27 Mar 2014

அன்பின் முகவரி,,,,,,,

                                                             தி.க.சி

அன்பின் முகவரி உறைந்துவிட்டது
நெல்லை 21 E சுடலை மாடன் தெருவில்
அந்தத் தொலைபேசி முனையில்
ஹலோ ...என்ற வெள்ளந்திக் குரல்
ஒலிக்காது இனி
அழைப்பவர் அடையாளம் பிடிபட்ட மாத்திரத்தில்
வெடித்துப் புறப்படும் அந்தக்
குதூகல தோழமைச் சிரிப்பின் பரவசம்
வாய்க்காது ஒருபோதும் இனி
நிபந்தனையற்ற வாஞ்சையை 
திணறத் திணறப்
பொழியும் அருவி தென்படுமோ இனி...

சுமக்க மாட்டாது அஞ்சல்காரர்
ஏந்திவரும் கடிதங்கள், புத்தகங்கள்,
பருவ இதழ்கள் ஏங்கக் கூடும்
எதிர்பார்த்து வந்த
ஈரமான இதயத்தைக் காணாது.
தந்தி சேவை நிறுத்தப்பட்ட ஆபத்து
வந்து சேரக் கூடும்
(அவர் அதிகம் எழுதிக் கொண்டிருந்த)
அஞ்சல் அட்டைகளுக்கும் !

அடுத்தவரைப் பாராது
வேகமாகக் கடந்துபோகும் 
அவசர சமகால வெளியில்
பகிர்ந்து கொள்ளவும் பாராட்டி  மகிழவுமான
ஊக்கமொழியாளரது மறைவு
உளவியல் துறைக்குமான இழப்பு
வயது சமாதானம் செய்துவிட
முடியாத மரணங்களுக்கான
துயரம் அளவிட முடியாதது

ஆனாலும்

செல்விருந்தோம்பி
வருவிருந்து பார்த்திருக்கும்
இலக்கியப் பெருந்தேடல் மிக்க
அவரது கண் பார்வையின் நீட்சி
காலத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில்
உணரப்படவே செய்யும்
வர்க்க சமரசமற்ற
கருத்தோட்டத்தை அடைகாக்கும்
சமத்துவ உலகுக்கான
வேட்கையை வளர்த்தெடுக்கும்
மனிதகுல விடுதலைக்கான
கீதத்தை இசைத்துக் கொண்டுதான் இருக்கும்.

************
எஸ் வி வேணுகோபாலன் 
நன்றி: தீக்கதிர் (மார்ச் 27, 2014)
(எழுத்தாளர் தி.க.சி அவர்களின் மறைவை ஒட்டிதிரு எஸ் வி வேணுகோபாலன் அவர்களால் எழுதப்பட்ட கவிதை)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

துயரம் அளவிட முடியாத வரிகள்...

ஆழ்ந்த இரங்கல்கள்...

அம்பாளடியாள் said...

நினைவுகள் ஒரு சங்கீதம் அது ஓயாமல் ஒலித்துக்கொண்டே தான்
இருக்கும் .மறைந்தும் பலரது உள்ளங்களில் வாழக் கொடுத்து வைத்த
தி .க.சி .அவர்களின் ஆன்மா சாந்தி பெற நாமும் பிரார்த்திப்போம் .
மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

vimalanperali said...

வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்.
அன்னாரி இழப்பு ஒரு சரித்திர
சகாப்தத்தின் மறைவு எனலாம்.

vimalanperali said...

வணக்க அம்பாளடியாள் வலைத்தளம்
அவர்களே.அன்னாரின் இழப்பு ஒரு பேரிழப்பே/

கோமதி அரசு said...

செல்விருந்தோம்பி
வருவிருந்து பார்த்திருக்கும்
இலக்கியப் பெருந்தேடல் மிக்க
அவரது கண் பார்வையின் நீட்சி
காலத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில்
உணரப்படவே செய்யும்//

அருமையான கவிதை.
சான்றோருக்கு அன்பின் முகவரிக்கு அஞ்சலிகள்.