17 May 2011

சூன்யம்,,,,,


                                     

        அந்த பஸ்ஸில் சேவுக்கூடை வரவில்லை எனத்தெரிந்ததும் மிகவும் அதிர்ந்துதான் போனார் சேவுக்காரர்.
       வருகிற பஸ்ஸை ஆவலுடன் எதிர்பார்த்து,பஸ் வந்து நின்றவுடன் நிதானித்து தோளில் போட்ட துண்டுடன் பஸ்ஸில் பின் கட்டு அருகே போனார்.
       இறங்குபவர்கள் ஒவ்வொருவரையும் ஏறிட்டார்.தெரிந்தவராய் இருந்தால் சிரித்தார். “என்ன ஊருக்கு போயிட்டு வர்றீங்களா”? என்றார். பெண்கள் இறங்கும்போதுபாந்தமாகபார்வையைவேறுபக்கம் திருப்பிக்கொண்டார்.
கைகுழந்தையுடனும்,மூட்டைமுடிச்சுகளுடனும்இறங்குபவர்களைபார்த்து,
பார்த்து மெல்ல,,,,மெல்ல,,,,என்று உஷார் படுத்தினார்.
       சராசரிஉயரம்தான்.நன்றாகசதைதிரண்டிருந்தார்.சட்டையில்லாத வெற்றுடம்பில் ஒருகுற்றாலத்துண்டு மாத்திரம்.கணுக்காலுக்கு தூக்கிக்கட்டிய மூட்டாத கைலியின் இறுக்கிக்கட்டிய தடம் இடுப்பில் எப்பொழுதும் நிரந்தரமாய்.
       கைலியின் மேல் பிடிப்புக்காக கட்டியிருந்த அரணாக்கயிரில் முள்வாங்கி தொங்கியது. சதா வெற்றிலையில் சிவந்து போன உதடுகளும்,முடி அடர்ந்த வெற்றுடம்புடனும்,  சிரிப்புடனுமாய் அவர்/
       கடந்த போன இருபது நாட்களாகத்தான் இந்த ஏற்பாடு.பக்கத்து டவுனில் மகன் சேவுக்கடை வைத்திருந்தான்.அங்கிருந்துதான் சேவுக்கூடை வரும்.அதை பாக்கெட் போட்டு விற்பார் கடைகளுக்கு.
       வயசாகிப்போன காலத்தில் தனி ஆளாக மாவு பிசைந்து தேய்த்து,சேவுபோட்டு வீட்டு வேலைகளையும் சமையலையும் கவனித்து,,,,, முடியவில்லை.சமயத்தில்“கிடக்கிறதுகழுத”எனபேசாமல் டீக்கடை,டீக்கடையாக  உட்கார்ந்து  விடுவார்.
      இந்த ஐம்பத்திஇரண்டில் முடியவும் இல்லை அவரால்.முழங்கால் வலி,கை வலி,கால் வலி இடுப்பு வலி எல்லாம் சேர்ந்து கொண்டது.கூடவே இந்த வாயு பிரச்சனை.உடலில் எங்காவது உட்கார்ந்து கொண்டு உயிரை வாங்கி விடுகிறது.சைக்கிளில்மிதித்து,சேவுவியாபாரம்பார்த்து ,,,,,கஷ்டமாயிருக்கிறது.
      முடியாத நாட்களில் சேவும் போடாமல்,லயனுக்கும் போகாமல் விட்டு விட்டால் வாடிக்கை கடைகளை வேறு ஒருவர் பிடித்துக் கொள்ளும் அபாயம்.அலைச்சல் இல்லாமல் வீட்டிலேயே வைத்து வெங்காய வியாபாரம் பார்த்து வந்தார்.அதில் ஒன்றும் பிரமாதமான லாபம் இல்லை.விட்டு விட்டார்.
       கடைசிமகள் போனதிலிருந்து இப்படித்தான்.அவள் இருந்த போது கவலை இல்லை.சேவு போடுவதும் வியாபாரத்திற்குப் போவதும் மட்டுமே அவரது வேலையாய் இருந்தது.
      காலையில் எழுந்ததும் இறக்கைகட்டிக்கொள்வார்.எட்டு மணிக்கெல்லாம் சேவு ரெடியாகி விடும்.முப்பது கிலோ கொண்ட கூடையை சைக்கிளில் கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்.எந்த எதிர்காற்று காலமானாலும் சரி.
      பழைய கால சைக்கிள் இன்னும் புதுசு போலவே பராமரிக்கிறார். “எதையுமே பராமரிப்பதில்தான் உள்ளது” என்றும் சொல்கிறார்.
      மகளும், மருமகனும் போனபிறகுதான் வீட்டு வேலையின் விஸ்வரூபம் தெரிந்து.முன்பெல்லாம் குளிக்கும்போது தலைதுவட்டிய  துண்டைக்கூட எடுத்து காயப்  போடமாட்டார்.நடு வீட்டில் அவர் சாப்பிட்ட தட்டு கைகழுவிய நீரோடு தளும்பிஅவரின் துணிகளெல்லாம் கொடியில் கசங்கலாய் தொங்கும்.வீட்டில் எது எப்படி இரைந்து கிடந்தாலும் தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் போல போய்விடுவார்.
      சேவுக்காரரின்மருமகன்அங்கிருந்துதான்வேலைக்கு போய்வந்தான்.பக்கத்து டவுனில் காட்டன் மில்லில் வேலை.மருமகன் வீடும் அவ்வளவாக சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.இவருக்கும் வயது போன காலத்தில் பக்கதுணைவேண்டியிருந்தது.கல்யாணம்முடிந்ததும் மகளையும்,மருமகனையும் இங்கேயே இருக்கச்சொல்லி விட்டார்.
மகளின்மேல்கொள்ளைபிரியம் அவருக்கு.கடைசிப்பெண். தன்னைபார்த்துக்-
கொள்கிறவள்.கடைசிவரைவைத்துபராமரிக்கப்போகிறவள்.”என்னம்மா,,,,,,,,,,,,
சொல்லுமா ,சொல்லுமா,,,,,,,,என்றுதான்திரிவார்.அவள் கடிந்து கொண்டாலும் அவர் கோபித்துக் கொண்டதில்லை. பிறக்கப்போவது பெண்குழந்தையானால் அம்மாவின் பெயர்தான் வைக்க வேண்டும் என்றார்.
      மூன்றுபெண்களையும்,இரண்டுபையன்களையும்வளர்த்து ஆளாக்கியபோது வராத எண்ணம் இப்பொழுது வந்திருந்தது அவருக்கு.ஒழுங்காய்த்தான் இருந்தான் மருமகன்.ஏதோ புத்தி பிசகு. வேலை முடிந்து இரவு  வீட்டிற்கு வந்தவன் எதிர்த்த வீட்டுதிண்ணையில் படுத்திருந்தவளை தட்டிக் கூப்பிடிருக்கிறான்.அவள் அதாட்டியான பெண்.எழுந்து அதட்டி சத்தம் போட்டு ஊரைக்கூட்டி விட்டாள்.
     வெயில்காலம்.புழுக்கம்தாளாமல்திண்ணையில்படுத்திருந்தவர்கள் கூடிவிட்டார்கள்.கோ,கொல்லேஎன்கிறசப்தங்களின்கலவை,வசவு,சண்டை
சத்தம்நாரசப்பேச்சு.
       துணிந்தபெண்கள் விளக்குமாரை தூக்கிவிட்டார்கள்.விஷயம் கேட்டு எழுந்து வந்த சேவுக்கடைகாரர் அதிர்ந்து போனார்.அதுவரை மருமகனின் எதிரே சப்தம் போட்டுக்கூட பேசியறியாத அவர் திண்ணையின் எதிரேகிடந்த விறகுக்குச்சியை  எடுத்து மருமகனை விளாசிவிட்டார் விளாசி.
      ஒரு வழியாககூட்டம் சமாதானமாகி கலைந்ததும் உடலெங்கும் கன்னிப்போனரத்தக்காயங்களுடன்இருந்த மருமகனை வீட்ற்குள்கூட்டிப்போய் திட்டிக்கொண்டும் அழுது கொண்டும் இவர்தான் மருந்து போட்டார்.அந்த அடியும்,அவமானமும் சேவுகாரரின் யோசனையும் ,,,,,மறுநாள் காலையிலேயே மகளையும்,மருமகனையும் ஊரைவிட்டு கிளம்ப வைத்தது.
     போனவர்களைப் பார்க்க இவர்தான் போய்விட்டு வந்தார்.பிறந்திருந்த பேரனைபார்க்கவும்தான். “இனிமேலாவது கையக்கால, வச்சிட்டு ஒழுங்கா இருங்க”மருமகனைப்பார்த்துசொல்லிவிட்டுகொண்டுபோயிருந்தபுதுத்துணியை
பேரனுக்கும்,குட்டிச்சாக்கில் இருந்த அரிசியையும்,துணிப்பை நிறைய இருந்த காய்கறி,மளிகைச்சாமான்கள் இவர் போட்டிருந்த சேவு கொஞ்சத்தையும் கொடுத்துவிட்டு வந்தார்.
     இவரிடமிருந்து போனதிலிருந்து மருமகனுக்கு நிரந்தரமான வேலை இல்லை.மில் வேலையும் போய்விட்டது. யாராவது அறிந்தவர் தெரிந்தவர் வைத்து திரும்பவும் மில் வேலையில் சேர்த்து விடலாம் என்றால் மருமகன் ஒரே பிடிவாதமாய் மாட்டேன் என்கிறார்.
     அந்த ஊரிலும் கூட கூலி வேலை கிடைக்கவில்லை.மருமகனின் சொந்த ஊர்.ஒருநாளானால் மரம் வெட்டப்போய்விட்டு உள்ளங்கையெல்லாம் கொப்புளமாகி வேதனைப் பட்டிருக்கிறார். கிடைத்த நாளில் கிடைத்த வேலை கால்வயிறு,அரைவயிறுஎனஅவர்கள் அந்த ஊரில் ஒட்டிக்கிடந்தார்கள்.
      “கொஞ்ச நாள் இங்கன வந்து இருங்க,திரும்பவும் ஒங்க சொந்த ஊருக்கு போயிருவீங்க” என்றிருக்கிறார் சேவுகாரர்.மருமகன் சரி என்றாலும் மகள் ஒரே பிடிவாதமாய் இருந்தாள். “இனி அந்த ஊருக்கு குடிவருவதில்லை,அவ்வளவு அவமானப்பட்டபிறகு.”அவரின் பேச்சிலிருந்த அவரது சாப்பாட்டிற்கான  சுய நலத்தை  அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.     
      வரும்போதேமுடிவுபண்ணிக்கொண்டுதான்வருகிறார்.
“எத்தனைநாளைக்குத்தான்இப்படி,சாப்பாட்டுக்கும், வெளுத்த துணிமணிக்கும் சிரமப்பட? இப்படி நிம்மதிகெட்டு அத்து, அலைந்து பொழைக்கிற பொழைப்புக்கு பேசாம சொத்துப்போகலாம்”
       எந்த பிடிப்பும் இல்லாமல் நிலைகுலைந்து போன தன் வாழ்க்கைஇனிசீர்படுமா?என்கிற கேள்விகள் அவருக்கு ஒரு விடையை தருகிறது.
      அனாதையாகிப்போன சேவுக்காரர் தன்னை பார்த்துக்கொள்வதற்காகக்கூட அல்ல,தனக்கு சோறு,தண்ணி ஆக்கிபோட ஒரு பெண்துணைவேண்டும் என முடிவுஎடுக்கிறார்.
     விஷயம்கேள்விப்பட்டுஓடி வந்துவிட்டார்கள் பிள்ளைகள்.ஆளுக்கொன்றாய் பேசினார்கள்.”இத்தனை வயசுக்கப்புறம் இது தேவையா?என்றான் மகன். “ஐயா வேணாம்யா.சொத்துப்போயிரும்”என்றாள் மூத்த மகள்.கடைசிப்பெண்ணானால் அவரின் காலிலேயே விழுந்து விட்டாள். “அம்மா இருந்த யெடத்துல இன்னொரு பொம்பளையா”பாதங்களை நனைத்து விட்டாள்.
      ஐந்து பிள்ளைகளையும் விட்டு விட்டு அவரது மனைவி மஞ்சள் காமாலையில் இறந்து போனபோது மாமனார்தான் சொன்னார்.”ஏங் மூத்த பொண்ணு யெடத்துல யெளைய பொண்ணு இருக்கட்டும்”என.இவருக்குத்தான் மனது ஐம்பது ஐம்பதாக நின்றது. “இளையவ வந்தா மூத்தவ பிள்ளைகளுக்கு சனிதான்”என்றார்கள் நன்றாகப் பழகிய அக்கம் பக்கத்தவர்கள். “ஒங்க அப்பா காலத்துல இருந்து இந்த ஊர்ல இருக்கீங்க,ஒத்த வீட்டுக்காரங்கன்னாலும் தாயா புள்ளையா பழகீட்டோம்.இனி ஒங்க புள்ளைங்க தெருவுல திரியிரத பாத்துட்டு நின்னா நாங்கெள்ளாம்மனுச சென்மங்களா எப்படி”?
      நனைந்து,நடுநடுங்கி விக்கித்து நின்றவரை தலை துவட்டி ஆறுதல் படுத்தி தோளில் சாய்த்துகொண்டன இந்த வார்த்தைகள். மழையில் நனைந்து,வெயிலில் காய்ந்து பாறையை கீறிய பயிராய் வளர்ந்தார்கள் பிள்ளைகள்.அக்கம்,பக்கத்தவர்களின் உதவிக்கு சேவுக்காரர் தனது உடம்பை செருப்பாய் தைத்துப் போட்டார்.பிள்ளைகள் ஒவ்வொன்றும் தலை எடுத்து நின்றபோது நல்ல இடம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்.இங்கு விரித்திருந்த சிறகுகளை வேறு ஊரில் போய் மடக்கிக்கொண்டார்கள் பிள்ளைகள்.இன்று பெற்றவன் ஓரிடமும், பிள்ளைகள் வேறோரிடமுமாக/.
      பிள்ளைகளின்அழுகைக்காகவும்,வேண்டுதலுக்காகவும்தான்நினைத்து வைத்திருந்த பெண்ணையும் சேர்த்துக்கொள்ளவில்லை.
      நீளஅகலமானவீதி,இரண்டுபக்கமும்சிறியதும்,பெரியதுமாய்அடுக்கி
வைக்கபட்டவீடுகள்.காரைவீடு,ஓட்டுவீடுமொட்டைமாடிஓரடுக்கு,
இரண்டடுக்குஎனமுளைத்திருந்தன.
     தெருவின்திருப்பத்தில்தான்சேவுக்காரர்வீடு.இடுப்பில் கைலியடனும்,
கழுத்தில் துண்டுடனுமான அவருக்கான அடையாளங்களுடன் கையில் ஈயத்தட்டேந்தி நகர்கிறார் வீடு நோக்கி. தெருவின் இரண்டு பக்கமும் குவித்து வைக்கப்பட்டிருந்த சோற்றுகுவியல்.பக்கத்திலிருந்த பெரிய,பெரிய குழிகளில் சாம்பார்,ரசம்,மோர்,அப்பளம் ,கூட்டு,பாயாசம் என ஒவ்வொரு குழிகளிலும் ஆவி பறந்து கொண்டிருந்தது.சேவுக்காரர் தனது கையிலிருந்த தட்டை நீட்டியவாறு சோற்று குவியலை நோக்கி நகர்கிறார்.
     தெருவில் புகையும் பனியுமாய் சுழன்று வந்த காற்று சேவுக்காரர் முகத்தில் மோதி மூச்சை அடைத்தது.பலமாய் எதிர் மூச்சு விட்டவாறு இவர் சோற்றுக்குவியலை நோக்கி நகர,நகர சோற்றுகுவியலும் நகன்று கொண்டேசெல்கிறது. இவரும் வேகவேகமாக அடியெடுத்து வைக்கிறார். சோற்றுக்குவியலும் வேகவேகமாக நகர்கிறது.
     சேவுக்காரருக்கு தோள்களில் இரண்டு பக்கமும் சிறியதாக முளைத்த இறக்கைகள் இரண்டையும் படபடவென தட்டியவாறு  வேக வேகமெடுத்து பறக்கிறார்.மேலே,மேலே,மேலே எனப்பறந்தவர் சோற்றுக்குவியலை நோக்கி தலைகீழாக சர்ரென விரந்து வருகிறார்.இவர் தரை நோக்கி வரும்பொழுது சோற்றுக்குவியல் இரண்டாக பிளந்து விடுகிறது.பிளந்து விட்ட அந்த வெற்று வெளியில் விழுந்தவர் சட்டென தூக்கி எறியப்படுகிறார் ஈயத்தட்டுடன்.
   எழுந்துபார்த்தபொழுதுசோற்றுகுவியலைச்சுற்றி மகன்களும்,மருமள்களுமாய்.
ஆளுக்கொரு மண்வெட்டி கொண்டு சோற்றை வாரி சாக்குகளில் அமுக்குகிறார்கள்.எஞ்சிய சோற்றை சேலையின் முந்தியிலும்,வேஷ்டியிலுமாய் வாரிகட்டிக்கொண்டார்கள்.அங்கேயேவும்கொஞ்சம் சாப்பிட்டார்கள்.
     சந்தோஷமாய் சிரித்து மகிழ்ந்த அவர்கள் சோற்று மூட்டைகளுடனும், அவரவர் கணவன்,மனைவிமார்களுடனும் விரிந்து பறந்த வான் வெளியில் திசைக்கொன்றாய் பறந்து போனார்கள்.
     கனவு கலைந்து எழுந்து தண்ணீர் குடித்த சேவுக்காரரின் கண்களில் யதேச்சையாகப்பட்டது அடுப்பு அருகில் இருந்த சாப்பாட்டுத்தட்டு.
“இனி என்ன தூங்க?”
      எழுந்து டீக்கடைப்பக்கம் போனார்.அதிகாலையில் வந்த முதல் பால் அடுப்படியில்கொதித்துக் கொண்டிருந்தது.மடியை தொட்டுப்பார்த்துக்கொண்டு டீக்கு சொல்லி விட்டு அமர்ந்தவர் இன்றைக்கு வருகிற பஸ்ஸில் சேவுக்கூடையை எதிர்பார்க்கும் மனோநிலைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்./      

6 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நடைமுறை சிரமங்கள்.
வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

யதார்த்தம்!

மதுரை சரவணன் said...

சேவுக்கடைக்காரரை பற்றிய விவரிப்பு மிக அற்புதம்... எதையும் பராமரிப்பதில் தான் இருக்கிறது... உண்மை.. தங்கள் பிளாக்கில் கதைகள் அருமையாக வருகிறது.வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல்சார்,நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னை பித்தன் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மதுரை சரவணன் சார்,பராமரிப்பதிலுள்ள சிரமங்களை பறி தனியாக ஒன்று எழுதலாம்போலிருக்கிறது.