4 Jan 2012

சூட்டுக்கோல்,,,,,,,


             
  
      சிறகடித்து வந்த அழகான சின்னஞ்சிறு பட்டாம் பூச்சியை பிடித்து அதன் வண்ணம் சிந்தும் இறக்கைகளை ஒவ்வொன்றாக கழட்டி பிய்த்தெறிந்து தீவைத்து பொசுக்கிய சோகம் கடந்த நாளின் நகர்வொன்றில் நடந்து போகிறது.
    புத்தாண்டிற்கு முதல் நாள் சனிக்கிழமை அன்று.வழக்கம் போலவே அன்றும் அலுவலக நாள்.
   அலுவலக நாள் என்றால் மற்ற நாட்களைப்போல இருக்காது .வாரத்தின் கடைசி தினத்தையும்,அடுத்து வருகிற ஒரு நாளையின் விடுமுறைதினத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அன்று அலுவலகத்திற்கு வருகிற வாடிக்கையாளர்கர் கூட்டம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
    மற்ற வார நாட்களில் எட்டு மணி நேரம் செய்கிற வேலையைஅன்று நான்கு மணி நேரத்திற்குள்செய்யவேண்டும். அதுவும் மிக கவனமாகவும், கோவப்படாமலும்,
வேகமாகவும்/
   இது எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் கை வரப்பெறவும்,சாத்தியப்படவும் செய்யாது.அப்படி கை வரபெற்றவர்களை அன்றைய நாள் மிதமாகவோ அல்லது பலமாகவோகூட  பதம் பார்க்கும் சமயங்களில்.
   நகைகள் அடகு வைக்க,வைத்த நகைகளை திருப்ப பணம் போட,பணம் எடுக்க டெபாஸிட் எக்ஸட்ரா,எக்ஸட்ரா,,,,,,,,,என நிறைய வந்து கொண்டிருப்பார்கள்.
    எலும்பும் சதையும்,கைகளும்,கால்களும் மற்ற உறுப்புகளும் கொண்டது மட்டுமல்லவே மனித உடம்பு.
    உள்ளே உருட்டிப்பிசைந்த உணர்வென ஒன்று இருக்கிறதுதானே?அதை ஒன்று கூட்டிக்கொண்டு சிரிப்புடனும்,கோபமாயும்,ஆற்றாமையுடனும்,பொருமலுடனுமாய் வருவார்கள்.
   அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல,வருகிறவர்களின் பேச்சிலும்,செயலிலுமாய் வெளிப்படும்.(இதில் நம் மனது கணக்கில் வராத ஒன்றாய்/)
  அப்படிவெளிப்படுகிறஅனல்மூச்சு,பேச்சு,சிரிப்பு,வேலைஉயரதிகாரியிடம்சமாளிப்பான
சிரிப்பு என அனைத்தையும் சேர்த்து செய்து நகட்டி,நகட்டி சமாளித்து கரையேறும் நாளாக அமைந்து போகிற பெரும்பாலான சனிக்கிழமைகளின் நகர்வுகளில் ஒன்றின் காலை 10.30 க்கு டீ வருகிறது. அலுவகத்தில் உள்ள எங்கள் ஐவருக்குமாய் சேர்த்து/
   ஆ,,,,டீ காபி,டீ,காபி ,,,,,,,,என்கிற எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக வரும்.
   அன்றும் அப்படித்தான் காலை 10.30 மணிக்கு இரண்டு காபி,மூன்று டீ என கொண்டு வருகிறாள் அந்த சிறுமி.நல்ல கூட்ட நேரம்.அலுவலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.கையில் டீயும் காபியுமாக இறகு விரித்து பறந்து  வந்த பட்டாம் பூச்சியாய் அந்த சிறுமி எங்கள் அனைவருக்கும் டீ ,காபி வினியோகித்துக்கொண்டிருந்தாள்.
    பள்ளி விடுமுறை விட்டபின்பும் கூட அவள் அணிந்திருந்த பள்ளிச் சீருடையில் பார்க்கஅழகாகஇருந்தாள்.கை,கால்முளைத்தசிற்பம் போல/
    கண்ணுக்கு மையிட்டு,நெற்றிக்கு பொட்டிட்டு,தலைவாரி,பூச்சூடி  என்கிற எந்த மிகை அலங்காரமும் இல்லாமல் வந்தஅவளை இன்றுதான் பார்க்கிறேன்.
   கடைக்காரருக்கு சொந்தக்காரப்பெண்ணாம்.அப்படி அடை மொழிகளுடன் சிரித்தும் பேசிக்கொண்டுமாய்  அங்கு நின்ற அத்தனை பேரையும் பிளந்து வந்த அவளை ஏதோவொரு ஞாபகத்திலும்,மனோநிலையிலும் பட்டென ஒரு சுடுசொல் சொல்லி விடுகிறேன்.
   சாதாரணமான அந்த சொல் அவளின் உள்ளின்,உள் போய் சுட்டிருக்க வேண்டும் போல/ முகம் சுருங்கிப்போனாள்.
   வரும் போது பறந்து வந்தவள் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது உடல் தொங்கி நடந்து போனாள்.
    சிறகடித்து வந்த அழகான பட்டாம் பூச்சியின் வண்ணம் சிந்துகிற இறக்கைகளை ஒவ்வொன்றாக கழட்டி பிய்த்தெரிந்து தீ வைத்து பொசுக்கிய சோகம் கடந்து போன நாட்களின் நகர்வுகளில் நடந்து போகிறது.   

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மெல்லிய உணர்வுகளை தாக்கும் செயல்
பட்டாம்பூச்சியின் இறக்கைகளைப்
பொசுக்குதலுக்கு சம்மே
சொல்லிச் சென்ற விஷயம் கடினமானதாக இருந்தாலும்
சொல்லிய விதம் படிப்பவர்களின் இதயத்தில்
நாமும் தவறியும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்கிற
தாக்கத்தை ஏற்படுத்திப் போவதால்
அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நலம்தானே?
மனித மனதில் ஏதாவது ஒரு முனையில் முட்டுகிற ஒரு சிறிய முரண்டாடே இப்படியான செயலகளுக்கும்,உயரதிகாரிகளின் கோபத்தை, கையாலாகாத பேச்சை எதிர் கொள்ள தைரியமற்ற அல்லது அடைகாக்கிற பொழுதுகளில் இப்படி வேறுபக்கம் கோபம் பாய்ந்து விடுகிறது.
நன்றி,உங்களதுவருகைக்கும் கருத்துரைக்குமாக/