,
அழுகை முகத்தோற்றத்துடன் தோன்றும் கதாப்பாத்திரங்கள் ஒரு புறம் என்றால்,,,,,,,,,குடும்பத்தினர்சகலரையும்பயமுறுத்தும்,வில்லியாக,
குடும்பத்திற்குள் குண்டு வைத்து குழப்பம் விழைவிக்கும் வன்மம் நிறைந்த முரட்டு மனம் படைத்தவர்களாக சித்தரிக்கப் படுகிற பெண்கள் நிறைந்த உலகமாய் காண்பிக்கப்படுகிறது//
உண்மையான வரிகள் "sir