20 Nov 2016

நல்லா வந்துருவேனா சார்,,,,,,

அதிகாலையிலேயே எழுந்து போயிருக்க வேண்டும் என நினைத்திருந்தான் முடியவில்லை.

நேற்று இரவு படுக்க வெகு தாமதமாகிப்போனது.ஏன் எனத் தெரியவில்லை. வயதாகிப்போனதால் அப்படியா அல்லது இப்படித்தான் வாழ்க்கை பூராவுமா என்பதும் புரியவில்லை.

நேற்று இரவு கோபால் கடையில் வாங்கிச் சாப்பிட்ட புரோட்டா செமிக்க நேரமாகிப்போனது,நடுஇரவு வரை நெஞ்சை கரித்துக்கொண்டே இருந்தது,

போன தடவை புரோட்டா வாங்கப் போகையில் பத்து நாட்களூக்கு முன்பாக இருக்கும் என நினைக்கிறான்,நல்லஇரவு நேரம்,அமாவாசை கவிழ்ந்திருந்தது இவனதுவீட்டுப்பக்கமாய் எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கு எரியவில்லை. வீட்டுப்பக்கமாய் ஒன்றும் தெரு முக்கு திருப்பத்தில் ஒன்றுமாய் இருந்ததில் தெரு முக்கு விளக்கு மட்டுமாய் எரிந்தது, அதுவும் கூட கொஞ்சம் மங்கல டித்துக் கொண்டிருந்ததாக/ரொம்ப நாட்களாக பஞ்சாயத்து ஆபீஸில் போய் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தான்,நேரம் வாய்க்கவில்லை. வீட்டி லிருந்து இறங்கியதும் தெருவே கொஞ்சம் இருள் பட்டுத் தெரிந்தது,மழை பெய்திருந்ததில் தரை கொஞ்சம் ஈரப்பட்டுத் தெரிந்தது.

இது போல் இருக்கிற நேரங்களில் தெரு முக்கில் இருக்கிற பள்ளத்தில் கொஞ்சமாவது தண்ணீர் நிற்கும்,சேறும் சகதியுமாக/ ஏனெனத் தெரியவில் லை, அந்தப் பள்ளத்தை மூடாமல் அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். தெருவுக்குள் வருகிற தண்ணீர் குழாயை சரி பார்க்கத் தோண்டியபள்ளம் இன்னும் மூடாமல் அப்படியே,,,,,கொஞ்சம் விட்டால் அந்தப் பள்ளத்தில் யானையை விழவைத்து பிடித்து விடலாம் போலிருந்தது. பஞ்சாயத்து யூனி யன் பிளம்பரைப்பார்த்து ஒருதடவை கேட்டதற்கு ’சார் சும்மா இருங்க நீங்க, பள்ளத்த இப்பிடியே மூடாம இருந்தாத்தான் தண்ணி லாரிக்காரங்க கொஞ்சம் வெலகிப்போவாங்க,இல்லைன்னு வச்சிக்கங்க,தண்ணிக்கொழாயி மேலேயே விட்டுஏத்தீட்டு போவான் வேணுக்கும்ன்ட்டே,,,,”என்றார்,”பள்ளம் என்ன தெருவ மரிச்சா இருக்கு இப்ப,தெரு ஓரமாத்தான இருக்குது சார், இதுக்குப் போயிக் கிட்டு ,இப்ப என்ன உங்க மன எண்ணம்ன்னு நான் சொல்லட்டா,மழ வந்தா சேறும் சகதியுமா அசிங்கமாயிருது, வெயிலடிச்சா புழுதி பறக்குதுன்னு நெனைக்கிறீங்க,பின்ன தெருவுன்னா நாலுந்தா,,,”,என்ற பிளம்பரின் நினைவு தாங்கி கடைக்கு வந்து புரோட்டாவுக்கும் தோசைக்குமாய் சொல்லி விட்டு நின்றிருந்தான் இவன்,

இவன் நிற்கிற அந்த நேரம் வரை கோபால் எங்கு போனான் எனத் தெரிய வில்லை வந்து விட்டான்.

வந்து விட்டானா பாவி அவன் வருவதற்கு முன்பாக வாங்கிக்கொண்டுபோய் விடலாம் என நினைத்திருந்தான், பெரிதாக ஒன்றும் இல்லை. கொஞ்சம் வளவளவென பேசுவான்,பேச்சென்றால் அடுத்தவர் நிலை பற்றி கணக்கில் எடுத்துக்கொள்ளாத பேச்சு,அதுதான் கொஞ்சம் சகிக்கவிலை, மற்ற படி எல்லாம் ஓ.கே வே/

கடைக்கார கோபால் வந்தவுடன் முதலாக செய்த காரியம் இவனுக்கு பெரிய தாக ஒரு வணக்கம் வைத்ததுதான்,”வணக்கம் சார் நல்லா இருக்கீங்கீகளா, ,, ”தம்பி எலெக்சன்ல நிக்கிறாப்ல நீங்களெல்லாம் ஆதரவு குடுக்கணும்,” என்றான்,

“தம்பின்னா யாருண்ணெ,சொந்த தம்பியா இல்ல.வேற யாராவது சொந்தக் காரங்களா”,,,,என இவன் கேட்டபொழுது இல்ல சார் நாந்தான் அந்தத்தம்பி என்றான்,

நாந்தான்னு நேரடியா சொல்லீருக்க வேண்டியது தான, என்கிற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.ஒரு வேளை தம்பி எனச்சொன்னால் கொஞ்சம் ஒட்டுதல் கூடும் என நினைத்துக்கூடச்சொல்லியிருக்கலாம்.சரி எதுவானால் என்ன எழவெத்தவன் கையில் இருக்கிற கொஞ்ச நஞ்ச காசை தொலைத்து விடலாம் என முடிவு பண்ணி விட்டான்,

ரைட்,கோபால்ண்ணே கண்டிப்பா எங்க ஆதரவு ஒங்களுக்கு உண்டுண்ணே எனச்சொல்லியவனாய் நகன்றான்.வீட்டில் மனைவியிடமும் பிள்ளைகளிட மும் பேசியவாறே சாப்பிட்டவன் கடையில் நடந்ததைச்சொன்னான், தலை யிலடித்துக்கொண்டமனைவி ”சும்மாவே அவுங்க அம்மா அப்பா இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு சொல்றீங்க,அதமீறிஎதுக்குபோயிநிக்கிறாரு,,,” எனகேட்ட மனைவியின் பேச்சிற்கு,,, ”அம்மா அப்பா மட்டுமில்ல, பொண் டாட்டி புள்ளைக கூட எதுக்குதுக,,,,அய்யோ அன்னைக்கி ஏண்டா கடைக்கி போனோம்ன்னு ஆகிப் போச்சி,அவனோட அம்மா அப்பா ஒருபக்கம் பேச, அவன் பொண்டாட்டிஒருபக்கம் பாட்டா பாட கொஞ்ச நேரத்துல கடை கந்தலா ஆகிப் போச்சி,கொஞ்ச நேரத்திற்கு/கடைக்கி சாப்புட வந்தவுங்க பார்சல் வாங்க வந்தவுங்க எல்லாம் தெரிச்சி ஓடிப்போனாங்க ஓடி,,,அப்புறமா நாந்தான் கொஞ்சம் சொல்லிச்செஞ்சி சொந்த விவகாரத்த இப்பிடியா நாலு பேரு வந்து போற யெடத்துல வச்சி பேசுறது,எதா இருந்தாலும் வீட்டுக்குள்ள வச்சிக்கங்க, இங்க வச்சிக்கிட்டு பேசினிங்கன்னா கடை யேவாரம் போயிரும் ன்னு சொன்ன ஒடனே,,,,, என்னவோ எங்களுக்கு ஒண்ணும் இல்ல, சார், நாங்கஇன்னைக்கோநாளைக்கோன்னுசாவதேடிக்கிட்டுஉக்காந்துட்டிருக்கோம், இவன்அப்பிடியில்ல, இனிமதான் பொழப்பு இருக்கு ,ரெண்டு பொம்பளப் புள்ளைகள வச்சிருக்கான், வேணாம் வேணாம்ன்னு சொல்லச் சொல்ல கேக்காம ஆசைக்கு ஒரு ஆம்பளப் புள்ள இருக்கட்டுன்னு இப்ப வயித்துல ஒண்ண சொமந்துக்கிட்டு நிக்கிறா அவ/அது இதுன்னு சொல்லிக் கிட்டு குடும்பத்த தெருவுல நிறுத்தீறக் கூடாதுங்குறதுதான் நாங்க சொல்றோம் ன்னு”சொன்னகோபாலோடஅம்மாவும்அப்பாவும் நான்சொன்னா கொஞ்சம் கேட்டுக்கிருவாங்கன்னு மனைவியிடம் சொன்னா இவன்சரியாகக் கூட சாப்பிடாமல்தான் படுத்தான் அன்று,

ஆனாலும் ,,,,கடைச்சாப்பாடு என்பது சரியாகத்தான் இருக்கிறது.படுக்கையை விட்டுஎழுந்துஅங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான்.எல்லோரும் தூங்கிப் போன அத்துவான இரவின் அமைதி அதுவும் ஒரு மாதிரியாக நன்றாகவே இருக்கிறது.மனைவி பிள்ளைகளின் தூக்கத்தைப்பார்த்தவன் சின்னவள் மீது கண் வைத்து ஏக்கத்துடன் பார்த்துவிட்டு கேட்டைத்திறந்து நடையில் போய் நின்றான்,

“இன்னும் ஒரு சில மாதங்களில் சின்னவள் வயதிற்கு வந்து விடக் கூடும். என்ன செய்வது எனத்தெரியவில்லை,பெரிய அளவில் எதுவும் விசேசம் வைத்துக்கொண்டாடுவதா இல்லை சாதாரணமாக தலைக்கு தண்ணீர் ஊற்றி விட்டு அப்படியே விட்டு விடலாமா தெரியவில்லை, அரைப்பரிட்சை வேறு வருகிறது.பரிட்சை கடந்து விட்டால் பரவாயில்லை, பரிட்சை நேரமாய் வந்து விட்டால் பெரிய தொந்தரவு வேறு,,/”என நினைத்தவனாயும்இருள் சூழ் பொழுதை வெறித்தவனாயுமாய் வீட்டிற்குள் வருகிறான்,

இன்னும் நெஞ்சு கரிப்பது நிற்கவில்லை.பெரிய அளவிலாய் கட்டில் மெத்தை என படுத்து பழக்கப்பாடதாவன் சின்ன வயதிலிருந்து,/இப்பொழுது அதை வாங்கும் வசதியிருந்தும் கூட தரையில் கோரம் பாய் விரித்து படுக்கும் பழக்கத்தான் கைக்கொண்டுள்ளான்,

இவன் மட்டுமல்ல ,இவனது மனைவி மக்களையும் அதே பழக்கத்துக்கு ஆட் படுத்தி வைத்துள்ளான். பத்த மடைப் பாய்யெல்லாம் இல்லை,இது பாய் கடை பாய்,

எப்பொழுதாவது டிரைவராக இருக்கும் மாப்பிள்ளை சிவாவிடம் திருநெல் வேலி பக்கமாக சவாரி போனால் பத்தமடை பாய் வாங்கிக்கொண்டு வரச் சொல்வான், மத்தபடியெல்லாம் இங்கு உள்ளூரில் வாங்குகிற பாய்தான்/

எப்படியும் ஒரு வருடம் நெருக்கி தாக்குப்பிடிக்கிறதுதான்.இந்ததடவை பாய் வாங்குகிற போது பாய் சொன்னார்,”சார் பச்சக்கோரைப்பாய் இது சார்,இதுல அதிகமா நீங்க நெனைக்கிற மாதிரி ,படங்கள் எல்லாம் இருக்காது. ஓரத்துல பாடர் அடிச்சிருக்கும், கொஞ்சம் டிசைன் இருக்கும்,படம் இருக்குற பாய் வேக வச்ச கோரை ,இது பச்சக்கோரைங்குறதுனால இஷ்டப்படி படமெல்லாம் வைக்க மாட்டாங்க,” என்றார், ஆனா வேக வச்ச கோரப்பாயி வாங்கிறத விட இது வாங்குங்க,இது நல்லது ,கொஞ்சம் கூடுதலா உழைக்கும்,உடம்புக்கும் நல்லது.என்றார்.

இந்த யோசைனையுடன் எப்பொழுது படுத்தான் எனத்தெரியவில்லை, சமய த்தில் கூடுதலாக உடல் அசதியான நேரத்தில் அல்லது தன்னையறியாமல் தூக்கம் வந்து விடுகிற சிறிது நேரத்தில் ஏதாவது கனவு வந்து விடுவதுண்டு, 
ஆனால் இப்பொழுது தூக்கம் வரவே அடம் பிடிக்கிறது என்கிற எண்ணத்துடன் எப்பொழுது தூங்கினான்எனத்தெரியவில்லை,காலையில்படுக்கையிலிருந்து எழுந்திருக்கவேஒன்பதுமணியாகிப்போனதும்.8.30 மணிக்குத்தான் முழிப்பே வருகிறது,

படுக்கையிலேயே எவ்வளவு நேரம்தான் உருண்டு கொண்டே இருக்க,,,,/

வழக்கமாக இவனின் இது போலானசெயல்களுக்குசடக்கென எதிர் வினை யாற்றி விடுவாள் மனைவி,நீங்கதான் அதிகாலையில எந்திரிச்சி ஏங்கூட வாக்கிங்க் வர்ற ஆளா,,,,,,,நானும் காத்திருந்து பாத்து அலுத்துப் போனேன் அலுத்து என்பாள்.

இது போலான தருணங்கள் இன்றைக்கு நேற்றைகல்ல ஒரு மாதமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது,அவளுக்கு சுகர்,சென்ற மாதம் பார்த்தபோது 210 ஆகஇருந்தது.அதைஒட்டிபீபீயும் சுகரும் இலவசமாக ஒட்டிக்கொண்டது.

மருத்துவர் சொல்லி விட்டார். ”இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வந்து என்னிடம் மாத்திரை வாங்கிக் கொள்ளுங்கள்” என/

“மாதத்திற்கு இரண்டு முறை வந்து மருந்து மாத்திரை வாங்கிக் கொள்வதெ ல்லாம் சரிதான்,கொஞ்சம் நீங்களும் உங்களது உடல் நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.சொந்த முயற்சி வேண்டும் உங்களுக்கும் எனச்சொன்ன மருத்துவர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்” என்றார்.

ஒவ்வொரு முறை செல்லும் போதும் அவரும் தவறாமல் கேட்கிறார்.இவளும் இல்லை இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை என்று சொல்கிறாள்.ஒவ்வொரு முறை ஆஸ்பத்திரிக்கு செல்லும் போதும் இவனை கூப்பிடுவதுண்டு.

வீட்டிலிருந்து ஆஸ்பத்திரி மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.பஸ்ஸில் போனால் இவர்கள் குடியிருக்கிற பாண்டியன் காலணியிலிருந்து மினி பஸ் அல்லது டவுன் பஸ் ஏறி பஸ்டாண்ட் போக வேண்டும்.இதில் மினி பஸ் என்றால் ஓ கே,டவுன் பஸ் என்றால் கடுப்பாகி விடுகிறாள்,

”மினி பஸ் ஓடும் போது ஏன் இதில் ஏறி நீங்களூம் கஷ்டப்பட்டு எங்களையும் சிரமப்படுத்துகிறீர்கள்” என சப்தம் போடுகிறாராம் டவுன் பஸ் கண்டக்டர். அதற்கு மினி பஸ் எவ்வளவோ தேவலாம் என்கிறாள் மனைவி.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவனும் மனைவியும் மினி பஸ்ஸில் போவதால் அந்த டிரைவர் கண்டக்டர் நல்ல பழக்கம்.தீபாவளி பொங்கலுக்கு கைச் செலவிற்கு பணம் கொடுக்கிற அளவிற்கு/

இவ்வளவு சௌகரியம் இருக்கிற போதும் கூட அவள் இவனுடன் இரு சக்கர வாகனத்தில் வருவதற்குத்தான் விரும்புகிறாள்.

இரு சக்கர வாகனம் என்றால் நமது நேரம்தானே,,?நம் இஷ்டத்திற்க்கு வீட்டி லிருந்து கிளம்பி எல்லா இடத்திற்கும் போய் வந்து விடலாம்தானே,,? ஆஸ் பத்திரிக்கு போகும் போது ஆஸ்பத்திரிக்கு மட்டுமாய் போய் திரும்புவதில் லைஇருவரும்.காய்கறி மார்க்கெட்,,,,,மற்றும் மற்றுமான வேலைகள் ஏதும் இருந்தால் முடித்துக் கொண்டு திரும்புவார்கள்.

இதில்காய்கறிக்காரர்இவர்கள்இருவரையும் ஒன்றாக பார்த்து விட்டால் கேட்டு விடுவார்,”என்ன சார் ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட டாக்டர் கிட்ட வந்தீங்களாக்கும்” என,,,/

காலையில் எழுந்து முகம் கழுவும் போது தோணிய எண்ணம் நேரம் போக போக வலுப்பட்டது கறி எடுக்கலாம் இன்றைக்கு என,”தீபாவளிக்குத்தானே எடுத்தோம் அதற்குள்ளாக எடுக்காவிட்டால் என்ன,என மனைவி கேட்டபோது ”தின்னு ருசி கண்ட நாக்கு என்கிற பதிலுடனும் கையில் பையுடனுமாய் கிளம்பி விட்டான்.கையில் ஏழு நூறு ரூபாய் தாள்களுடன்/

அவ்வளவு ரூபாய்க்கும் கறி எடுக்கப் போவதில்லைதான்.ஆனாலும் வைத்துக் கொள்வதுதான் எப்பொழுதும் கைக்காவலுக்கு என்கிற நினைப்பில் கிளம்பி விட்டான்.

சின்னவளுக்கு கோழிக்கறி என்றால் உயிர்,பெரியவளுக்கு அப்பிடியில்லை, ஆட்டுக்கறிதான்.கோழிக்கறி என்றால் அவளுக்கு முகம் ஏழு கோணலாய்ப் போய்விடும்.சரிஎதற்கு வம்பு,அதில் அரை ,இதில்அரை என எடுத்து விடு வோம்,,,,,எனநினைத்துத்தான் போனான்.

வீட்டில்ஏற்கனவேஇரண்டு டீ க்குடித்தாகிவிட்டது,இனிமேல் டீக்குடிப்பது அனாவசியம் என்கிற நினைப்பில் கறிக்கடையில் நின்றிருந்த வேளையில் தான் திருப்பதிதாசன் வந்தார்.

பிரைவேட் டிராவல்ஸில் டிரைவராக இருக்கிறார்.மதுரை டூ சென்னை ரூட், வாரம் ஒரு தடவை இறங்குவார்,இரண்டு நாட்கள் ரெஸ்ட், அந்த ரெஸ்ட் இந்தத் தடவை ஞாயிற்றுக்கிழமை வாய்த்துவிட்டதாகச் சொல்கிறார்.
அவரும் இவனைப்போலவே சிக்கனும் மட்டனுமாக எடுக்க வேண்டும் எனச் சொல்லி யவாறே இவனை ஏறிட்ட போது இவன் ஏற்கனவே சிக்கன் எடுத்து விட்டு வந்ததைச்சொன்னான்.

மிகவும் களைப்படைந்து காணப்பட்டார்,இரவுதான் வண்டியிலிருந்து இறங்கி னேன் என்றார்,அதிகாலை வண்டியிலிருந்து இறங்கியவன் பேருக்கு இரண்டு மணி நேரம் தூங்கி விட்டு அப்படியே ஓடி வந்து விட்டேன் என்றார்,

இவனும் டிரைவரும்பேசிக்கொண்டிருக்கும்போது டிரைவருக்குத்தெரிந்தவர் வந்தார்,”எண்ணண்ணே நல்லாயிருக்கீங்களா எனக்கேட்ட அவரை இருபத் தைந்து வருடங்களுக்கு முன்பாகப்பார்த்தது.மெலிந்து செதுக்கி வைத்தது போல் இருந்த உருவம் இப்போது பெருத்து ஊதி தொந்தி ஒரு பக்கமும் ஆள் ஒரு பக்கமுமாய் சரிந்துத்தெரிந்தார்.அடக்கண்றாவியே காலம் ஒரு மனித னை இப்படியா பரிணாம வளச்சி கொள்ளச்செய்திருக்க வேண்டும்,,?என்கிற நினைப்புடன் மூவருமாய் டீக்கடைக்கு போய் திரும்பிய போது கடைக்காரர் கறி போட்டு முடித்து வைத்திருந்தார்,

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நாள் ஆகி விட்டது - உங்களின் பதிவை வாசித்து + உங்களிடம் பேசியும் கூட...

நன்றி... தொடர்க...

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் பதிவினைக் கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
அன்பும் ஆசியும் தொடர நன்றாக இருக்கிறேன்,,,/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் அன்பிற்கும்.

Yarlpavanan said...

அருமையான கதை

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/